அருகில் / அருகாமையில் எது சரி?
பள்ளிக்கூடம் வீட்டின் அருகில் இருக்கிறது. கோயில் அருகே குளம் இருக்கிறது. அருகில் இருப்பவர்களுடன் அன்பாய்ப் பழக வேண்டும். வரவரத் தமிழுணர்வு அருகிவிட்டது என்பர். சுருங்கிவிட்டது என்பது அது.
இதைப் பலர் 'அருகாமை'யில் எனப் பிழைபட, அடிக்கடி எழுதிவிடுகின்றனர்.
அருகில் என்பது இட அணிமையைக் குறிக்கும். அண்மையில் நடந்தது. அண்மைக் காலமாக நாடு பதற்றத்தில் இருக்கிறது. இதை அணிமை என்பதும் உண்டு. அணிமையில்தான் அவருக்குத் திருமணமானது; அவர்வீடு அணித்தாக உளது. அண்மை,அணிமை இரண்டும் காலம், இடம் இரண்டின் சுருக்கத்தை உணர்த்துகின்றன. 'பசிப்பிணி மருத்துவன் பண்ணன் இல்லம் அணித்தோ, சேய்த்தோ' என்பது புறப்பாட்டு (173). சிலர் 'ரெடி' பண்ணி ஆவதை 'அணியமாவது-புதுச்சொல்லாக்கம்.
எங்கள் வீடு அருகில்தான் இருக்கிறது'. இதில் 'அருகாமையில் இருக்கிறது என 'ஆமை'எவ்வாறு புகுந்ததோ, தெரியவில்லை.
அருகண்மையில் இருக்கிறது என்பதுதான் அருகாமை என வந்திருக்கவேண்டுமென்று தமிழாசிரிய நண்பர் எழுதியிருந்தார். அருகு + அண்மை என இதை ஒரு பொருட்பன் மொழியாகக் கொள்ளலாம். மிக அருகில் எனப் பொருள்படும். எங்ஙனமாயினும் 'அருகாமை' என்பது தவறு. அருகண்மை என்றாவது எழுதவேண்டும். தமிழை விரும்பி ஏற்குங்காலம் அருகில் வரப்போகிறது. அதைத் தமிழ்ப் பகைகள் இன்று அளவுக்கு மீறி ஆட்டம் போடுவதை வைத்து அறியலாம்.
நன்றி
தமிழண்ணல் அவர்கள் எழுதிய ' தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும்' என்ற நூலில் இருந்து.
0 Comments