மங்கலமா? மங்களமா? எது சரி? தமிழ் அறிவோம்! / greentamil.in

 

மங்கலமா? மங்களமா?



        மங்கலம் தமிழ்ச்சொல். கண்ணகியை 'மங்கல மடந்தை' என்பார் இளங்கோவடிகள். கண்ணகி மங்கலா தேவியாக வழிபடப் பெறுவாள். மங்கலப் பொருள்களாகப் பூ, மஞ்சள், எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்குப் போன்றவற்றைக் கருதுவது தமிழரின் நம்பிக்கை. நாகசுரம் மங்கல வாத்தியம். மங்கல நாண் தாலி எனப்படும்.

         மங்களம் வேறு. அது தமிழன்று. சிலபோது தமிழின் திரிபாக வழங்கினும், நமது மங்காத மங்கலத்துக்கு அது ஒப்பாகாது. பெருமங்கலம், மண்ணுமங்கலம், வாள்மங்கலம் எனவரும் பாடாண் துறைகள் பல (தொல்.1037).மங்கலம், மங்களம் என்ற சொல்லாட்சிகள் ஒப்பிட்டுப் பார்த்தற்குரியன. பழைய நூல்களில் யாண்டும் மங்களம் காணப்படவில்லை; மங்கலமே காணப்படுகிறது.

          தொல்காப்பியம் 'மங்கல மொழி' (1190) பற்றிக் குறிப்பிடுகிறது. திருக்குறள் 'மங்கலம்' என்ப மனை மாட்சி (60) என்று கூறும். புறநானூறு 'மங்கல மகளிர்* (332) எனக் குறிக்கிறது. சிலப்பதிகாரம் திருமண வாழ்த்தை 'மங்கல வாழ்த்துப் பாடல்' எனச் சுட்டுவதுடன் 'மங்கல நல் அமளி* (1-64) என்று மணப் படுக்கையைக் குறிப்பிடும். மேலும் கண்ணகியை 'மங்கல மடந்தை' (சிலம்பு 15-40. 131. 28-51) எனத் திரும்பத் திரும்பச் சுட்டும். அவளுக்கு எடுத்த கோயிலை ‘மங்கல மடந்தை கோட்டம்' (30-53. 88)என்றே குறிப்பிடும். அதனால்தான் இன்றும் 'மங்கலாதேவி' கோயில் என்கின்றனர். 'மங்களூரில்'. 'மங்கலா தேவி கோயில் இன்றும் இருப்பதை, அவ்வூர்ப் பெயருடன் சார்த்தி நோக்க வாய்ப்புளது. இங்ஙனம் புனிதமான பலவற்றை 'மங்கலம்' என அடைகொடுத்துக் கூறலை மங்கல நெடுங்கொடி, மங்கல மறையோர், மங்கலத் திருநாள் போன்ற தொடர்களில் காணலாம். சிலப்பதிகாரம் 'மங்கல அணி' என மூன்று இடங்களில் சுட்டுவது 'தாலியையே' என ஆய்வாளர் குறித்துள்ளனர். 

               புகார் நகரில் திருமண வேளையில் கண்ணகி திருமணத்தில் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட மங்கல அணியும் (1-47), அவளுக்கு 'மங்கல அணி மட்டும் போதுமே, பிற அணிகளை அணிவதேன்' எனக் கோவலன் நாப்பிறழ்ந்து அமங்கலமாகப் பாராட்டுவதும் (2-63). பின்னர் அவன் ஒரேயடியாகப் பிரிந்த காலத்து அவள், அவன் சொன்னபடியே 'மங்கல அணி தவிரப் பிற அணி அணியாமல் போனதும்'(4-50) சிலம்பில் தொடர்புபட அழகாகக் கூறப்பட்டுள்ளன. இச்சொல் அன்றே நாட்டு வழக்கில் ஏறியிருந்தது என்பதைத் தொல்காப்பியம் புறநானூற்றில் இடம்பெறும் சூழல் நோக்கி உய்த்துணரலாம். 

              கண்ணகி கணவனை இழந்தாலும் மங்கல மடந்தை (சுமங்கலி) என்றே போற்றப்படுவதை ஆழச் சிந்திக்க வேண்டும். கணவன் பெயரைக் காப்பாற்றத்தானே அவள் அந்தப் பதினான்கு நாள்கள் உயிர் வாழ்ந்தாள். அதனால் அவளை மங்கல மடந்தை ஆக்கி, அவள் கோட்டத்தை மங்கல மடந்தை கோட்டமாக்குவதில் அக்காலச்சமுதாயம் மிக ஆழமான பற்றுக்கொண்டிருந்தது. கண்ணகி பெயரையே கூற அஞ்சி, தயங்கி மங்கலமடந்தை, மங்கல தேவி என்றே வழங்கி வழங்கி, இன்று நாம் கண்ணகி கோட்டத்தை ஆராய்ந்து தேடுமளவு - இயற்பெயர் மறையுமளவு - ஆட்சிபெற்ற 'மங்கலத்தை 'எண்ணிப் பாருங்கள்.

           தமிழ் நாட்டில் பல ஊர்ப் பெயர்கள் மங்கலம் என்று முடிகின்றன. தமிழ் இலக்கணம் செத்தாரைத் துஞ்சினார் (உறங்கினார்) என்று கூறுவது போன்ற மங்கல வழக்குகளை விளக்கும். தமிழ் அகப்பொருளில் மகளிர் செவ்வணி அணிதல், வெள்ளணி அணிதல் போன்ற இரண்டு உலக வழக்காறுகள் கூறப்படும்.

               வெள்ளணி அணிதல் காதலர் கூடுதற்குரியதாய் 'மங்கல அணி' எனவும் படும். மங்கல வள்ளை என்ற ஓராடலும் மங்கல வள்ளை என்ற ஓரிலக்கிய வகையும் சுட்டப்படுகின்றன. இத்தமிழ் 'மங்கலம் ' இந்திய மொழிகள் அனைத்திலும் ஏறியுளது.

                 வடமொழியிலும் 'மங்கலம்' என்ற சொல்லே காணப்படுகிறது. மங்களம் பாடுவது முடிவு பெற்றதற்கு அடையாளம். தமிழிலும் அச்சொல் மங்களம் என்ற பொருளில் ஆளப்படுவதுடன், ஒன்றைச் சுபமாக முடித்தல் என்பதுபோன்ற சற்று வேறுபட்ட பொருளையும் தருகிறது. இவை திரிபுகள்.

Post a Comment

5 Comments