கரிசல்
கரிசல் சீமையின் சிறகுகளாய்
எதைச்சொல்ல?
எதைத்தள்ள?
இலந்தைச் செடியின்
முட்களுக்கு நடுவே
சோளத்தோகையாலும்
சில்லாடைகளாலும்
பஞ்செனக் கூடுகட்டிய
சிட்டுக்குருவியின் வெறுங்கூடு
அக்குஞ்சுகளின் சிறகுகளின்
வளர்ச்சியைக் காட்டுகிறது.
விரிசல் ஓடிய
கரிசல் நிலங்களை
மழை நனைத்து கைகுலுக்கி
கருப்பாய் ஓடும்போது
சம்சாரியின் இல்லம் சந்தோசமாகிறது.
அதிகாலையில் ஏரினைத்
தோளில்போட்டு
லங்கோடை இறுக்கிக்கட்டி,
வடகாட்டிற்கும் தெக்காட்டிற்கும்,
கீகாட்டிற்கும் மேகாட்டிற்கும்
நடைபோடுகிறது
சம்சாரியின் மனசு.
உச்சிப்பொழுதில்
சூரியனின் வெம்மையைப் போக்க
உடலுடன் சேர்ந்து இளைப்பாறுகிறது மனசு
பனைமரத்தடிகளிலும்,
கருவேலந்தூர்களிலும்.
கம்மங்கஞ்சியுடன்
கைகோர்த்து வரும் வெடிமிளகாயும்,
சிலசமயங்களில் கருவாடும்,
எழுபதைத் தாண்டியும்
இன்னும் வரப்புகளில் நடமாடச்செய்யும்.
கரிசல் சீமையின் சிறகுகளாய்
எதைச்சொல்ல?
எதைத்தள்ள?
இதழ்விரித்துச் சிரிக்கும் பருத்தியும்
பட்டத்தில் பூத்துக்குலுங்கும் அவரையும்
சம்சாரியின் உள்ளத்தை
ஒரு சுண்டு சுண்டும்.
பட்டுப் போகப்போகும்
பருத்திச் செடியின்
வேரைப் பார்க்கும்போது
நெஞ்சைத் தார்க்குச்சியால்
குத்தும் வேர்ப்புழு.
வாமடை வெட்டி
வயல் வந்துசேரும்
கம்மாய் தண்ணி
பலநேரங்களில்
பசியாற்றும் குடிநீர்.
நெல்லை அறுத்து,
வீடுசேர்த்து,
இரவு மாடுகட்டி பிணையல் சுத்தும்போது
கடுங்காப்பியும்,
முத்துலாபுரம் சேவும் சேரும்போது
வேலை இன்னும் சூட்டிப்பாகும்.
நெல்லைத் தூத்தி,
பொக்கைப் பிரித்து
சாக்கில் கட்டும்போது
இனி கஞ்சிக்குக் கவலையில்லை என
மகிழ்ச்சிச் சிறகு மெல்ல விரியும்.
தோலே சட்டையாக
பனை மட்டையே செருப்பாக
மாங்கு மாங்கென
ஓங்கி ஓங்கி வேலிக்கருவை வெட்டி,
மூட்டம் போட்டு லாரி ஏற்றி,
பணம் எண்ணுகையில்
பட்ட பாட்டிற்குத் தேவலை என்றாகும்.
கரிசல் சீமையின் சிறகுகளாய்
எதைச்சொல்ல?
எதைத்தள்ள?
வருசம் ஒருமுறை
முனியசாமி கோவிலுக்கும்,
கருப்பசாமி கோவிலுக்கும்
கெடா வெட்டி நேர்த்திக்கடன்
இடுகையில்
புதுச்சட்டை மெல்ல
தோளைத் தொத்தும்.
தோசையும் இட்லியும்
தினசரி உணவாகிப் போன இன்று
விசேச நாள்களில் மட்டுமே
ஆட்டு உரலை அரிசியும், உளுந்தும் அரைப்பதற்கு
அனுமதி தரும்.
கொஞ்சம் நினைத்துப் பார்க்கிறேன்.
பல்லாங்குழியும், பாண்டி ஆட்டமும்,
நொண்டியும் தவிடும்,
பம்பரமும் கோலிக்குண்டும்,
கிளியாந்தட்டும், குன்னாங்குன்னாங் குர்ரும்,
இராமரும் சீதையும்,
ஆடுபுலி ஆட்டமும், செதுக்கிமுத்தும்,
ஒரே ஊர்ல எனத்தொடங்கும்
பாட்டியின் கதையும்,
ஊளமூக்கோடு பித்தான் அறுந்த
டவுசரின் தொப்புள் இறுகலும்,
பையை நிரப்பும் பாசிப்பித்தான் காயும்
கொஞ்சம் நினைத்துப் பார்க்கிறேன்
கொஞ்சும் அந்தப் பிஞ்சு நினைவுகளை
கொஞ்சம் நினைத்துப் பார்க்கிறேன்.
கரிசல் சீமையின் சிறகுகளாய்
எதைச்சொல்ல?
எதைத்தள்ள?
மு.மகேந்திர பாபு.
0 Comments