மூன்றாம் உலக ஹைக்கூ மாநாடு - மதுரை - சிறப்பிதழுக்கான கவிதைகள்
1 ) வெம்மையிலும் குளிர்ந்தது
சம்சாரியின் வயிறு
மண்பானைக் குடிநீர்.
2 ) காளியாய்த் தொங்கும் நாக்கு
யாருக்குச் சிவப்பு அதிகம் ?
மௌனமாய் ரசிக்கும் கள்ளி.
3 ) கிளையில் குயில்
தலையாட்டும் இலைகள்
தொடரும் பாட்டு.
4 ) மரணம் தழுவும் மரங்கள்
சுட்டெரிக்கும் வெயில்
கோரமாய்க் கோடை.
5 ) வாழ்ந்து கெட்ட வீடு
வாழ்க்கை தந்தது
வளரும் அரசமரம்.
6 ) ஐந்திலிருந்து ஆறு
பாவாடையிலிருந்து சுடிதார்
பூரிப்பில் கிராமத்துத் தாய்.
7 ) நெய் விற்கும் பெண்
வீதியில் கூவுகிறாள்
மணக்கவில்லை வாழ்க்கை.
8 ) வயல் நடுவில் வேப்பமரம்
சுகம் தந்தது காற்று
வியர்வையில் விவசாயி.
9 ) கொட்டப்படும் விசம்
உண்ணும் மாடுகள்
பாலித்தீன் இலைகள்.
10 ) கருப்பு வான்
வெள்ளை நிலா
தோசைக்கல் .
11 ) ஆனந்தச் சிறை
கலகலக்கும் காசுகள்
பாட்டியின் சுருக்குப்பை.
12 ) வயலில் அறுவடை
சிந்தும் நெல்மணிகள்
பறவைகளின் மகிழ்ச்சியில் விவசாயி.
13 ) அடைத்து வைத்த கோபம்
சுத்தம் செய்தே ஓடுகிறது
கால்வாயில் தண்ணீர்.
14 ) தலை சீவினான்
ஒற்றைக் கண் திறந்தது
கண்ணீருடன் இளநி.
15 ) வயலெங்கும் வெண்சிரிப்பு
வெடித்தும் வேதனையில்லை
மானம் காக்கும் பருத்தி.
16 ) தாத்தாவின் இடுப்பில்
முதலுதவிக் கருவி
முள்வாங்கி.
17 ) இற்றுப்போன உடல்
பயணத்தை நிறுத்தவில்லை
நகரப் பேருந்து.
18 ) நீர் நிறைந்த குளம்
விழுதுகளில் தொங்கும் குழந்தைகள்
துள்ளலில் ஆலமரம்.
19 )குளக்கரையில் கொக்கு
பலத்த யோசனை
மீன் பிடித்திருவிழா
20 )வெயிலுக்கு ஒதுங்கிய
மரவெட்டிகள்
ஒற்றை மரம்.
மு.மகேந்திர பாபு , கருப்பாயூரணி , மதுரை - 20.
செல் - 97861 41410
0 Comments