நல்லாசிரியர் முனைவர் சண்முக திருக்குமரன் - பணி நிறைவுப் பாராட்டு விழா - வாழ்த்துக் கவிதை

 


சண்முகதிருக்குமரன் ஐயா - பணி நிறைவுப் பாராட்டு விழா - வாழ்த்துக் கவிதை - மு.மகேந்திர பாபு

நாள்:24-05-2026 - ரெங்கா மகால், பாலமந்திரம், மதுரை. 


தமிழே! உயிரே! வணக்கம்!

தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்!

அமிழ்தே! நீ இல்லை என்றால்

அத்தனையும் வாழ்வில் கசக்கும்! புளிக்கும்!

தமிழே! உனக்கேன் கலக்கம்?

தாயே! பொறம்மா முழக்கம் வெடிக்கும்!

அமிழ்தே உனைஎவன் தொட்டான்?

அவனை என் கைவாள் அழிக்கும்! முடிக்கும்!


என்ற உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் வரிகளோடும், 


எடுத்த காரியம் யாவினும் வெற்றி 

எங்கு நோக்கினும் வெற்றி

விடுத்த வாய்மொழிக்கு எங்கனும் வெற்றி

வேண்டினேன் எமக்கருளினாள் காளி 


   என்ற பாட்டுப்பாட்டன் வரிகளோடும் மீனாட்சி மைந்தன், நகைச்சுவை நாவரசு ஐயா சண்முகதிருக்குமரன் அவர்களின் பணி நிறைவுப் பாராட்டு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் முதல் வணக்கம்.முத்தமிழ் வணக்கம்.


அகவை அறுபது என்றுசொல்லி

அழைத்திருக்கும்

ஐயாவின் செயல்பாட்டின் வயதோ இருபது.


எம்முகம் நோக்கினும்

ஆசிரியப் பெருந்தகை

ஐயா சண்முகம் அவர்களின்

திருக்குமரன் முகம் நோக்கின்

அகம் எல்லாம் ஆனந்தமே!


தாயும் தந்தையும் ஆசிரியர்கள்

தானும் அவ்வழியே என்று

ஆடை விற்பனையை விட்டு, 

ஆசிரியப் பணியைத் தொட்டு, 

இதோ பணி நிறைவில்

மன நிறைவாய் இன்று.

வாழ்த்த வந்தீர் அனைவரும் நன்று.


செண்ட்மேரிசில் விழுந்த மாணவ விதை

செவன்த்டேவில் ஆசிரியராய் வளர்ந்து, 

விகாசாவில் கிளையாய் விரிந்து

மணிமேகலை மாநகராட்சி உயர்நிலைப பள்ளியில் 

மணம்பரப்பி

தமிழையும் அறிவியலையும்

மாணவர் மனம் நிரப்பி

இதோ இன்று பணி நிறைவு.


ஐயா நீங்கள்

அறிவியல் யுகத்தின் ஆண்ட்ராய்டு போன்.

அதிலே காலம் காட்டும் கடிகாரம் உண்டு.

இருளை அகற்றும் ஒளியும் (டார்ச்) உண்டு.

குரலைப் பதிக்க குரல் பதிப்பி(வாய்ஸ் ரிகார்டர்) உண்டு.

அழகூட்டி எடுக்க ஒளிப்படம் (கேமரா) உண்டு.

எண்களைக் கணிக்க கணிப்பான் (கால்குலேட்டர்) உண்டு.

எல்லோர் இதயத்தையும் இணையத்தின் மூலம் இணைக்க முகநூலும், புலனமும் அதனால் மனச்சலனமும் (வாட்சாப்பும் பேஸ்புக்கும்) உண்டு.


ஐயா நீங்கள் ஆண்ட்ராய்டு போன்.

உங்களிடத்திலே முத்தமிழ்

முழங்கும்.

உங்கள் நாக்கு

அறிவியலும் வழங்கும் ஆன்மீகமும் வழங்கும்.

ஜாதகமும் சொல்லும்.

வாஸ்தும் சொல்லும்.

பட்டிமன்றத்திலும்

நேர்முக வர்ணனையிலும்

பக்தியை ஊட்டும்

நற்பண்பினைக் கூட்டும்.

அரசு விழாக்கள் உங்கள் நிகழ்ச்சித் தொகுப்பால்

அதிரும்!

ஆண்டொன்றில் இருபத்திமூன்று நூல்களைப் படைத்த உங்களை எழுத்து ராட்சசன் என்பதா?

இரட்சகன் என்பதா?

எழுதுவோர் பேசுவதில்லை.

பேசுவோர் எழுதுவதில்லை.

இரண்டும் கைவரப்பெற்ற

கலைஞானியே!

நீ நவீன உலகின் திறன்பேசி.


பணியில் இருக்கும் போதே இருபத்திமூன்று புத்தகம் படைத்தாய்  என்றால்

பணி நிறைவிற்குப் பின்?


உன்னை உள்ளிருந்து

இயக்குகிறாள் மீனாட்சி அன்னை.

நூல்கள் பல மலரட்டும்

பணி நிறைவிற்குப் பின்னை.


எல்லோருக்கும் கனவுகள் வரும்.

அதில் மனங்கவரும் திரைநாயகிகள் வருவார்கள்.

ஆனால் உன் கனவில்தான்

மதுரையின் நாயகி மீனாட்சி வந்தாள்.

இருபது நூல்களை எழுது

என்று கட்டளை தந்தாள்.

 

தமிழன்னையின் சிலைக்கு 

நீ கண்டாய் நிரந்தர மின்னொளி

அதனால், 

இன்றும் கண்ணாடி இல்லாமல் வாசிக்கிறது உன் கண்ணொளி.


களம் கண்ட முதல் தேர்தலிலே

ஆட்சியைப் பிடிப்பதைப்போல, 

களம் கண்ட முதல் ஆட்டத்திலே

மட்டைப் பந்தில் நூறு ஓட்டத்தை எடுப்பதைப் போல,

களம் கண்ட முதல் பேச்சுப் போட்டியிலே முதல் பரிசு பெறுவதைப்போல, 

களம் கண்ட முதல் பட்டிமன்றத்திலேயே

நடுவராய் நடுநாயமாக அமர்ந்தாய்!


வார்த்தைச் சித்தர் வலம்புரிஜானின் திருவாயால்

நகைச்சுவை நாவராசுவாக

ஆம்பூரிலே பிரியாணிபோல மணந்தாய்!

 

மக்களின் மீதும்,

சமூகத்தின் மீதுமாய்

உன் பட்டிமன்றம்

பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.


நெகிழி ஒழிப்பு, மஞ்சப்பை

கொரனா வாசகம்,

பள்ளி மாணவர்களுக்குத் தேர்வை அணுகுவது எப்படி?

மனுநீதி - ஞாயிறு மதியம் 12 மணிக்கு வழக்கறிஞர் சாமிதுரையுடன் சண்முக திருக்குமரன் என மக்களின் பால்

உன் மனம் சென்றது.

மக்கள் மனங்களை வென்றது.

பத்தாயிரம் மேடைகளைக்

கடந்தும் உன் குரல் நின்றுது.


1996 ல் தொடங்கிய வர்ணனை 2026 கடந்தும் பயணிக்கிறது.


ஆயிரம் பொய் சொல்லித் திருமணம் என்பதை

திருமணம் - ஆயிரம் முறை போய்ச்சொல்லனும் என்று புதிய பார்வை படைத்தது உன்குரல்.


காரல்மார்க்ஸ்க்கு ஒரு ஜென்னி

திருக்குமரனுக்கு ஒரு வைஜெயந்தி மாலா.

திருக்குமரனின் திருநாமம்

வையம் முழுதும் பரவ

இந்த வைஜெயந்திமாலாவே காரணம்.


கீழடிப் பெண்ணின்

காலடி ஐயாவின் 

இல்லத்துள் நுழைந்தது.

உள்ளத்துள் நுழைந்தது.

அவருக்குள் இருந்த அஞ்ஞானம் மறைந்து

ஆண்டவன்பால் மனம் மெய்ஞானம் நிறைந்தது.


பி.எஸ்சி படித்தவரை

பிஎச்டி படிக்க வைத்ததும்

நம் அம்மா வைஜெயந்திதான்.

அங்கத்தைத் தங்கம் அழகுபடுத்தும்.

அம்மையாரின் தங்கமோ

ஐயாவின் கல்விக்காக  அடகானது!

அட! வாழ்க்கை அழகானது!


ஐயா எழுதிய 23 புத்தகங்களினும்

அவர்கள் தம்பதி சகிதமாய்

எழுதிய இரண்டு புத்தகங்கள்

இல்லறத்தின் நல்லறத்தைச் சொல்லும்.


ஒரு புத்தகம் சண்முகப் பிரியா பொறியாளராய் ஆனது.

மறு புத்தகம் சரண்யா மருத்துவராய் ஆனது.

இருமகள்கள் இணையருக்குத் திருமகள்களாய் உதித்தனர்.

பெற்றோரின் பெருமையைப் பதித்தனர்.

மருமகன்கள் மற்றோர்

மன்களாயினர்.


கிழமைகளில் இவருக்குச்

சனி பிடிக்கும்.

காரணம்

அன்றுதான் பேசும்கலை பேச்சுக்கலையாய் இவரது இல்லத்தில் மாணவர்

உள்ளத்தில் ஊக்கமாய் பீறிடும்.

இளைய சமுதாயம்

இலக்கியத்தால் மனம் மாறிடும்.


பன்னிருதிருமுறைகளில் ஒன்றான

திருமந்திரத்தைப்

பன்னிரெண்டு ஆண்டுகள் வாசிப்பு.

அதனால்தான் அவர் சொல்வதெல்லாம்

மந்திரமாய் நம்மை ஆட்டுவிக்கிறது.


நண்பர்களே!

அமுதத் தமிழ்மொழிக்கு 

ஆண்டுகள் ஈராயிரம் பெருமை உண்டு என்பார் மறைமலை அடிகள்.


ஒன்றாம்  நூற்றாண்டிலே தொல்காப்பியம்

இரண்டாம் நூற்றாண்டிலே சங்க இலக்கியங்கள்

மூன்றாம் நூற்றாண்டிலே திருவாசகம்

நான்கு -  ஆசாரக்கோவை

ஐந்து - பெருங்கதை

ஆறாம் - கல்லாடம்

ஏழு & எட்டாம் - தேவாரப்பாடல்கள்

ஒன்பதாம் - ஆழ்வார்களின் பக்திப் பாசுரங்கள்

பத்தாம் - சீவகசிந்தாமணி

11 ஆம் - பெரியபுராணம்

12 ஆம் - முற்பகுதி கந்தபுராணம் / பிற்பகுதி கம்பராமாயணம்

13 ஆம் - சிவஞானபோதம்

14 ஆம் - தலபுராணங்கள்

15 ஆம் - வில்லிபுத்தூரார் பாரதம்

16 ஆம் - திருவிளையாடற்புராணம்

17 ஆம் - தேம்பாவணி, சீறாப்புராணம்

18 ஆம் - தாயுமானவர் பாடல்கள்

19 ஆம் - வள்ளலார் பாடல்கள்

20 ஆம் - பாரதி பாடல்கள்


நண்பர்களே! நினைவில் ஏற்றுங்கள்

21 ஆம் நூற்றாண்டிலே நமது ஐயா சண்முக திருக்குமரனின் படைப்புகள் என்று வரலாறு சொல்லட்டும்.



என்ன பேசலாம் என்று

உன்னை நினைக்க

இன்னும் பேசலாம் என்றாலும்

வருகை தந்த வள்ளல் பெருமக்களின் திருவாய்மொழி கேட்கவேண்டும் என்பதால்

என் வாழ்த்து மொழிக்குத் திரையிடுகிறேன்.


வள்ளல்களின் வருமொழிக்கு உரையிடுகிறேன்.


மீனாட்சி மைந்தனுக்குப் பாராட்டுவிழா என்பதால் இங்கே சாமிகளின் நடமாட்டம்

ஆம்!

விழாவிற்குத் தலைமை ஏற்க, 

கு.சாமித்துரை, 

பாராட்டுரை பகிர மருத்துவர் நாகேந்திரன் - இந்திரன்,

மருத்துவர் பாலமுருகன், 

மனிதநேயர் ஸ்டார் குருசாமி, 

அறங்காவலர் சண்முகசுந்தரம்

பட்டயக் கணக்காளர் இராமகிருஷ்ணமுரளி என

சாமிகளின் நடமாட்டம்.

அதனால் இங்கே கொண்டாட்டம்.



பணி நிறைவுப் பாராட்டு விழாவின் தலைமை

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.குற்றாலம் சாமிதுரை.


கண்ணகி சிலம்புடைத்த

மதுரை மண்ணில்

பெண்களின் கண்ணீர் துடைக்கவந்த சாமி.


அன்று மனுநீதிக்குச் சோழன்.

இன்று மனுநீதிக்குப் பாண்டியன்.

ஆம்! நம் மதுரை மண்ணில் சாமிதுரை எனும் பாண்டியன்.

வழக்கறிஞர் மட்டுமல்ல.

மேடையில் வீசும் மெல்லிய பூங்காற்றாய் நம்மை மகிழ்விக்கும் பேச்சாளர்.

இன்றைய விழா நாயகரின்

நாற்பதாண்டுகால நண்பர்.

முகநக நட்பு இன்றி

அகநாக நட்பாளர்.

அன்பாளர், நற்பண்பாளர்.


கருப்பு படத்தில்

காசு பார்க்கும் வழக்கறிஞர் பேபிகண்ணன் அல்ல.

எங்கள் அண்ணன் வழக்காடும் மன்னன்

திரு.குற்றாலம் சாமிதுரை அவர்கள்.

தந்தை காட்டிய வழியில்

தடம் பதித்து, 

எளியவர்களின் இனியனாய்

தனி இடம் பிடித்த

வழக்கறிஞர் சாமிதுரை அவர்களை தலைமையுரை நிகழ்த்த அன்புடன் அழைக்கிறோம்.



மதுரையின் மருத்துவ அடையாளம்.

முற்களின் நடுவே ரோசா போல்

வணிகமாகிப்போன மருத்துவத்துறையில்

மனிதநேய ராசா இவர்.


மக்களுக்குத் தேவை

மருத்துவ சேவை என்று

வள்ளுவருக்கு வாசுகிபோல்

நம் நல்லவர் நாகேந்திரனுக்கு

ஒரு தேவகி.


ஊசியும் நூலும் இணைந்தால்

புது உடையைத் தரும்.

மருத்துவர் நாகேந்திரனின்

ஊசியும் மருந்தும் இணைந்தால்

உடம்பில் ஊக்கம் தரும்.


மக்கள் ஜனாதிபதியின்

மனங்கவர் மருத்துவர்

ஐயா நாகேந்திரன் அவர்களைப் பாராட்டுரை வழங்க அன்புடன் அழைக்கின்றோம்.


மண்காக்க ஆயிரம் பேர் - பசு

மலை காக்க ஆயிரம் பேர்

ஊர் காக்க ஆயிரம் பேர் - நல்

உற்றார் காக்க ஆயிரம் பேர் - ஆயினும்

நதி காக்க யார் இருக்கார் என நாம் கேட்க, 

நான் இருக்கிறேன் என்றான் ஒரு சாமி;

அவன் நானிலம் போற்றும் குருசாமி.


நதிதனிலே கால் வைப்போம் அழுக்கை நீக்க!

இவன் கைவைத்தான்

அழுக்கைப் போக்க!

அன்னம் தரும் அண்ணன் கை!

இது நவயுகக் கர்ணன் கை

நட்சத்திர நாயகன் எனும்

நடமாடும் தூயவன்

வறியவர்களின் தாயவன்!

வருக வள்ளலே!

தருக வாழ்த்துரை!




   












Post a Comment

0 Comments