மரம் - சிறுகதை

 


மரம் - சிறுகதை - மு.மகேந்திர பாபு - நமது மண்வாசம் மாத இதழுக்கு .


     விடிந்து பல மணி நேரம் ஆகியும் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. ‘ நச நசனு ‘ பெய்து கொண்டிருக்கும் மழையில் அலைவதற்குச் சோம்பல் பட்டுக்கொண்டு அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தார்கள்.


 " பேஞ்சா பெரிய மழையா பேஞ்சு நிக்கணும். சும்மா தூறலா விழுந்துக்கிட்டு இருந்தா வேலைக்கு என்னத்தப்  போறது ? நெல் நாத்து நடுவைக்குப் போனா ஏதோ நூறு , இருநூறு கிடைக்கும் "  சேலையால் தலையை இழுத்து மூடிக்கொண்டே கிட்ணம்மாள் , கருப்பாயிடம் சொன்னாள்.


  " அதானத்தா ! வெறிக்காம இப்படி உழுந்துக்கிட்டே இருந்தா கரிசக்காட்ல இருக்குற உளுந்தெல்லாம் என்னத்த வரும் ? மண்ணு நல்லா காஞ்சாத்தான் செடி எந்திருக்கும். வெளிர்பச்சையாகிச் செடியெல்லாம் கரண்டுக்கிட்டு கெடக்குது." என்றாள் கருப்பாயி. 

   " ஏதோ பொச கிளம்பிருக்காம். அதனாலதான் மேகம் எப்பவும் கொக்கு முக்காடு போட்டுக்கிட்டுக் கெடக்கு. எந்த நேரம் வேணும்னாலும் சரியான கொடுப்புக் கொடுக்கும்."

      ஏதோ வானிலை அறிக்கை கேட்டவள் போல சொன்னாள் ஆட்டுக்காரி அலமேலு.

  " ச்சோனு " அடிச்சு ஊத்தி கம்மா நெறயணும் . தெருக்காட்ல சும்மா சகதியா ' சதபுதனு ' ஆக்கிட்டுப் போகுது இந்த மழ. இப்பவும் தொயந்து நாலஞ்சு நாளா இப்படிப் பேஞ்சா என்ன வேலக்கித்தான் போறது ? எத்தனநாள்தான் வீட்லெ உக்காந்து சாப்பிட முடியும் ? அடுப்பெரிக்க ஒரு விறகுகூடப் பிறக்க முடியலயே ! இருக்கற கொஞ்ச நஞ்ச வெறகும் நனைஞ்சு போயி எரிய மாட்டிக்குது. புகை மண்டுது. என்னதான் செய்றது ? நம்மட்ட என்ன மண்ணெண்ணெய் அடுப்பா ? கேஸ் அடுப்பா ? " என்று அங்கலாய்த்த படியே சொன்னாள் கிட்ணம்மாள்.


    ரொம்ப நாளா மண்ணைக் காயப்போட்டிருந்த மழை , இப்பக் கொஞ்ச நாளா தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. ஓட்டு முகப்பிலிருந்து மழத்தண்ணி ‘ சொட் சொட்டென்று விழுந்து கொண்டிருந்தது.


         வீட்டுத் திண்ணையில் சாரத்தை இழுத்துப் போர்த்தி முகம் மட்டும் வெளியே தெரியுமாறு உட்கார்ந்திருந்தான் முத்துப் பாக்கியம். எலி தன் பொந்துக்குள் இருந்து தலை தூக்கிப் பார்ப்பதுபோல் இருந்தது. வீட்டு முற்றத்தில் போடப்பட்டிருந்த ஆட்டுத் தொழுவத்தில் ஆடுகள் நனைந்து கொண்டிருந்தன. எப்போதோ வேய்ந்த ஓலை. அதனால் அங்குமிங்கும் ஓட்டையாகி மழத்தண்ணி விழுந்து , தரையில் சுண்டுவிரல் அளவுக்கு ஓட்டை போட்டிருந்தது.


     ஏதோ ஞாபகம் வந்தவன் போல் எழுந்து ரெண்டு மூனு குண்டாச்சட்டிகளை எடுத்து வந்து , தொழுவத்தில் விழும் ஓட்டைக்கு நேராக வைத்தான். 


 மணி எப்படியும் பதினொன்று இருக்கும். இராத்திரியிலிருந்து ஒரே ‘ அடப்பாக ‘ பெய்து கொண்டிருக்கிறது. ஆடுகள் பசியால் ‘ ம்மே … ம்மே ‘ என கத்திக் கொண்டிருக்கின்றன.


     மழ கொஞ்சம் வெறிச்சாலும் ரோட்டோரம் ஆடுகளப் பத்திக்கொண்டு போய் , மஞ்சணத்தி இலைகளை கடிக்க விடலாம். புல் தளுக்க இன்னும் ஒரு வாரமாவது ஆகும். இந்த மழயில் எங்கிட்டுப் போய் இரை பாக்கிறது ? மனுசப்பயக நாலு பேர்ட்ட கைமாத்தா அரிசி பருப்ப வாங்கிச் சமைச்சுத் திங்கலாம். பாவம் வாயில்லாப் பிராணிக என்ன பண்ணும் ? ஆடுகளின் தொடர் கத்தல் அவனுக்கு ஒரு மாதிரியான பாரத்தைக் கொடுத்தது.


    மழை வெறிப்பது போல் தெரியவில்லை. வேறெங்கும் அலைந்து எர பாக்க முடியாது. தன் கையிலிருந்த சீசன் துண்டை எடுத்து தலப்பா கட்டினான். சாரத்தை மடித்துத் தார்ப்பாச்சல் கட்டினான். தொழுவத்தில் கம்போடு கம்பாக ஒட்டியிருந்த கத்திக்கம்பை உருவினான். 


    “ அடியேய் … மாரியம்மா ! “


“ என்ன மாமோய் “ அடுப்பாங்கரையிலிருந்து சத்தம் கொடுத்தாள்.


    “ திண்ணையில் கெடக்குற வேலி நார எடுத்திட்டு வா. எங்கண்ணன் வீட்டு மின்னாடி இருக்குற வேம்புல போய் ஒரு கட்டு கொல ஒடிச்சிட்டு வருவோம் “ 


    “ இதோ வந்திட்டேன் “ என்று சொல்லி , மழயில் நனைந்திருந்த விறகுகளுடன் போராடி , வீடு முழுசும் மூட்டப்புகை போல் ஆக்கி , எப்படியோ ஆக்கிவிட்ட சோத்துப் பானையை , ஒரு சட்டியில் கவுத்தினாள் தண்ணீர் வடிக்க.


      முத்துப் பாக்கியம் அண்ணன் மாரிமுத்து வீடு பக்கத்தில்தான் இருந்தது. அவன் வீட்டை ஒட்டி ஒரு வேப்பமரம். கொப்பும் குழையுமாக செழித்திருந்தது.


      மரத்தின் அருகில் சென்ற முத்துப் பாக்கியம் கீழேயிருந்து கத்திக் கம்பினால் குழையை இழுக்கத் தூக்கினான். எட்டவில்லை. மரத்தில் மெள்ள ஏறி , மாரியம்மாளிடம் கத்திக் கம்பை எடுத்துத் தரச்சொல்லி வாங்கிக் கொண்டான். 


    நாலஞ்சு குழைகளை இழுத்துப் போட்டிருப்பான். அவை மாரிமுத்து வீட்டின் ஓட்டில் விழுந்தது. கொப்பு விழுகுற சத்தம் கேட்டு மாரிமுத்து வீட்டிக்குள்ளிருந்து வெளியே வந்தான். 


    “ எலே ! என்ன செய்யுற ? “ 


“ ஆடுக கொலபட்னியாக் கெடக்குண்ணே ! ரெண்டு கொல ஒடிச்சுக்கிருதேன்.” 


     “ இந்தச் சோலி எங்கிட்ட வச்சுக்காத ! ஒழுங்கா இறங்கு ! “ 


“ ஏ ! ஆடுக பட்டினியாய்க் கெடக்குங்கேன். இறங்கச் சொல்றான் பாரு. “ 


 “ இறங்குன்னா இறங்குலே ! நானும் ஒன்னய மாதிரி ஆடுதான் வச்சிருக்கேன். நானென்ன ஒடிச்சுக்கிட்டா இருக்கேன் ? “ 


   “ ஒன்னய நான் என்ன ஒடிக்க வேணாம்னா சொல்லுதேன். மகராசனா ஒடிச்சுக் கட்டிக்கோப்பா ! இந்த மழயில நான் இந்நேரம் எங்கிட்டு ஆட்டப் பத்திக்கிட்டு போறது ? “ 


  “ ஏலே ! லூசுப்பயலே ! இறங்குன்னா இறங்குலே. ஏம் மரத்தில ஒடிச்சுக் கட்டிக்கிறது எனக்குத் தெரியும். இறங்கல உசிரு உன்கிட்ட இருக்காது. “ கொஞ்சம் கோவமாகச் சொன்னான் மாரிமுத்து.


    “ ஏ ! மாரியம்மா … இந்த லூசுப்பயலப் பாரு. ரெண்டு கொழ ஒடிக்க விடுவானா ? இவன் மரமாம்ல. அண்ணன்னு நெனச்சு மருவாதியாப் பேசுனா உசிரு இருக்காதாம்ல ? “


சொல்லிக்கொண்டே மும்முரமாய் வேப்பங் கொழயை இழுத்து இழுத்துப் போட , மாரியம்மா ஒவ்வொன்றாய் எடுத்து வைத்தாள்.


  மாரிமுத்துக்கு கோவம் ‘ சுள்ளென்று ‘ மூக்கில் ஏறியது. சட்டென்று வீட்டிற்குள் சென்று , விறகு வெட்டுகிற அரிவாளத் தூக்கிக் கொண்டு வந்தான். 


  “ ஒழுங்கு மருவாதியா இப்ப மரத்திலிருந்து இறங்குறியா ? இல்ல , இனிமே மரமே ஏற விடாம காலத்தரிக்கவா ? கோவத்தில் கத்தினான். 


   மரத்தின் மேலிருந்த முத்துப் பாக்கியத்திற்கு கோவம் இன்ன விதம்தான் என்றில்லை. மேலே இருந்தபடியே சொன்னான்.

      “ ஏன்டா ! கூறு கெட்ட பயலே ! ஒரு கொழக்காகவாடா அருவாவத் தூக்கிக்கிட்டு வார ? இந்த மரத்தை நீயா வச்ச ? “

“ இல்ல … நாங் கேக்குறேன். நீயா வச்ச ? நீயா தண்ணி ஊத்தி வளத்த ?  என்னமோ நட்டு வச்சு , தண்ணி ஊத்தி வளத்துப் பெருசாக்குன மாதிரி பேசுற ? “ 


  முத்துப் பாக்கியத்தின் பேச்சில் கோவம் இருந்தது. ஆனாலும் கொப்பை இழுத்துக் கொண்டேதான் இருந்தான். 


       “ அப்படின்னா நீயாடா இந்த மரத்த வசசு வளத்த ? ஒழுங்கா இறங்கிரு “ 


“ ஏய் ! கோட்டிப்பயலே ! இந்த மரம் அய்யா வச்சது. இது உனக்கு மட்டும் சொந்தமில்ல. இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க. அவுங்களுக்கும் சொந்தம்தான். நான் இறங்குன பிறகு உனக்கு மரம் ஏற தெம்பிருந்தா ஏறி கொப்ப ஒடிச்சிக்கோ “  என்றான் முத்துப் பாக்கியம். 


   அண்ணன் , தம்பி இருவரின் வாக்கு வாதத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த ஆட்கள் ஒன்று கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். ரொம்ப நாளக்கிப் பிறகு ஒரு வாக்கு வாதம் நடக்குதே ! குளிரைப் போக்கிக் கொள்ள கூட்டம் சேர ஆரம்பித்தார்கள்.


  அதன் பிறகு நடந்த வசவில் காதே அழுகிப் போகும்படியாக இருந்தது. மரத்திலிருந்து இறங்கிய முத்துப் பாக்கியம் கொஞ்சம் நிதானமாகவே பக்கத்தில் நின்றிருந்த கூட்டத்தைப் பார்த்து நல்ல வார்த்தைகளே பேசினான். ஆனால் மாரிமுத்து வாயில் வந்த வார்த்தைகளை அப்படியே கக்கினான். 


    அப்போது , வயலுக்குச் சென்று கொண்டிருந்த இராமசாமியை நிறுத்தி ,  “ ஏண்ணே ! நீயே இந்த நாயத்தக் கேளு. ஆட்டுக்குக் கொப்பு ஒடிச்சதுக்கு இந்தப் பய அருவாளத் தூக்கிட்டு சண்டக்கி வாரானப்பா. ஒரு பொறுமை வேணாமா ? 

    ரெண்டு பேரையும் நிதானப்படுத்தினான் இராமசாமி. “ பிரச்சனைய விடுங்கப்பா. இன்னிக்கு முத்துப் பாக்கியம் குழைய ஒடிச்சா , மாரிமுத்து நீ நாளக்கி ஒடிச்சிக்கோ. மரம்தான் நல்லா பெருசா குடைபோல இருக்கப்பா. சின்ன மரம்னா ஒடிக்கறதுக்கு யோசனை பண்ணனும். எல்லா நாளுமா ஒடிக்கப் போறோம். இப்ப தொடர்ந்து நாலஞ்சு நாளா மழ பெய்றதாலதான ஆடு மாடுகளுக்கு இரைக்குத் திண்டாட்டமா இருக்குது. இதுவும் சரியாப் போயிருமப்பா.  இதுக்குப்போயி அண்ணன் , தம்பிக்குள்ள சண்ட போடலாமா ? போயி வேல , சோலியப் பாருங்கப்பா.” என்றான் இராமசாமி.


    “ அதெப்படி ? நீ என்ன பெரிய தீர்ப்பு சொல்ல வந்துட்ட ? ஒழுங்காப் போயிரு. இல்ல மருவாதி கெட்டுப்போகும் “ என்றான் கோவத்தில் மாரிமுத்து.


  “ இதென்னடா வம்பாப் போச்சு. வேலில போன ஓணான வேட்டிக்குள்ள புடுச்சு விட்ட கதயாப் போச்சு. செவனேனு வயலுக்குப் போனவன நிப்பாட்டி , ஞாயத்தக் கேக்கறம்னு , என்னைய வம்பிலு மாட்டி விட்றுவிங்க போலயே ! ஆள விடுங்கடா சாமிகளா ! “ கும்பிடு போட்டு நடந்தான் இராமசாமி.


  முத்துப் பாக்கியம் , குழைகளை ஒரு கட்டாகக் கட்டி , தலையில் தூக்கி வச்சு வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தான். மாரியம்மா வாயிற்குள் ஏதோ சொல்லித் திட்டிக்கொண்டே நடந்தாள். 


மாரிமுத்துவின் கோவம் இன்னும் அடங்கவில்லை. “  மரம் இருந்தாத்தானல நீ வந்து கொப்ப வெட்டுவ ? நான் மரத்தையே வெட்டிப்புட்டா நீ என்ன பண்ணுவ ? “  சொல்லிக் கொண்டே அரிவாளால் மரத்தின் அடிப்பகுதியை வெட்ட ஆரம்பித்தான்.


  ஏ ! மாரிமுத்து … உனக்கென்ன கோட்டியா புடிச்சிருக்கு ? இதென்ன வேலி மரமா ? சடார்னு வெட்டிப் போடுறதுக்கு ? இந்த மரம் வர எத்தன வருசமாச்சு ? மத்தியானத்தில குளு குளுனு எனல் தரத வெட்டுறியப்பா ? “ 


  இராமசாமி பொண்டாட்டி குருவம்மாள் வருத்தத்துடன் சொன்னாள்.


 “  ஏ ! மயினி ! இந்தா பாருங்க , தூரப்போங்க ! இல்லனா என்ன பண்ணுவனு எனக்கே தெரியாது “ 


 இனி இவனிடம் பேசிப் பிரயோசனம் இல்லனு அவள் நடக்க ஆரம்பித்தாள்.  அங்கிருந்த கூட்டம் கலைய ஆரம்பித்தது.


   தூறல் கொஞ்சம் கொஞ்சமாக வெறிக்க ஆரம்பித்தது. மாரிமுத்துவின் வெறியோ கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரிக்க ஆரம்பித்தது. தன் பலம் முழுவதையும் ஒன்று திரட்டி மரத்தை ஆவேசமாக வெட்டினான். 


     ஓங்கி , உயர்ந்து , கம்பீரமாய் நின்றிருந்த அந்த வேப்ப மரம் , போர்க்களத்தில்   தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் ஒரு போர் வீரனைப் போல ‘ தொப் ‘ பென்று மண்ணில் விழுந்தது. மாரிமுத்துவின் கல்மனம் இலேசாக , ஊரார்களின் மனமோ கனத்தது. விழுந்த அந்த வேப்பமரம் தன்னிடம் உள்ள இலைகளை ஆடுகளுக்கு இரையாகத் தந்து மண்ணோடு மண்ணானது.


மு.மகேந்திர பாபு , மதுரை .

செல் - 97861 41410


Post a Comment

0 Comments