"பூந்தோட்டம்" - சிறுவர்க்கான பாடல்கள் - மு. மகேந்திர பாபு - நூல் விமர்சனம் - பொன்.குமார்
*(பள்ளிகள் 30% விலை தள்ளுபடியில் புத்தகம் பெற்றுக்கொள்ளலாம் - மு.மகேந்திர பாபு - 97861 41410)*
"ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வரை படிக்கக் கூடிய சிறுவர்களுக்கான பாடல்கள் பல நூல் வடிவில் வெளிவந்துள்ளன. குழந்தைக் கவிஞர்
அழ.வள்ளியப்பா, பெரியசாமி தூரன் தொடங்கி இன்று வரை பலரும் சிறுவர்க்கான
பாடல்களை நூல்களாக வெளியிட்டுள்ளனர். அம்புலி மாமா, கண்ணன், கோகுலம் போன்ற சிறுவர் இதழ்களும் சிறுவர் பாடல்கள் மற்றும் கதைகள் போன்றவற்றை வெளியிட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ் மொழி கற்கும் ஆர்வத்தைத் தூண்டின.
இந்த வரிசையில் மு.மகேந்திர பாபுவும் தமது 'பூந்தோட்டம்' என்ற நூல் வழியாகச் சிறுவர் பாடல்கள் இயற்றித் தொகுத்து இதுபோழ்து வெளியிடுகிறார். வாழ்த்துகள் " என்னும் வாழ்த்துரையுடன் வந்திருக்கும் தொகுப்பு பூந்தோட்டம். வாழ்த்தியிருப்பவர் பெரும்புலவர் மு. சன்னாசி.
'பூந்தோட்டம்' தொகுப்பை எழுதியவர் கவிஞர் மு. மகேந்திரபாபு. இந்தியனே எழுந்து நில், மகள் வரைந்த கோடுகள், வெற்றிக் கதவின் திறவுக்கோல், பால்யம் என்றொரு பருவம் என்னும் நான்கு நூல்களை வெளியிட்டவரின் ஐந்தாம் தொகுப்பு இது. சிறுவர்களுக்கான பாடல்களால் நிறைந்தது பூந்தோட்டம்.
"அன்னைத் தமிழே உயிராகும்
ஆக்கம் நமது உயர்வாகும்
இனிமைப் பேச்சே உணர்வாகும்
ஈடிலா மொழியே தமிழாகும்
உன்னை என்னை வளர்த்துவிடும்
ஊக்கம் நாளும் தந்துவிடும்
எல்லோர் அகத்திலும் தங்கிவிடும்
ஏற்றம் மிகுந்த தமிழ் மொழியாம்
ஐம்பெருங் காப்பியம் கொண்டதுவாம்
ஒப்பிலாப் பெருமை உடையதுவாம்
ஓதி நாமும் மகிழ்ந்திடுவோம்
ஒளவை மொழியினைப் புகழ்ந்திடுவோம்"
என தமிழ் மொழி வாழ்த்துடன் தொடங்கியுள்ளார். ஒளவையின் மொழியினைப் புகழ்ந்திடுவோம் என ஒளவையின் ஆத்திச்சூடி வடிவிலேயே எழுதியுள்ளார். தமிழ் மொழியை வரிக்கு வரி வாழ்த்தியுள்ளார். கவிஞர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் எழுதுவர். கவிஞர் தமிழ் மொழி வாழ்த்துடன் தொடங்கியுள்ளார். சிறுவர்களின் கவனம் ஈர்க்கும் மொழியிலேயே எழுதியுள்ளார். தொடர்ந்து தாய் தந்தை வாழ்த்து, நாட்டு வாழ்த்து, வள்ளுவர் வாழ்த்து, பாரதி வாழ்த்து எனவும் பல வாழ்த்துகள் உள்ளன.
உழவுத் தொழிலே உலகில் உயர்ந்தது. உழவுத் தொழில் ஈடுபடும் உழவர்கள் மக்களுக்கு உணவளிப்பவர்களாக உள்ளனர். மக்களின் பசிக்கு உணவளிப்பவனே மண்ணில் எல்லோராலும் வணங்கக் கூடியவர்.
"உழவன் ஒருவன் இருப்பதாலே
உலகம் இன்றும் சுழல்கிறதாம்!"
என உழவன் குறித்து எழுதியுள்ளார். உழவனை வணங்கச் செய்துள்ளார்.
'சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்
அதனால்
உழந்தும் உழவே தலை'
என்னும் திருக்குறளை நினைவூட்டியது.
பள்ளி என்பது மாணவர் பருவத்தில் முக்கியமானது. பள்ளியில் சென்று படிப்பதனால் பல நன்மைகள் உண்டு. பள்ளி என்பது பாடங்களை மட்டுமல்ல... வாழவும் வாழ்வில் வெற்றி பெறவும் கற்றுக் கொடுக்கும்.
.
"வகுப்பறை வாசல் திறந்தாலே
வாழ்க்கையில் வெற்றி திறந்திடுமே
ஆசிரியர் குரலைக் கேட்டாலே
ஆனந்தம் நம்முள் பிறந்திடுமே
நூல்களை விரித்துப் படித்தாலே
நுழைவுத் தேர்வில் வென்றிடலாம்
தாள்களில் நாளும் எழுதித்தான்
தன்னை உயர்த்திச் சென்றிடலாம்!"
என 'எங்கள் பள்ளி' தலைப்பில் எழுதியுள்ளார். மாணவர்களை பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்கிறார். படித்து முன்னேறவும் அறிவுறுத்தியுள்ளார். நூல்கள் பல படித்தால் நுழைவுத் தேர்வில் வென்றிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார். தொகுப்புகள் பல வெளியிட்டுள்ளார். சிறுவர் இலக்கியத்தின் முன்னோடியாக விளங்குகிறார். அழ. வள்ளியப்பாவை பலரும் பாடியுள்ளனர். கவிஞர் மு. மகேந்திர பாபுவும் 'அவர்தான் அழ. வள்ளியப்பா' என சிறுவர்களுக்காக ஒரு பாடல் எழுதியுள்ளார்.
'நல்ல நல்ல நூல்களை
நாடி நாமும் பயிலுவோம்'
என்று சொன்ன தாத்தாவிற்கு
என்ன பெயர் தெரியுமா?
அவர்தான் அழ வள்ளியப்பா
அனைவர் மனமும் துள்ளுமப்பா
பாடலைத் தினமும் கேளப்பா
பண்பை வளர்க்கும் நாளப்பா'
என அழ. வள்ளியப்பாவை அறியச் செய்ததுடன் அழ. வள்ளியப்பாவின் பாடல்களை வாசிக்கவும் தூண்டியுள்ளார்.
"ஊட்டி மலர்க் கண்காட்சி
கூட்டிப் போகும் போதிலே
உள்ள மெல்லாம் பறக்குதே
நம்முள் புத்துணர்வு பிறக்குதே
செடி வளர்த்திட விரும்பினோம்
மரம் வளர்த்திட விரும்பினோம்
சுற்றுச் சூழல் சிறந்திட
கற்றுக் கொண்டே திரும்பினோம்!"
என பூந்தோட்டம் என்னும் தலைப்பில் ஒரு பூந்தோட்டத்தை சிறுவர்களுக்குக் காண்பித்துள்ளார். மேலும் சுற்றுச் சூழல் காக்கவும் அறிவுரைத்துள்ளார்.
"படியில் பயணம் வேண்டாம் தம்பி
நொடியில் எதுவும் நடக்கலாம் தம்பி
காலை மாலை பேருந்தில் தினமும்
கவனமாகப் பயணித்திட வேண்டும் தம்பி!"
என படியில் 'பயணம் வேண்டாம் தம்பி' என சிறுவர்களுக்கு அறிவுரைத்துள்ளார். சிறுவர்கள் மீதான அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார். இது போன்ற பாடல்களே இன்றைய சிறுவர்களுக்குத் தேவையானது. பாதுகாப்பான பயணம் மிக முக்கியம். 'படியில் பயணம் நொடியில் மரணம்' என்னும் அரசு விளம்பரத்தை ஒட்டி இப்பாடல் எழுதப்பட்டுள்ளது. அரசும் இப்பாடலை பயன்படுத்திக் கொள்ளலாம்.
"மொழிகள் பலப்பல இருந்தாலும்
இனங்கள் பலப்பல இருந்தாலும்
இந்திய ரென்றே சொல்லிடுவோம்
அன்பால் நாங்கள் துள்ளிடுவோம்
நல்லோர் செய்த தவத்தாலே
நாடு விடுதலை பெற்றதே
நாங்கள் நாட்டின் கண்கள்தான்
நாட்டை வீட்டை நேசிப்போம்"
என எங்கள் தேசம் கவிதையிலே சிறுவர்கள் பாடுவதாகவே பாடியுள்ளார். எங்கள் தேசம் என சிறுவர்களுக்கு தேச பக்தியை, தேச உணர்வை ஊட்டியுள்ளார். இன்றைய சிறுவர்களுக்குத் தேச உணர்வை ஊட்டுவதும் அவசியமாகும். கவிஞர் இதை உணர்ந்தே ஊட்டியுள்ளார்.
பள்ளியில் படிக்கும் சிறுவர்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. அந்த விடுமுறையிலும் பெற்றோர்கள் சிறுவர்களை ஏதேனும் வகுப்புக்கு அனுப்பி அவர்களைச் சுதந்திரமாக இருக்க, இயங்க அனுமதிப்பதில்லை. இந்நிலையில் விடுமுறையை எவ்வாறு கழிக்க வேண்டும், எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று விடுமுறை கொண்டாட்டம் என்னும் தலைப்பில் எழுதியுள்ளார்.
"கிணற்றில் நீரை இறைக்கலாம்
கிளியின் பேச்சைக் கேட்கலாம்
சண்டை போடும் கிடாய்களை
சமாதானம் பேசி அனுப்பலாம்
கம்மங் கூழும் குடிக்கலாம்
காலையில் கதையும் படிக்கலாம்
விருப்பம் போல மகிழ்வே
திருப்பம் தந்திடும் விடுமுறையே!"
இருப்பினும் காலையில் கதையும் படிக்கலாம் என்று ஓர் ஆலோசனையும் வழங்கியுள்ளார். 'காலை எழுந்தவுடன் படிப்பு' என்னும் பாரதியின் வரிகளையும் நினைவு கூரச்செய்துள்ளார்.
'சுறுசுறுப்பாய் இருப்பாய்' என்னும் பாடலில்
"சோம்பல் இருக்கும் நெஞ்சிலே
சோகம் மட்டுமே தங்கும்
சுறுசுறுப்பு இருக்கும் நெஞ்சிலே
சுகமே என்றும் பொங்கும்!"
என சிறுவர்களுக்கு அறிவுரைத்துள்ளார். சிறுவர்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்கிறார். சோம்பல் கொண்டவன் சோகம் அடைவான் என்று தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரும் ஓய்ந்திருக்கலாகாது என்று பாடியுள்ளார்.
வள்ளலார் கருணையை அனைத்து உயிர்களிடத்தும் காட்ட வேண்டிய அன்பின் வெளிப்பாடாகக் கருதினார். பசித்தோர் முகத்தைப் பாராதிராமல் இருப்பதும் இரப்போர்க்குப் பிச்சை கொடுக்க மறுக்காமலும் இருப்பதும் கருணையின் செயல்பாடுகளும் என்று அவர் வலியுறுத்தினார். அனைத்து உயிர்களிடத்தும் இரக்கம் காட்டுவதே கருணையின் நோக்கம் என்றும் மனிதப் பிறவியின் லட்சியமே உயிர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பது என்றும் குறிப்பிட்டார். கவிஞர் மு. மகேந்திர பாபுவும்
"வாழும் வரைக்கும் தியாக மண்ணில்
வளர வேண்டும் கருணைப் பார்வை
நாளும் பொழுதும் நன்மைகள் விளைந்திட
ஆளும் மனமே சமத்துவப் போர்வை!"
என கருணைப் பார்வை என்னும் தலைப்பில் மனிதர்களுக்கு கருணை தேவை என்கிறார். சிறுவர்களுக்கும் கருணை குறித்து அறிவுரைத்துள்ளார்.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பர். முயற்சியே முன்னேற்றம் அளிக்கும்.
"தடைதான் முன்னே நின்றாலும்
நடைதான் போட்டுச் சென்றிடுவோம்
வெற்றி மாலை சூடித்தான்
வேற்றார் மனங்களை வென்றிடுவோம்!"
என முயற்சி என்னும் பாடலில் சிறுவர்களுக்கு முயற்சி தேவை என்கிறார். நம்பிக்கையை ஊட்டியுள்ளார். வெற்றிப் பெற்றவர்கள் முயற்சி உடையவர்களாகவே இருந்திருப்பர் என்பதே உண்மை.
ஆடையில்லாத மனிதன் அரை மனிதன் என்பர். இன்று அலை பேசி இல்லாதவனும் அரைமனிதனே. அலைபேசி இல்லாதோர் அவனியில் இல்லை. செல் இல்லாதோர் செல்லாதோர் என்னும் நிலை. இந்நிலையில் கவிஞர் திறன் பேசி என்னும் தலைப்பில் ஒரு பாடல் எழுதியுள்ளார். அதில்
"நன்மை தீமை இரண்டுமுண்டு
நல்லதைப் பாக்கனும் விருப்பம் கொண்டு
நாட்டு நடப்பினைத் தெரிந்து கொண்டு
நடப்பதில் நாளும் பயனுமுண்டு!"
என சிறுவர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிறார். எந்தவொரு தொழில் நுட்பத்திலும் நன்மையும் தீமையும் உண்டு. சிறுவர்கள் நன்மையை மட்டுமே கருதி பயன்படுத்த வேண்டும் என்கிறார்.
தொடக்கத்தில் இருந்த உணவு பழக்கம் மெல்ல மெல்ல மாறி இன்று அவசர உணவிற்கு வந்து விட்டது. அவசர உணவு ஆரோக்கியத்திற்கும் கேடு. ஆபத்தையும் உண்டாக்கும். மனிதர்கள் ஆபத்தை உணர்ந்ததால் சிறு தானிய உணவிற்கு மாறி வருகின்றனர். கவிஞரும் 'சிறுதானியம்' என்னும் தலைப்பில் எழுதிய பாடலில்
"பச்சைப் பயறும் சுண்டலும்
பலத்தை அதிகம் கொடுத்திடும்
முளைத்த கம்பு அரிசியும்
முதுமையில் போட்டி விடுத்திடும்
இயற்கை தந்த தானியங்களே
இன்பம் என்றும் வழங்கிடும்
செயற்கை கொண்டு செய்கின்ற
உணவால் துன்பம் துலங்கிடும்!"
என தெரிவித்து சிறு தானியம் உண்ண சிறுவர்களை அழைத்துள்ளார். சிறுதானியமே சிறந்தது என்கிறார்.
பாலித்தீன் நிறைந்த பண்டங்களோ
பழிவாங்கி உடலைக் கெடுக்கும்
என 'உண்ணலாம் வாங்க' பாடலில் அழைப்பு விடுத்துள்ளார். பாலித்தீன் பயன்படுத்த வேண்டாம் என்கிறார்.
எந்தவொரு நிகழ்வையும் நன்றி கூறி முடிக்க வேண்டும். கவிஞர் மு. மகேந்திர பாபு நன்றி என்னும் பாடலுடன் முடித்து நன்றிக்குரியராக உள்ளார்.
"நன்றி மறவா மனதுடன்
நாளும் நாமும் வாழ்ந்திடுவோம்
உதவி செய்யும் நண்பர்களை
வந்து நாமும் வாழ்த்திடுவோம்!"
என சிறுவர்களுக்கு நன்றி உணர்ச்சியை ஊட்டியுள்ளார். நன்றி மறவாதிருப்பதே நன்று என்கிறார். 'நன்றி மறப்பது நன்றன்று' என்னும் வள்ளுவரைப் போல் நன்றி மறவாமல் இருக்க வேண்டும் என்று அறிவுரைத்துள்ளார்.
கவிஞர் மு. மகேந்திர பாபு 'பூந்தோட்டம்' என்னும் இத்தொகுப்பில் சிறுவர்களுக்காக அறுபத்து மூன்று பாடல்கள் எழுதியுள்ளார். எல்லா பாடல்களையும் இருபது வரிகளிலே ஒரே மாதிரி திட்டமிட்டு எழுதியுள்ளார். தமிழ் மொழி வாழ்த்துடன் தொடங்கி நன்றியுடன் முடித்துள்ளார். சிறுவர்களை மனத்தில் கொண்டே எழுதியுள்ளார். சிறுவர்களுக்கு நல்ல எண்ணங்களை ஊட்டும் விதமாகவும் சிறுவர்களை முன்னேற்றும் விதமாகவும் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. சிறுவர் பாடல்கள் என்றால் வழக்கமான சில பாடுபொருள்கள் இருக்கும். அப்பாடு பொருள்கள் தாண்டியும் புதியதாக பல பாடுபொருள்களில் பாடி கவனத்தை ஈர்த்துள்ளார். அப்பாடல்களிலிருந்தே பாடல்கள் சில எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. சிறுவர் இலக்கியத்தில் கவிஞரின் முதல் முயற்சி இத்தொகுப்பு. சரியான சொற்களில் சரியாக வரிகளை எழுதியுள்ளார். சிறுவர்கள் அவசியம் வாசிக்க வேண்டும். வாசித்தாலும் சிறுவர்களின் மனம் கவர்ந்து விடும். சிறுவர்களையும் எழுதத் தூண்டி விடும். அழகாகவும் அருமையாகவும் உள்ளது பூந்தோட்டம். கவிஞர் மு. மகேந்திர பாபுவிற்கு வாழ்த்துகள்.
வெளியீடு
யாப்பு வெளியீடு,சென்னை
கவிஞர் மு.மகேந்திர பாபு
9786141410
நூல் விமர்சனம்
பொன். குமார் 9003344742
0 Comments