பம்புசெட் - கிராமத்து வாசம்


பம்புசெட்

ஊருக்குப் பக்கத்தில
பம்பு செட்டு !
ஓடுதையா மனம்
துள்ளிக் கிட்டு !

வெள்ளி அருவிபோல
விழுகுது தண்ணீர் !
அது விவசாயத்தக்
காக்க வந்த பன்னீர் !

உருக்கிவிட்ட கண்ணாடி போல
வரப்புலதான் ஓடுது !
புத்தம்புது தம்பதி போல
வயலுலதான் கூடுது !

வாண்டுக கூட்டம் வந்து
தலயத்தான் காட்டுது !
சர்ருனு விழும் தண்ணீ
மேலும் கீழும் ஆட்டுது !

அத்தை மக அறிவழகி
ஓரப் பார்வ பாக்குறா !
கண்ணடிச்சு நின்னா
களக்கொத்தியத் தூக்குறா !

பாத்தி கட்டி வளருதையா
பருத்திச் செடி !
பாவி மக பார்வயில
படபடக்குது மடி !

வெத வெதச்சு 
நாத்து நட்டி
நாலா மாசம் வந்திடுமே
நெல்லு எனும் தங்கக் கட்டி !

பருவ மழ  பெஞ்சாதான்
உருவமே மாறிப்போகும் !
பம்புசெட் தண்ணி வந்தா
பட்ட கடனும் ஆறிப்போகும் !

உள்ளத்துக் காதல் போல
ஊறுதையா ஊத்து !
ஊருசனம் கெக்களிக்கும்
தண்ணிவரத்தப் பாத்து !

கிராமத்து வாழ்க்கையில
பம்புசெட்டு ஆதாரம் !
பம்புசெட்டு இல்லையினா
வாழ்வே சேதாரம் !

தேங்காய்த் தண்ணிபோல
இனிக்குது பாரு !
எங்க ஊரு வாழ்க்க போல
வேறென்ன வேணும் கூறு !

பசுமைக்கவிஞர்.
மு.மகேந்திர பாபு.

Post a Comment

5 Comments

  1. பம்பு செட்டு.....மனசுக்குள்ள பாயுது......

    ReplyDelete
  2. பம்பு செட்டு மிகவும் அருமை ஐயா

    ReplyDelete
    Replies
    1. நவரசங்களும் தங்கள் கவிதையில் நடனம் புரிகின்றன ஐயா!!!!! பம்பு செட்டு கவிதை பரதம் ஆடுகிறது !!! மிகவும் அருமை!!!!!!

      Delete
    2. மிக்க நன்றி ஐயா.

      Delete