9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 4 , நயம் பாராட்டுக / 9th TAMIL - EYAL 4 - MOZHIYAI AALVOM - NAYAM PAARATTUKA

 


ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

இயல் - 4 , எட்டுத்திக்கும் சென்றிடுவீர் 

மொழியை ஆள்வோம்

நயம் பாராட்டுக

****************   *************  ***********

பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்

சிங்கமே! வான வீதி திகுதிகு எனஎ ரிக்கும்

மங்காத தணற்பி ழம்பே! மாணிக்கக் குன்றே! தீர்ந்த

தங்கத்தின் தட்டே! வானத் தகளியிற் பெருவி ளக்கே!

கடலிலே கோடி கோடிக் கதிர்க்கைகள் ஊன்று கின்றாய்

நெடுவானில் கோடி கோடி நிறைசுடர்க் கைகள் நீட்டி

இடைப்படு மலையோ காடோ இல்லமோ பொய்கை ஆறோ

அடங்கநின் ஒளிஅ ளாவ அமைந்தனை! பரிதி வாழி!

                                                பாரதிதாசன்

ஆசிரியர் குறிப்பு : 

   புதுவை தந்த புரட்சிக்குயில், பாவேந்தர் பாரதிதாசன் ஆவார். அவர்தம் கவிதைகளில், சமூக சீர்திருத்தத்திற்காகச் சாதி மத பேதங்களைச் சாடுவார். தமிழையும் தமிழரையும், தமிழினத்தையும் புகழ்ந்து பாடுவார். குடும்ப எக்கு, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு முதலான நூல்களைப் படைத்துள்ளார்.

திரண்ட கருத்து : 

          பிடரி மயிர் சிலிர்க்க நிற்கும் சிங்கம், வானவீதியைச் சுட்டெரிக்கும் தணல் பிழம்பு, மாணிக்கக் குன்று, தங்கத்தட்டு, பெரிய விளக்கு, கோடிகோடி ஒளிக்கதிர்கள், மலை, காடு, வீடு, பொய்கை எனப் பல்வேறு வடிவங்களில் கதிரவன் இருப்பதாகக் கற்பனை செய்து பாடியுள்ளார்.

மையக்கருத்து : 

          வானவீதியில் வலம் வருகின்ற கதிரவன், பல்வேறு வடிவங்களாகத் திகழ்கிறான் எனக் கூறுகிறார்.

தொடைநயம் : 

             மோனைத்தொடை : முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனைத் தொடையாகும்.

பொங்கி, பொலிந்து மங்காத, மாணிக்க

கடலிலே, கதிர்க்கை இடைப்பாடு, இல்லமோ

அடங்கநின், அமைந்தனை

சீர் மோனைகள்.

எதுகைத்தொடை : 

            இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகைத்தொடை ஆகும். 

பொங்கி, சிங்கமே, மங்காத, தங்கத்தின் - அடி எதுகை.

அணிநயம் : 

      கதிரவனைச் சிங்கம் என்றும், அனல் பிழம்பு என்றும், மாணிக்கக் குன்று என்றும், தங்கத்தட்டு என்றும், பெருவிளக்கு என்றும், மலை என்றும், காடு என்றும், பொய்கை என்றும் உருவகப்படுத்திப் பாடியுள்ளதால் இப்பாடலில், 'உருவக அணி' பயின்று வந்துள்ளது.

சுவைநயம் : பெருமிதச் சுவை. கதிரவனைப் பல்வேறு வடிவங்களாகப் பெருமைப்படுத்திப் பாடியுள்ளதால்,

இப்பாடலில் பெருமிதச்சுவை பயின்று வந்துள்ளது.


Post a Comment

3 Comments