படிக்கும் காலம் பொற்காலம்!
"படிக்கும் காலம் பொற்காலம்
பண்பை வளர்க்கும் நற்காலம்" என்பது
முன்னோர் கூற்று. ஆம்! படிக்கும் காலம் மட்டுமே மாணவர்களை மகிழ்ச்சியான காலமாக, எதிர்காலத்தில் மதிப்புமிகு காலமாக மாற்றும் சக்தி உடையது. வாழ்வில்
உச்சத்தில் ஏற்றும் வலிமை உடையது.
"ஏடு தூக்கிப் பள்ளியில்
இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய்
நாளை விளங்கப் போகிறார்"
- என்று பள்ளிக்காலத்தைக் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மிக
அழகாகப் பாடுகிறார். துள்ளிச் செல்லும் பள்ளிப் பருவம் அனைவரது வாழக்கையிலும்
மலரும் நினைவுகளாய் வளரும். ஒரு கூட்டுப் பறவை போல ஆடிப்பாடித் திரிந்து, பண்டங்களைப் பகிர்ந்து உண்ட காலம் எப்போதும் நினைவில் இருக்கும். நினைக்க
நினைக்க மனம் வானில் பறக்கும்.
ஆங்காங்கே ஓடுகின்ற ஆறுகள் நிறைவாய்க் கடலில் சென்று
கலப்பதைப் போல, ஆங்காங்கே ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி இவற்றில் பயின்ற
மாணவத்துளிகள் வந்து சேரும் கடலாக இருக்கிறது நமது இளமனூர் மேனிலைப்பள்ளி.
அம்மாவின் கருவறையில் பத்து மாதங்கள். ஆசிரியரின்
வகுப்பறையில் சில ஆண்டுகள். ஒன்றாம் வகுப்பில் விரல் பிடித்துக் கற்றுத்தந்த
ஆசிரியர் நினைவு மலர்கிறது. அப்பாவின் விரல் பிடித்து நடந்த அந்தப் பிஞ்சுப்
பருவம் எப்படி இனிமையானதோ, அதுபோல ஆசிரியரின் அருகில் அமர்ந்து
எழுதிய காலம். அப்பாவின் விரலைப் பற்றிக்கொண்டோம் வீட்டில். பள்ளியிலோ ஆசிரியர்
நமது விரல் பிடித்து எழுதக் கற்றுத்தந்தார். அந்த அகரம்தான் நாளை நம்மை
உயரத்திலும் சிகரத்திலும் உலா வரச்செய்ய இருக்கிறது.
வாய் பேசும் வண்ணத்துப் பூச்சிகளாக வகுப்பறையிலே பாடி
மகிழ்ந்தோம். பூந்தோட்டத்தில் மணந்த பூக்களென மலர்ந்தோம். மத்தியானப் பொழுதில்
சுடச்சுட மதிய உணவை சத்துணவாய் உண்டோம். கீரை, பருப்பு,
முட்டை, பயறு வகைகள் எனப்பல தந்து பசிப்பிணி
நீக்கும் ஆலயமாகவும் நமது பள்ளி திகழ்கிறது.
ஆடலும் பாடலுமாய் ஆரம்பக் கல்வி நம் மனதிற்குள்
கலந்தது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஒன்றாம் வகுப்புக் கற்றுத்தந்த ஆசிரியரின் பெயர்
மறக்குமா? ஆசிரியர் சொன்னதே வேத வாக்காகப் பெற்றோரிடம் வாதம்
செய்த காலமல்லவா அது? "எங்க டீச்சர்க சொல்றதுதான் சரி.
நீ சொல்றது தப்பு" என அம்மா அப்பாவிடம் செல்லச்சண்டயிட்ட காலமல்லவா அது?
நல்ல விதை ஒன்று பண்படுத்தப்பட்ட நிலத்தில் விழுந்ததைப் போன்ற
காலம்தான் ஆரம்பக்கல்விக் காலம். "ஆனா... ஆவன்னாவும், ஓரெண்டா
ரெண்டே" என வாய்ப்பாடும் கத்திச் சொல்லிச்சொல்லி மகிழ்ந்த காலம் அது. நாள்
முழுதும் ஒரே ஆசிரியரின் வகுப்பறை வாய்மொழிக்குள் இருந்த காலம். தமிழும் அவர்தான்,
ஆங்கிலம் அறிவியலும் அவர்தான். கணக்கும் அவர்தான் சமூக அறிவியலும்
அவர்தான் என ஆல் இன் ஆல் அழகுராஜாவாக ஆசிரியர்கள் நம் மனதில் உலா வந்த காலம் அது.
"விளையும் பயிர் முளையிலே தெரியும்"
என்பதற்கேற்ப மாணவர்களின் தனித்திறமைகளான பேச்சு, பாட்டு,
ஓவியம், விளையாட்டு என அனைத்திற்கும்
ஊக்குவிக்கும் களமாக அமைவது வகுப்பறைகளே!என்னுடைய ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்
அய்யனார் மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் மாரியப்பன் அவர்கள் எனது மனக்கண்ணில்
வந்து செல்கிறார்கள்.
நாற்றங்காலில் இருந்து நாற்றைப் பிடுங்கி வயலில்
நடுவதைப்போன்றது ஆரம்பக் கல்வியிலிருந்து இடைநிலைக் கல்விக்குள் நுழைவது என்பது.
பெரும்பாலும் ஐந்தாம் வகுப்பு வரை சொந்த ஊரிலேயே படிக்கக் கூடிய வாய்ப்பு
பலருக்கும் அமைந்துவிடும். ஆனால் ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்குச் செல்லக்கூடிய
சூழல் வரலாம். ஐந்தில் வளைந்த நமது எண்ணங்கள் ஆறிலும் நம்மைச் செம்மைப்படுத்தும்.
உடன் படித்த ஒரு சிலர் வேறு பள்ளிக்குச் செல்லலாம். நாற்றுகளை எந்த வயலில்
நட்டினாலும் அது வேர் விட்டு, நாளை ஊர் போற்ற வளர்வது,
வளரச்செய்வது என்பதில் பெரும்பங்கு நாற்றங்கால்களான ஆரம்பப்
பள்ளியைத்தான் சாரும்.
ஆறாம் வகுப்பு வந்த உடன் நமது வளர்ச்சியின் அடுத்த படிநிலை
நமக்குள் தெரியவரும். இதோ ஒவ்வொரு பாடவேளைக்கும் ஒவ்வொரு ஆசிரியரின் வருகை.
வகுப்பறைச்சூழல் கலகலப்பாக மாறும். புரியாத பல செய்திகள் நம் புத்தியில் ஏறும்.
உடையின் வண்ணம் மாறியதைப் போல நமது உள்ளத்தின் எண்ணமும் மாறுவதை அறிய முடியும்.
ஆரம்பக் கல்வியில் ஒரு நாளைக்கு நூறு வணக்கங்களாவது மாணவர்களிடம் இருந்து வரும்.
பார்க்கும் போதெல்லாம் வணக்கம் சொல்லி ஆசிரியர்களை மகிழ்வித்துச்
சிரமப்படுத்துவார்கள்.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள
மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு வணக்க மழை பொழிவார்கள். ஒன்பது
மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் எதிரில் சென்றாலோ வகுப்பிற்குச் சென்றாலோ
வணக்கம் சொல்வார்கள். பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள்
பெரும்பாலும் எதிரில் வருவதையே தவிர்த்து, எதிர்காலச்
சிந்தனையில் படிப்பில் ஆழ்ந்துவிடுவார்கள்.
உடலையும் உள்ளத்தையும் வளர்க்க உடற்கல்விப் பாடவேளை, வாசிப்புத் திறனை மேம்படுத்த நூலகப்பாடவேளை, கல்வியோடு
வாழ்க்கைக் கல்வியைக் கற்றுத்தரும் இணைச்செயல்பாடுகள், வெள்ளிக்கிழமை
மாலை என்றாலே மனதை மகிழச்செய்யும் மன்றச் செயல்பாடுகள். இது மட்டுமா? பெண்கள் நாட்டின் கண்கள் அல்லவா? கண்ணை இமை காப்பது
போல, மாணவிகள் தங்களைக் காத்து தன்னம்பிக்கை வளர்த்திட
தற்காப்புக்கலைப் பயிற்சி. பொதுத்தேர்வை எதிர்கொண்டு எளிதில் வெற்றி பெற காலை,
மாலை இருவேளையென சிறப்பு வகுப்புகள். இவை மட்டும்தானா? என நினைப்பவர்களுக்கு இன்னும் சில பட்டியல்கள் இதோ...
மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்த 'தேன்சிட்டு' இ்தழ். அதிலே எங்கள் கைவண்ணத்திலே
காவியம் பாடும் ஓவியம் வரும். கண்களுக்கு விருந்து படைக்க எங்களின் கதைகள் வரும்.
வேடிக்கையான படக்கதைகள் வரும். தேசத்தலைவர்களின் பிறந்தநாள் செய்திகள் வரும்.
கவிதை எழுத, கட்டுரை எழுத, உரைவீச்சு
நிகழ்த்த அவ்வப்போது அழைப்பும் வரும். கரகாட்டம், காவடியாட்டம்,
ஒயிலாட்டம், பறையாட்டம், மயிலாட்டம், தனிநடிப்பு, குழு
நாடகம் என குதுகலப்படுத்தச் சித்திரைத் திருவிழாவினை ஒத்ததோர் கலைத்திருவிழாவும்
பவனி வரும்.
இவற்றில் எல்லாம் பங்கு பெற்று, பரிசு பெற்று பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்து, கற்றோரும் மற்றோரும் புகழும்படி ஐஐவிமானத்திலே வெளிநாடு செல்ல வாயப்பும்
கிடைக்கும். பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று நம் மதிப்பினைக் கூட்டுகின்ற
பொழுது, ஆசிரியர்கள் பரிசுப்பொருட்களால் நம்மை ஊக்குவிப்பர்.
மேல்நிலைக் கல்வியிலே மடிக்கணினியும், மிதிவண்டியும் தந்து 'நான் முதல்வனாக' வருவேன் என்ற கனவோடும், ஆர்வத்தோடும் படிப்பேன் என்ற சிந்தனை மாணவர்களின் மனங்களிலே பிறக்கும்.
நண்பர்களே! நமது தாயும் தந்தையும் செய்யாத பல சாதனைச்செயல்களை அரசானது செய்து
மகிழ்விக்கிறது.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மிடுக்கான தோற்றம்
தந்து, வெற்றி நடைபோடச்செய்யும் சாரணர் படை. நான் பள்ளிப்
பருவத்தில் இருக்கும் போது, சாரணர் படையில் உள்ள மாணவர்கள்
பாடிய பாடல் இப்போதும் நினைவிற்கு வருகிறது.
"சிங்கக் குட்டிகள் நாங்கள்
சிறுத்தைக் குட்டிகள் நாங்கள்" என்று
கம்பீரமாகப் பாடுவதைப் பார்க்கும் போது அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படும்.
வெள்ளை உடையில் வந்து இந்தியில் உள்ள கட்டளைகளுக்குத் தன்
பூட்ஸ்காலால் லெப்ட் ரைட் லெப்ட் என கைவீசி நடந்து செல்லும் தேசிய மாணவர் படை
மாணவர்களைப் பார்க்கும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். துப்பாக்கி சுடும்
பயிற்சியெல்லாம் இவர்களுக்கு உண்டு. பரேடு உள்ள நாள்களில் அதிகாலை நான்குமணிக்கே
எழுந்து, குளித்து வேகவேகமாக நடைபோட, ஊரில்
உள்ள அத்தனை நாய்களும் குரைத்து ஊரையே எழுப்பிவிட்ட சம்பவங்களும் உண்டு.
"எனக்கல்ல உனக்கு" என்ற கொள்கையுடன் இப்போது உள்ள
பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு நாட்டுநலப்பணித்திட்ட முகாம் சிறப்பாகச்
செயல்பட்டு வருகிறது. அருகே உள்ள ஊர்களில் தங்கி, பள்ளிகளின்
சுற்றுப்புறம் தூய்மையாக்கல், வேலிமுள்களை அகற்றுதல் போன்ற
பல்வேறான சமூகச்செயல்களில் மாணவர்கள் ஈடுபாட்டுடன் பங்கேற்பது பாராட்டிற்குரியது.
ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து பன்னிரெண்டாம் வகுப்பில்
வெளியேறும் ஒரு மாணவன் தன் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துத் திறன்களையும்
மிகச்சிறப்பாகக் கற்று, வாழ்க்கையைப் பற்றிய புரிதல்களுடனும்
பள்ளியிலிருந்து விடைபெறுகிறான். அடுத்தடுத்து அவன் எவ்வளவோ பல உயரங்களை அடைவதற்கு
அனைத்து மட்டத்திலும் பள்ளியானது அவனுக்கு உதவியே வருகிறது.
மாணவப் பருவத்திலே நாம் பயணிக்கும் பாதையெங்கும் வாச
மலர்களும், பாச மலர்களும் கண்சிமிட்டி நம்மை
மகிழ்விக்கின்றன. நமது பள்ளி நமது அடையாளம். நாளை மாணவர்களாகிய நாம்தான் பள்ளியின்
அடையாளம். அரசுப் பள்ளியில் பயிலும் நாம், நாளை அரசின்
ஆட்சித் தலைவர்களாக வலம் வருவோம்! வீட்டிற்கும் நாட்டிற்கும் நலம் தருவோம்!
************************
*********************
0 Comments