பத்தாம் வகுப்பு - தமிழ்
இயல் - 1 - மொழி
நெடுவினா :
1.) மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ்
வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
அனைவருக்கும் வணக்கம்!
தமிழ்த்தாய் இன்று நேற்று பிறந்தவள் இல்லை. அவளுடைய புகழைப் பாடப் பாட இனிமை பிறக்கும். தமிழ்த்தாயைப் போற்றாத புலவரில்லை என்றால் அது மிகையாகாது. மனோன்மணீயம் பெ.சுந்தரனார் அவர்களும் பெருஞ்சித்திரனார் அவர்களும் தமிழ்த்தாயை
வாழ்த்தியமையைப் பார்ப்போம்.
பெ. சுந்தரனார் அலைகடலை ஆடையாக அணிந்த பூமிப் பெண்ணிற்குப் பாரத கண்டம், முகமாகத் திகழ்வதாகக் கூறுகிறார். அம்முகத்திற்குத் தென்திசை நாடுகள் பிறைநிலவு போன்ற நெற்றியாகவும் அந்நெற்றியில் நறுமணம் மிக்க திலகமாய்த் தமிழகம் உள்ளதாய்க் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல்
திலகத்தின் மணம் எல்லோரையும் இன்புறச் செய்வதுபோல் தமிழ்த்தாயும் எல்லாத் திசைகளிலும்புகழ்பெற்றவளாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
பெருஞ்சித்திரனார் தமிழைப் பழமைக்குப் பழமையாய்த் தோன்றியவள், குமரிக்கண்டத்தில் நிலைத்து நின்று அரசாளும் மண்ணுலகப் பேரரசு, பாண்டிய மன்னனின் மகள் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்.
பெ.சுந்தரனார் தமிழ்த்தாய் எல்லாத் திசைகளிலும் புகழ்பெற்றுத் திகழ்வதாகக் கூறியுள்ளார்.
அதனையே பெருஞ்சித்திரனார் திருக்குறளின் பெருமைக்கு உரியவளாகவும் பதினெண் மேல்கணக்கு, கீழ்க்கணக்கு,
ஐம்பெருங்காப்பியங்களாய் எல்லாத் திசையிலும் பரவியுள்ளாள். பொங்கியெழும் இந்நினைவுகளால்
தலை பணிந்து வாழ்த்துகின்றோம் என்கிறார்.
உலகின் மூத்தமொழியாக இருந்தும் இன்றளவும் இளமையாக இருக்கின்றாள் என்று சுந்தரனார் பாடுகிறார்.
பெருஞ்சித்திரனார் இதனைப் பழமைக்குப் பழமை என்கிறார்.
சுந்தரனார் தமிழ்மொழியின் வளம் பெருகுகின்றதே தவிர குறையவில்லை என்கிறார். இதனைப்
பெருஞ்சித்திரனார் தமிழ் பழம்பெருமையும் தனக்கெனத் தனிச் சிறப்பும் இலக்கிய வளமும் கொண்டுள்ளது என்கிறார். மேலும் “வியக்கத்தக்க நீண்ட உன் நிலைத்த தன்மையும் வேற்று மொழியார் உன்னைப் பற்றி உரைத்த புகழுரையும் எமக்குள் பற்றுணர்வை எழுப்புகின்றன” என்கிறார்.
சுந்தரனார்தமிழே, தமிழாகியபெண்ணே, தாயே உன்னைவாழ்த்துகிறேன் என்கிறார்.
பெருஞ்சித்திரனார். எம் தனித்தமிழே! உள்ளத்தில் கனல் மூள, வண்டானது செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப்பாடுவது போன்று நாங்கள் உன்னைச் சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம் என்று
பாடியுள்ளார்.
இவ்வாறு மனோன்மணீயம் பெ. சுந்தரனார் அவர்களும் , பெருஞ்சித்திரனார் அவர்களும் தமிழின்
பெருமையைப் பறைசாற்றி வாழ்த்துகின்றனர்.
********************* ********************
2.) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
தமிழில் உள்ள சொல்வளம் :
(1) சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவேனும், தமிழ் மட்டும் அதில்
தலைசிறந்ததாகும்.
(ii) “தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒரு பொருட் பலசொல்
வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத் தெளிவாகத் தோன்றும்.
(ii) தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும்சொற்களும் தமிழில் உள்ளது என்கிறார் கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்).
(iv) தமிழ்ச் சொல் வளத்தைப் பலதுறைகளிலும் காணலாமேனும், இங்குப் பயிர்வகைச் சொற்கள் மட்டும்
சிறப்பாக எடுத்துக்காட்டப்பெறும்.
அடி வகை :
ஒரு தாவரத்தின் அடிப் பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள்.
தாள் : நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
தண்டு : கீரை, வாழை முதலியவற்றின் அடி
கோல்: நெட்டி, மிளகாய்ச் செடி முதலியவற்றின் அடி
தூறு : குத்துச் செடி, புதர் முதலிவற்றின் அடி
தட்டு அல்லது தட்டை : கம்பு, சோளம் முதலியவற்றின் அடி.
கழி : கரும்பின் அடி
கழை : மூங்கிலின் அடி
அடி : புளி, வேம்பு முதலியவற்றின் அடி,
தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையதென்பது, அதன் விளைபொருள்வகைகளை நோக்கினாலே விளங்கும். பிறநாடுகளிலுள்ள கூலங்களெல்லாம் சிலவாகவும் சில வகைப் பட்டனவாகவுமிருக்க,
தமிழ்நாட்டிலுள்ளவையோ, பலவாகவும் கழிபல வகைப்பட்டனவாகவும் இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக, கோதுமையை எடுத்துக்கொள்ளின் அதில் சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை முதலிய
சிவ வகைகளேயுண்டு. ஆனால், தமிழ்நாட்டு நெல்லிலோ, செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும்
சம்பா, மட்டை, கார் என்றும் பல வகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா,
ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச்சம்பா, குதிரைவாலிச் சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன.
நாட்டின் தனிப்பெரும் வளத்தினாலேயே, பண்டைத் தமிழ்மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர், திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது மொழியாதலின், அதுவே ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கும் சிறந்த வழியாகும். பொருளைக் கூர்ந்து நோக்கி
நுண்பாகுபாடு சொற்களும் நுண்பொருட் சொற்களும் அமைத்துக் கொள்ள வேண்டும். அறிவியல்
வளர்ச்சியினால் ஏற்பட்ட புதிய சொற்களுக்கான கலைச்சொல் வளத்தையும் பெருக்க வேண்டும்.
******************* ********************
இயல் - 1
3 ) மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே - வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே.
- கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.
(i) இப்பாடலில் தவழும் காற்று - தென்றல்
(ii) தெற்கிலிருந்து வீசுவதால் இது தென்றல் காற்று என்று அழைக்கப்படுகிறது.
(i) இக்காற்று மரம், செடி, கொடி, ஆறு, மலை, பள்ளத்தாக்கு எனப் பல தடைகளைத் தாண்டி வருவதால்
வேகம் குறைந்த இதமான இயல்புடையதாக இருக்கும்.
கவிதை நயம் :
(i) குழந்தை தூக்கத்திலிருந்து விழிக்கும் போதோ தூங்குவதற்கு முன்போ பாதி கண்களைத் திறந்தும் மூடியும் இருக்கும் நிலைக்கு பூவும் அல்லாமல் மொட்டும் அல்லாமல் இருக்கும் மலரை
உவமையாக்குகின்றார்.
(ii) அடுத்த வரியில் விடிந்தும் விடியாத என்று பாடியுள்ளார். இதில் பொழுது விடிவது என்பது விடிந்த பின் அனைவராலும் அறிய முடியும் இருள் விலகி வெளிச்சம் வரும் அந்த நொடியைக் குழந்தைக்கு
உவமையாக்கியுள்ளார்.
(iii) தென்றல் காற்று ஆறு. மலை, மலை எனப் பலவற்றைக் கடந்து வருவதை நதியில் விளையாடி செடிகொடிகளில் தலைசீவிக் கொள்கின்றது நயத்துடன் பாடியுள்ளார்.
(iv) தமிழ்மொழியின் தொடக்கம் பொதிகை மலைதான் என்பது அனைவரும் அறிந்தது. அங்கு தோன்றிய
தமிழ் மதுரை நகரில் வந்து சிறப்புற்றதாகக் கூறுகின்றார். மதுரையில் தமிழ்ச் சங்கம் இருந்ததையே
கவிஞர் 'தமிழ் மன்றம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கவிஞர் கண்ணதாசன் தம்முடைய பாடல்களில் சிறந்த கவிதை நயத்தைச் சேர்த்துள்ளார்.
************* ************** ***********
2 ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
முன்னுரை :
கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் இயல்பான வரவேற்பும் எளிமையான உணவும் மதிய வேக்காட்டில் நடந்துவந்த களைப்பை மறக்கடிக்கச் செய்துவிடும். பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிரிந்து கொடுக்கிற நேசம் கிராமத்து விருந்தோம்பல். அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்களின் கதைப்பகுதி.
சுப்பையாவின் ஐயம் :
சுப்பையாவின் புஞ்சையில் அருகு (களை) எடுத்துக்கொண்டிருந்தார்கள். இடையில் காலைக்கஞ்சியைக் குடிக்க உட்கார்ந்தார்கள். அப்போது தொலைவில் அன்னமய்யாவுடன் ஒருவர் வருவதைச் சுப்பையா பார்த்தான். “யாரோ ஒரு சாமியாரை இழுத்துட்டு வாரான்” என்று சுப்பையா கூற அங்கிருந்த ஒருவர் “வரட்டும் வரட்டும் ஒரு வயித்துக்குக் கஞ்சி ஊத்தி நாமும் குடிப்போம்” என்று கூறினார். அவ்வழியாகச் செல்லும் தேசாந்திரிகள் இவர்களிடம் தண்ணீரோ கஞ்சியோ சாப்பிட்டுவிட்டுப் போவது வழக்கம்.
அன்னமய்யாவுடன் வந்த வாலிபன் :
அன்னமய்யாவுடன் வந்தவன் தாடியும் அழுக்கு ஆடையும் தள்ளாடிய நடையுடன் இருந்தான். சோர்வாகக் காணப்பட்டான். அந்தப்பக்கம் வந்த அன்னமய்யா அவ்வாலிபனை அருகில் சென்று பார்த்தார். பசியால் வாடிய முகம், கண்களில் தெரிந்த தீட்சண்யம் கவனிக்கக் கூடியதாய் இருந்தது. அவன் முகத்தில் சிறு புன்னகையை மட்டும் காட்டினான். பேசுவதற்கு விரும்பாதவன் போல் இருந்தான்.
லாட சன்யாசிகள் :
அந்தச் சாலைவழியாக பலவகையான தேசாந்திரிகள் வருவார்கள். அவர்களுள் முக்கியமானவர்கள் லாட சன்யாசிகள் அவர்கள் வேட்டி கட்டிக்கொள்ளும் முறை புதுவிதமாக இருக்கும். இதனைப்பார்த்து
கோபல்லபுரத்துக் குழந்தைகள் அவர்களைப் போலவே வேட்டிகட்டிக் கொண்டு விளையாடுவர்.
அன்னமய்யாவின் விசாரிப்பு :
அன்னமய்யாவைப் பார்த்து அவன் மென்மையாகச் சிரித்தான். அவன் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். அவன் பேசியதில் மகிழ்ச்சியடைந்த அன்னமய்யா “அருகிலிருந்து நீச்சுத் தண்ணி வாங்கி வரவா என்று கேட்டார். அந்த வாலிபன் நாமே அங்கே போய்விடலாம் என்பது போல் பார்த்தான். அன்னமய்யாவின்
உதவியை எதிர்பார்க்காதவனாய் அவனே எழுந்து நடந்து சென்றான். அன்னமய்யாவின் கேள்விகளுக்கு ஒரே மாதிரியான இதழ் விரியாத சிரிப்பைப் பதிலாக்கினான்.
வாலிபனின் பசியைப் போக்கினான் :
ஒரு வேப்பமரத்தின் அடியில் ஏகப்பட்ட மண்கலயங்கள் கஞ்சியால் நிரப்பப்பட்டிருந்தன. சிரட்டையைத்
துடைத்து அதில் நீத்துபாகத்தை அவனிடம் நீட்டினான். அக்கஞ்சியை உறிஞ்சியபோது அவனுக்குக் கண்கள் சொருகின. மிடறு தொண்டை வழியாக இறங்குவதன் சுகத்தை முகம் சொல்லியது. “உட்கார்ந்து
குடிங்க” என்று உபசரித்தான். இரண்டாவது முறையும் வாங்கிக் குடித்தான். அதை உறிஞ்சிக் குடிக்கும்போது "ஹு" என்கிற அனுபவிப்பின் குரல் அவனிடமிருந்து வந்தது. கஞ்சியைக் குடித்துவிட்டு வேப்பமரத்து நிழலே அவனுக்குச் சொர்க்கமாய்த் தூங்கச் செய்தது. வந்தவனின் நிறைவைவிட மேலான நிறைவு
அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. குழந்தையைப் பார்க்கும் அன்னையைப் போல் பிரியத்துடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார் அன்னமய்யா.
அன்னமய்யா - பெயர் பொருத்தம் :
வந்தவன் தூங்கி எழுந்ததும் அவனைச் சுப்பையாவின் புஞ்சைக்கு அழைத்துச் சென்றான் அன்னமய்யா. வந்தவனிடம் அன்னமய்யா எங்கிருந்து வரீங்க? எங்க போகணும்? என்று கேட்டான்.
ரொம்ப தொலைவிலிருந்து, தம்பீ உன் பெயரென்ன? என்று கேட்டான். அன்னமய்யா என்று சொன்னதும் வந்தவன் அந்தப் பேரை மனசுக்குள் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்த்துக்கொண்டான். எவ்வளவு
பொருத்தம் என்று நினைத்துக் கொண்டான் போலிருக்கிறது. எனக்கு இன்று நீ இடும் அன்னம் தான் என்று மனவோட்டம் ஓடியது. தன்னுடைய சொந்தப் பெயர் பரமேஸ்வரன் என்றும் புதுப்பெயர் மணி என்றும் கூறி,
இனிமேல் மணி என்றே கூப்பிடு என்றும் கேட்டுக் கொண்டான். சுப்பையாவைப்பற்றி அவனிடம் கூறினான் அன்னமய்யா.
சுப்பையாவுடன் உணவு உண்ணல் :
அன்னமய்யாவுடன் வந்த புது ஆளையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். அவரையும் தங்களுடன் உண்ணும்படி உபசரித்தார்கள். அனைவரும் வட்டமாக அமர்ந்துகொண்டனர். ஒரு கால் உருண்டை கம்மஞ்சோற்றை இடது கையில் வைத்தனர். அன்னமய்யாவும் சுப்பையாவும் அவ்வாறுதான்
பெற்றுக்கொண்டனர். அச்சோற்றில் சிறு பள்ளம் செய்து துவையல் வைத்தனர். அவர்கள் அதனை உண்ணுகிற வேகம் ஆர்வம் அனுபவிப்பு இதெல்லாம் பார்த்தபோது இந்த உணவு எவ்வளவு ருசியாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டான். ஆனால் அவரால் அரை உருண்டைக்கு மேல் சாப்பிட
முடியவில்லை.
முடிவுரை :
அன்னமய்யாவும் சுப்பையாவும் ஆளுக்கு ஒரு உருண்டை சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும் அங்கிருந்தவர்கள் உட்கார்ந்து ஊர்க்கதைகள் பேசினர். மணி அமைதியாகக் கண்களை மூடிக் கிடந்தார்.
யாரென்றே அறியாத மணியை அழைத்துவந்து அவருக்கு அன்னமிட்டு பெயருக்கேற்றார்போல் நடந்துகொண்டார் அன்னமய்யா.
**************** ************** ***********
வாழ்த்துகள் நண்பர்களே !
பார்த்ததற்கும் , பகிர்ந்ததற்கும் நன்றி !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
உங்கள் வாட்சாப் குழுவில் 97861 41410 என்ற எண்ணை இணைத்து அனைவரும் பயன்பெறச்செய்யலாம் ஆசிரிய நண்பர்களே !
********************** *********************
1 Comments
Nice
ReplyDelete