கவிதை - அன்றும் இன்றும்

 


அன்றும் இன்றும்


ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை

எங்கள் ஊரில் 

அரசியல் தலைகள்.

வானம் பார்த்த பூமியில்

வாக்கு அறுவடைக்காக

வாகனங்களின் அணிவகுப்பு.


வண்ணம் இழந்த ஊருக்குள்

வண்ணமயமாக

கட்சிக்கொடிகள்

காட்சிகளாக !


மக்களின் தேவைகளை நிறைவேற்ற

கூப்பிட்ட குரலுக்கு

ஓடோடி வருவதாய்ச்சொல்லி

வென்றவர்

அவரின் தேவைக்காக

வந்து நிற்கிறார்.


வாயாலே வடைசுடுகிறார்

என மக்களால் சொல்லப்பட்டவர்

தேநீர்க்கடையில்

வடைசுட்டுத் தந்து வாக்குசேகரிக்கிறார்.


ஒரு வாயப்புத் தாருங்கள்

அப்புறம் உங்கள் ஊரைப் பாருங்கள் எனச்சொல்லி வென்றவர்

மறுவாய்ப்புக்காக மன்றாடுகிறார்.


வாக்குறுதிகளில் இல்லை வாக்கு.

ஐந்தாண்டு நிறைவுவரை

மனநிறைவோடு நம்முடன்

வருவபவர்க்கே வாக்கு.


குறைகளையும்

கறைகளையும் போக்குவதற்கே

ஆட்காட்டிவிரலில் வைக்கப்படுகிறது கருப்புமை.


சுட்டுவிரல் 

சரியான ஆளைச்சுட்டட்டும்.

அவருக்கே நம் வாக்கு

வெற்றிக் கதவைத் தட்டட்டும்.


மு.மகேந்திர பாபு , மதுரை.

பேசி - 97861 41410


நன்றி - தமிழ்நாடு இபேப்பர்.காம் 10 - 04 -2024

Post a Comment

0 Comments