நேமிக்கம் - சிறுகதை

 

நேமிக்கம் - சிறுகதை -  மு.மகேந்திர பாபு.


  " மாமா … தப்பா எடுத்துக்கிராதீக. அடிச்ச பத்திரிக்கை தீந்து போச்சு. அதான் வெத்தல பாக்கு வச்சு கொடுக்கிறேன். வெளியூர்க்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவா கொடுக்குற மாதிரி ஆகிப்போச்சு. ஒருத்தருக்குக் கொடுத்து , ஒருத்தருக்குக் கொடுக்கலேன்னா சடச்சிருக்கிருவாக. அதான் பாருங்க … நா ஒரு கணக்குப் போட்டு பத்திரிக்க அடிச்சா … அது ஒரு கணக்காப் போச்சு. வெளியூர்க்காரவுகளுக்கு வெத்தல பாக்குக் கொடுத்தா அவ்வளவு நல்லா இருக்காது பாருங்க. அதான் மாமா … நம்மூர்ல பாதிப்பேருக்கு மேல வெத்தல பாக்குத்தான் கொடுத்திருக்கென். "


    பத்திரிக்கை இல்லாமைக்கான காரணத்தை முத்துவிடம் விலாவாரியாகச் சொன்னான் மாடசாமி.


   " அதனாலென்ன மாப்ள ? அதான் வெத்தல பாக்கு வெச்சிட்டீங்கள்ல . இது போதாதா ? கண்டிப்பா வந்திருதேன். 


       ஆமா ! என்னக்கி வச்சிருக்கீக விசேசம் ? எத்தன மணிக்கு ? மொட்டையா ? காதுகுத்தா ? இல்ல அக்கினிச் சட்டியா ? ஆடு வெட்றிகளா ? எத்தன ஆடு ? இள ஆடா ? இல்ல கெழட்டு ஆடா ? போறதுக்கு எப்படி லாரியா ? வேனா ? டிராக்டரா ? இல்ல மாட்டுவண்டியா ? இருக்கன்குடியில ரூம் ஏதும் போட்ருக்கீககளா ? இல்ல வர்ற ஆளுக எட்டே முக்கால் சாத்தூர் பஸ்ல வந்திர்ரதா ? கொஞ்சம் சொன்னீகன்னா அதுக்குத் தகுந்த மாதிரி தோது பாத்து கெளம்பிரலாம். அதான் கேக்குதேன் "


            " சொல்றேன் மாமா . வர்ற ஞாயித்துக் கெழமதான் கெடாவெட்டு. எனக்கும் , மகனுக்கும் மொட்ட. உங்க மக அக்கினிச் சட்டி எடுக்குறா. ரெண்டு கெடா இருக்கன்குடி மாரியம்மனுக்கு நேந்து விட்ருக்கேன். குட்டியும் இல்ல. கெழடும் இல்ல. அப்றம் நம்மூர்க்கு வழக்கமா வர்ற எட்டயபுரம் உலகம்மாள் லாரியத்தான் பேசியிருக்கேன். அப்றம் ஏதோ … கேட்டீகளே … ரூம் போட்ருக்கானு … அதெல்லாம் நமக்கு ஒத்து வருமா மாமா ? வழக்கம் போல ஒரு எடத்தப் பாத்து சமயலச் செஞ்சு சாப்ட்டு வந்துற வேண்டியதான்."


    " ஓ ! சரி மாப்ள " 


" நீங்க கண்டிசனா வந்திரணும் மாமா . லாரி காலயில நாலு மணிக்கு வந்திரும். அப்ப வந்தாலும் சரிதான். இல்ல … ஆடு மாடுகளுக்கு தண்ணி காட்டிட்டு மதியச் சாப்பாட்டுக்கு வந்தாலும் சரிதான். மருமகன லாரியில வர்ற மாதிரி அனுப்பி வச்சிருங்க "


   " சரி மாப்ள . டக்டக்னு எல்லார்க்கும் சொல்லிருங்க. நாளு ரொம்ப கம்மியா இருக்கு " .


       " ஆமா மாமா . நா வாரேன் " சொல்லிவிட்டு மாடசாமி கிளம்பினான்.


       " பத்திரிக்கை நெறய்ய அடிப்பானா … கஞ்சப்பய காரணம் சொல்றான். வெத்தல பாக்கு கொடுக்கிறானே ! சரி. அதாவது ரோசாப்பாக்கா கொடுக்கலாம்ல. கொட்டப் பாக்கக் கொடுக்கிறான். இவன் என்னத்த கறிய நெறயப் போடப் போறான் ? பாதிக்கறிய வீட்டுக்குக் கொண்டு வந்திருவான். என்னடி நான் சொல்றது ? 

    மனைவி முத்திலியம்மாவப் பாக்க …

 

    " இந்தா … ஒங்க சோலி எதோ … அத மட்டும் பாருங்க . உங்க தங்க வாய வச்சு ஏதாச்சும் சொல்ல , அத எவனாவது கேட்டுக்கிட்டுப் போயி ஒன்னு கெடக்க ஒன்னச் சொல்லி சடவாப் போகவா ? "


   " அதில்லம்மா … நீ வேற , நாஞ்சும்மா வெளாட்டுக்குச் சொன்னா அதப்போயி நீ … "


        " நீங்க வெள்ளாட்டுக்கும் சொல்ல வேணாம். செம்மறி ஆட்டுக்கும் சொல்ல வேணாம். வெத்தல பாக்குக் கொடுத்தா வாங்கிட்டு , வர்றம்னு சொல்லிட்டு விட வேண்டியதானே ! அதவிட்டுட்டு ஆயிரத்தெட்டு கேள்வி. இப்படி ஒவ்வொருத்தரும் கேட்டா , அவன் மொட்ட போடுறதயே விட்ருவான். இப்படியா உங்க புத்திசாலித் தனத்த அந்த அப்பாவிகிட்ட காட்றது ? "


     " எல்லாப் பயலும் என்னய மாதிரிதான் கேப்பாங்கனு உனக்குத் தெரியுமா ? " 


  " அய்யா , சாமி ! இதென்ன வம்பாப் போச்சு. நான் வயலுக்குப் போறேன் " எனச் சொல்லிக்கொண்டே கதவிடுக்கில் இருந்த களக்கொத்திய எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.


      " நீயும் கெளம்பிட்டியா ? சரி சரி. போ. மதியத்துக்கு வீட்டுக்குத்தான வரணும் ? அப்ப ஆரம்பிப்பேன்ல திரும்பவும் " என மனதுக்குள் சொல்லிக் கொண்டான் முத்து.


   மாடசாமி ஒவ்வொரு வீடாகச்சென்று , வெத்தல பாக்கு வைத்துச் சொன்னான்.


      இன்னும் ஐந்து நாட்கள்தான் இருக்கின்றன. பம்பரமாய்ச் சுழன்று வேலை பார்த்தான் மாடசாமி. சொந்த பந்தங்கள் எல்லார்க்கும் சொல்லியாச்சு. திரும்பவும் ஒவ்வொரு ஊராக மனதில் நினைத்து , யாரும் விடுபட்டுள்ளார்களா என்று யோசனை செய்தான். பொன்னையாபுரம் , பக்கத்திலுள்ள மேலநம்பிபுரம் , கீழநம்பிபுரம் அடுத்து பெண் எடுத்த ஊரு , அவுக சொந்த பந்தம் என அனைவரும் அவன் மனக்கண்ணில் வந்து போனார்கள். கொடுத்தாச்சு. எல்லார்க்கும் கொடுத்தாச்சு.


          மாடசாமி இவ்வளவு யோசிக்கக் காரணம் மொய்ப்பணம் வரும் என்பதற்காக அல்ல. நாளப்பின்ன யாராவது எங்கயாவது பார்க்கும் போது  சேதி தெரிஞ்சு , " நீயெல்லாம் பெரிய ஆளாயிட்டப்பா ! எங்களுக்கெல்லாம் விசேசத்திற்குப் பத்திரிக்கை கொடுப்பியா ? " எனச் சொல்லிவிடக்கூடாதே என்ற அச்சத்தில்தான். கொடுத்தாலும் வராமல் இருப்பவர்கள் கூட இஷ்டத்திற்கு இப்படி ஏதாவது சொல்வார்கள். அதனால்தான் மாடசாமியின் யோசனை. கொடுத்தாச்சு . கூடியமட்டும் எல்லாத்துக்கும் கொடுத்தாச்சு . 


    சமையல் செய்வதற்கு விறகு ஏற்கனவே வெட்டிக் காயப்போட்டாச்சு. தேவைக்கு அதிகமாகவே விறகு இருக்கு. அப்றம் எவ்வளவு பேர் வருவார்கள் என்று தன் மனதில் கணக்குப் போட்டான். பத்திரிக்கை கொடுத்தது , வெத்தல பாக்கு வச்சது , தன் வீட்டார் எவ்வளவு பேர் என்று குத்து மதிப்பாகக் கணக்கிட்டான். அப்பத்தான் மளிகைச் சரக்கு , அரிசி எத்தனை கிலோ என கணக்குத் தெரியும்.


        வயலில் விளைந்த நெல் மூட்டை மூட்டையாக வீட்டில் கிடக்கிறது. எல்லாம் பொன்னி அரிசிதான். அதையே சமையலுக்கு வைத்துக் கொள்ளலாமா ? அல்லது விளாத்திகுளம் சென்று அரிசி மூடை எடுப்போமா என்று யோசனை அவனுள் இருந்தது. பத்து நாள்களுக்கு முன்பே மூனு மூடை நெல்லை அவித்துக் காயப்போட்டு , அரைத்து வைத்துள்ளான். நெல் அவிப்பதற்கு அவன் பட்ட பாடு அவனுக்குத்தான்  தெரியும்.


      அண்டா அல்லது குத்தண்டா தேடி அலைந்தான். அங்கும் இங்கும் தேடியும் பெரிதாக ஒன்றும் அகப்படவில்லை. நம்பிபுரம் போய் வாடகைக்கு எடுக்க வேண்டும். என்ன செய்வது என்று யோசிக்கையில் முருக மாமாவின் ஞாபகம் வந்தது மாடசாமிக்கு.


    ஆடு , மாடுகள் அதிகம் இருப்பதால் , தண்ணி காட்ட வேண்டும் என்பதற்காக மூன்று பெரிய வட்டைகள் இருந்தன முருகனிடம். அதிலும் இருபது படி வட்டை இரண்டு இருந்தது. எப்படியாவது கேட்டு வாங்கிவிட வேண்டும் என்று முருகன்  வீ்ட்டை நோக்கிச் சென்றான். 


    " மாமா … முருக மாமா … "


" வாங்க மாப்ள ! என்ன சேதி ? "


" சும்மாதான் மாமா …  உங்களப் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன் " 


" அப்படியா மாப்ள ! சரி நல்லா பாத்துக்கோங்க. பாத்திட்டிங்களா ? கெளம்புங்க மாப்ள "


       " அட ! போங்க மாமா . ஒங்க குசும்பு உங்கள விட்டுப் போகாது. நான் உங்ககிட்ட ஒரு எல்ப் கேட்டு வந்திருக்கேன். அதுக்குள்ள என்னடான்னா என்னய வெரட்றதிலேயே குறியா இருக்கிங்க " . 


     " நீங்க தான மாப்ள சும்மாப் பாத்துட்டுப் போகலாம்னு வநுதேன்னு சொன்னிங்க. அதான் சொன்னேன்."


" அது வந்து மாமா … வர்ற ஞாயித்துக் கெழம இருக்கன்குடி மாரியம்மன் கோவில்ல கெடா வெட்றம்ல … அதுக்கு நெல் அவிக்கணும். அண்டா அல்லது பெரிய வட்ட ஏதாவது கொடுத்திங்கன்னா தேவலையா இருக்கும். அல்லது நம்பியாரம் , எட்டயாரம்னு போகணும். இல்லாட்டி எங்க்ட்ட இருக்குற சின்ன அண்டாவுல ரெண்டு நாள் அவிக்கிற மாதிரி இருக்கும். அதான் வந்தேன் மாமா " 


         " அப்படியா மாப்ள ! கொடுக்குறதப் பத்தி ஒன்னுமில்ல. ஆடு மாடுகளுக்குத் தண்ணி காட்றதுக்கு கஷ்டமா இருக்கும். தவிடு , புண்ணாக்குனு கரச்சு விடணும் மாடுகளுக்கு. பெரிய வட்டை இருந்தாத்தான் நல்லா இருக்கும் . 


" ஆமா.மாமா " 


அடுத்து அன்னக்கி அப்படித்தான் குருவம்மா வாங்கிட்டுப் போனா நெல் அவிக்கணும்னு.எனக்கென்னனு வீட்ல போட்டுட்டு வெளியூர்ல இருக்குற மககிட்டப் போய்ட்டா. எனக்குப் பெரும்பாடாப் போச்சு. போனவ கொடுத்திட்டாவது போகக்கூடாதா ? பாதகத்தி உசுர வாங்கிட்டா ! "


" மாமா அப்படியெல்லாம் நாஞ் செய்வனா ? "


" அதே மாதிரி போன மாசம் பாருங்க . அலமேலு வந்து கேட்டா. கொடுக்கறதுக்கு வசதிப்படாதுமானு சொன்னேன். அண்ணே !  கொடுத்தால கொடுங்க. போன சோடுல கொண்டாந்து தாரேனு சொன்னவ , வட்டய நல்லா அடிப்பிடிக்க விட்டுட்டு கன்னங்கரேர்னு வெளக்காமச் செய்யாம அவள மாதிரியே கொண்டாந்து வச்சிட்டுப் போறா ! " 


" … "


  " இத்தனைக்கும் சல்லிக்காசு கூட யார்கிட்டயும் வாங்குறதில்ல. எல்லாரும் பொருள நம்மகிட்ட இருந்து வாங்குற வரக்கும் தான் மாப்ள. அய்யோ ! பாவம்னு நெனச்சு அவசர ஆத்திரத்துக்குக் கொடுத்தா … என்னத்தச் சொல்ல ? இப்பப் பாருங்க … நீங்க கோவில் விசேசம்னு கேக்கீக . முடியாதுனு சொல்ல முடியாது. சாய்ந்திரம் வந்து வாங்கிக்கோங்க. தண்ணி காலியானதும் எடுத்துட்டுப் போங்க " 


   " ரொம்ப ரொம்ப டேங்க்ஸ் மாமா " . தான் வந்த காரியம் நல்லபடியா முடிஞ்சதால மகிழ்ச்சியோடு சென்றான் மாடசாமி. எங்கே இவ்வளவு காரணம் சொல்லி கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம் அவனுள் இருந்தது.


சாயந்திரம் போய் இருபது படி வட்டையை வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டான். 


  சேவல் கூவி விடிவதற்குள் மாடசாமியும் , அவன் பொண்டாட்டி மாரித்தாயும் எழுந்து விட்டனர். வட்டையைக் குப்புறப் போட்டான் மாடசாமி.


   " ஏ ! மாரி "


" என்னய்யா "


" நல்லா அடுப்புச் சாம்பலையும் , மண்ணையும் சேத்துத் தண்ணி ஊத்திக் கரைச்சு , வட்டயச் சுத்தியும், அடியிலயும் பூசத்தா. அப்பத்தான் கரி அதிகம் பட்டாது. நெல்ல அவச்சு முடச்ச உடனே டக்குனு கழுவிரணும்.வட்டயப் பளபளனு ஆக்கிக் கொடுத்திரணும். அப்பத்தான் நமக்கு மருவாதி. இல்லனா வசவு உரிச்சிருவாரு முருக மாமா. "


   " சரிய்ய்யா !"


அன்னக்கி முழுவதும் நெல் அவிச்சு காயப்போட்டு காக்கா , கோழிகள்ட்ட  இருந்து பாதுகாத்து , ஒரு வழியாய் எட்டயபுரம் ரைஸ் மில்லுக் கொண்டு போய் அரைத்தான் மாடசாமி.


  " அண்ணே ! தவிடுக்கு சாக்குக் கொண்டாந்திருக்கேன். தவிடு வேணும்ணே !


  " என்ன மாடசாமி ! உனக்குத்தான் ஆடு , மாடு கெடையாதே ! அப்றம் எதுக்குத் தவிடு ? "


   " எனக்கில்ல… நெல்லு அவிக்க வட்ட கொடுத்தாக. அவுகளுக்குக் கொடுக்கத்தான். நாளப்பின்ன அவுககிட்டப் போய் நிக்கனும்ல. " 


  " சரிப்பா . தாராளமாக் கொண்டுட்டுப் போ ! " என்றான் மில்காரன். 


எல்லாம் ரெடியாகி விட்டது. அரிசியும் நல்லா இருக்கு. ஒன்றிரண்டு கல் கெடக்கும் போல் தோன்றியது மாடசாமிக்கு.  அரிசிய நல்லா அரிச்சுப் போடணும். இல்லாட்டி தலயச் சொரிய வேண்டியதாயிரும் என மனசுக்குள் சொல்லிக் கொண்டான் மாடசாமி.


         அதுக்கும் ஒரு காரணம் இருக்கு. வேலு மக சடங்கிற்கு சூட்டடி நெல்ல அவிச்சு , அந்த அரிசியில சாப்பாடு போட , அரிசி நிறம் மங்கி கருப்பாகவும் , சோறு நொசநொசனும் போய்விட்டதாக பேசிக் கொண்டார்கள். என்னயா சாப்பாடு போடுறான். சே … என ஆளாளுக்கு வைதுகொண்டே போனார்கள் வேலுவை. அந்த நெலம தனக்கும் வந்துவிடக் கூடாது என நினைத்தான் மாடசாமி. 


சனிக்கிழமை இராத்திரி. 


எல்லாம் ரெடியாகிவிட்டது. சாயந்திரம் ஒரு தடவை எல்லார் வீட்டிலயும் சென்று ஞாபகப்படுத்தினான். இந்த ஒரு வாரம் ஆட்டுக் கிடாய்களுக்கு நல்லா இரை போட்டான். கிடாய்கள் இரண்டும் குதியாட்டம் போட்டுத் தின்றன. நாளை நம்மைத் திங்கப் போகிறார்கள் என்பதை மறந்து !


    இரவில் தூக்கம் அவன் கண்களை ஆடுபடுத்தவில்லை. நாளை நல்லபடியாய் நடந்து முடிய வேண்டும். எல்லாம் அந்த இருக்கன்குடி மாரியாத்தாளின் கையில்தான் இருக்கிறது என மனசுக்குள் அம்மனை வேண்டிக்கொண்டான்.


    " மூனு மணிக்கு எட்டயபுரத்திலிருந்து உலகம்மாள் லாரி வந்து விடும். நாலு , நாலரைக்கெல்லாம் ஆட்களை ஏற்றிக்கொண்டு கிளம்பி விடவேண்டும். அப்பத்தான் கோவில் வளாகத்தில் நல்ல இடத்தில் லாரியை நிப்பாட்டி , சமையல் வேலை செய்ய முடியும் " என மனதில்  நினைத்துக் கொண்டே , சாணி தெளிக்கப்பட்டிருந்த தன் வீட்டு முற்றத்தில் , பழைய துணி மூட்டைத் தலையணையில் தலை வைத்துப் படுக்கத் தொடங்கினான்.


      மந்தையம்மன் கோவில் வேம்பின் அடியில் ஒருசிலர் சீட்டு விளையாடும் சத்தமும் , கம்மாயிற்குள் எங்கோ நரி ஊளையிடும் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது.


     பள்ளிச் சிறுவர்கள் நாளை லாரியில் செல்வதற்காக , இன்றே தயார் நிலையில் இருக்க , அவரவர் அப்பா , அம்மாக்கள் வந்து செல்லமாய் விரட்டிப் பிடித்து வீட்டிற்குள் படுக்க வைக்கப் பெரும்பாடாகிவிட்டது. 


    எப்படியோ மாடசாமி தூங்கிப்போனான்.


மறுநாள் அதிகாலை மூன்றரை மணிக்கெல்லாம் உலகம்மாள் லாரி ஊருக்குள் வந்து விட்டதை உணர்த்தும் விதமாக தொடர்ந்து ஹாரன் சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்தது.


   சடாரென்று விழித்த மாடசாமி பாயைச் சுருட்டி வீட்டிற்குள் போட்டுவிட்டு , கையில் டார்ச் லைட்டுடன் ரோட்டுக்கு வந்தான். 


  முன்னமே லாரி டிரைவரிடம் சொல்லி இருந்தான். ஊருக்குள் நுழையும் போதே ஹாரன் தொடர்ந்து அடிக்க வேண்டும் என்று.


  அதற்கேற்ப லாரி டிரைவர் ஊரின் முகப்பில் உள்ள பள்ளிக்கூடத்தின் அருகே வந்து ஹாரன் அடித்துக் கொண்டிருந்தான். டிரைவருக்கு ஒரு எண்ணம். "மாடசாமி மல்லாக்கப் படுத்து கனவு கினவு கண்டுகிட்டிருக்கானோ ? ஆளக்காணோமே ? "


    டிரைவர் தன் டவுசர் பையிலிருந்து பீடிக்கட்டை எடுத்து , அதிலிருந்து ஒரு பீடியை உருவி , அடிப்பகுதியின் நுனியைச் சிறிதாய் ஒரு கிள்ளுக் கிள்ளிவிட்டு வாயில் வைத்துத் தீப்பெட்டியைத் தேடினான். அதற்குள் வந்துவிட்டான் மாடசாமி. 


  " வாப்பா … மாடசாமி வா… " 


" வாண்ணே ! நான் முன்னாடி நடக்கறேன். நீ பின்னாடி மெதுவா வா . கவனாமா வா . யாரு வீட்டு ஓட்டையும் ரோசிரக் கூடாது. நூல் பிடிச்ச மாதிரி வந்தாத்தான் சரியா இருக்கும். இல்லனா சண்ட நாறிப்போயிரும் ணே. சரியா ? "


 " ஏப்பா ! இன்னிக்கு நேத்தா வாரேன் ? வருசம் பூரா நான்தான் வாரேன். எனக்குத் தெரியாதா ? நீ ஆடு , மாடு படுத்துக் கிடந்தா பத்திவிட்டு ரோட்டக் கிளியர் பண்ணிக்கிட்டுப் போப்பா "


  ரோடு மிகக்குறுகலானது. ஒரு லாரி மட்டும் போக முடியும். எதிர்வரும் ஆள்கூட விலகவோ , ஒதுங்கவோ முடியாது. வீட்டின் ஓடு வீட்ட விட்டு தெருவில் இரண்டடி நீண்டிருக்கும். லேசா உரசினாலும் ' டமடமனு ' என கீழே விழுந்து உடைந்து விடும்.


     மாடசாமி ஆங்காங்கே படுத்துக்கிடந்த ஆட்டையும் , மாட்டையும் பத்தினான். ச்சூ … ச்சூ … ஏய் … ம்பா ம்பா … எந்திரிக்கா பார்ரா ? இவ்வளவு பெரிய்ய மாட்டெ கட்டுத்தறியில கட்ட வேணாமா ? எனக்கென்னேனு எங்கட்டாவது ஓட்டி விட்ர வேண்டியது. எந்திரி … சூ … ச்சூ .


  " ஆடு , மாடுதான் எந்திரிக்க மாட்டிக்குதுனா … மனுசப் பயலும் அப்படித்தான் கெடக்கான். அடிக்குற ஆரன் சத்தம்  காதையே செவிடாக்குது. எனக்கென்னனு பாப்பரப்பானு படுத்துக் கெடக்காம் பாரு " 


  " எலேய் செல்லையா … எந்திரிலெ லாரி போயிக்கிறட்டும். அப்புறம் படுத்துக்கோ "


    " அட ! யார்ரா அது ? நல்லா தூங்குற நேரத்தில தொந்தரவு பண்றது ? " 


விசும்பலோடு மீண்டும் படுத்துக் கொண்டான் செல்லையா. ஒரு வழியாய் அவனைக் குண்டுக் கட்டாத் தூக்கி ஓரங்கட்டினான் மாடசாமி.


    காத்தோட்டமாகத் தூங்கலாம் என்று அங்கங்கே வீட்டு முற்றத்திலும் , திண்ணையிலும் ஆட்கள் படுத்திருந்தார்கள். ரோட்டில் படுத்திருந்தவர்களைத் தட்டி எழுப்பி ஒரு வழியாக லாரியை  மந்தையம்மன் கோவில் திடலில் கொண்டு வந்து நிறுத்தச் செய்தான் மாடசாமி.


      மாடசாமியின் வீடு பரபரப்பானது. அவனுக்கு ஒத்தாசைக்கு மச்சான்கள் , சொந்த பந்தங்கள் என ஒரு சிறு கூட்டம் வந்திருந்தது.


   " மச்சான் … வெட்டிப்போட்ட விறகு வீட்டுக்குப் பின்னாடி கெடக்கு. அத அப்படியே லாரி டாப்புல ஏத்திருங்க. பண்ட பாத்திரங்கள ஏத்துங்க. கெடா ரெண்டயும் ஏத்துங்க." 


லாரிச்சத்தம் கேட்டும் , ஆட்கள் சத்தம் கேட்டும் சின்னப் பசங்களும் வந்துவிட்டார்கள்.


      அஞ்சு மணிக்கெல்லாம் வண்டியக் கெளப்பிரணும். அப்பதான் விடிய கோவிலுக்குப் போக முடியும். மீண்டும் ஒரு தடவ எல்லார் வீட்லயும் போய்ச் சொன்னான் மாடசாமி.


     " லாரி வந்தாச்சு … வாரவுக சீக்கிரமா வாங்க. இன்னுங் கொஞ்ச நேரத்தில லாரி கெளம்பிரும். சின்னப் பசங்கள அனுப்பி விடுங்க. "


    " இந்தா கெளம்பிட்டு இருக்காங்க. செத்தோடத்தில வந்திருவாங்க " . எல்லார் வீட்டிலும் பதில் உடனுக்குடன் வந்தது.


    லாரியின் டோரைத் திறந்துவிட்டு , அதற்குக் கீழ் பிளாஸ்டிக் சேர் ஒன்றைப் போட்டான். பொம்பளயாட்கள் ஏறுவதற்கு வசதியாக இருக்குமென்று. 


    விறகு , அரிசி , பண்டபாத்திரம் எல்லாம் ஏத்தியாச்சு. ஆட்களும் ஒவ்வொருத்தராக வர , காலியாக இருந்த லாரியின் வயிறு நிறையத் தொடங்கியது. 


     " எப்பா , எல்லாரும் வந்தாச்சா ? யாராவது கிளம்பி அங்கிட்டும் , இங்கிட்டும் நின்னுக்கிட்டிருந்தா உடனே வந்து ஏறிக்கோங்க. அப்புறமா கெளம்பி வந்தவன விட்டுட்டுப் போய்ட்டான் மாடசாமினு கோவிச்சுக்கக் கூடாது " எனச் சொல்லியபடியே டிரைவரைப் பார்த்தான் மாடசாமி.


      நாலு டயர்க்கு அடியிலும் எலுமிச்சம் பழம் வைத்து , மந்தையம்மனை வேண்டி , " அணணே ! போலாம் ரைட் " எனச் சொல்ல , டிரைவர் வண்டியக் கெளப்பினான். 


     " ஏப்பா ! இளந்தாரிக கொஞ்சம் கோவிச்சுக்காம , லாரி டாப்புல கவனமா உக்காந்துக்கோங்க. வெறகு வேற போட்ருக்கு. வேப்பங்கொப்பு , புளியங்கொப்பு தாழ்வா இருக்கும். கவனமா குனிஞ்சுக்கோங்க. இல்லாட்டி உங்கள விழுத்தாட்டிரும். பாத்து சூதானமா உக்காந்துகோங்க "


     " அதெல்லாம் நாங்க பாத்துக்கிருவோம். நீ கவலைப்படாத மாமா " என்றான் முனியசாமி.


   லாரி நத்தையென ஊர்ந்து , ஊரைவிட்டு வெளியேறி , வண்ணத்துப் பூச்சியென ரோட்டில் பறக்க ஆரம்பித்தது. பொன்னையா புரம்  , முத்துலாபுரம் , தாப்பாத்தி , மாசார்பட்டி , நென்மேனி என காலை நேரக்காற்று உடல் தழுவ , லாரி புகைக்கிச் சென்றது. இருக்கன்குடி ஆத்துக்குள் நுழைய , சின்னப்பசங்களின் விசில் சத்தம் காதைக் கிழித்தது.


   " டேய் … வந்தாச்சுடா இருக்கன்குடிக்கு " 


   " எலே … யாரும் இப்ப இறங்காதிங்கடா ! வண்டிய நல்ல இடமாப் பாத்து நி்ப்பாட்டிக்கிறோம். அப்புறம் இறங்குங்க. இல்லாட்டி வண்டி எங்க நிக்குனு தேடிக்கிட்டு அலைவீங்க " லாரியில் ராசு சின்னப் பசங்கள அதட்டி அமைதிப்படுத்தினான்.


     பனை மரமும் , வேப்ப மரமும் ஆங்காங்கே இருந்த இடத்தில் லாரி சென்று நின்றது. கோவிலின் பின் பகுதி அது. ஞாயித்துக் கிழமை என்பதால் பல ஊர்களிலிருந்தும் நேமிக்கம் செலுத்த வண்டிகளில் ஆட்கள் வந்து கொண்டிருந்தார்கள். 


      லாரியிலிருந்து ஒவ்வொருவராக இறங்கினார்கள். விறகு , ஆடு , பாத்திரங்கள் எல்லாம் இறக்கி வைக்கப்பட்டன. மெள்ள கருக்கல் மறைந்து விடியத் தொடங்கியது. 


     சின்னப்பசங்க ஆர்வமாக நுழையும் இடத்தில் சூடாக விற்றுக் கொண்டிருந்த பாயாசம் வாங்கிக் குடித்தார்கள். பின்னர் ஆத்துப்பக்கம் போய் விளையாட , சிலர் ஆற்றின் நடுவில் இருந்த பம்பு செட்டில் ரெண்டு ரூபா கொடுத்து குளித்தும் வந்தனர்.


         சமையலுக்கான வேலையைச் சிலர் செய்தனர். சிலர் கோவிலுக்குள் சாமி கும்பிடச்சென்றனர். 


     எட்டே முக்கால் பஸ்ஸில் சிலர் வந்தனர். கிடா வெட்டப்பட்டது. ஒரே வெட்டில் கிடாயை வெட்டினான் வெட்டுபவன். தொங்குகிடா விழவில்லை. மாடசாமிக்குச் சந்தோசம். கிழே விழுந்த கிடாய்களின் வெட்டுப்பட்ட கழுத்திலிருந்து இரத்தம் சீத் சீத் என சீறிப்பாய்ந்தது. மெள்ள மெள்ள கிடாய்கள் அடங்கத் தொடங்க , இரத்தம் பீறிடுவது நின்றது.


     பக்கத்திலிருந்த கிரைண்டர்காரர்களிடம் போய்த் தேங்காய் , மசால் அரைத்து வந்தாள் மாடசாமியின் பொண்டாட்டி மாரித்தாய். ஆளாளுக்கு ஒவ்வொரு வேலையாகச் செய்தனர்.


       கறி நறுக்கவும் , சோத்தை வடிக்கவும் என வேலைகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்த வேலைகள் ஒருபக்கம் நடக்க , அக்னிச்சட்டி எடுக்க , ஆயிரங்கண் பானை எடுக்க , மொட்டை போட எனச் சிலர் ஒத்தாசை செய்தனர். அக்னிச்சட்டி எடுத்து , ஆற்றில் ஆடிமுடித்தபின் , முடிஇறக்கி மொட்டை போட்டுக்கொண்டான் மாடசாமி. 


    மாடசாமியின் குடும்பத்தினர்களும் , ஊர்க்காரர்களும் சாமியைத் தரிசனம் பண்ண வரிசையில் நின்றனர். வரிசை வளஞ்சு வளஞ்சு ரோட்டிற்கு வந்தது. தேங்காய் , பழம் , பத்திக்குச்சி , சூடம் என எல்லாம் வாங்கி ஆசைதீரக் கும்பிட்டான் சாமியை மாடசாமி. 


     புதிதாக வந்தவர்கள் கோவிலின் வரலாறை ஓவியத்தின் கீழே இருந்த வரிகளைப் படித்துத் தெரிந்து கொண்டனர்.


      சோறு வடிச்சு , கறியைக் கூட்டாக்கி , சால்னா வைத்து எல்லாம் தயார் நிலையில் இருந்தது.


      இருக்கன்குடி ஆற்றின் கரையில் இருந்த மதுக்கடையில் கூட்டம் அலைமோதியது. வரிசை அனுமார் வால் போல் நீண்டு கொண்டே சென்றது. ஞாயிற்றுக் கிழமை என்பதால் கோவிலில் நிற்கும் கூட்டம்போல் , மதுக்கடையிலும்  கூட்டம் . 


    ஆளாளுக்கு ஏதோ ஒரு பெயரைச்சொல்லி , பாட்டிலை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டனர். வாங்கிய ஆளைச்சுற்றி ஒரு கூட்டம் கோழிக்குஞ்சைச் சுற்றும் பருந்து போல வட்டமடித்தது. 


      கொண்டு வந்த பணத்திற்கு மட்டுமன்றி , மொய்ச்செய்ய வைத்திருந்த பணத்தையும் பாட்டில் வாங்கப்போட்டு , ஏதேதோ வாய்க்கு வந்ததை உளறிக்கொண்டு , குடித்துவிட்டு தள்ளாடியபடியே சாப்பிட உக்காந்தனர் எளவட்டங்களும் , நடுத்தர வயதுள்ளவர்களும் , ஐம்பதைத் தாண்டியவர்களும் வயது வித்தியாசமின்றி.


      பந்தி தயாராகிவிட்டது. மாடசாமியின் மனம் இப்போதுதான் பக்பக்கென்று அடித்துக் கொண்டிருந்தது. இதுவரை எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டது. சாப்பிடும் நேரத்தில் எந்தப் பிரச்சனையும் வந்துவிடக் கூடாது. 


   தண்ணி அடித்தவர்கள் சலம்பத் தொடங்கினார்கள் . 


  " எப்பா … என்ன எல இது ? பெரிய எலயாப் போடுப்பா. சோத்தையும் , கறியையும் போட்டுப் புரட்டித் திங்க இந்த எல பத்துமா ? என்னமோ பொங்கச் சோறு திங்கறதுக்கு கொடுக்கிற எல மாதிரில்ல போடுற ? " சிவந்த கண்களை உருட்டியபடியே சொன்னான் கனகு . 


      " எலேய் … நல்லா பெரிய்ய எலயாப் போடுடா  !" மாடசாமியின் பேச்சில் வேகம் இருந்தது.


       வந்தவர்கள் ஒவ்வொரு பந்தியாக உக்காந்தார்கள். சோறு வைக்க , கூட்டு வைக்க , சால்னா ஊத்த , இரசம் ஊத்த என ஆளுக்கொரு வேலையாக ஓடிக்கொண்டிருந்தார்கள்.


    " டேய் மாப்ள … என்ன கறி வைக்கிற ? நல்லா ஈரலும் , கருங்கறியுமா வைடா ! என்னடா இது சால்னாவா ? இரசமா ? தாயோளி ஒரு எலும்பக்கூட காணோம் ? நல்லா அரிச்சுப் போடுறா ? "


      " நானென்ன போட மாட்டம்னா சொல்றன் மாமா . உனக்குப் போகத்தான் இந்தா மாமா … போதுமா ? இல்ல போடவா ?


   " போதும்யா மாப்ள … மாப்ளன்னா மாப்ளதான். " 


    " ஏப்பா … ஒருத்தனுக்கே எலும்ப அள்ளி அள்ளி வச்சிட்டா எப்படி ? எங்களுக்கும் ரெண்டு நல்லி எலும்பப் போடு " 


    " இந்தா வந்துட்டேன் மாமா … நல்லா சாப்டுங்க " சால்னா வாளி வைத்திருந்த சமுத்திரம் யார் மனதையும் புண்படுத்தாமல் கேக்கக் கேக்க வைத்துக் கொண்டே இருந்தான். மத்தவங்களச் சரிக்கட்டி விடலாம். இந்த தண்ணி வண்டிகள மட்டும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சாப்பிட வைக்க வேண்டும். ஏற்கனவே மாடசாமி சொன்னது சமுத்திரத்தின் மனதில் வந்து போனது.


    " என்னதான் அரிச்சு அரிச்சுப் போட்டாலும் அதென்ன ஊத்துத் தண்ணியா ? ஊறிக்கொண்டே இருக்க ? "


      முதல் இரண்டு பந்திகளில் உட்காந்தவர்கள் திருப்தியாகச் சாப்பிட்டனர். அடுத்தடுத்த பந்திகளில் உக்காந்தவர்களுக்கு எலும்பு கிடைப்பது தட்டுப்பாடு ஆகிவிட்டது.


     " எலேய் மாடசாமி … வெட்ன ரெண்டாட்டுக் கறிய , எலும்ப குழம்புல போட்டியா ? இல்ல தனியா நீ வீட்டுக்கு எடுத்து வச்சிருக்கியா ? என்னலே இப்படிக் கூப்ட்டு வந்து கேவலப் படுத்தற ? " 


    " இல்ல மாமமா ! அப்டிலாம் செய்வனா ?  இருந்தத மொத ரெண்டு பந்தியில வச்சிட்டாங்க போல " 


     " என்ன ஓய் ? இதுக்கா நான் ஒரு நா வேலயவிட்டு மெனக்கெட்டு உன்னோட விசேசத்துக்கு வந்தேன் ? "


   " கோவிச்சுக்கிராம சாப்டுங்க மாமா … நான் தனியாக்கூட வீட்லெ வந்து சோறு போடுறேன். "


     " என்னவே சோறு போடுற ? நானென்ன கறி திங்காதவனா ? இல்ல கறிக்கு நாக்கத் தொங்கப் போட்டு நாய் மாதிரி அலையறனா ? "


      பேச்சுத் தடித்தது. ஆளாளுக்குப் பேசினார்கள். கத்தினார்கள். வாய்வார்த்தைகள் முற்றி கைகள் பேசத்தொடங்கின. சிலர் வேடிக்கை பார்த்தனர். சிலர் முகஞ்சுழித்தனர். பொருட்கள் சிதறிக் கிடந்தன. 


       உரித்துத் தொங்கவிடப்பட்டிருந்த கிடாய்களின் தோலில் இருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருந்தது. மாடசாமியின் கண்களில் கோடை மழையென கண்ணீர் வழிந்து தரையில் விழுந்தது. பெரிய ஆலமரம் ஒன்று பெரும்புயலிற்கு சாய்ந்து விழுவதைப் போல் நடக்கும் காட்சிகளைக் கண்டு மனமொடிந்து பனைமரத்தின் அடியில் சாய்ந்தான்.


    “ தாயே மாரியாத்தா ! வாழ்க்கையில முதன் முதலா உன்னை மனசார நெனச்சு குடும்பத்தோட நேமிக்கம் செலுத்த வந்தேன். காடுகர நல்லா வெளயணும். கைகால் நல்லா சொகமா இருக்கனும்னு. ஆனா , இங்க நடக்குறதப் பாத்தா என்னோட ஈரக்கொலயே வெடிச்சுச் சிதறிரும்போல இருக்குது. போதும் ஆத்தா ! இன்னிக்கு நான் பட்டது. இனி உன்னப் பாக்கவும் வரமாட்டேன். நேமிக்கம் போட்டு ஆடு பலினு தரவும் மாட்டேன் “ கண்ணீர் மல்க விரக்தியில் பேசினான் மாடசாமி.


     அதுவரை மனந்தளராத மாடசாமியின் மனைவி மாரி பதறிப்போய் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.


 “ ஏயா ! இப்படிப் பொசுக்னு உக்காந்துட்ட. ஒவ்வொரு கெடாவெட்டிலும் , ஊர்த்திருவிழாவிலும் , கல்யாணம் காட்சியிலும் இப்படித்தான எதையாவது நம்மூர்க்காரங்க செய்றாங்க. இது என்ன புதுசா ? பிரச்சனையே பண்ணாம நம்ம விசேசம் முடிஞ்சாத்தான் ஆச்சர்யப்படனும். எந்த விசேசம்னாலும் பாழாப்போன தண்ணியப் போட்டு வந்து தாறுமாறாப் பேசுறது அந்தக் காலத்திலிருந்து நடக்கத்தானே செய்யுது. மனந்தளராம எந்திரியா. நேத்திக்கடன் கொடுக்கத்தான் வந்திருக்கோம்.  இன்னைக்கு நேத்தா இப்பழக்கம் ? நம்ம அப்பன் , ஆத்தா கலத்திலிருந்து நேத்திக்கடன் கொடுக்கறோம். சின்னச் சின்னப் பிரச்சனைக்காக நம்ம நேமிக்கத்த விட்ற முடியுமா ? வருசந்தோறும் இனியும் வரத்தான் போறோம். நாம கும்பிடுற அந்த மாரியாத்தா நமக்கு நல்ல வழி காட்டுவா “ என்றாள்.


   சோர்ந்து போய் உக்கார்ந்திருந்த மாடசாமிக்கு மாரியின் வார்த்தைகள் தன்னம்பிக்கை ஊட்டின. சந்தனம் பூசப்பட்டிருந்த தனது மொட்டைத் தலையைத் தடவிக் கொண்டே நம்பிக்கையோடு எழுந்தான். சாப்பிடாத ஆளுக இருந்தா உக்காருங்க பந்தியில என்றான் உற்சாகத்துடன். மாரியின் கண்கள் ஈரமாகின.


****************    ***************  ************

Post a Comment

0 Comments