பண்பை வளர்க்கும் பாவாணர் நூலகம்
"ஏடுகள் வாங்கின் கேடுகள் நீங்கும்"
"புத்தகங்கள் புத்தியைத் தீட்டும் அறிவாயுதங்கள்"
"நூல்களைப் புரட்டுங்கள் - மன
நோய்களை விரட்டுங்கள்"
பாலகம் சென்று பால் வாங்கிக் காய்ச்சிக் குடித்தால் உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும். அதுபோல நூலகம் சென்று நூல் வாங்கிப் படித்தால் உள்ளத்திற்குப் புத்துணர்வு கிடைக்கும். ஆம் நண்பர்களே! புத்தகங்களுடன் உரையாடுபவர்கள், நல்ல உயிரோட்டமான உறவுகளைப் பெற்றவர்களாகிறார்கள். சமுதாயத்தைக் கற்றவர்களாகிறார்கள். ஒரு நூலகம் நமக்கு நூறு நல்ல நண்பர்கள் தரும் வழிகாட்டுதல்களைத் தந்துவிடுகிறது. வாழ்நாள் முழுமையும் கூடவே வந்துவிடுகிறது.
வாசிப்பை நேசிப்போம்!
வாசிப்பு ஒரு நாளைக்கானதல்ல. உயிர் இருக்கும் நாள்கள் அனைத்திற்குமானது. வாசிப்பு ஆர்வம் பள்ளிகளில் விதைக்கப்பட வேண்டும். பெரும்பாலும் நாம் நமது பாடப்புத்தகத்தை விடுத்து வேற புத்தகங்களுக்குள் நுழைவதில்லை. நுழைய விடுவதில்லை. இன்றைய கால கட்டத்தில் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் நூலகத்திற்கென ஒரு பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளது வாழ்த்துதலுக்குரியது.
வகுப்பறைகளுக்குள் வற்றும் உற்சாகத்தை மீட்டெடுப்பதாக நூலகங்கள் இருக்கின்றன. மாணவர்களின் மனநிலைக்கும், வயதிற்கும் ஏற்ப நூல்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். தொடக்க நிலை மாணவர்கள் படக்கதைகளை மிகவும் விரும்புவர். அதற்கேற்ப நூல்களை அவர்களுக்கு வழங்க வேண்டும். நடுநிலைப்பள்ளி மாணவர்கள் நீதிக்கதைகளை மிகவும் விரும்புவார்கள். அதுசார்ந்த நூல்களை அவர்களுக்கு வழங்க வேண்டும். ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சமூகச்சிந்தனையுடன் கூடிய நூல்களைத் தருதல் வேண்டும். மேனிலை மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை சார்ந்த நூல்களை வழங்குதல் வேண்டும். பள்ளிப் பருவத்தில் வாசிக்கும் பண்பை நாம் உருவாக்கிவிட்டால் மாணவர்கள் உயர்ந்த இடத்தை உறுதியாக அடைவார்கள்.
மாணவர்களுக்கான நூல்கள்
பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக நில், நட, ஓடு, பற, என நான்கு நிலைகளில் சிறிய புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. நூல்கள் வாசிப்பின் மூலம் மாணவர்களின் தன்னம்பிக்கை கூடும். படித்த நூல்களை முன்னால் வந்து சொல்கின்ற போது அவர்களது பேச்சாற்றல் மிளிரும். மேடைக்கூச்சம் என்பது அறவே ஒழியும். மரியாதை ராமன் கதைகள், முல்லா கதைகள், இராயர் அப்பாஜி கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், நன்னெறிக் கதைகள், நீதிக்கதைகள் இவற்றையெல்லாம் மாணவர்கள் வாசிக்கின்றபொழுது இயல்பாகவே அவர்களிடம் மனிதம் வேர்விடத் தொடங்கும்.
சுதந்திரப்போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள், தேசத்தலைவர்களின் வாழ்வியல் நிகழ்வுகள், சங்க இலக்கிய வள்ளல்களின் வரலாறுகள், புலவர்களின் பாட்டுத்திறன், அந்நியர் படையெடுப்புகள், அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகள் போன்ற நூல்களையெல்லாம் வாசிக்கின்ற பொழுது அன்றைய நாகரிகத்தையும், பண்பாட்டையும், வள்ளல்களின் கொடைச்சிறப்பையும், மக்களின் வாழ்க்கை நிலையையும் அறிந்துகொள்வர்.
பள்ளிகளில் நூலகம்:
ஆண்டுதோறும் பள்ளிக் கல்வித்துறையால் பள்ளிகளுக்கு நூல்கள் வழங்கப்படுகின்றன. அந்த நூல்கள் சில பள்ளிகளில் முறையாகப் பராமரிக்கப்பட்டு, பொருண்மைவாரியாகப் பிரிக்கப்பட்டு மாணவர்கள் எளிதில் நூல்களை இனம்கண்டு படிக்குமாறு வகை செய்துள்ளனர். சில பள்ளிகளில் அலமாரிகளில் சிறைப்படுத்தப்பட்டு மாணவர் கரம் தொடாமலே தம் ஆயுள் காலத்தை முடித்துக்கொண்ட புத்தகங்களையும் நாம் பார்க்கிறோம். இந்தப் பூமிப்பந்தைப் புரட்டிப்போடும் உன்னதமான நெம்புகோலாக நூல்கள் மட்டுமே திகழ்கின்றன. தற்போது வாசிப்புப் பயிற்சிக்கென்றே மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இருபது நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த நேரத்தில் தினமும் ஒரு வகுப்பிற்குப் புத்தகங்கள் கொடுத்து மாணவர்களை வாசிக்கச் செய்வதன் மூலம் மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையை விதைக்கலாம். என்னுடைய பள்ளிப் பருவத்தில் எங்கள் பள்ளியிலிருந்த நூலகத்தில் பெரும்பான்மையான நூல்களை நான் வாசித்திருக்கிறேன். வாசிப்புப் பழக்கம் பள்ளியிலே என் மனதில் விழுந்ததன் காரணமாகவே எங்கள் பள்ளியில் பாவாணர் நூலகம் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது.
உவமைக்கவிஞர் சுரதாவுடன் சந்திப்பு:
பள்ளியில் தொடங்கிய வாசிப்புப் பழக்கம், ஆசிரியப் பணிக்கு வந்தபின் வழக்கமாக மாறியது. மதுரை வானொலி நிலையத்தின் மேனாள் இயக்குநர் நகைச்சுவை மாமன்னர் இளசை சுந்தரம் ஐயா அவர்களின் இல்லத்தில் உள்ள நூலகத்தில் உள்ள புத்தகங்களைச் சரிசெய்யுமாறு ஒரு முறை அழைப்பு விடுத்தார். அது புத்தகங்களின் மீது ஈர்ப்பை உண்டாக்கியது. அதன் பின்னர் நகைச்சுவைத்தென்றல் பேரா.கு.ஞானசம்பந்தன் ஐயா அவர்களின் இல்லத்தில் உள்ள நூல்களை வரிசைப்படுத்தி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒரு நாள் பேராசிரியர் ஐயா அவர்களின் நூலகத்திற்கு 'அமுதகத்தின் அறிவகம்' என்று பெயர் செய்து நூலகத்தில் பெயர்ப்பலகையாக வைத்தேன். அம்மாவின் பெயர் அமுதாசம்பந்தன். அதனால் 'அமுதகத்தின் அறிவகம்' எனும் பெயரை வைக்க, அது ஐயா அவர்களுக்கும் பிடித்துப்போக ஆயிரம் மேடைகளிலாவது எனது பெயரைச்சொல்லி, நூலகத்தைப் பற்றிச்சொல்ல, அதுகுறித்து பல நண்பர்கள் என்னிடத்தில் கூறியுள்ளார்கள்.
நான் எங்கு பணிசெய்தாலும் அங்குள்ள நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்துவிடுவேன். இந்த நூலகத்திற்கான சிந்தனையை என்னுள் விதைத்தவர் உவமைக்கவிஞர் சுரதா அவர்கள். 1999 ஆம் ஆண்டில் சென்னையில் அவரைப் பார்க்க அவரது இல்லத்திற்கு நானும் எனது நண்பர் போதராசாவும் சென்றிருந்தோம். அப்போது ஐயா அவர்கள் உடல்நலமின்றி இருந்தார். அவரது இல்லத்தின் அழைப்பு மணியை அழுத்த, அவரது மைந்தர் வந்தார். ஐயாவைப் பார்க்க வேண்டும் எனச்சொல்ல, தந்தைக்கு உடல் நலமில்லை. இன்னொருநாள் வாருங்கள் என்றார். உடனே நான், 'எட்டயபுரத்திலிருந்து வருகிறேன்' என்று மட்டும் அப்பாவிடம் சொல்லுங்கள் என்றேன். அடுத்த நிமிடம் உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் மைந்தரின் தோளைப் பற்றிக்கொண்டு வாசலுக்கே வந்துவிட்டார். எனது கரம்பற்றி உள்ளே அழைத்து, எனது தோள் மேல் ஒரு கையைப் போட்டுக்கொண்டு இருக்கையில் அமர்ந்தார். அவரோடு உரையாடிப் புறப்படுமுன், ஒரு அறையைத் திறந்தார். அதில் பொற்குவியல் போல் புத்தகங்கள் குவிந்து கிடந்தன. அதில் ஒரு புத்தகத்தை என்னிடத்தில் தந்து, நீங்கள் வீடு கட்டினால் வீட்டில் நூலகத்திற்கென்று ஓர் அறை ஒதுக்குங்கள் என்று வாழ்த்தினார். அவர் தந்த ஊக்கமே எங்கள் வீட்டில் சிறு நூலகம் ஒன்று அமைவதற்குக் காரணமாக அமைந்தது. இந்த நேரத்தில் உவமைக் கவிஞர் சுரதா ஐயாவை நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.
பாவாணர் நூலகம்:
எங்களது இளமனூர் பள்ளியில் எனது முயற்சியால் 'அண்ணல் அம்பேத்கர் நூலகம்' ஒன்றை அமைத்தேன். அதற்கு முன்பு இளமனூர் மாணவர் விடுதியில் காப்பாளராகப் பணிசெய்தபோதும் ஒரு அறையில் நூலகம் ஒன்றை அமைத்தேன். அதை மதிப்பிற்குரிய திரு.கிருஷ்ணசாமி IRS அவர்கள் திறந்து வைத்தார்கள். அந்நூலகத்தை அன்றைய மதுரை ஆட்சியர் திரு.உ.சகாயம் ஐயா அவர்கள் பார்வையிட்டு வாழ்த்தினர்கள்.
மீண்டும் பள்ளியில் பெரிய அளவில் நூலகம் என்ற உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை உருவானது. அப்போது நண்பரும் தமிழாசிரியருமான மனோகரன் அவர்களுடன் உரையாடியபோது 'மொழிஞாயிறு' தேவநேயப்பாவாணர் ஐயா பெயரில் நூலகம் தொடங்கலாமே என ஆலோசனை தந்தார். அந்த அடிப்படையில் உருவானதே எங்கள் பள்ளியில் பாவாணர் நூலகம்.
தன் வாழ்நாளில் ஐம்பது ஆண்டுகள் தமிழுக்காகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர் மொழிஞாயிறு பாவாணர் ஐயா அவர்கள். 'தேவநேயனுக்குக் குடும்பம் உண்டு, குழந்தைகள் உண்டு, வறுமையும் உண்டு. கூடவே தன்மானமும் உண்டு என தனது பணியையே துச்சமென நினைத்துப் பதவி விலகியவர். வேர்ச்சொற்கள் குறித்து அவர் அளவிற்கு யாரும் ஆராய்ந்ததில்லை. எழுத்திற்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாமல் வாழ்ந்தவர். இன்றைய மொழியியல் வல்லுநர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். அத்தகைய மாபெரும் தமிழறிஞரின் பெயரால் நூலகம் அமைப்பதே சாலச்சிறந்தது என்பதன் அடிப்படையிலேயே 'மொழிஞாயிறு' தேவநேயப்பாவாணர் நூலகம் எங்கள் பள்ளியில் உருவாக்கப் பட்டது.
பல்லாண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பாகவும், இப்போது பயன்படுத்தப்படாமலும் இருந்த பெரிய வகுப்பறையினை நூலகமாக்குவது என்று முடிவு செய்தோம். வகுப்பறைச் சுவர்களில் இருந்த பொத்தல்கள் பூசப்பட்டு, பின்னர் லப்பம் பார்த்து, வண்ணம் பூசப்பட்டது. எங்களது நலத்துறையின் மூலம் வழங்கப்பட்ட இருக்கைகள் போடப்பட்டது. இதற்கிடையில் நண்பர்களிடம் நூலகம் அமைத்துவரும் எனது முயற்சியைச் சொல்ல, புத்தகம் வைப்பதற்கான அலமாரியைத் தாங்கள் தருவதாகச்சொன்னார்கள்.
எப்பொழுதும் எனது ஆக்கபூர்வமான செயல்களை ஊக்குவித்து வழிகாட்டும் சருகுவலையபட்டி பள்ளியின் தமிழாசிரியர் திரு.மணி மீனாட்சி சுந்தரம் அவர்கள் இரண்டு புத்தக அலமாரிகள் வாங்கிக் கொடுத்தார். எங்கள் பேரா.கு.ஞானசம்பந்தன், தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.காந்திதுரை, பொறியாளர் நவசக்தி, பொறியாளர் இரணியன், மதுரை மாவட்ட தமிழ் இயக்கத்தின் தலைவர் மாரியப்பன், அக்ரி ஆறுமுகம், ஆசிரியர்கள் சங்கர சபாபதி, தாமரைச்செல்வி, சுலோச்சனா, இராணி என அனைவரும் புத்தக அலமாரி தந்து உதவினார்கள்.
மற்ற நூலகங்களைப்போல இங்கு அமைதியாக மாணவர்கள் படித்துச் செல்லுதல் கூடாது என எண்ணினேன். படித்த நூல்களைப் பற்றி மாணவர்கள் கலந்துரையாடல் செய்யவேண்டும். மேடைக்கூச்சம் மாணவர் மனதிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நூலகத்திற்கென தனி ஒலிவாங்கி வேண்டும் என நினைத்தேன். யாதவர் ஆண்கள் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர்(பணி நிறைவு) திரு.மோகன் ஐயா அவர்கள் ஒலிவாங்கி தந்தார்கள். தமிழாசிரியர் முருகேசன் அவர்கள் இருக்கை உதவி செய்தார்கள். பள்ளியின் சார்பாக பீரோ ஒன்றினை எங்களது ஆற்றல்மிகு தலைமை ஆசிரியை திருமதி.கனகலட்சுமி அவர்கள் தந்தார்கள்.
நூலகம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. எப்போதும் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடிய பெரும்புலவர்.மு.சன்னாசி ஐயா அவர்கள் மூலமாக நூலகம் திறப்பது என்று முடிவு செய்து 08-07-2025 அன்று திறப்பு விழாவினை ஏற்பாடு செய்தோம். எனது பள்ளிப் பருவத்தில் நான் மிகவும் நேசித்த பட்டிமன்றப் பேச்சாளர் கவிஞர் மூரா அவர்களிடம் நூலகம் பற்றிக்கூறியபோது, என்னிடத்தில் நூல்கள் இருக்கின்றன தம்பி. அவை என்னிடத்திடத்தில் இருப்பதைவிட உங்கள் நூலகத்தில் இருந்தால் மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும் என்று சொல்லி, ஐநூறுக்கும் அதிகமான நூல்களை எங்களது நூலகத்திற்கு வழங்கியதோடு, விழாவிற்கும் வருகை தந்து சிறப்பான வாழ்த்துரை வழங்கி ஊக்குவித்தார். அவருடன் கவிஞர்கள் மலர்மகள், மஞ்சுளா வருகை தந்து, நூல்கள் வழங்கினர்.
தியாகராசர் கல்லூரியின் மேனாள் துறைத்தலைவர் அமரர் கருணாமூர்த்தியின் துணைவியார் அவர்கள் ஆய்வேடுகள் பல தந்தார்கள். அது தமிழாசிரியர்களுக்கும், ஆய்வு செய்யும் மாணவர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் வகையில் அமைந்தது. சக ஆசிரியப் பெருமக்களான நாகேந்திரன், சுப்ரமணி, கவிதா, ஆண்டார்கொட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.கிருஷ்ணமூர்த்தி, இந்தியன் வங்கிப் பணியாளர் சரஸ்வதி என விழாவிற்கு வருகை தந்த நண்பர்கள் பலரும் நூல்களோடு வந்தும், தந்தும் வாழ்த்திச் சென்றனர்.
பாவாணரின் பெயரன் வருகை:
நூலகத்திறப்பன்று பாவாணரின் அருமையான படம் ஒன்றினை சென்னை கூத்துப்பட்டறையின் நிறுவுநர் முத்துசாமியின் வழிகாட்டலில் மதுரை மாவட்டப் பொறுப்பாளர் லட்சுமி அவர்கள் வழங்கினார். அத்துடன் நூல்களையும் தந்தார்.
விழா அன்று, "இளைஞர் ஒருவர் புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். தங்களிடம் தர வேண்டும்" என்றார். அதைத் தாங்கள் விழா மேடையில் கொடுங்கள் என்று அவரிடம் சொல்ல, அவரும் சரி என்றார். ஆசிரிய நண்பர்கள் மூலமாக வந்துள்ளார் என நினைத்தேன். நூலகத்தைப் பெரும்புலவர் சன்னாசி ஐயா அவர்கள் திறந்து வைத்தார். குத்துவிளக்கேற்றி வாழ்த்தினார் எங்கள் பள்ளியின் மேனாள் தலைமையாசிரியரும், துணை இயக்குநருமான பணி நிறைவு பெற்ற தெய்வகன்னி அம்மா அவர்கள். விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும் அந்த இளைஞர் ஒரு அட்டை ஒன்றைக் கொடுத்து புத்தகங்கள் தர வேண்டும் எனச்சொல்ல, விழா நிறைவில் தரலமெனச் சொல்லிவிட்டேன்.
விழா இனிதே நிறைவு பெறும் தருவாயில் அவர்தந்த பெயர் அட்டையில் 'சீவாப்பாவாணர், பாவாணரின் கொள்ளுப் பெயரன்' என இருந்தது. அடடா! விழா ஏற்பாட்டில் வந்த இளைஞர் யாரென விசாரிக்காது விட்டுவிட்டோமே என நினைத்து, அவரை மேடைக்கு அழைத்துச் சிறப்புச் செயதோம். பாவாணர் ஐயா அவர்களின் நூல் தொகுப்புகள் அனைத்தையும் நமது நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். முகநூலிலும், புலனம் வழியாகவும் நூலகம் திறப்பதைக் கேள்வியுற்று வருகை தந்ததாகக் கூறினார். பள்ளி வளாகத்தில் பாவாணர் பெயரில் மரக்கன்று ஒன்றினை அவர் மூலமாக நட்டுவைத்தோம். பின்னாளில் பாவாணர் ஐயாவின் பிறந்த நாளன்று, சிறப்பு விருந்தினராக அழைத்து, பாவாணர் பற்றி உரையாடச் செய்தோம்.
மாணவர்களும் நூலகமும்:
நூலகப்பாடவேளை என்றாலே மாணவர்கள் மகிழ்ச்சியாக வருகை தருகிறார்கள். பிஞ்சு மனதில் நாம் விதைக்கும் விதைகள் அப்படியே பயிராகும். உயிராகும். விதைப்பது புத்தகமாக இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பூக்கும். புத்தக அலமாரிகளில் தலைப்பிட்டு, அதற்கேற்ப புத்தகங்கள் இருப்பதால் மாணவர்கள் எளிதில் எடுத்துப் படிக்கிறார்கள். மதிய உணவு இடைவேளையில் வந்து நாளிதர்களையும், நூல்களையும் வாசிக்கிறார்கள். நூலகம் திறக்கும் போதெல்லாம் புதிய உலகத்திற்குள் மாணவர்களுடன் நானும் செல்கிறேன். மனம் மகிழ்ந்து நாளும் திரும்புகிறேன்.
மாற்றமும் ஏற்றமும் ஆசிரியர்கள் நினைத்தால் முடியும். நாளைய உலகு நூல்களால் மாணவர்கள் மூலம் விடியும்.
மு.மகேந்திர பாபு,
29-05-2026
காலை 5:00 மணி.
0 Comments