மு.மகேந்திர பாபு எழுதிய 'மகள் வரைந்த கோடுகள்' கவிதை நூல் - மதிப்புரை - அய்யனார் ஈடாடி / M.MAHENDRA BABU - MAGAL VARAINTHA KODUKAL - KAVITHAI BOOK

 

மு.மகேந்திர பாபு அவர்களின் இரண்டாவது கவிதை நூலான  'மகள் வரைந்த கோடுகள்' குறித்து கவிஞர் அய்யனார் ஈடாடியின் விமர்சனம்.



மகள் வரைந்த கோடுகள்

ஆசிரியர்: மகேந்திர பாபு

வெளியீடு : அன்புநிலா பதிப்பகம்

நூல் தேவைக்கு : 9786141410

தபால் செலவுடன் நூலைப்பெற ரூ100 

Gpay - 9786141410


                                 இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்பிறகான தனது இரண்டாவது நூலை ஹைக்கூ நூலாக வெளியிட்டிருக்கிறார்.தொடர்ந்து பல்வேறு இணைய இதழ் மற்றும் அச்சு இதழ்களில் வெளிவரும் இவரது படைப்புகள் கவனம் பெற்று வருகின்றன. குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான விழிப்புணர்வு பாடல்களென தொடர்ந்து எழுதி வருகிறார். 


செருப்பைக் கழட்டிவிட்டு

இறங்கி நடந்தார் அப்பா

திருத்தலமானது வயல்

000

              சம்சாரிகள்  செருப்புகள் போட்டு வயல்களில் நடந்து போக மாட்டார்கள். தங்கள் வயல்களைக் கோவிலெனக் கும்பிட்டு மண்ணை அள்ளிப் பூசி வழிபடும் சம்சாரிகள் எவ்வளவு நுண்ணறிவுமிக்கவர்கள். என் சிறுவயதில் நாற்றங்காலைச் சுற்றி வரப்பு வெட்டும் போது அப்பா சொல்வார் சாமி சுத்தி வரும் நல்லா அப்பு வரப்பு போடுப்பா என்பார். வயலோடும் வரப்போடும் கிடந்ததால் இந்தக் கவிதை மனதை இறுக்கிப் பிடிக்கிறது.


பாகப்பிரிவினை இல்லை

தொடரும் கூட்டுக்குடும்பம்

ஒரே மரத்தில் பறவைகள்

000

         சமகாலத்தில் கூட்டுக் குடும்பம் என்பதே அரிது. பாகப்பிரிவினை இல்லாத உண்மையானக் கூட்டுக்குடும்பம் என்றால் அது பறவைகள் மட்டுமே. கூட்டுக் குடும்பத்தை பறவைகளோடு ஒப்பிட்டு எவ்வளவு அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார் கவிஞர்.


கைநிறைய பணமிருந்தும்

தாகத்தோடு ஏங்கும் மனம்

தட்டுப்பாட்டில் குடிநீர்

000

            பெரும் வசதி வாய்ப்பு இருந்தாலும் தண்ணீரின்றி உயிர் வாழ முடியாது. முப்பாட்டன் வள்ளுவன் நீரின்றி அமையாது உலகு என்று சொல்லி விட்டுச் சென்றிருக்கிறான். கடந்த சில தினங்களுக்கு முன் எலக்ட்ரானிக் மெட்ரோ சிட்டி என்று சொல்லக்கூடிய பெங்களூர் பெருநகரத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டில் அலைக்கழிந்ததை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.


வறண்டு கிடந்த நதி

தின்று செரிக்கிறது

மதிய வெயிலை

000


வறண்டு சுனங்கிக் கிடக்கும் நதிகள் வெயிலைத் தான தின்று செரிக்க முடியும் என்பதை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.


சுமை தூக்கிச் செல்லும்

வண்ணத்துப்பூச்சிகள்

பள்ளிக் குழந்தைகள்

000

   நாம் காணும் அற்புதமான காட்சியை கவிதையில் வடித்தெடுத்திருக்கிறார்.


வயலில் அம்மா

கனக்கிறது நெஞ்சு

மரக்கிளைத் தொட்டிலில் குழந்தை.

000

           நடுகை,களையெடுப்பு, கதிர் அறுப்பு போன்ற எல்லாக் காலங்களிலும் வயலோரங்களில் இருக்கும் வேம்பு,புங்கை, பூவரசு மரங்களில் தொட்டில் கட்டி போட்டுவிட்டு வேலை செய்யும் அம்மாக்களுக்கு தாயாகிறது மரங்கள். பிள்ளைகளைத் தொட்டிலில் போட்டுவிட்டு ரெண்டு வரி தாலாட்டு பாடிவிட்டு வந்தால் போதும் பிஞ்சுக் குழந்தைகள் உறங்கிவிடும். 


காலாண்டு விடுமுறை

வயலில் களையெடுத்த நினைவுகள்

இன்று கட்டடக்கலை

000

          விடுமுறை காலங்களில் கால்கள் ஆற ஓடி ஆடி விளையாடுவது வயல்களில் மட்டும் தானே  என்னைப் போன்ற கிராமத்து வாசிகளுக்கு. எங்க ஊரில் கருப்பிக் கெழவி என்ற ஒரு கெழவி இருந்தாள். அவளது வயலுக்கும் கருப்பிக்கெழவி  வயல் என்று ஏழு தலைமுறைகளாக சொல்லி வந்தோம். 

நாற்றுப் பாவ நாற்றங்கால் தயார் செய்தால் போதும் கண்மாயில் இருக்கும் பாதிப் பறவைகள் அந்த ‌வயலில் தான் கெடக்கும்‌. 

இன்று அடுக்குமாடிகளாக ‌கட்டிடங்களாக உயர்ந்து போய் நிற்பதைப் பாரத்தால் உள்ளம் கனக்கிறது.


கவனிப்பாரின்றி 

காவல் தெய்வங்கள்

வீட்டில் முதியோர்கள்

000

        முதியோர்களை சுமையாக கருதி இச்சமூகம் தனித்து விடப்படுகின்றன.தனித்து விடப்பட்டாலும் தங்களுடைய மகன் மகள் மருமகன் மருமகள் பெயரன் பெயரத்தியென பாசாங்குகளற்ற வெள்ளந்தியான அன்பைப் பகிர்கிறார்கள் . தங்களுடைய இறுதிக் காலத்தையும் நரகமென கழித்து வீட்டின் காவல்தெய்வங்களாகவே இருக்கிறார்கள் .உடம்பு சுருக்கம் பட்ட போதிலும் மோதிரத்தையும் தண்டட்டியையும் விற்று கிணறு தோண்டி விவசாயம் செய்து தலைமுறைகள் காத்து வந்த கிழவனும் கிழவியையும் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு பிணமாக வீட்டுக்குத் தூக்கி வரும் சம்பவங்கள் மனதை நெருடத் தான் செய்கின்றன.

                   இதைப் போன்ற ஏராளமான கவிதைகள் சமூகப் பார்வையோடும், இந்தப் பிரபஞ்சத்தில் ஹைக்கூ‌ என்றால்‌ என்ன என‌ எள்ளி நகையாடும் நவீன உலகிற்கு மகேந்திரபாபுவின் ஹைக்கூ கவிதைகள் மேலும் வலுச்சேர்க்கின்றன.

அன்புடன் 

கவிஞர் அய்யனார் ஈடாடி, மதுரை.


நூல் தேவைக்கு, 

மு.மகேந்திர பாபு, தமிழாசிரியர், மதுரை.

பேச - 97861 41410



Post a Comment

0 Comments