ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
இயல் - 2 , உயிருக்கு வேர்
நயம் பாராட்டுக
கல்லும் மலையும் குதித்துவந்தேன் - பெருங்
காடும் செடியும் கடந்துவந்தேன்;
எல்லை விரிந்த சமவெளி - எங்கும்நான்
இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்;
ஏறாத மேடுகள் ஏறிவந்தேன் - பல
ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;
ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் - மணல்
ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.
கவிமணி
ஆசிரியர் குறிப்பு :
இப்பாடலை இயற்றியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இவர் எளிய, இனிய சொற்களால் குழந்தைகளின், இளைஞர்களின் மனத்தில் பதியும் வண்ணம், பல்வேறு பாடல்களை இயற்றியுள்ளார். மலரும் மாலையும், ஆசிய ஜோதி, மருமக்கள் வழி மான்மியம் எனப்பல நூல்களையும் இயற்றியுள்ளார்.
திரண்ட கருத்து :
இப்பாடலில் மழையின் சிறப்பைக் கூறியுள்ளார். மலையில் பெய்த மழையானது மலை, காடு, மரம், செடிகொடிகள், மணற்பாங்கான சமவெளிகள் ஆகிய இடங்களில் தவழ்ந்து ஓடிவந்தது. ஏரி, குளம், குட்டைகள், வாய்க்கால், ஓடைகள் ஆகிய இடங்களில் எல்லாம் மழைநீர் ஓடிவந்தது என, இயற்கையின் சிறப்பைப் பாடி உள்ளார்.
மையக்கருத்து :
காடு, மரம், செடி கொடிகள், ஏரி, குளம், ஓடைகள் எல்லாம் கடந்து மழைநீர் வந்தது.
தொடைநயம் :
தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும். எனவே, தொடைநயம் பொருந்த இனிதாகப் பாடப்பட்டுள்ளது.
மோனைத்தொடை : சீர், அடிகளில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனைத்தொடையாகும்.
சீர்மோனை : கல்லும் - கடந்து, எல்லை - எங்கும், ஏறாத - ஏரி, ஊராத - ஊற்றிலும்.
எதுகைத்தொடை : அடி, சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகைத் தொடையாகும்.
அடிஎதுகைத்தொடை : கல்லும் - எல்லை, ஏறாத - ஊறாத
இயைபுத் தொடை : இறுதி எழுத்தோ, சொல்லோ ஓசை ஒன்றிவரத் தொடுப்பது, இயைபுத் தொடையாகும்.
கடந்து வந்தேன், தவழ்ந்து வந்தேன், நிரப்பி வந்தேன், ஓடி வந்தேன்.
அணிநயம் : மழைநீரின் ஓட்டத்தை வெகுவாகச் சிறப்பித்துக் கூறுவதால், உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது. குதித்து, கடந்து, தவழ்ந்து, மேடுகள், ஏரி, குளங்கள் நிரம்பி எனக் கூறுதல், உயர்வு நவிற்சி அணியாகும். வந்தேன், வந்தேன் என்னும் வினைச்சொல், பலமுறை வந்து ஒரே பொருளைத் தருவதால், இது சொற்பொருள் பின்வரு நிலையணியுமாகும்.
சொல்நயம் : குதித்து, கடந்து, தவழ்ந்து, மேடுகள் ஏறி, நிரப்பி, உட்புகுந்து என, இடத்திற்கு ஏற்ப ஓடிவரும் மழைநீர்ச் சிறப்பை உணர்த்தப் பொருள் பொதிந்த சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
1 Comments
madhanmadhankumar872@gmail.com
ReplyDelete