தமிழ் இலக்கியத்தில் பெண்மை - தமிழ்ச்சுடர்' முனைவர்.நிர்மலா மோகன்
முன்னுரை:
"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்" என்றான் பெண்களின் நேசன் பாரதி. அவன்தான் சொன்னான்,
"எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி"
- பாரதியின் வரிகளுக்கேற்ப தான் எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றி மாலை சூடி வருகின்றவர் தமிழாசான், அன்பு அம்மா பேரா.நிர்மலா மோகன் அவர்கள்.மதுரையின் ஆகச்சிறந்த இலக்கிய ஆளுமை அவர்.தம் பேச்சும் மூச்சும் தமிழென வாழ்பவர். இலக்கிய மேடைகளைத் தமிழால் ஆள்பவர். தமிழ்கூறும் நல்லுலகில் 'இலக்கிய இணையர்' என்று சொன்னால் அது தமிழ்த்தேனீ.பேரா.இரா.மோகன் - பேரா.நிர்மலா மோகன் அவர்களையே குறிக்கும்.
பேரா.இரா.மோகன் ஐயா அவர்கள் தம் பேச்சாலும், எழுத்தாலும் உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நிறைந்ததைப்போல, நிர்மலா மோகன் அம்மா அவர்களும் நிறைந்திருக்கிறார்கள். மோகன் ஐயா அவர்கள் பலரையும் ஊக்குவித்து படைப்பாளராகவும், பேச்சாளராகவும் மாற்றியவர். புகழ் ஏணியில் ஏற்றியவர். பேரா.மோகன் ஐயா அவர்களால் உயர்ந்தவர் பலர். இந்தத் தருணத்தில் நன்றியோடு ஒரு தகவலைப் பதிவு செய்ய விரும்புகிறேன். மதுரை உலகத்தமிழ்ச் சங்கத்தின் இயக்குநராக அம்மா சந்திரா அவர்கள் பணியாற்றிய போது எளியவன், சிறியவன் எனக்கும் ஒரு நல்வாய்ப்பினைப் பெற்றுத் தந்து, 'அருந்தமிழுக்கோர் ஔவை' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தும் வாய்ப்பு வழங்கிய பெருந்தகை ஐயா.இரா.மோகன் அவர்கள். அவரின் அடியொற்றி வருபவர், வாழ்பவர் அம்மா நிர்மலா மோகன் அவர்கள்.
பேரா.நிர்மலா அவர்களின் படைப்பாக்கம்:
எழுத்திலும் பேச்சிலும் பல புதுமைகள் புகுத்தி வருபவர்.'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது அன்று. 'திரைகடலோடியும் தமிழ் மணம் பரப்பு' என்பது இன்று. பல்வேறு உலக நாடுகளுக்குச் சென்று தமிழர் மனங்களில் தமிழ் மணம் பரப்பியவர். இலக்கிய உலகிற்கு 46 நூல்களைத் தந்து தனக்கான இடத்தை நிரப்பியவர். ஒவ்வொரு நூலும் முத்துக்கள்தான். அத்தகைய நன்முத்துகளில் ஒன்றான 'தமிழ் இலக்கியத்தில் பெண்மை' என்ற நூலினைக் குறித்து கட்டுரை வழங்குவதில் பேருவகை கொள்கிறேன்.
சங்ககால இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை ஆழங்கால் பட்டவர் நமது பேரா.நிர்மலா அம்மா அவர்கள். பல்லாண்டுகளுக்கு முன்பே அவரது நூல்கள் சிலவற்றை வாசித்துப் பேரானந்தம் அடைந்தவன் நான். தமிழ்கூறும் நல்லுலகிற்கு நல்ல நல்ல நூல்களை நாளும் தருபவர். புகழ்மிக்க இதழ்கள் பலவற்றிலும் எழுதியதையும், பல்வேறு அரங்குகளில் பேசியதையும் தொகுத்து, 'தமிழ் இலக்கியத்தில் பெணமை' என்று அழகானதொரு மாலையாக நமக்குத் தந்துள்ளார்.
இந்நூல் குறித்த அவரது பார்வை அற்புதமானது. 'பெண்மை, பெண்கள், பெண்ணியம் தொடர்பாக அமைந்துள்ள இக்கட்டுரைகள் பெண்களின் பரிமாணத்தை எடுத்துரைப்பவை; பெண்களின் ஆற்றலையும், அறிவார்ந்த நிலையையும், எழுச்சி பெற்று வாழும் மனநிலையையும் பேசுபவை. பெண்களுக்கு ஒரு மாற்றம் தேவை என உணர்த்துபவை" என கூறுகிறார். அவர் கூற்று உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை.
இந்நூலில் மொத்தம் 13 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் 'பெண்மை' என்ற மையப்புள்ளியில் நின்று, பெண்களின் சிறப்பை, மதிப்பை வெளிப்படுத்துகின்றன.
தாய்த்தெயவ் வழிபாடு:
இந்நூலின் முதல் கட்டுரையாக 'தாய்த்தெய்வ வழிபாடு' எனும் கட்டுரை அமைந்திருக்கிறது. 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்றார் அறிவிற் சிறந்த ஔவை. 'மாதா, பிதா, குரு, தெய்வம்' என்ற வரிசையில் அன்னையே முதலில் வைத்துச் சிறப்பிக்கப் படுகிறாள். 'மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே, அவன் ஆடிஅடங்குவது மண்ணுக்குள்ளே' என்றார் பட்டுக்கோட்டை. பெண்களைத் தெய்வமாக வழிபடும் மரபு நம் தமிழகத்தில் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.
பயிர்த்தொழிலில் பெண்கள்:
பண்டைக் காலத்தில் பயிர்த்தொழில் எவ்வாறு பெண்கள் மூலமாக நடைபெற்றது என்பதை விரிவாகவும், விளக்கமாகவும் கூறுகிறார்.
"வேட்டையாடி உணவு தேடிய காலத்தில், ஆண்கள் வேட்டையாடுவதிலும், பெண்கள் தாவர உணவு தேடுவதிலும் ஈடுபட்டிருந்தனர். அதனால் ஆண்கள் வெளியே வேட்டைக்காக நெடுந்தூரம் சுற்றி அலைந்தனர். பெண்கள் குகைகளிலும், குடிசைகளிலும் தங்கி வாழ்ந்தனர். பெண்கள் தம்மைச்சுற்றி நிகழும் தாவரங்களின் இனப்பெருக்கத்தை அனுபவத்தில் அறிந்தனர். கொட்டைகளையும் விதைகளையும் பூமியில் விதைத்தனர். கிழங்குகளை நிலத்தை அகழ்ந்து புதைத்து மூடினர். அவை வளர்ச்சியுற்றுப் பயனளித்தன. இவ்வாறு பண்டைய பயிர்த்தொழில் தோன்றிற்று. பயிர்த்தொழிலில் பங்குபெற்ற பெண்களும் ஆண்களை விட உயர்வு பெற்றனர். பெண் ஆதிக்கம் பெறத்தொடங்கிய இந்நிலையில் பெண் தெய்வங்கள் தோன்றின"
- பெண் தெய்வம் தோன்றிய வரலாறு பயிர்த்தொழில் மூலமாகத் தொடங்கியதை மிக எளிமையாகவும், இனிமையாகவும் விளங்கச்செய்கிறார். தாய்த்தெய்வ வழிபாட்டு நிலைகளையும், பாவை நோன்பு, கன்னித்தெய்வம், கானமர் செல்வி, கொற்றவை வழிபாடு, இந்திய - ஆரியரது கலப்பால் தோன்றிய (காளி) வழிபாடு என அனைத்தையும் விரிவான ஆய்வு நோக்கில் தெளிவு படுத்துகிறது இக்கட்டுரை.
சங்கப் பெண்பாற் புலவரின் ஆளுமைத்திறன்:
இரண்டாவது கட்டுரையாக "சங்கப் பெண்பாற் புலவரின் ஆளுமைத்திறன்" அமைந்துள்ளது. இது சங்கப் பெண் புலவர்களின் எழுத்தாளுமையை நமக்கு விளக்குகிறது. சங்கப் புலவர்கள் மொத்தம் 471 பேர். இவர்களில் 41பேர் பெண்பாற் புலவர்கள். ஆண்பாற் புலவர்களைப் போல பெண்பாற் புலவர்களும் படைப்பாற்றல் மிக்கவர்களாக விளங்கியுள்ளார்கள். எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால், படைப்பாக்க எண்ணத்தில் குறைவில்லாமல் இருந்துள்ளார்கள்.
அவர்கள் பல்வேறு குலத்தைச் சேர்ந்தவர்களாக விளங்கினார்கள் என்பதை வெண்ணிக்குயத்தியார், குறமகள் இளவெயினி, குறமகள் குறிஎயினி, கழார்க்கீரன் எயிற்றியர் போன்ற பெயர்கள் உணர்த்துகின்றன. அரச குலத்தில் பிறந்த பெண்களும் கவிபுனையும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தனர் என்பதற்கு ஆதிமந்தியார், பாரிமகளிர், பெருங்கோப்பெண்டு ஆகியோர் சான்றாக விளங்குகிறார்கள் என்பதைக் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.
போர்க்களத்திலே பெறுவது மட்டுமல்ல வெற்றி. அந்தப் போரை நடக்காமல் இருக்கச் செய்வதிலும் இருக்கிறது வெற்றி என்று நிருபித்தவர் அறிவிற்சிறந்த ஔவை. சங்கப் பெண்பாற் புலவர்களில் முதலிடம் பெறுபவர்; தினமும் நம் உரையாடலில் வருபவர். அதியமான் என்னும் வள்ளல்மானால் அரிய நெல்லிக்கனி பெற்று, பலகாலம் தமிழை வாழவைத்த பெருமைக்குரியவர். அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் போர் மூள உள்ள நேரத்தில் தொண்டைமானிடம் தூதாகச்சென்று தம் பேச்சாற்றல் திறனால் அந்தப் போரை நிறுத்தியவர். இதனால் 'முதல் பெண் தூதுவர்' என்ற சிறப்பைப் பெற்றவராக ஔவையார் திகழ்கிறார் என்பதைக்கட்டுரை விளக்குகிறது. மேலும், ஔவை பாடலில் வெளிப்படும் நிர்வாக மேலாண்மை, ஒக்கூர் மாசாத்தியாரின் பாடலில் வெளிப்படும் மறக்குடி மகளிரின் வீரம், காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடலில் வெளிப்படும் மகனைப் போருக்கு அனுப்பும் மூதாட்டியின் வீரம், பாரி மகளிரின் கையறுநிலைப் பாடல் என இன்பத்தையும், துன்பத்தையும், வீரத்தையும், வெட்கத்தையும் விரிவான முறையில் நோக்கும் சக்திபெற்று இக்கட்டுரை விளங்குகிறது.
வான்புகழ் வள்ளுவர் பார்வையில் பெண்கள்:
'உலகப் பொதுமறை' என்று உலக மக்களின் உள்ளத்திலும், இல்லத்திலும் உயர்ந்த இடம் பெற்றிருக்கின்ற நமது திருக்குறள் பற்றிய கட்டுரை மூன்றாவதாக, 'வான்புகழ் வள்ளுவர் பார்வையில் பெண்கள்' என்ற தலைப்பில் அமைந்துள்ளது. வள்ளுவரின் பெண்ணியச் சிந்தனைகளை இக்கட்டுரை புதிய நோக்கில் காண்கிறது.
சங்க இலக்கியப் பகுப்பில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அறநூல் வரிசையில் வைக்கப் பட்டுள்ளது திருக்குறள். இன்று பைபிளுக்கு அடுத்தபடியாக உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்ட பெருமை திருக்குறளுக்கு உண்டு.
"திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் புத்தம், சமணம், வைதிகம்' முதலான பல சமயங்கள் இந்திய நாட்டில் நிலவின.இச்சமயங்கள் எல்லாம் பெண்ணை இழிவுபடுத்தியும், அவமதித்தும் பேசி வந்தன" என்று குறிப்பிடுகிறார் கட்டுரையாசிரியர். அத்தகைய காலகட்டத்தில் வாழ்ந்த வள்ளுவப் பேராசான் குரலற்று, சக்தியற்று இருந்த பெண்களுக்குக் குறள் மூலம் பெருமை தருகிறார்.
"இல்லறத்தின் பெருமையும் சிறுமையும் மனைவியையே சார்ந்ததாகும். அதனால்தான் அறத்துப்பாலில் 'இல்வாழ்க்கையின்' இலக்கணத்தை ஓதியவுடன், 'வாழ்க்கைத் துணைநலம்' என ஓர் அதிகாரம் வகுத்துப் பெண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார் திருவள்ளுவர். வாழ்க்கைத் துணைவி நலம் என்றோ துணைவன் நலம் என்றோ கூறாமல் 'வாழ்க்கைத் துணைநலம்' என்று குறிப்பிடுகிறார். இது இருவருக்கும் பொருந்தும் என்பதால்தான் இவ்வாறு குறிப்பிடுகிறார்" என்று கட்டுரையில் பேரா. நிர்மலா அம்மா அவர்கள் வள்ளுவத்தின் சிறப்பை விளக்கியிருப்பது பாராட்டிற்குரியது.
நாம் அறிந்திராத, அறிய மறந்த பல செய்திகளை இக்கட்டுரையில் தந்திருக்கிறார்.
"வாழ்க்கைத் துணையாக அமையும் பெண்ணை இல்லாள், இல்லவள் என்று கூறுகிறார் வள்ளுவர். இல்லத்தை ஆள்பவள் என்று இதற்குப் பொருள். இல்லான், இல்லவன் என்று கூறினால் இல்லத்திற்குரியவன் என்று பொருள்படாது. இல்லாதவன், ஒன்றும் இல்லாதவன் என்று பொருள்படும். ஆணை மனைவன், மனையான் என்று கூறுவதில்லை. இதிலிருந்தே பெண்மைக்கு அவர் தந்த உயர்வு புலனாகிறது" என்று வள்ளுவர் பார்வையை மிகச்சிறப்பாகக் கட்டுரையாசிரியர் பதிவு செய்கிறார்.
மனையறத்திற்கு ஏற்ற மாண்புகளாக தொல்காப்பியம், ஔவையின் தனிப்பாடல்கள், சிலப்பதிகாரப் பாடல், கம்பராமாயணப்பாடல், பாரதிதாசன் கவிதை போன்றவற்றிலிருந்தும் வள்ளுவத்திற்கு வலு சேர்க்கிறார்.
மனைமாட்சி இல்லாத மகளிரால் துன்பப்பட்ட பெரிய தத்துவ மேதைகளான சாக்ரடீஸ், லியோடால்ஸ்டாய் போன்றவர்களின் வாழ்வியல் நிகழ்வுகளையும் போகிற போக்கில் நகைச்சுவையாக எடுத்துக் காட்டுகிறார்.
உலகுக்காக வாழ்கின்ற உழவன், நிலத்தில் விதை தெளித்துவிட்டு, வானத்தை நோக்கிய அளவில் மழை பொழிந்தால் அவனுக்கும் உலகுக்கும் எவ்வளவு நலமாமோ, அவ்வளவு நலப்பேறு செய்பவள் நல்ல மனைவியர் என்பதை,
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி
(குறள் - 1192)
- என்ற குறளை மேற்கோளாகக் காட்டியிருப்பது சிறப்பிக்குரியது.
அடுத்ததாக, 'கண்ணகி - நீதியை நிலைநாட்டுவதற்கான ஓர் அனைத்துலகக் குறியீடு' என்ற கட்டுரையும், ஐந்தாவதாக 'மணிமேகலை மாண்புகள்' என்ற கட்டுரையும், ஆறாவதாக 'சுந்தர காண்டத்தில் மகளிர்' என்ற கட்டுரையும், ஏழாவதாக 'நாட்டுப்புறப் பாடல்கள் படைக்கும் பெண்மை' என்ற கட்டுரையும் பெண்மையின் சிறப்பை, இருப்பை எடுத்துரைக்கின்றன. இதுவரை பார்த்த அனைத்துக் கட்டுரைகளும் இருபதாம் நூற்றாண்டிற்கு முன்பாக எழுதப்பட்ட படைப்புகளின் தாக்கத்தில் உருவானவை.
சுதந்திரப் போராட்டத்தில் தனது பாடல்கள் மூலம் மாபெரும் புரட்சியை, விடுதலை வேள்வியை ஏற்படுத்தியவர் மாகவிஞன் பாரதி. எட்டாவது கட்டுரையாக 'பாரதி போற்றும் பெண்மை' அமைந்துள்ளது. இது நம் காலத்தில் உள்ள பெண்களைப் பாடுபொருளாகக் கொண்ட கட்டுரை ஆகும்.
'பாரதியாரும் பெண்மையும்' என்ற முன்னுரையே கனிச்சாறாய் நம் கருத்தைக் கவருமாறு கட்டுரையாசிரியர் தந்துள்ளார். மாபெரும் சொற்பொழிவுக்கான சிந்தனை முத்துகளைத் தொகுத்து மணியாரமாகத் தந்துள்ளார். 'பெண் விடுதலையும், மண் விடுதலையையும்' தம் இரண்டு கண்களாகக் கொண்ட பாரதியின் பெண்மை பற்றிய படைப்பாக்கத்தை இங்குக் காண்போம்.
தாயின் அருமையை, பெருமையை இல்லாதபோதுதான் நாம் உணர்வோம். பாரதிக்கு ஐந்து வயது இருக்கும் போது தாய் இறந்து விடுகிறார். தாயின் பிரிவை,
"என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில்
ஏங்கவிட்டு விண்ணெய்திய தாய்' - 'என்று அன்னையின் இழப்பிற்காக, இறப்பிற்காக ஏங்கிப் பாடியவர் அவர். அன்னையைப் பிரிந்த ஏக்கம் அவருடைய ஆழ்மனத்தில் அழுந்தப் பதித்திருந்தது. எனவே, நாட்டைப் பாடுவதாக இருந்தாலும் தாயாக - பாரத மாதாவாக உருவகித்துப் பாடுகிறார். தமிழைப் பாடுவதாக இருந்தாலும் 'தமிழ்த்தாயாகப்' போற்றுகிறார். 'அம்மா' என்ற சொல்லே அவரைப் புளகிக்கச் செய்யுமாம்" என்று கட்டுரையாசிரியர் கூறும்போது பாரதி தாயின்மீதும், மொழியின் மீதும், நாட்டின் மீதும் கொண்ட பற்று நம்மை வியக்க வைக்கிறது.
'பெண்மை, தாய்மை, இறைமை' என்று திரு.வி.க. பெண்ணின் பெருமையைப் பேசியது போல் பாரதியாரும் பெண்மை, தாய்மையில் உயர்ந்து இறைமையில் நிலைபெற்று விளங்க வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவராக விளங்குகிறார் என்பதற்குப் பல சான்றுகள் காட்டி நிறுவுகிறார்.
பாரதியின் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நிகழ்வாக இரண்டைப் பதிவு செய்கிறார். ஒன்று மகாத்மா காந்தியைச் சந்தித்தது, மற்றொன்று நிவேதிதா தேவியைச் சந்தித்தது. நிவேதிதாவைச் சந்தித்த பிறகுதான், பெண்மை பற்றிய அவரது பார்வையில் பெருமாற்றம் நிகழ்ந்தது. இதனால் நிவேதிதா அம்மையாரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டார் பாரதியார். அந்த நிகழ்வுகளை நம் மனக்கண்ணில் தம் எழுத்து மூலம் காட்சிப் பதிவாக விரியச் செய்கிறார் கட்டுரையாசிரியர் அம்மா அவர்கள்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, 'பாரதி போற்றும் பெண்மை' கட்டுரை திகழ்கிறது. அதனைத் தொடர்ந்து 'பாவேந்தர் பாரதிதாசனின் பெண் முன்னேற்றச் சிந்தனைகள்', 'பெண்ணுலகு மலைவிளக்கு ஆகுதல் வேண்டும்', 'மாயூரம் வேதநாயகத்தின் பெண் முன்னேற்றச் சிந்தனைகள்', 'கவியரசர் கண்ணதாசன் திரையிசைப் பாடல்களில் பெண்ணியச் சிந்தனைகள்', 'புதுக்கவிதை, ஹைக்கூ கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள் என ஒவ்வொரு கட்டுரையும் ஆசிரியரின் பரந்துபட்ட வாசிப்பு அனுபவத்தை, வாழ்க்கை நிலைகளுடன் இணைத்து நம் இதயத்தைப் பிணைக்கிறது.
முடிவுரை:
நல்ல நல்ல நூல்களை நாளும் தமிழ்கூறும் நல்லுலகத்திற்குத் தந்துவரும் 'தமிழ்ச்சுடர்' பேரா.நிர்மலா மோகன் அம்மா அவர்களின் இலக்கியப் பயணத்தில், 'தமிழ் இலக்கியத்தில் பெண்மை' என்ற இந்நூலானது தங்கப் பதக்கத்தில் முத்துப் பதித்ததைப் போன்றது என்றால் அது சரியானதாகும். அம்மா அவர்கள் இன்னும் பற்பல நூல்களைப் படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
'நல்லாசிரியர்', பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு, தமிழாசிரியர்,
அரசு மேனிலைப் பள்ளி, இளமனூர், மதுரை.
பேச - 97861 41410.
0 Comments