வாழ்த்துப்பா
சிறுவரோடு சிறுவராக இருந்தால் அன்றோ
சிறுவர்களின் சொல்புரிந்து எழுதத் தோன்றும்
மறுவற்ற சொல்பலவும் சேர்த்துக் கோத்து
மழலையரும் படிக்கின்ற தோட்டம் தந்தான்
முறுவலுடன் வெற்றிக்குக் கதவின் கோலாம்
முழுமனத்தில் நிறைந்திருக்கும் மரமும் மண்ணும்
குறுகுறுக்கும் மாணவர்க்கு வழியைக் காட்ட
குதூகலிக்கும் கட்டுரைகள் கவிதைப் பூக்கள்
கரிசல்மண் தந்ததொரு கால ஓட்டம்
கவனமெலாம் சிந்தையிலே உதவி நாட்டம்
உரிமையுடன் தம்பியென அழைப்பேன் யானும்
உண்மையுள்ள மகேந்திரனாம் பாபு நல்லான்
புரிகின்ற கடமையிலே கருத்தாய் உள்ளான்
புத்தகங்கள் தேடலிலே விருப்பா யுள்ளான்
அரிதான குணமுள்ளான் அன்புத் தம்பி
அறிஞர்கள் பலர்போற்ற வாழி! வாழி!
பெரும்புலவர்.மு.சன்னாசி.
0 Comments