கலைஞர் கவிதை - புறநானூற்றுத்தாய்
குடிசைதான்!
ஒரு புறத்தில் கூரிய வேல்வாள்
வரிசையாய் அமைத்திருக்கும்
வையத்தைப் பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும்
வடித்துவைத்த படைக்கலம்போல்
மின்னும்; மிளிரும்
புலியின் குகையினிலே அழகில்லை – புதுமையல்ல
கிலியும் மெய் சிலிர்ப்பும் கீழிறங்கும் தன்மையும் தலைகாட்டா
மானத்தின் உறைவிடம் – மறவன் மாளிகை
இல்லத்து வாயிலிலே கிண்ணத்துச் சோறோடு
வெல்லத்தைச் சிறிது கலந்து
வயிற்றுக்குள் வழியனுப்ப
பொக்கைவாய் தனைத்திறந்து பிடியன்னம் எடுத்துப் போட்டாள்
பெருநரைக் கிழவிஒருத்தி
ஓடிவந்தான் ஒரு வீரன்
ஒரு சேதி பாட்டி என்றான்
ஆடிவந்த சிறுமிபோல் பெருமூச்சு வாங்குகின்றாய்
ஆண்மகனா நீ
தம்பி மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படட்டும்
பின் பேச்சுக்குத் துவக்கம் செய் என்றாள்
அந்தக் கிண்டலுக்குப் பேர்போன கிழட்டுத் தமிழச்சி!
வேடிக்கை நேரம் இதுவல்ல பாட்டி –
உன் வாடிக்கைக் கேலியை விட்டுவிடு.
மடிந்தான் உன் மகன் களத்திலென்றான்.
மனம் ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி ஒருமுறை
தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு
களமும் அதுதான்
காயம் மார்பிலா? முதுகிலா? என்றாள்
முதுகி லென்றான்
கிழவி துடித்தனள்;
இதயம் வெடித்தனள்;
வாளை எடுத்தனள்!
முழவு ஒலித்த திக்கை நோக்கி
முடுக்கினாள் வேகம்
கோழைக்குப் பால் கொடுத்தேன்
குப்புற வீழ்ந்து கிடக்கும்
மோழைக்குப் பெயர் போர்வீரனாம்.
முன்பொருநாள்
பாய்ந்துவந்த ஈட்டிக்குப்
பதில் சொல்ல மார்பைக் காட்டிச்
சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாளர். அவருக்குப் பிறந்தானா?
அடடா மானம் எங்கே?
குட்டிச் சுவருக்கும் கீழாக வீழ்ந்து பட்டான்.
இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும்
இங்கு வீணை நரம்பினிலே இசை துடிக்கும்
அதுவும் மானம் மானம் என்றே முழங்கும்
மதுவும் சுராவும் உண்டுவாழும் மானமற்ற வம்சமா
ஏடா! மறத்தமிழ்க் குடியிலே மாசு தூவிவிட்டாய்
மார்பு கொடுத்தேன்
மகனாய் வளர்த்தேன்
தின்றுக் கொழுத்தாய் திமிர்பாய்ந்த தோள்களெங்கே?
தினவெடுக்கவில்லையோ? அந்தோ!
வேலுக்கு வழி சொல்ல வகையற்ற கோழையே
என் வீரப் பாலுக்கு வழி சொல்வாய்!!
என்று கதறினாள் எண்பதை நெருங்கிய ஏழைக் கிழவி.
சென்றங்குச் செருமுனையில் சிதறிக்கிடந்த
செந்தமிழ்க் காளைகளைப் புரட்டிப் பார்த்தாள்
அங்கு நந்தமிழ் நாட்டைக் காக்க ஓடிற்று ரத்த வெள்ளம்!
பிணக்குவியலிலே பெருமூச்சு வாங்க நடந்தாள்
மணப் பந்தலிலும் அந்த
மகிழ்ச்சியில்லை
மகன் பிறந்த போதும் அவள் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டு
அவன் இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி!
இதைக் கண்டாள் – இதயங் குளிர்ந்தாள்!
எதைக் கண்டாலும் இனிக் கவலை இல்லை
என் மகன் வீரனாய் இறந்தான் என்றாள்.
அறுத்தெறிய இருந்தேன் அவன் குடித்த மார்பை
அடடா! கருத்தெரியப் பொய் சொன்ன கயவனெங்கே?
வாளிங்கே! அவன் நாக்கெங்கே?
என்று கேட்ட புறநானூற்றுத் தாயினுடைய கவிதை வரிகள்
கிட்டத்தட்ட முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய வரிகள் –
இன்றைக்கு அம்மையார் அவர்கள் அந்த வாளை கையிலே வாங்கி உயரப் பிடித்த நேரத்தில் நினைவுக்கு வந்தன.
புறநானுற்றுத்தாய் தன்னுடைய மகனை வீரனாகத்தான் வளர்த்தாள்.
போர்க்களத்திலே கணவன் மாண்டு, தமையனும் மாண்டு, தந்தையும் மாண்டு அனைவரும் மாண்ட பிறகு கூட தன்னுடைய ஒரே மகனுக்கு தலைசீவி பொட்டிட்டு வாளைத் தந்து “சென்றுவா மகனே! செருமுனை நோக்கி” என்று சொன்ன தாய்க்குலம் தமிழ்க் குலம்.
0 Comments