சிறுவர் பாடல் - உண்ணலாம் வாங்க / சிற்றுணவு
அமுதன் தினமும் பள்ளிக்கு
அம்மா தந்து விடுகின்ற
சத்து நிறைந்த பண்டத்தை
சக நண்பரோடு உண்பானாம்!
சுண்டல் பயறை வேகவைத்து
சுறுசுறுப்பாக அம்மா தருவாள்!
பச்சைப் பயறை ஊற வைத்து
பாசமுடன் முளை கட்டித் தருவாள்!
எள்ளு உருண்டை கையில் பிடித்து
எட்டு எண்ணம் வைத்து விடுவாள்!
பொட்டுக் கடலையில் சக்கரையிட்டு
புன்னகை பூக்கத் தந்து விடுவாள்!
கொய்யாப் பழம் நறுக்கி வைத்து
கொடுப்பாய் நண்பர்க்கு என்று சொல்வாள்!
வெள்ளரிக்காயை வெட்டி வைத்து
விருப்பத்துடன் உண்ணச் செய்வாள்!
சத்து நிறைந்த பண்டங்களைச்
சாப்பிடவே நலம் கிடைக்கும்!
பாலித்தீன் பை பண்டங்களோ
பழிவாங்கி உடலைக் கெடுக்கும்!
மு.மகேந்திர பாபு,
22-07-2025 / இரவு 10:28
0 Comments