உள்ளம் மகிழ இல்லந்தோறும் நூலகம் - மு.மகேந்திர பாபு , தினமலர் கட்டுரை

 

உள்ளம் மகிழ இல்லந்தோறும் நூலகம்


                ' புத்தகங்கள் பொக்கிஷங்கள் , புத்தகம் வாங்கிப் புத்தகம் ( வீடு ) பெறுவோம் , ஏடுகள் வாங்கின் கேடுகள் நீங்கும் , நூலறிவே ஆகுமாம் நுண்ணறிவு , நூல் பல கல் , கற்றது கையளவு கல்லாதது உலகளவு ' போன்ற தொடர்கள் புத்தகங்களின் பெருமையை நமக்கு உணர்த்துகின்றன.


              நமது வீட்டில் பூஜையறை , சமையலறை , உணவறை , படுக்கையறை , உடற்பயிற்சியறை இருப்பதைப் போன்று புத்தகங்களுக்கென தனியறை ஒதுக்கி , வீட்டிலேயே அறிவுத் திருக்கோயிலாம் நூலகத்தை ஏற்படுத்த வேண்டும்.


                ' கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் ' என்ற எண்ணம் இன்று உருவாகி வருகிறது. ' ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் ' என்பதைப் போல ' நூலகம் இல்லா வீட்டின் அழகு ' பாழாகிக் கிடக்கிறது.


          புத்தகங்கள் எனப்படுபவை , ஒரு கணிசமான உலகம். ' உடலுக்கு உடற்பயிற்சி எப்படியோ அப்படித்தான் மனதிற்குப் பயிற்சி புத்தகங்களை வாசிப்பது ' என்றார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்ட். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் வீடுகளில் இருபது முதல் முப்பது நூல்களைக் கொண்ட சிறிய நூல்கங்களை ஏற்படுத்தி , தினமும் ஒரு மணி நேரமாவது வாசித்தால் , தானாகவே குழந்தைகளுக்கும் வாசிக்கும் பழக்கம் உருவாகும்.


            புத்தகங்கள்தான் ஒருவரை முழு மனிதனாக மாற்றும் என்கிறார் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். ' புத்தகங்கள் இல்லாத வீடு ஜன்னல்கள் இல்லாத இருட்டறை போன்றது ' என்ற கூற்று மிகவும் சரியே.


அறிவுத்தேடல் 


            ஒவ்வொருவரும் தனக்கான ஊதியத்தில் ஒரு சிறு தொகையை நூல்கள் வாங்க முதலீடு செய்ய வேண்டும். நூல்கள் வாங்கச் செலவு செய்வது , செலவு அல்ல ; அது நம் அறிவுத் தேடலுக்கான வரவு. ஒரு மாதத்திற்கான மளிகை , பால் , மின் கட்டணம் , குடிநீர் கட்டணம் , எரிவாயுக் கட்டணம் , செய்முறைச் செலவுகள் போன்று நூல்கள் வாங்க ஒரு சிறு தொகை ஒதுக்கீடு செய்து , நம் வீட்டிலேயே சிறு நூலகம் ஒன்றை உருவாக்கலாம். அதன் மூலம் நமது குடும்பமே வாசித்து , அறிவை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். புத்தகங்கள் நிறைந்த சூழலில் வளரும் குழந்தைகள் அறிவு உள்ளவர்களாகவும் , தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் , இனிய பண்புள்ளவர்களாகவும் , வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களாகவும் , ஆற்றல் மிக்கவர்களாகவும் விளங்குவார்கள்.


         நல்ல புத்தகங்களைப் படித்துக் கெட்டுப்போனதாக இந்த உலகில் நாம் யாரையும் கூறிவிட முடியாது. புத்தகம் படிப்பதைக் கடமையாகக் கொண்டவர்களாகவும், வாசிப்பதை உயிர் என மதித்தவர்களும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்கள்.


நல்ல நண்பன்:


         ஒவ்வொரு நண்பனும் ஒரு புத்தகத்திற்குச் சமமானவன் என்பதைப் போல , ஒவ்வொரு புத்தகமும் ஒரு நண்பனுக்குச் சமமானது. புத்தகம் பெற்றோரைப் போல அறிவுரை வழங்கும். உற்ற நண்பனைப் போல ஆலோசனைகள் வழங்கும். அதனால்தான் அறிஞர் ரஸ்கின் , ' புத்தகங்களைப் போன்ற சிறந்த கருவூலம் வேறு எதுவும் மனிதனுக்கு இருக்க முடியாது ' என்றார். ' ஒரு நூலகம் திறக்கப் படும்போது , ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது ' என்றார் பேரறிஞர் விக்டர் ஹியுகோ.


       புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பதன் மூலம் பெற்றோர்களால் செய்ய முடியாத எத்தனையோ நல்ல காரியங்களை அந்தப் புத்தகங்கள் செய்துவிடும்.


குழந்தைகளுக்கான நூல்கள் :


         ஆத்திசூடிதான் எழுதப்படிக்க ஆரம்பிக்கும் போது தமிழில் கற்கப்படும் முதல் நூல். ஆத்திசூடி , கொன்றை வேந்தன் ஆகிய நூல்களில் எளிய சொற்களால் அமைந்த , சிறிய வாக்கியங்களைக் காணலாம். பஞ்ச தந்திரக் கதைகள் , மாயாஜாலக் கதைகள் , நீதிக்கதைகள் , மரியாதை ராமன் கதைகள் , பரமார்த்த குரு கதைகள் , தெனாலிராமன் கதைகள் , விக்கிரமாதித்யன் கதைகள் , அக்பர் - பீர்பால் கதைகள் , ராயர் - அப்பாஜி கதைகள் , முல்லாவின் வேடிக்கைக் கதைகள் , பாரதியார் , பாரதிதாசன் பாடல்கள் , திருக்குறள் , கவிமணி பாடல்கள் , குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பாடல்கள் , புதிர்கள் , படக்கதைகள் , தினமலர் - சிறுவர் மலர் , அம்புலி மாமா , பூந்தளிர் , அரும்பு போன்ற சிறுவர் இதழ்களையும் , புத்தகங்களையும் நம் வீட்டு நூலகத்தில் வாங்கி வைக்கலாம்.


நூல்களால் உயர்ந்தோர் :


           நூலகங்களைப் பயன்படுத்தித் தங்கள் வாழ்வில் உயர்ந்த அறிஞர் பெருமக்களைப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர் , நூலகம் திறக்கும் போது முதல் ஆளாகச் சென்று , கடைசி ஆளாகத் திரும்புவாராம். ஆசியாக் கண்டத்திலேயே மிகப்பெரிய தனியார் நூலகத்தை அமைத்த பெருமை அவரைச்சேரும்.


           ' அடிமைகளின் சூரியன் ' எனப்போற்றப்பட்ட ஆபிரகாம் லிங்கன் , புத்தகங்களைப் படித்தே அமெரிக்காவின் ஜனாதிபதியாக உயர்ந்தவர். லண்டன் நூலகத்தில் அரிய நூல்களைப் படித்து ஆய்வு செய்த காரல்மார்க்ஸ் , உலகின் பொதுவுடைமைத் தந்தையாக உயர்ந்தார். 


               காஞ்சிபுரத்திலிருந்து , முதுகலைப் பட்டதாரியான ஓர் இளைஞன் , சென்னை நோக்கிச் சென்றான்.முடிவில் தமிழகத்தின் முதல்வராகத் திரும்பினான் என்று பேரறிஞர் அண்ணாவைப் புகழ்வார்கள். அவர் சென்னை கன்னிமாரா நூலகத்திலுள்ள அனைத்து நூல்களையும் படித்தவர். இவர்கள் ஒரு சிறு உதாரணப் புருஷர்கள் மட்டும்தான்.


நூலகச்சுற்றுலா :


           பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு உறவினர்களை அறிமுகம் செய்து வைப்பதைப் போல , நூல்களையும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும். பூங்காக்களில் பூக்களைப் பார்த்து மகிழ்வதைப்போல , நூலகங்களில் புத்தகங்களைப் பார்த்து குழந்தைகள் மகிழ்வார்கள். சிறுவர் இதழ்கள் , படக்கதைகள் , நன்னெறிக் கதைகள் போன்றவற்றைப் பார்க்கும் போது , தனக்கான உலகத்தினுள் உலவுவதாக நினைப்பார்கள் .


     வீட்டுச் சிறைக்குள் அடைபடாமல் , ஒரு சிட்டுக் குருவியைப்போல , சுதந்திர வானில் சுற்றித்திரிய வீட்டுக்கருகே உள்ள நூலகத்திற்கு அழைத்துச்சென்று , நூல்களோடு ஒரு நட்புறவை உருவாக்கப் பெற்றோர் முயல வேண்டும். 


      கோவில் திருவிழாக்களுக்கு அழைத்துச் சென்று , நமது பாரம்பரியத்தைச் சொல்லிக் கொடுப்பதைப் போன்று , ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். புத்தகங்களின் மணம் , குழந்தைகளின் மனதிற்குள் ஊடுருவி, நல்ல மாற்றத்தை ஏற்படுத்தித் தரும்.


எந்தக் குழந்தை அதிர்ஷ்டசாலி :


                அக்கறை உள்ள பெற்றோரும் , அலமாரி நிறையப் புத்தகங்களும் வாயக்கப்பெறும் குழந்தையே அதிர்ஷ்டசாலி. ' 'மூடத்தன நோயை முற்றாக விரட்டும் மூலிகைகளே புத்தகங்கள் ' என்கிறது சீனப்பழமொழி. 'எந்த வீட்டில் நூலகம் உள்ளதோ அந்த வீட்டில்தான் ஒளிவிளக்கு இருக்கிறது' என்றார் பிளாட்டோ. வாழ்க்கையில் படிப்படியாய் உயர , சிறு பருவத்திலிருந்தே நூல்களைப் படிக்கும் எண்ணத்தை விதைப்போம்.


       மேதைகள் பலரை மேன்மையடையச் செய்த புத்தகம், நம் பிள்ளைகளையும் உயர்த்த ' இல்லந்தோறும் நூலகம் அமைத்து உள்ளம் மகிழ்வோம் ' .


மு.மகேந்திர பாபு.

**********************************************************************************



Post a Comment

0 Comments