பத்தாம் வகுப்பு - தமிழ்
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. இயல் 1 முதல் 7 முடிய.
1) இயல் - 1 (புத்தகம் பக்கம் -19)
கவின்மிகு காட்சி
கரும்பென இனித்திடும்
என் கவிதையே சாட்சி.
முகத்தினை மூடின
பூட்டுகள் மூன்று.
மூடிய பூட்டினில்
முகத்தினில் சோகம்!
முகிழ்த்தது கோபம்.
திறந்த பூட்டினில்
பிறந்தது மகிழ்ச்சி.
புத்தகம் திறந்திட
புத்தியும் சிறந்தது.
உள்ளமும் விரிந்தது
உலகமும் புரிந்தது.
புதுமைகள் உலவும்
புத்தகமே உலகம்!
2) இயல் - 2 (புத்தகம் பக்கம் 41)
கவின்மிகு காட்சி
கரும்பென இனித்திடும்
என் கவிதையே சாட்சி.
ஆதியில் வாழ்க்கை
அழகாய் அமைந்தது.
இயற்கையின் மடியில்
இன்பத்தின் பிடியில்
இனிதே வளர்ந்தது.
செயற்கையின் பிடியில்
சென்றிட்ட மனிதன்
மரங்களை அழித்தான்!
மகிழ்ச்சியைத் தொலைத்தான்!
காற்றினைப் பிடித்து
கலத்தினில் அடைத்தான்!
வருங்காலம் வாழ்ந்திட
வரம்தரும் மரம்நடுவோம்!
3) இயல் - 3, (புத்தகம் பக்கம் - 64)
கவின்மிகு காட்சி
கரும்பென இனித்திடும்
என் கவிதையே சாட்சி.
அறிவியல் யுகத்தினில்
அழிந்ததோ நேயம்?
என்றே நினைத்திடும்
இன்றைய வாழ்வில்
இல்லை என்றது காட்சி.
குடிசை வீட்டில்
குழந்தையின் உள்ளம்
உயிர்களின் நேயத்தை
உண்மையாய்ச் சொல்லும்.
ஆறறிவின் அருமை
காத்தலே பெருமை
ஒருபிடிச் சோறு
உன்னை உயர்த்திடும் பாரு.
4) இயல் - 4 (புத்தகம் பக்கம் 91)
காட்சிக் கவிதை
உலுக்கியது மனதை.
இருப்பதை இழந்து
இழந்ததைப் பேசும்
இழிநிலை மாறுமா?
மரமே மண்ணின்
வரமென நினைத்து
வகுப்பறை கூறுமா?
வெட்டிய மரங்களில்
வீழ்ந்தது வளமை!
சுட்டிய மரத்தினில்
கற்றிடும் புதுமை!
மழையினைத் தொலைத்து
மலரும் வறுமை.
மரத்தின் அருமையை
மாணவர் அறிவதே பெருமை.
5) இயல் - 5, (புத்தகம் பக்கம் 114)
காட்சியைக் கண்டேன்
களிமிகக் கொண்டேன்.
தமிழரின் வாழ்வில்
தனிப்பெரும் கலைதான்!
ஆடலும் பாடலும்
ஆக்கத்தின் நிலைதான்!
ஒயிலாட்டம் போடு!
உற்சாகமாய்ப் பாடு!
கண்ணுக்கு விருந்தாய்
கவலைக்கு மருந்தாய்
அமைந்திடும் ஆட்டம்!
தாளம் இசைத்திட
காலம் மகிழ்ந்திட
கை வீசி ஆடு!
கைகள் தட்டி
விசிலையும் போடு!
6) இயல் -6 (புத்தகம் பக்கம் 142)
கவின்மிகு காட்சி
கரும்பென இனித்திடும்
என் கவிதையே சாட்சி.
உலகைக் காத்திட
உணவைத் தந்திடும்
உழவன் இவனே!
உலகைப் படைத்திட்ட
இறைவனின் மகனே!
கலப்பையால் உழுது
பயிரினைத் தந்து
களைப்பைப் போக்கி
உயிரினை வளர்க்கும்
உன்னதன் உழவனே!
போற்றியவன் புலவனே!
உழவனைப் போற்றுவோம்!
உயரத்தில் ஏற்றுவோம்!
7) இயல் - 7 (புத்தகம் பக்கம் 164)
காட்சியைக் கண்டேன்
கவலைதான் கொண்டேன்.
அறிவியல் உலகில்
கருவிகள் ஆளும்!
கவலையே சூழும்!
அளவாய்க் கொண்டால்
அழகாய் அமையும்!
அறிவும் வளரும்!
திறமையை வளர்க்கும்
திறன்பேசி உண்டு.
அடிமையாய் ஆனால்
ஆளையும் அழிக்கும்!
கண்களும் கெட்டிட
சுற்றமும் பழிக்கும்!
அறிவுடன் வாழ்வோம்!
அகிலத்தை ஆள்வோம்!
கவிதையாக்கம்.
'நல்லாசிரியர்' மு.மகேந்திர பாபு, தமிழாசிரியர், இளமனூர், மதுரை - 97861 41410







1 Comments
அருமை அருமை. சிறப்பு ஐயா
ReplyDelete