மழையோடு விளையாடு
கவிதைகள்
மு.மகேந்திர பாபு – 97861 41410
இந்நூல்
படைப்பாளனாக்கிய எனது தமிழாசான் கவிஞர்.அ.கணேசன்
ஐயாவுக்கும் & படைப்புக் களமான எனது கிராமத்திற்கும்.
நன்றிக்குரிய இதழ்கள்
கல்கி
செம்மலர்
பாக்யா
இனிய நந்தவனம்
இனிய உதயம்
மகாகவி
கவிதை உறவு
கொலுசு
மாதவம்
புதிய ஆசிரியன்
தினமலர் - நெல்லை
ஸ்மார்ட் மதுரை
ஒளிரும் வளர்மதி
தமிழ்நாடு
இபேப்பர்
அறிவின் குரல்
உங்கள் நண்பன்
கதிரவன் – சூரிய
காந்தி
*******************
**************
அன்புச் சக்கரம்
அவசர அவசரமாய்
அலுவலகத்திற்கு
இருசக்கர
வாகனத்தில்
செல்லும் நண்பர்
பக்கவாட்டு
ஸ்டாண்டினை
மறந்து வாகனம்
ஓட்ட,
அவரை முந்திச்
சென்ற
நண்பர் கையால்
சைகை செய்து
எச்சரிக்கையூட்டுகிறார்.
சாலையின்
எதிர்புறம்
உள்ள பள்ளிக்குச்
செல்லும்
குழந்தைகள்
வரிசையில் நின்று
காத்திருக்க,
இளைஞர் ஒருவர்
வாகனங்களை
நிறுத்தி
மாணவர்கள் கடக்க
உதவி செய்கிறார்.
கட்டுமானப்
பொருட்களை
ஏற்றிக்கொண்டு
மேட்டுச்சாலையில்
மூன்று சக்கர
சைக்கிளில்
சிரமத்துடன் ஓட்டிச்செல்லும்
வயது முதிர்ந்தவரை,
நடந்து செல்லும்
பள்ளிமாணவர்கள்
கைகளால் தள்ளி
மேட்டினைக்
கடக்க உதவி
செய்கிறார்கள்.
சிவப்பு விளக்கு
எரிந்தபின்
நாற்சந்திப்பில்
நிற்கும்
வாகன ஓட்டிகளிடம்
ஒரு பேனா
வாங்கிக்கோங்க என
பேனா விற்கும்
பார்வையற்ற
நண்பரிடம் இரண்டு
பேனா வாங்கி
மனிதம் விதைத்துச்
செல்கிறார்
நண்பர் ஒருவர்.
அவசர உலகம்தான் என்றாலும்
அன்புச்
சக்கரத்தால்
சுழல்கிறது
ஒவ்வொரு நாளின்
காலைப்பொழுது.
நன்றி – மகாகவி – ஜனவரி – மார்ச் 2024
***********************************************************************************************************************************************************************
அடையாளம்
வெட்டப்பட்ட
பின்பும்
அடையாளம் இழக்காமல்
இன்றும் பயணிகளால்
சொல்லப்பட்டு
வருகிறது
ஒத்தப்பனைமரம்
பேருந்து நிறுத்தம் என்று.
சுத்துப்பட்டி
முழுமைக்கும்
அடையாளமாக
இருந்தவர்
இறந்து பல
ஆண்டுகள் ஆகியும்
இன்றும்
சொல்லப்பட்டு வருகிறார்
மிலிட்டரிகாரர்
வீட்டுத்தெரு என்று.
ஆட்சிகள் மாறி
காட்சிகள் மாறி
தார்ச்சாலையும்
வந்த பின்னர்
இன்றும்
முகவரியில்
எழுதப்பட்டு
வருகிறது
செம்மண் சாலைத் தெரு என்று.
பல்லாயிரம்
மக்களுக்குப்
பொழுதுபோக்கும்
இடமாக இருந்து
நாள்களின்
ஓட்டத்தில்
நகைக்கடையாக
மாறிப்போன
திரையரங்கம்
இன்றும்
அதன் பெயரே
அடையாளம் பலருக்கும்.
ஆண்டுகளின்
ஓட்டத்தில்
தோற்றங்கள் பல
வந்தாலும்
தொடர்ந்து
சொல்லப்பட்டே
வருகின்றன
அடையாளங்கள்
இன்றும்.
நன்றி– கொலுசு–
ஏப்ரல் 2024
******************
************************************************************************************************************************
சாமியைக்
காட்டிலும்
ஊர்த்திருவிழாவில்
சாமி பார்க்க
அப்பாவின் பின்
கழுத்தில் அமர்ந்து
இரு தோள்களின கீழ்
கால்கள்
தொங்கவிட்டு
தலைமுடியைக்
கொத்தாகப் பிடித்து
அசைந்து நடக்கும்
அப்பாவின் நடையில் ஆனந்தப் பாட்டு.
'சாமி தெரியுதா?’ என்று
தன் கால் உயர்த்தி
எக்கி நின்று
காட்டுகையில்
சாமியைக்
காட்டிலும்
உயர்ந்து நின்றார்
அப்பா.
நன்றி – கல்கி
05-10-2014
**********************************************************************************************************************************************************************
இயற்கை எனும் பள்ளி
இயற்கைதான்
பெரிய
பள்ளிக்கூடம்.
தினம் தினம்
படிக்கிறோம் பாடம்.
ஓங்கி உயர்ந்த
மரங்கள்.
மனிதா!
உன் செயலால்
நீயும் வளர்
என்பதைக்
காட்டும்.
கரிய மலைகள்.
மன உறுதியைச்
சொல்லாமல்
சொல்லும்
இயற்கைக்
குழந்தைகள்.
நமக்கது நம்பிக்கை
ஊட்டும்.
அருவியின் ஒலி.
இசையமைப்பாளர்
இல்லாமலே
இசையை மீட்டும்.
அலைகடல்.
உனது பயணங்களுக்கு
முடிவில்லை
என்பதைச் சொல்லும்.
அடக்கம் வேண்டும்
என்பதைக்
கரை கடக்காது
தன்னடக்கத்தோடு
நின்று
மனதை வெல்லும்.
இயற்கையன்னையின்
இருகண்களாய்ப்
பகலில் சூரியனும்,
இரவில்
சந்திரனும்.
மழைத்துளிகள்.
இயற்கையன்னை
தெளித்திடும்
பன்னீர்த் துளிகள்.
நிலமகளின்
நிலையறிந்து,
உடலைக் குளுமைப்
படுத்துவதும்,
பயிர்க்குழந்தைகளை
வளர்த்து
விவசாயிகளைக்
குதூகலப்
படுத்துவதும்
மழைத்துளிகள்தான்.
மனித உடம்பின்
நரம்பு மண்டலமாய்ப்
பூமித்தாயின்
உடம்பில் ஆறுகள்.
தனித்திருந்த
சகோதரர்கள்
ஒன்றுகூடிப்
பலத்தைக் காட்டுவதைப்
போல,
ஆறுகள் ஒன்று
கூடிக் கடலில் கலத்தல்.
ஆசிரியர்களிடமும்,
ஆன்றோர்களிடமும்
தலைபணிந்து நட
என்பதைச்
சொல்லும் நாணல்.
மாறினால்
வாழ்க்கை கோணல்.
இயற்கை
கட்டணம் பெறாத
ஆசான்.
மனிதனின்
சுயநலம்தான்
இயற்கையைச் சுரண்ட
வைத்து,
சோகமாக்குகிறது.
பாடம் கற்றுக் கொடுத்த
ஆசானைப்
பாதுகாத்துப்
போற்று!
சுவாசிப்பாய்
தூய காற்று!
நன்றி –
தமிழ்நாடு இபேப்பர்.காம் 15-12-2023
******************
****************************************************************************************************
வாசம்
ஐந்தாறு தெருவரை
காற்றில்
அசைந்தாடி வரும்
அம்மாவின் சமையல் வாசம்.
கோழிக் குழம்பு,
மீன் குழம்பு
கருவாட்டுக்
குழம்பு என்றில்லாமல்,
கத்தரிக்காய் குழம்பும்
கமகம என மணக்கும்.
காரணம் அம்மிதான்.
அம்மா அம்மியில் அரைப்பதே
ஓர் அழகுதான்.
வயலினை மீட்டுவதைப்போல்
அம்மிக்கல்லை
முன்னும்
பின்னுமாய்
இலாவகமாய்
அரைப்பாள்.
இடது காலை நீட்டி,
வலது காலை மடக்கி,
தேங்காய்ச் சில்லை
அம்மி நடுவில்
வைத்து,
இடது கைப்பிடியை அழுத்தி,
வலது கைப்பிடியை தூக்கி,
நச்சட்டி நச்சட்டி என
அடிக்கும் போது
தேங்காய்ச்சில்
விரிசல் கண்டு
அன்பின் வலியால்
கண்ணீர் விடும் .
சில வழுக்கைத் தேங்காய்ச் சில்லுகள்
போக்குக் காட்டும்
அம்மியில்
அகப்படாமல்.
அப்போதுதான்
அம்மாவிற்கு கோபம் கொஞ்சம்
தலை தூக்கும்.
அம்மி கொத்தரவனக் கூப்பிட்டு
கொத்தினாத்தான் என்ன?
தேங்காய்ச்
சில்லும் வழுக்க,
அம்மியும் வழுக்க....
அரைப்பதும் வழுக்க...
என எப்போதாவது கோபம் கொட்டுவாள்.
அரைத்து முடித்துடன்,
அம்மியில்
இருக்கும்
கூழினைக் குழவிக்
கல்லிற்குக் கொண்டு வந்து,
செங்குத்தாய் நிறுத்தி
வலக்கையின் ஆட்காட்டி விரலால் எடுத்து
தட்டில் போடுவாள்.
அரைத்து அரைத்து
அம்மியும் நடுவில்
பள்ளமாகி,
வில்லாகிப் போனது.
அம்மி, திருகை, ஆட்டுஉரல்
என ஒவ்வொரு வீடும்
உடற்பயிற்சி
கூடம்தான் அன்று.
நாட்களின்
ஓட்டத்தில்
அம்மியும்
அகற்றப்பட்டது பல வீடுகளில்.
அடிக்கடி
அழைத்துக் கொண்டன
மருத்துவமனைகள்.
அங்கும் இங்கும்
இயந்திரங்கள் வைத்து அரைக்கையில்,
அம்மாவின் துணை என்னவோ
அம்மி மட்டும்தான்.
அதனால்...
ஐந்தாறு தெருவரை
காற்றில் அசைந்தாடி வரும்
அம்மாவின் சமையல் வாசம்.
நன்றி – நமது
மண்வாசம்- பிப்ரவரி 2024
********************
******************************************************************************************************************************
அப்பாவின் முகம்
வெயில் அப்பிய
மதிய நேரத்தில்,
மார்கழி மாதத்து
அதிகாலை பசும்புல்
தலையில்
பூத்திருக்கும்
பனித்துளியாய்,
உடலெங்கும்
வியர்வைத் துளிகள்
படர்ந்திருக்க,
காலில்
செருப்பின்றி,
மேலில்
சட்டையின்றி
விரைந்து நடக்கும்
அப்பா
தன் கைக்கட்டை
விரலால்
வியர்வையைத்
துடைத்தெறிந்துவிட்டு,
பருத்திக்காட்டிற்குள்
நுழையும் போது
முகம் மலர்கிறார்
வெடித்திருக்கும்
பருத்தியைப் போல!
நன்றி – தமிழ்நாடு இபேப்பர்.காம்–29-05-2024
*******************
********************************************************************************************************************************
பாடம்
அப்பா முகநூலிலும்
அம்மா
நெடுந்தொடரிலும்
நெகிழ்ந்திருக்க,
பள்ளியில் இன்று
கேட்ட
கதைகளையும், பாடல்களையும்
சொல்லியும், பாடியும்
மகிழ்ந்து
கொண்டிருக்கிறாள்
மகள் தன்
பொம்மைகளிடம்.
நன்றி – புதிய
ஆசிரியன்
*********************
****************************************************************************************************************************
மழையோடு விளையாடு
மெல்லச்
சொட்டத்
தொடங்குகிறது மழை.
மொட்டை மாடியில்
காயப்போட்ட
துணிகளை எடுக்க
அவசரமாக ஓடுகிறாள்
பெண்ணொருத்தி.
முதல் மழைத்துளி
தலையில்
விழுந்தவுடன்
அமிலம் பட்டதாக
நினைத்து,
கைப்பைக்குள்ளிருந்து
குடையை எடுத்து
விரிக்கிறாள்
அலுவலகத்திலிருந்து
இல்லம் திரும்பும்
பெண்ணொருத்தி.
நடைபாதை தள்ளுவண்டியில்
அவல், பொரி விற்பவர்
பதறிப்போய் மூடுகிறார் பொரி மூட்டையை
பொழப்பு போனதாகப்
புலம்பிக் கொண்டு.
வளர்ந்து வரும்
வீட்டின்
சிமெண்ட் பூச்சுக்
கரைந்து விடுமென
தார்ப்பாயால்
மூடுகிறார்
கட்டிடத் தொழிலாளி
ஒருவர்.
முற்றத்தில்
கிடந்த விறகுகளை
அள்ளிக்கொண்டு
அடுப்படிக்கு
ஓடுகிறாள்
கிராமத்துப்
பெண்ணொருத்தி.
மழைகண்டு
அனைவரும் அஞ்சி ஓட
இருகை விரித்து
மழையோடு கொஞ்சி
விளையாடுகிறாள்
பள்ளிச் சிறுமியொருத்தி!
நன்றி – செம்மலர் – ஜனவரி 2016
****************************
**********************************************************************************************************************
இப்படிக்கு மரம்...
மண்ணில் வேர்விட்டுவிட்டேன்.
நிச்சயம் நிழல்
தருவேன்.
காலம் செல்லச்
செல்ல
சுவைதரும் கனி
தருவேன்.
பறவைகளுக்கு
மட்டுமல்ல...
பல மனிதர்களுக்கும்
நான் என்றும்
வீடுதான்.
நான்
உங்களுடனே
இருப்பதால்,
நீங்கள் நலமுடன்
வாழ
காற்று தருவேன்.
கோடையின் போது
வெப்பம் தணிப்பேன்.
தினமும் பூத்துக்
காய்த்துக்
குலுங்கும்
என்னைப் பார்த்தால்
உங்கள் எண்ணம்
விரியும்.
எனதருமை புரியும்.
உங்கள் உடலில்
சிறு காயம்
என்றால்
துடித்துப்
போகிறீர்களே!
என் கிளையை
வெட்டினீர்கள்.
ஒன்றும் சொல்லாமல்
கனத்த மனதோடு
மௌனம் காத்தேன்.
மீண்டும்
துளிர்ப்பேன்
என்ற
நம்பிக்கையோடு!
மனிதர்களை
மட்டுமல்ல...
மரங்களை
அழிப்பதும்
இனப்படுகொலைதான்.
என்றேனும் எனக்காக
விழா எடுக்கும்
போது
பூ(ரி)த்துப்
போகின்றேன்.
மனிதா!
என் மகத்துவத்தை
எப்போது உணரப்
போகிறாய்?
உண்மையில் மண்ணின்
மைந்தன் நீயல்ல...
நான் மட்டும்தான்
மண்ணிலிருந்து
வருவதால்!
நன்றி – மாதவம்-
ஏப்ரல் 2015
********************
*********************************************************************************************************************************
வெக்கை
சுழலும்
மின்விசிறி
வீடெங்கும்
நிரப்புகிறது
வெப்பக் காற்றினை.
உச்சி முதல் பாதம்
வரை
உடலெங்கும்
ஓடுகிறது
வியர்வை ஆறு.
ஈரம் சொட்டியபடி
போர்வைகளைப்
போர்த்தியிருக்கின்றன
அறை நடுவே சில
நெகிழி இருக்கைகள்
வெப்பம் தணிக்க.
என்னென்னவோ
பிரயத்தனங்கள்
செய்தும்,
கான்க்ரீட்
காடுகளின்
வெப்பம் குறைவதாய் இல்லை.
மனிதனின் மடமையை
நினைத்து
எங்கேனும்
பேசிக்
கொண்டிருக்கலாம்
உயிரோடிருக்கும்
இருமரங்கள்.
நன்றி – கல்கி
***********************************************************************************************************************************************************************
செருப்பு
வாங்கியபோது
பொன்னோ பூவோ என
பாதுகாத்தாள்
செருப்பினை அம்மா.
காலையிலும், மாலையிலும்
காட்டிற்குச்
செல்லும்போது
காலில் போடாமல்,
கக்கத்தில்
இடுக்கிக் கொள்வாள்.
வெயில் இல்லா
நேரத்தில்
செருப்பெதற்கு என!
மதிய வெயில்
பொழுதிலும்
வேலி முள் நிறைந்த
புதர்ப்
பகுதியினுள் செல்லும் போதும்
செருப்பை அணிந்து
கொண்டு
பொத்திப் பொத்தி
நடப்பாள்
செருப்பு தேயா
வண்ணம்.
வீடு வந்து
சேர்ந்ததும்,
செருப்பில்
குத்தியிருக்கும்
சிறு சிறு முட்களை
விரல் நகத்தால்
நெம்பித் தள்ளி எடுத்துவிட்டு
சுவரில் சாய்த்து
வைப்பாள் கழுவி.
நாளாக நாளாக
பெருவிரல் தடமும்,
குதிகால் தடமும்
அதிக
தேய்மானத்தைத் தர,
இரப்பர்
செருப்பின் வெள்ளை நிறம் நீங்கி,
அடி நிறமான ஊதா
தெரிய
அம்மா முகத்தில்
கவலையும் தெரிய
ஆரம்பித்தது.
நெல்கட்டினைத்
தூக்கி,
வரப்பு விட்டு
வரப்புத்தாண்டும் போது
செருப்பின்
காதறுந்து விட்டது
நாட்கள் பல கடந்து
விட்டபடியால்!
தாலிக்
கயிற்றிலிருந்து
ஊக்கு ஒன்றினை
எடுத்து,
சற்றே அகலமாக்கி,
செருப்புக் காதின்
நடுவில் இணைத்து,
ஊக்கினை மாட்டியபின்
மெதுவாக நடைபோட
ஆரம்பித்தாள்
நெல்களத்திற்கு!
நாளொரு மேனியும்,
பொழுதொரு
வண்ணமுமாகத்தான்
தேய்ந்து
கொண்டிருக்கிறது
செருப்புகளோடு
கிராமத்து பல
அம்மாக்களின்
வாழ்க்கையும்!
நன்றி – செம்மலர்
***********************************************************************************************************************************************************************
அட்சய
திருதியை
குண்டுமணி அளவேனும்
தங்கம் வாங்கினால்
செல்வம் பெருகும்
என்றெண்ணி
அட்சய திருதியை
நாளில்
கடன் வாங்கி நகை
எடுத்தாள்.
தொடர்ந்து
பெருகிக்
கொண்டிருக்கிறது
ஆண்டு முழுவதும்
கடன்சுமை
அம்மாவிற்கு.
நன்றி– பாக்யா
18-ஏப்ரல் 2015
***********************************************************************************************************************************************************************
திருவிழா தோசை
காம்பு நீண்ட கத்தரிக்காயின்
அடிப்பாகத்தை
நறுக்கிவிட்டு,
தாளிக்கும்
கரண்டியில் எண்ணெய் ஊற்றி,
தோசைச்சட்டியில்
தடவி,
இடது கையால்
எரியும் விறகைத்
தள்ளிவிட்டு
வலது கையால்
கரண்டி நிறைய
மாவெடுத்து ஊற்ற
சுரீர் என
வருகிறது சத்தம்.
மண்ணெண்ணெய்
விளக்கின் ஒளியில்
ஒவ்வொரு தோசையாய்ச்
சுட்டுச்சுட்டு
பனை
நார்ப்பெட்டியில்
அடுக்குகிறாள்
அம்மா.
பளார் என
பொழுது விடிந்த
வேளையில்
அம்மாவின்
அன்பைப்போல்
தோசையால் நிறைந்து
கிடக்கிறது
நார்ப்பெட்டி திருவிழா நாளில்.
நன்றி
– தமிழ்நாடு இபேப்பர்.காம்–29-05-2024
தொரட்டிக்
குச்சி
தாத்தாவின்
உயரத்தைப் போன்று
மூன்று மடங்கு
உயரமிருக்கும்
தொரட்டிக்குச்சி
வீட்டின் முன்
வேலி மரத்தோடு
ஒன்றியிருக்கும்.
தொரட்டிக்
குச்சியோடு
தாத்தா நடக்கும்
போது,
வெள்ளைக்காரத் துரையாக
நினைத்துக் கொண்டு
நடை போடுவார்.
சிறுவர்களுக்கு
கொடிக்காய்ப்புளி
பறிக்கவும்,
ஆட்டுக்குச்
செல்லும்போது
வேலி நெத்து
திருகிப் போடவும்,
படப்புகளில்
சிக்கிக்கொண்ட
கிட்டிக்
குச்சியினைத்
தட்டி விடவும்,
மின்கம்பத்தில்
சிக்கிக்கொண்ட
சட்டைத் துணிகளை
எடுக்கவும்
மஞ்சனத்திப் பழம்
தட்டிவிடவும்...
இன்னும் பிற
வேலைகளுக்காகவும்
எப்போதும்
ஓய்வின்றி உழைத்த
தொரட்டிக் குச்சி
கேட்பாரற்று
மூலையில்
கிடக்கிறது
தாத்தாவின்
மரணத்திற்குப் பின்பு!
நன்றி – கல்கி
07-12-2014
***********************************************************************************************************************************************************************
பொங்குது
இன்பம்
வானம் பாத்த
பூமியிலே
வாசலிலே தண்ணி ஓட
வண்டி மாடு
பூட்டிக்கிட்டு
வயல்,காடு
விதைக்கப் போனோம்!
விதைச்ச விதை
முளைச்சுவர
வீடெல்லாம் இன்பம்
சேர
களை எடுக்க
ஆள்சேத்து
கவனமா வெளய
வச்சோம்!
கதிர் வெளஞ்சு
சாய்ஞ்சிருச்சு
வயல் ஈரம்
காஞ்சிருச்சு
அறுத்த நெல்லு
களம்சேர
பொங்கலும் தான்
வந்திருச்சு!
புது நெல்லு
அரிசியாக
பொங்கப் பான
பொங்கிவர
குலவைச் சத்தம்
கேட்டிடவே
குடும்பத்தில
மகிழ்ச்சி பொங்கும்!
காளைகளக்
குளிப்பாட்டி
கரும்புத் தோகை
உணவாக்கி
கொம்பினிலே பூச்சூடி
கும்பிடுறோம்
இயற்கைத் தாயை!
நண்பர்களை அழைத்து
வந்து
மகிழ்வுடனே
விருந்து தந்து
நாளெல்லாம் நலம்
சேர
நாம் இணைவோம்
ஒன்றாக!
நன்றி – கவிதை
உறவு – ஜனவரி 2024
***********************************************************************************************************************************************************************
வயலும்
வாழ்வும்
பௌர்ணமி நாளின்
இரவொன்றில்
குடும்பத்தினரோடு
வயலுக்குச் சென்று,
கருக்கரிவாளால்
நெற்கதிர்களை
விடிய விடிய ஏதோ
ஒரு கதைபேசி
அறுத்துவிட்டு,
பகல் முழுவதும்
கதிரடித்துவிட்டு,
இரவில் பிணையல்
மாடுகளால்
சூட்டடி நெல்லை
நசுக்கவிட்டு
பரபரப்பாய் வேலை
பார்த்த
நினைவுகள்தான்
நெஞ்சில்
மோதிச்செல்கின்றன
இப்போது
வீடுகளாகிவிட்ட
வயல்களைப்
பார்க்கும்போது.
நன்றி – புதிய ஆசிரியன் – ஏப்ரல் 2015
***********************************************************************************************************************************************************************
காவல்
ஊரின் எல்லையில்
அரிவாளோடு
காவல் காத்துக்
கொண்டிருக்கிறார்
அய்யனார்.
பஞ்சம் பிழைக்க,
கிராமம் நகரம்
நோக்கி
நகர்ந்ததை மறந்து!
நன்றி – பாக்யா – மார்ச் 27 – 2015
***********************************************************************************************************************************************************************
பெண் எனும் பேராற்றல்
களக்கொத்தி
கையிலெடுத்து,
காலாற
நடந்துக்கிட்டு
காட்டுவழி போகின்ற
கண்மணியே கண்ணம்மா!
காத்திருந்து
காத்திருந்து,
இலவசப் பேருந்தில்
ஏறி,
தினக்கூலி
வேலைக்கு
இடிபட்டு இறங்கும்
பொன்னம்மா!
மிடுக்காகத்
தலைக்கவசமும்
மேனியிலே புத்தாடையும்
புன்னகை
முகத்துடனும்
வாகனத்தில்
வந்திறங்கும் வள்ளியம்மா!
கால நேரம் மறந்து
இரவு பகலாக,
பகல் இரவாக
ஐ.டி.த்துறையில்
ஐக்கியமான
அகிலாம்மா!
பொறுப்புகளைச்
சுமந்து
அரசு வாகனத்தில்
நல்ல பல
திட்டங்களுடன்
நாடாளும்
கலெக்டரான கனகாம்மா!
மனம் முழுதும்
மக்கள் பணியென
ஐந்தாண்டு
ஓட்டத்துடன்
ஆர்ப்பரிக்கும்
இராணியம்மா!
பணிகள் பலப்பல
என்றாலும்
துணிவுடன்
உலாவரும்
பெண் எனும்
பேராற்றலே!
போற்றுகிறோம்
உன்னையே!
நன்றி – இனிய
நந்தவனம் – மார்ச் 2024
**********************************************************************************************************************************************************************
விடியல்
மார்கழி மாதத்தில்
வீட்டின் முன்
கோலமிடும்
மங்கையரைப் போல்
மனமகிழ்ந்து
அதிகாலை எழுதல்
வேண்டும்.
நகரத்து மக்களின்
விழித்தலைச்
சுறுசுறுப்பாக்கும்
தேநீர்க்கடைக்காரர்போல்
செயல்பட வேண்டும்.
விடிந்தும்
விடியாப் பொழுதில்
வீட்டார்களின்
எதிர்பார்ப்பை
ஈடுகட்டும்
பால்காரரைப் போல்
பரபரப்பாக ஓடவேண்டும்.
அடிவயிற்றிலிருந்து
சத்தமெடுத்து
தெருவையே
திரும்பிப்
பார்க்கச் செய்யும்
கீரைக்காரப்
பெண்மணிபோல
நடக்க வேண்டும்.
பறக்கும்
திசையெல்லாம்
கிழக்கென
இலக்காக்கும் பறவை
போல
நம் பயணத்தைத்
தொடரவேண்டும்.
ஒரு நாளின்
தொடக்கம்
இதுவெனில்
ஒவ்வொரு நாளும்
நம் வாழ்க்கையில்
மலரும்
அர்த்தமுள்ள
விடியல்.
***********************************************************************************************************************************************************************
கொள்ளிவாய்ப்
பிசாசுகள்
அடிக்கடி
முன்வந்து
புகை
கக்கிவிட்டுச் செல்கின்றன
கொள்ளிவாய்ப்
பிசாசுகள்.
சிலநேரம்
எரிச்சலாகவும்,
சிலநேரம்
ஆத்திரமாகவும் இருக்கிறது
கொள்ளிவாய்ப்
பிசாசுகளைப்
பார்க்கும்
போதெல்லாம்.
நேரம் காலம்
கிடையாது.
காலை எழுந்தது
முதல்
இரவு தூங்கச்செல்லும்
வரை
தன் பணி இதுவென
புகை ஊதி
பகைத் தீ
மூட்டுகின்றன.
சில கொள்ளிவாய்ப்
பிசாசுகள்
காலைக்
கடனுக்காகவும்,
சில குளிருக்கு
இதமாகவும்,
சில சூடு
தணிக்கவும் என
எல்லாக்
காலங்களிலும்
ஊதித்
தள்ளுகின்றன.
குளிருக்கு
இதமென்றால்
தீமூட்டிக்
குளிர்காயலாம்.
வெப்பம் தணிக்க
இளநீர்
குடிக்கலாம்.
பேருந்துக்காகக்
காத்திருக்கும்
வேளையில்
புகை ஊதித்
தள்ளுகிறது
ஒரு பிசாசு.
பாதி ஊதுகையில்
பேருந்து வந்துவிட,
கீழே போட மனமின்றி
படிக்கட்டில்
தொங்கியபடியே
மீதியை ஊதி...
அப்பாடா...என
உலக சாதனை
புரிந்ததாக
நிம்மதிப் பெரு
மூச்சுவிட....
சாக்கடை ஒன்றின்
அருகமர்ந்த நிலை
சக பயணிக்கு.
சில கொள்ளிவாய்ப்
பிசாசுகள்
புகை வாசம் மறைக்கப் பாக்குகளையும்,
வாசனை
மிட்டாய்களையும் தின்கின்றன..
தன்னுயிரை எமன்
தின்றுகொண்டிருப்பதை
மறந்து!
நுரையீரல்
நொறுங்கிப் போனபின்
உடல் சுருங்கிப்
போனபின்
உள்ளக் குமுறலில்
ஓலமிடும் சில
பிசாசுகள்.
பல்லும் சொல்லும்
போனபின்பு
பார்க்கவே
பரிதாபமாய்ச்
சில அலையும்.
இளைஞர் முதல்
முதியோர் வரை
பாமரன் முதல்
படித்தவர் வரை
பாரபட்சமின்றி
வாயில் வைத்து
ஊதித்தள்ளுகின்றன
வட்டமாகவும்,
இரயில்
புகையாகவும்.
விரைவில் தனக்கு
ஊதுபத்தி
கொளுத்துவார்கள்
என்று தெரிந்தும்!
நன்றி – தமிழ் நாடு இ பேப்பர்.காம் 05-03-2024
***********************************************************************************************************************************************************************
மீட்டெடுத்தல்
உழவு செய்யவும்,
விதை வாங்கவும்,
விதைக்கவும்,
களையெடுக்கவும்,
கருதறுக்கவும் என
காதிலும், கழுத்திலும்,
கையிலும், மூக்கிலும்
இருப்பதை
அவ்வப்போது
அடகு வைத்து,
வெள்ளாமை
வந்தவுடன்
மீட்டெடுக்கும்
மாரியம்மா
அதிர்ச்சியில்
மரித்துப்போனாள்.
அடகு வைத்த
பொருட்களை
மீட்க முடியாமல்
மழை பொய்த்துப்
போனதில்!
***********************************************************************************************************************************************************************
விழிப்பு
நட்சத்திரக்
கூட்டமாய்
நள்ளிரவில்
சாலையில்
ஊர்ந்து செல்லும்
பேருந்துப்
பயணத்தில்
பலரின் விழிகளில்
தூக்கம் குடிபுக,
சக்கரத்தின்
சுழற்சியோடு
அனைவரின்
வாழ்க்கையும்
ஓடிக்கொண்டிருக்கிறது
ஓட்டுநரின்
விழிப்பில்.
***********************************************************************************************************************************************************************
வாழ்க்கைச்
சக்கரம்
உச்சிப்பொழுது
கொளுத்தும்
வெயில்.
சட்டையற்ற உடல்
செருப்பற்ற கால்
தலையில் துண்டு.
அடைமழை
குடையற்ற நடை.
தலையில் அதே
துண்டு.
காலநிலைகளால்
கவலை கொள்ளாமல்,
கரைந்து விடாமல்,
நோய்வாய்ப்படாமல்
ஓடிக்கொண்டிருக்கிறது
கிராமத்தைப்போல
அப்பாவின்
வாழ்க்கைச் சக்கரம்.
********************
**********************
விடுவித்தல்
தண்ணீர்
முற்றிலும் வற்றி
அழிந்துபோன
கண்மாயில்
சேற்றின் அடியில்
புதைந்து
தன் ஆயுளை
நீட்டிக்கொண்டிருந்த
விலாங்குமீன்
ஒன்றை
சேற்றிலிருந்து
விடுவித்து
வீடு கொணர்ந்து,
பெரிய பாத்திரம்
ஒன்றில் இட்டு
அவ்வப்போது பொரி, மண்புழு போட்டு,
பலநாள் வளர்த்தும்
கொல்லாது
குழம்பு வைக்காது
மீண்டும்
மறுமழைக்காலத்தில்
கண்மாயில்
சேர்த்தார் அப்பா.
பிள்ளைகளின்
நகர்ப்புற
வாழ்வினில்
கிராமம் விட்டு
விலகாது
தனக்கான உணவைச்
சமைத்துக்கொண்டிருக்கிறார்.
நகரம் வந்தாலும்
மறுநாளே
கிராமத்திற்குச்
சென்றுவிடுகிறார்
மறுமழைக்கு
கண்மாயில் சேர்த்த மீனின்
நினைவுகளுடன்.
நன்றி
– தமிழ்நாடு இபேப்பர்.காம்–29-05-2024
***********************************************************************************************************************************************************************
கூந்தல்
முகத்தில் விழாத
முடியை
அடிக்கடி
கைவிரல்களால்
கோதிக்கொண்டிருக்கிறார்கள்
சின்னத்திரைத்
தொகுப்பாளினியும்
வெள்ளித்திரை
நடிகையும்.
சும்மாடு அற்ற
தலையினில்
சடை பிண்ணாத முடி
முகத்தில் விழ
விறகுக் கட்டுடன்
வேகமாக நடக்கிறாள்
கிராமத்துப்
பெண்ணொருத்தி.
**********************************************************************************************************************************************************************
தரிசனம்
கால் வலிக்கக்
காத்திருந்து
கருவறையின் முன்
நின்று
ஆசை ஆசையாய்
சாமி
கும்பிடுகையில்
பூசாரியும்
காவலரும்
போ போ எனச்சொல்ல,
சிறப்புத்
தரிசனத்தில்
டிக்கட் எடுத்து
வந்தவரிடம்
ஆறஅமர
சாமிகும்பிடுங்கோ
எனச்சொல்லும்
பூசாரியின்
பேச்சில்
விரக்தியில்
கண்மூடி
மௌனமாகிறது சாமி.
***********************************************************************************************************************************************************************
மனங்கள்
திசை தெரியாது,
தெரு தெரியாது
நிற்கும் ஒருவர்
கையிலிருக்கும்
துண்டுச்
சீட்டினைக் காட்டி
முகவரி கேட்கையில்,
பார்க்காமலே
உதட்டைப்
பிதுக்கிச்செல்கிறான்
நகரவாசி
பெயரைச் சொன்னதும்,
வீட்டிற்கு
மகிழ்வோடு
அழைத்துச்செல்கிறான் கிராமவாசி.
***********************************************************************************************************************************************************************
மனிதம்
பயணிகள் நிறைந்த
காலை
நேரப்பேருந்துப் பயணத்தில்
அமர்ந்திருக்கும்
பெண்ணிடம்
தன்
கைக்குழந்தையைக்
கொடுத்துவிட்டு
அருகில்
நிற்கிறாள் அம்மா.
புதுமுகம் கண்டு
மிரண்டழுகிறது
குழந்தை.
சமாதான
வார்த்தைகளால்
சரிக்கட்ட
முடியாததால்,
அமர்ந்திருந்த
பெண்
எழுந்து நின்று,
கைக்குழந்தைப்
பெண்ணை
அமர வைக்க,
குழந்தையின்
அழுகுரல்
அடங்குகிறது.
எழுந்து நின்ற
பெண் உருவில்
மலர்கிறது மனிதம்.
நன்றி – கவிமாடம் – மார்ச்-10–2024
***********************************************************************************************************************************************************************
சுவரொட்டி
மது அருந்தி
வாகனம் ஓட்டியதால்
மரணித்த
நண்பனுக்குக்
கண்ணீர் அஞ்சலி
சுவரொட்டியை
மதுக்கடை முன்
ஒட்டும் நண்பர்கள்.
கவலை மறக்க
மது குடித்துவிட்டு
வாகனத்தில்
தள்ளாடிபடியே
பயணம்.
தயாராகிறது
மீண்டும் ஓர்
அஞ்சலி
சுவரொட்டி.
**********************************************************************************************************************************************************************
அன்பின் வரவு
சொந்த வேலையாக
வங்கிக்கு வந்தவர்
வயதானவர்களின்,
எழுதப் படிக்கத்
தெரியாதவர்களின்
அன்பிற்குரியவரானார்.
கையெழுத்துப்போட்டுத்
தருகிறேன் பேனா
கொடுங்களேன்
என்று சிலரும்,
இதை நிரப்பித்
தாருங்கள்
எனச்சிலரும் கேட்க
முகம் மலர்ந்தே
எழுதித்தருகிறார்
அந்தக் கல்லூரி
மாணவர்
தன் வேலை முடிந்த
பின்பும்.
அவரது வாழ்க்கைக்
கணக்கில்
வரவு வைக்கப்பட்டது
இம்மாதத்திற்கான
அன்பின் வரவு.
நன்றி – கவி
மாடம் – பிப்ரவரி-20-2024
***********************************************************************************************************************************************************************
மாதக்கடைசி
எப்போதும்
உடனிருக்கும் நண்பர்
தன் இல்ல
விழாவிற்குக்
குடும்பத்தினருடன்
வரவேண்டும் என்று
வீட்டிக்கு வந்து
அழைப்பிதழ்
வைத்துச்
செல்கிறார்.
அழைப்பிதழில் தேதி
பார்க்க
27 ஆம் தேதியைக் காட்டுகிறது.
குறைந்த பட்சம்
ஆயிரமாவது
செய்முறை
செய்யவேண்டுமே என
சிந்தனை ஓடுகிறது.
இப்போதைக்குப்
பழசு போதும்
என நினைத்து
சில ஆயிரங்களில்
வாங்கிய
இருசக்கர வாகனம்
இடரில் தள்ள,
சரிசெய்ய
மூவாயிரம் ஆகும்
என்கிறார்
பழுதுபார்ப்பவர்.
மாதத்தொடக்கத்தில்
அளந்து வாங்கிய
அத்தியாவசியப்
பொருட்கள் சில
தீர்ந்து
விட்டதால்
தீராத தலைவலியைத்
திடீரெனத்
தந்துவிடுகிறது.
எதிர்பாராத
விதமாய்
வீட்டிற்கு வந்த
உறவினர்
உரிமையோடு
வீட்டில் தங்குகிறேன்
எனச்சொல்ல
வறுமையோடு தங்கும்
நிலை
வாய்க்கிறது
எனக்கு.
மழைக்காலமெனில்
இலவச இணைப்பாக
வந்துவிடுகின்றன
இருமலும்
காய்ச்சலும்
இரண்டு மூன்று
நாட்களுக்கு.
நெம்புகோலாய்
நாட்களை
நெட்டித்தள்ளுகையில்
மாதக்கடைசியில்
மனதில் பயமூட்டும்
இந்த நாள்களை என்ன செய்வது?
நன்றி – உங்கள் நண்பன் – ஜூன் 2024
அன்பின் வளர்ச்சி
மதிய உணவு
இடைவேளையில்
பேனா வாங்கக்
கடைக்குச்
செல்வதாக
அனுமதி வாங்கிய
ஆறாம் வகுப்பு
அழகுபாண்டியம்மாள்
கடைக்குச் சென்று
திரும்புகையில்
"கையில் பேனா எங்கே என்றேன்? "
இராமலட்சுமி சாப்பாடு
கொண்டுவரவில்லை.
அவளுக்காகக்
கடைக்குச் சென்றேன் என
கைவிரித்துக்
காட்ட,
பேனா பிஸ்கட்டாக
மாறியிருந்தது
அன்பின்
வளர்ச்சியில்.
நன்றி– கவி மாடம்– ஜனவரி 20–2024
***********************************************************************************************************************************************************************
கயித்துக் கட்டில்
கிராமத்தின் மறைந்துவரும்
பாரம்பரிய வரலாறு
தூங்கி எழுந்தால்
உடம்பிலில்லை தகராறு.
சில நாள் வீட்டில்
சில நாள் காட்டில்
சில நாள் களத்து மேட்டில்
எனத் தொடரும் பயணம்.
அழகாய்ப் பின்னப் பட்டிருக்கும்
கயிறோ கொச்சம்
தமிழர் மரபில்
அழிந்திராத மிச்சம்.
வீட்டு முற்றத்தை
அலங்கரிக்கும் கட்டில்
சிறு குழந்தைகளுக்கும்
அதுவே தொட்டில்.
உடல் உழைப்பால்
உடனே வரும் தூக்கம்
கயித்துக் கட்டில் மறைகிறதே
என்பதுதான் ஏக்கம்.
நன்றியோடு எப்போதும்
தாங்கும் நம்மை
நாகரீகத்திலும் நசுங்காத
நாலு கால் பொம்மை.
இயற்கைக் காற்றோடு
இனித்திடுமே இன்பம்.
கட்டில் தவிர்த்தால்
ஒட்டிக் கொள்ளுமே துன்பம்.
நன்றி - தமிழ்நாடு இபேப்பர்.காம் - 29 - 05 – 2024
***********************************************************************************************************************************************************************
இரண்டில் ஒன்று
ஆட்காட்டி
விரலையும்
நடுவிரலையும்
நீட்டி
இரண்டில் ஒன்றைத்
தொடுங்கள் அப்பா
என்கிறாள் மகள்.
ஆட்காட்டி
விரலைத்தொட
என்னப்பா ...
இப்படிப்
பண்ணிட்டிங்களே என
கண்சிமிட்டிச்
சிரிக்கிறாள்
ஏன் பாப்பா
என்னாச்சு?
நடுவிரலைத்
தொட்டால்
படிப்பதற்கும்
ஆட்காட்டி விரலைத்
தொட்டால்
விளையாடுவதற்கும்
நினைத்திருந்தேன்.
நான் விளையாட
வேண்டும் என்றல்லவா
தொட்டிருக்கிறீர்கள் என்று சொல்லிச்
சிரிக்கிறாள்.
அந்தக் கணத்தில்
ஒட்டிக்கொண்டது
மகளிடம்
விளையாட்டும் மகிழ்ச்சியும்.
விழிப்பு
காக்கைகளும், நாரைகளும்
தொடர்ந்து
சத்தமிட்டுக்கொண்டே
பறக்கின்றன.
வேறு வழியில்லாமல்
தூக்கத்தைவிட்டு
கண்சிவக்க
எழுகிறது
கீழ்த்திசையில்
காலைச்சூரியன்.
***********************************************************************************************************************************************************************
ந(எ)டை பயணம்
துணி துவைக்கவும்,
வீடு சுத்தம்
செய்யவும்,
சமைக்கவும்
தோட்ட வேலை
செய்யவும் என
இன்ன பிற வேலைகள் செய்யவும்
ஆட்கள் வைத்து விட்டு,
காலையிலும், மாலையிலும்
சுற்றமும், நட்பும்,
நாயும் சூழ,
கைகள் வீசியபடி போர் வீரனைப் போல்,
வியர்த்து, விறுவிறுக்க
எடை குறைக்க நடந்து
கொண்டிருக்கிறது
நாளும் ஒரு கூட்டம்
நகர்ப் புறங்களில் நகைப்பிற்குரியதாய்!
***********************************************************************************************************************************************************************
ஆறுதல்
மாடியில் இருந்து
தவறிக் கீழே
விழுந்ததில்
கையில் அடிபட்டதா
காலில் அடிபட்டதா
எனக்கேட்டு
அழுது கொண்டே
ஆறுதல் சொல்கிறாள்
மகள்
அமைதியாய்க்
கிடக்கிறது
பொம்மை.
***********************************************************************************************************************************************************************
இரவுக் கதை
தினமும் இரவில்
கதை கேட்ட பின்பே
தூங்கும் மகள்
விளையாடிய
அசதியில்
விரைவில்
தூங்கிப்போனாள்.
இன்றைய நாளிற்காக
ஒதுக்கப்பட்ட கதை
தூங்காமல்
விழித்துக் கொண்டிருக்கிறது
மகளின்
விழித்தலுக்காக.
நன்றி– கொலுசு-
பிப்ரவரி 2024
***********************************************************************************************************************************************************************
நிசப்தம்
இரவின் நிசப்தம்
உடைத்து,
திடீரென
எல்லோரையும்
திடுக்கிட்டு எழச்
செய்கிறது
தொட்டிலில் அழும்
பச்சிளம் குழந்தை.
பசியமர்த்தி
தூங்கச் செய்த பின்னரும்