அன்று / அல்ல தொடரில் எங்கே எப்படிப் பயன்படுத்துவது?
அது அன்று; அவை அல்ல என்று வர வேண்டும். அது முறையன்று; அவை நல்லன அல்ல என்று சொல்ல வேண்டும்.
அவன் அல்லன்; அவள் அல்லள்; அவர் அல்லர்; அஃது அன்று; அவை அல்ல. இவையே மொழிச்செப்பமுடையவை.
இப்போது எல்லாவற்றையும் அல்ல' ஆக்கிவிட்டோம். அதுநல்லதல்ல; அவன் நல்ல குணமுடையவன் அல்ல; அவள் அழகுடையவள் அல்ல; அந்த நாளிதழ் நல்லதல்ல; அவர்கள் சான்றோர்கள் அல்ல இப்படி எழுதுகிறோம். இது அடிப்பழக்கமாகி விட்டது. இக்காலத் தமிழ் எழுத்து அனைத்திலும் இடம் பெற்றுவிட்டது. ஆனாலும் தவறு தவறே; பிழை பிழையே .'நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே.
'டாக்டர்' பட்டத்திற்கான முனைவர் ஆய்வேடுகளிலாவது, இக்கட்டளைத்தமிழ் பின்பற்றப்பட வேண்டும். தமிழாசிரியர்களாவது மரபை மீறாதிருக்க வேண்டும். ஏனெனில், தவறுவது நல்லதன்று; பிழைகள் பின்பற்றத் தக்கன அல்ல; அவ்வாறு எழுதுபவர் தமிழ் கற்றவர் அல்லர்; அங்ஙனம் பிழைபட எழுதுபவன் தமிழறிஞன் அல்லன்; அவர்கள் தமிழ்ச்சான்றோர் அல்லர்.
அல்ல அல்ல நாங்கள் எழுதுவதே தமிழ் என்று நீங்கள் சொன்னால், அன்று அன்று நீங்கள் எழுதுவது நல்ல முறையன்று என்றே சொல்ல வேண்டியிருக்கும்.
0 Comments