பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - பாடப்பகுதி வினாக்களும் , விடைகளும் ( முழுமையும் ) / 10 TAMIL - IYAL - 1 BOOK BACK QUESTION & ANSWER

              பத்தாம் வகுப்பு  - தமிழ்

                    இயல் - 1  - மொழி

                        அமுத ஊற்று



*********************   **********************


பாடப் பகுதி


கவிதைப் பேழை  - அன்னை மொழியே

(செய்யுள்)

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

*********************    *********************

உரைநடை உலகம்

தமிழ்ச்சொல் வளம்

தேவநேயப் பாவாணர்

#####################   #################

 கவிதைப் பேழை இரட்டுற மொழிதல்

(செய்யுள்)

- சந்தக்கவிமணி தமிழழகனார்

**********************     *******************

விரிவானம்

உரைநடையின் அணிகலன்கள்

( துணைப்பாடம்) எழில் முதல்வன்

**********************    *********************

| கற்கண்டு  -  (இலக்கணம்)

எழுத்து, சொல்

*********************    *********************

மேற்கண்ட பகுதிகளில் உள்ள பாடப்பகுதி ( BOOK BACK ) வினாக்களையும் , அதற்கான விடைகளையும் இப்பகுதியில் நாம் காண்போம் . அடுத்த பகுதியில் மொழியை ஆள்வோம் ! பகுதி வினா & விடைகளைக் காண்போம்.

***********************   *********************

திறன் அறிவோம்

பலவுள் தெரிக.

1. 'மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது-

அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

விடை: அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்)


2 ) காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள், இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது -

அ) இலையும் சருகும்

ஆ) தோகையும் சண்டும்

இ) தாளும் ஓலையும்

ஈ ) சருகும் சண்டும் 

(விடை: ஈ) சருகும் சண்டும்)

3 ) எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

அ) எந் + தமிழ் + நா

ஆ) எந்த + தமிழ் + நா

இ ) எம் + தமிழ் + நா

ஈ)எந்தம் + தமிழ் + நா

விடை: இ) எம் + தமிழ் + நா


4.) 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும்
பெயரும் முறையே -

அ) பாடிய ; கேட்டவர்
ஆ) பாடல் ; பாடிய
இ) கேட்டவர் ; பாடிய
ஈ) பாடல் ; கேட்டவர் 

விடை: ஈ) பாடல்; கேட்டவர்)

5.) வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை

அ) குலை வகை
ஆ) மணி வகை
இ) கொழுந்து வகை
ஈ) இலை வகை

விடை: ஆ) மணி வகை

*************************   *****************

குறுவினா :

1. 'வேங்கை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

i ) வேங்கை = மரத்தைக் குறிக்கும்.
(ii) வேம் + கை = வேகின்ற கை.

2 ) மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!' - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத்
தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

(i) சீவக சிந்தாமணி
(ii) வளையாபதி
(iii) குண்டலகேசி

3 ) ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப் பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள
பிழைக்கான காரணத்தை எழுதுக.

சரியான தொடர்கள் :

(i) ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

(ii) ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

பிழையான தொடர் :

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

காரணம் :

பல சீப்பு வாழைப்பழங்கள் சேர்ந்ததுதான் ஒரு தாறு.
(ii) ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள்தான் இருக்கும்.

4 ) 'உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ்' இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி, அதன்
இலக்கணம் தருக.

(i) உடுப்பதூஉம் - இன்னிசை அளபெடை
(ii) உண்பதூஉம் - இன்னிசை அளபெடை


5 ) தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும். இதனைச் 'சிலேடை அணி' என்றும் அழைப்பர். தற்கால உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.

எ.கா : சென்னை வரவேற்கிறது என்பதை ஆம், சென்னை வர வேர்க்கிறது (வியர்க்கிறது என்பதன்
பேச்சு வழக்கு என்று சிலேடை மூலம் பகடியாகச் சொல்லலாம்.

*************************   ******************

சிறுவினா

1) தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்கள் :

          அன்னை மொழியான தமிழ்மொழி பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியாகவும், கடல்கொண்ட குமரிக்கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலகப் பேரரசாகவும், பாண்டிய மன்னனின் மகளாகவும் திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளாகவும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களாகவும் நிலைத்து நிற்கும் சிலப்பதிகாரமாகவும் அழகான மணிமேகலையாகவும் விளங்குவதால்
தமிழன்னையை வாழ்த்துகின்றார்.


2 ) ‘புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.'

இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

(i) கண்ணன் வயலில் நெல் நாற்றிற்குத் தண்ணீர் பாய்ச்சினான்.

(ii) தாத்தா நிறைய தென்னம் பிள்ளைகளை வாங்கி வந்தார்.

(iii) கத்தரி நாற்றில் வெட்டுக்கிளிகள் இருந்தன.

(iv) மாங்கன்று மழைக்குப் பிறகு தளிர் விட்டுள்ளது.

(v) வாழைமரத்தினடியில் வாழைக்கன்றுகள் உள்ளன.

3 ) ‘அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது' இவை
அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத்
தெரியும்.

        இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

வினைமுற்று          தொழிற்பெயர்

அறிந்தது                அறிதல்

அறியாதது          அறியாமை

புரிந்தது               புரிதல்

புரியாதது             புரியாமை

தெரிந்தது            தெரிதல்

தெரியாதது         தெரியாமை

|பிறந்தது             பிறத்தல்

பிறவாதது           பிறவாமை



4. ) தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.

தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கு :

(i) முத்தமிழ் : கடல் - முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது. தமிழ் - இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழாய் விளங்குகிறது. .

(ii) முச்சங்கம் : கடல் - வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத்தருகிறது. தமிழ் - முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.

(ii) மெத்தவணிகலன் (மெத்த + அணிகலன்) : தமிழ், ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப்
பெற்றுள்ளது. கடல் மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது.

(iv) சங்கத்தவர் காக்க : தமிழ், சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது.
கடல், தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்தி சங்கினைக் காத்தல்.

***********************    ******************

நெடுவினா

1.) மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ்
வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.

அனைவருக்கும் வணக்கம்!
தமிழ்த்தாய் இன்று நேற்று பிறந்தவள் இல்லை. அவளுடைய புகழைப் பாடப் பாட இனிமை பிறக்கும். தமிழ்த்தாயைப் போற்றாத புலவரில்லை என்றால் அது மிகையாகாது. மனோன்மணீயம் பெ.சுந்தரனார் அவர்களும் பெருஞ்சித்திரனார் அவர்களும் தமிழ்த்தாயை
வாழ்த்தியமையைப் பார்ப்போம்.

பெ. சுந்தரனார் அலைகடலை ஆடையாக அணிந்த பூமிப் பெண்ணிற்குப் பாரத கண்டம், முகமாகத் திகழ்வதாகக் கூறுகிறார். அம்முகத்திற்குத் தென்திசை நாடுகள் பிறைநிலவு போன்ற நெற்றியாகவும் அந்நெற்றியில் நறுமணம் மிக்க திலகமாய்த் தமிழகம் உள்ளதாய்க் கூறியுள்ளார்.        
                                                                                                                    அதுமட்டுமல்லாமல்
திலகத்தின் மணம் எல்லோரையும் இன்புறச் செய்வதுபோல் தமிழ்த்தாயும் எல்லாத் திசைகளிலும்புகழ்பெற்றவளாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

            பெருஞ்சித்திரனார் தமிழைப் பழமைக்குப் பழமையாய்த் தோன்றியவள், குமரிக்கண்டத்தில் நிலைத்து நின்று அரசாளும் மண்ணுலகப் பேரரசு, பாண்டிய மன்னனின் மகள் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்.

      பெ.சுந்தரனார் தமிழ்த்தாய் எல்லாத்  திசைகளிலும் புகழ்பெற்றுத் திகழ்வதாகக் கூறியுள்ளார்.

 அதனையே பெருஞ்சித்திரனார் திருக்குறளின் பெருமைக்கு உரியவளாகவும்  பதினெண் மேல்கணக்கு, கீழ்க்கணக்கு,
ஐம்பெருங்காப்பியங்களாய் எல்லாத் திசையிலும் பரவியுள்ளாள். பொங்கியெழும் இந்நினைவுகளால்
தலை பணிந்து வாழ்த்துகின்றோம் என்கிறார்.

       உலகின் மூத்தமொழியாக இருந்தும் இன்றளவும் இளமையாக இருக்கின்றாள் என்று சுந்தரனார் பாடுகிறார்.

       பெருஞ்சித்திரனார் இதனைப் பழமைக்குப் பழமை என்கிறார்.

சுந்தரனார் தமிழ்மொழியின் வளம் பெருகுகின்றதே தவிர குறையவில்லை என்கிறார். இதனைப்
பெருஞ்சித்திரனார் தமிழ் பழம்பெருமையும் தனக்கெனத் தனிச் சிறப்பும் இலக்கிய வளமும் கொண்டுள்ளது என்கிறார். மேலும் “வியக்கத்தக்க நீண்ட உன் நிலைத்த தன்மையும் வேற்று மொழியார் உன்னைப் பற்றி உரைத்த புகழுரையும் எமக்குள் பற்றுணர்வை எழுப்புகின்றன” என்கிறார்.

சுந்தரனார்தமிழே, தமிழாகியபெண்ணே, தாயே உன்னைவாழ்த்துகிறேன் என்கிறார். 

பெருஞ்சித்திரனார். எம் தனித்தமிழே! உள்ளத்தில் கனல் மூள, வண்டானது செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப்பாடுவது போன்று நாங்கள் உன்னைச் சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம் என்று
பாடியுள்ளார்.

இவ்வாறு மனோன்மணீயம் பெ. சுந்தரனார் அவர்களும் ,  பெருஞ்சித்திரனார் அவர்களும் தமிழின்
பெருமையைப் பறைசாற்றி வாழ்த்துகின்றனர்.

*********************    ********************


2.) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.

தமிழில் உள்ள சொல்வளம் :

(1) சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவேனும், தமிழ் மட்டும் அதில்
தலைசிறந்ததாகும்.

(ii) “தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒரு பொருட் பலசொல்
வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத் தெளிவாகத் தோன்றும்.

(ii) தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும்சொற்களும் தமிழில் உள்ளது என்கிறார் கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்).

(iv) தமிழ்ச் சொல் வளத்தைப் பலதுறைகளிலும் காணலாமேனும், இங்குப் பயிர்வகைச் சொற்கள் மட்டும்
சிறப்பாக எடுத்துக்காட்டப்பெறும்.

அடி வகை :
ஒரு தாவரத்தின் அடிப் பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள்.

தாள் : நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி

தண்டு : கீரை, வாழை முதலியவற்றின் அடி

கோல்: நெட்டி, மிளகாய்ச் செடி முதலியவற்றின் அடி

தூறு :  குத்துச் செடி, புதர் முதலிவற்றின் அடி

தட்டு அல்லது தட்டை : கம்பு, சோளம் முதலியவற்றின் அடி.

கழி :  கரும்பின் அடி

கழை :  மூங்கிலின் அடி

அடி :  புளி, வேம்பு முதலியவற்றின் அடி,

        தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையதென்பது, அதன் விளைபொருள்வகைகளை நோக்கினாலே விளங்கும். பிறநாடுகளிலுள்ள கூலங்களெல்லாம் சிலவாகவும் சில வகைப் பட்டனவாகவுமிருக்க,
தமிழ்நாட்டிலுள்ளவையோ, பலவாகவும் கழிபல வகைப்பட்டனவாகவும் இருக்கின்றன.

 எடுத்துக்காட்டாக, கோதுமையை எடுத்துக்கொள்ளின் அதில் சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை முதலிய
சிவ வகைகளேயுண்டு. ஆனால், தமிழ்நாட்டு நெல்லிலோ, செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும்
சம்பா, மட்டை, கார் என்றும் பல வகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா,
ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச்சம்பா, குதிரைவாலிச் சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன.

நாட்டின் தனிப்பெரும் வளத்தினாலேயே, பண்டைத் தமிழ்மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர், திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது மொழியாதலின், அதுவே ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கும் சிறந்த வழியாகும். பொருளைக் கூர்ந்து நோக்கி
நுண்பாகுபாடு சொற்களும் நுண்பொருட் சொற்களும் அமைத்துக் கொள்ள வேண்டும். அறிவியல்
வளர்ச்சியினால் ஏற்பட்ட புதிய சொற்களுக்கான கலைச்சொல் வளத்தையும் பெருக்க வேண்டும்.

*******************     ********************


3 ) ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.

சூழல் வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப்  பற்றி உரையாடுதல்.

உறவினர் மகள் கவியரசி (ஆங்கிலச் செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கிறார்.)

தமிழரசி  : என்ன மாலா! தமிழ்ச் செய்தித்தாள் படிக்கின்றாயா?

கவியரசி :  செய்தித்தாள்தான். ஆனால் தமிழ் இல்லை. ஆங்கிலம்தான்.

தமிழரசி : ஏன் தமிழ் படிக்கத் தெரியாதா?

கவியரசி  : இல்லை. தமிழ் நன்றாகப் பேசுவேன். படிக்கத் தெரியாது. எனக்கு தமிழ் நூல்கள் படிக்க விருப்பம்தான்.

தமிழரசி : தமிழ் மிகவும் எளிமையான மொழி. அம்மொழியைப் பேசுவது எவ்வளவு எளிமையோ அவ்வளவு படிப்பதும் எளிமைதான்.

கவியரசி  : அப்படியா?

தமிழரசி  : தமிழ் உரைநடைக்கு இலக்கணமுறை என்று ஒன்று இல்லை. உரைநடைக்கு கருத்துகள் தெரிந்தால் அவற்றை எளிதில் எழுதவும் முடியும். வாக்கியமைப்பு, திணை, பால், எண், இடம், காலம் பொருந்தியும் எழுவாய், பயனிலை செயப்படுபொருள் சரியாக அமைந்தால் போதும்.

கவியரசி  : உரைநடை என்கிறாயே அது என்ன?

தமிழரசி  : செய்யுள் என்பவை எதுகை, மோனை, இயைபு, அணி என்று பலநயங்களால் அழகுப்படுத்தப்பட்டிருக்கும். உரைநடை அவ்வாறு இல்லை. உரைநடை என்பது தொல்காப்பியர் காலத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

கவியரசி  : அப்படியா?

தமிழசி  : இறையனார் களவியல் உரை, இளங்கோவடிகள் உரை என வளர்ந்து வந்துள்ளது. திரு.வி.க, மு.வ. அண்ணா போன்றோர் இருபதாம் நூற்றாண்டில் உரைநடை வளர்ச்சிக்குக் காரணமாக இருந்துள்ளனர்.

கவியரசி  : உரைநடை என்பதில் வரும் இலக்கியங்கள் யாவை?

தமிழரசி  : சிறுகதை, புதினம், நாவல், புராணக் கதைகள் இவையெல்லாம் உரைநடையே.உரைநடை வளர்ந்ததால் நாம் பிறமொழி நூல்களையும் தமிழில்
மொழிபெயர்த்து பாரதியின் அவாவை நிறைவேற்றியுள்ளோம்.

கவியரசி  : வீரமாமுனிவர், ஜி.யூ.போப் போன்ற சான்றோர்களும் இப்பணியைச்
செவ்வனே ஆற்றியுள்ளார்கள் அல்லவா?

தமிழரசி : சரியாகச் சொன்னாய். கால்டுவெல் தமிழுக்கு ஆற்றிய பணிகள் ஏராளம்.இவர் தமிழ்மொழியின் சிறப்பைத் தமிழருக்குக் கூறியவர். இதுபோல பலசான்றோர்கள் மூலம் உரைநடை வளர்ந்துள்ளது. உரைநடை வளர்ந்துவருவதால்தான் தமிழ் இலக்கியங்களைப் பிறர் அறிய முடிகிறது.

கவியரசி  : தமிழ்மொழியை அறியாதவர்களால் தமிழைப் படித்து நூல்கள் இயற்றும்போது
எனக்குத் தமிழ் பேசத் தெரியும். கற்பது என்ன கடினமா? இன்றே எனக்கு
தமிழ் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடு. நானும் கற்றுக் கொள்கிறேன்.

தமிழரசி  : சரி, வா ! 

*********************    *********************

    வாழ்த்துகள் நண்பர்களே ! பார்த்ததற்கும் , படித்ததற்கும் , பகிர்ந்ததற்கும் நன்றி !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 97861 41410

**********************   ********************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம் 

உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*************************     *****************

Post a Comment

3 Comments

  1. சிறப்பு ஐயா...வாழ்த்துகள்..💐💐💐💐

    ReplyDelete
  2. மிக மிக அருமை ஐயா.... மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... தங்களது சேவை .. எங்களுக்கு தொடர்ந்து தேவை... வாழ்த்துகள் ஐயா...👌👌👌🙏🙏🙏

    ReplyDelete
  3. 𝓢𝓾𝓹𝓮𝓻 𝓼𝓲𝓻 👌🏽

    ReplyDelete