மகள் வரைந்த கோடுகள் - ஹைக்கூ கவிதைகள் - மு.மகேந்திர பாபு

 



மு.மகேந்திர பாபு , ஹைக்கூ கவிதைகள்.


1 ) செருப்பைக் கழட்டிவிட்டு

உள்ளே நடந்தார் அப்பா.

கோவிலானது வயல்.


2 ) பாகப்பிரிவினை இல்லை 

தொடர்கிறது கூட்டுக்குடும்பம்.

மரங்களில் பறவைகள் .


3 ) மொட்டை மாடி

முளைத்தது முடி

மாடித் தோட்டம்.


4 ) பெருக்கெடுத்து ஓடும் வைகை.

துள்ளிக் குதிக்கும் மீன்கள்.

மகளின் ஓவியம்.


5 ) சிட்டுக்கள் எங்கும் பறக்கின்றன

தினத்தில் மட்டும்.

நாளிதழ்களிலும் முகநூலிலும்.


6 ) ஒலிக்கிறது திரைப்பாடல்.

சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு.

இப்போது தட்டுப்பாடு.


7 ) கைநிறையப் பணம்.

ஏங்குகிறது மனம்.

தட்டுப் பாட்டில் குடிநீர்.


8 ) நீண்டு கிடக்கும் நதிகள்

மாண்டு கிடக்கின்றன.

இல்லை நீரின் ஓட்டம்.


9 ) தண்ணீர் தேவைக்கு அணுகவும் .

இயற்கையை அழித்த மனிதா !

அழைக்கின்றன வேற்றுக் கிரகங்கள்.


10 ) ஒவ்வொரு பூக்களாகச் சென்று

வகுப்பெடுக்கிறது வண்ணத்துப் பூச்சி.

தேனே கட்டணம்.


11 ) மகிழ்ச்சியில் மரம்.

புதிதாய்ப் பிறந்திருக்கின்றன

கூட்டில் பறவைக் குஞ்சுகள்.


12 ) பயணம் பேசி மகிழ்கின்றன

கூடடைந்த பறவைகள்.

தங்கள் மொழியில் சத்தமாக.


13 ) வெட்டாதீர்கள் எங்களை !

வருத்தத்தை வெளிப்படுத்தின மரங்கள்.

உதிரும் இலைகள்.


14 ) புத்தனின் எதிர்ப்பை மீறி

வெட்டப் பட்டுக்கிடந்தது

போதி மரம்.


15 ) முயற்சியே முதல் வெற்றி.

மண்முட்டி முளைத்து வருகிறது

வயலில் விதை.


16 ) வறண்டு கிடக்கும் நதி.

தின்று கொண்டிருக்கிறது 

மதிய வெயில்.


17 ) ஆசிரியரின் அதட்டல் இல்லை.

வரிசையாகப் பறக்கின்றன

வானில் பறவைகள் .


18 ) வெட்டப் பட்டன மரங்கள்.

இறந்து போனது 

பருவ மழை.


19 ) பின் தொடரவில்லை யாரும்.

பாதை போட்டுச் செல்கிறது

பயணத்தில் நத்தை.


20 ) விசா இல்லை.

உலகைச் சுற்றுகின்றன

வலசைப் பறவைகள்.


21 ) அந்தரத்தில் கருப்புத் தேனடை.

கல்லெறிந்தவர் யார் ?

கொட்டுகிறது அடைமழை.


22 ) குருவியின் தாகம்.

கலைந்தது தெளிந்த வானம்.

குளத்து நீர்.


23 ) மண்ணைத் தொட்ட பின்பு

மழையில் நனைந்தது

முதல் மழை.


24 ) இறந்த பின்பும் 

எழுந்து நிற்கின்றன

நாற்காலிகளாக மரங்கள்.


25 ) கோடை வெயில்.

குளிக்கும் குருவிகள்.

நீச்சல் குளமானது வாளித்தண்ணீர்.


26 ) சித்திரைத் திருவிழா.

கோடை வெயிலில் பக்தர்கள்.

குளிர்ச்சியில் இளநீர் வியாபாரி.


27 ) வீரர்களைப் பந்தாடிய காளை

கட்டுப்படுத்தியது கட்டுத்தரையில்

சிறிய கயிறு.


28 ) நெல் வயலில் நிறைந்தன.

நிரந்தரக் களைகள்.

அடுக்குமாடி வீடுகள்.


29 ) குனிந்து நிமிர்ந்து நடுகிறோம்.

நிமிரவே இல்லை.

விவசாயிகளின் வாழ்க்கை.


30 ) ஆறறிவு மனிதன்.

ஐந்தறிவு ஒப்பீடு.

சிங்கம் போன்ற நடை.


31 ) மழை பெய்தபின்

மகிழ்ந்து பார்த்து மறைந்தது

வானில் வானவில்.


32 ) இடி , மின்னல்

தகவல் தந்த பின்னரே 

வந்தது பெருமழை.


33 ) இரண்டு மணிநேர மழை

எளிதில் நுழைந்தது

மாடியில் மழைநீர்.


34 ) முகம் சுழித்தது கடல்.

அசுத்தம் சுமந்து வந்தது

ஆறின் உடல்.


35 ) மரத்தில் மலர்ந்த நேயம்.

பறக்க இயலாக் குயிலிற்கு 

இரை ஊட்டியது மைனா.


36 ) பிறந்தது மார்கழி.

விதவிதமாய்ப் பூக்கிறது

வாசலில் கோலம்.


37 ) இயற்கை மழை.

செயற்கைக் குளம்.

குளித்து மகிழ்ந்தனர் சாலையில்.


38 ) இரவின் நிசப்தம் குலைத்தது.

சுற்றிச் சுற்றி வந்த

சுவர்க்கடிகார வினாடி முள் .


39 ) மழைக்காக வேண்டியவன்

மழை வேண்டாம் என்கிறான்.

வயலில் மிதக்கிறது நாற்று.


40 ) நெல் வயலில் பறவைகள்

விரட்ட மனமில்லை.

எத்தனை நாள்கள் காத்திருந்தனவோ ?


41 ) முதுமையில் தனிமை

சோகத்தைச் சுகமாக்கியது.

புதிதாய்க் கூடுகட்டிய குருவி.


42 ) மரம் முழுமையும் பூக்கள்.

தடுமாறும் வண்ணத்துப் பூச்சி.

எந்த மலரில் தேனருந்த ?


43 ) மழை பொழிந்த பின்னும்

இலைகள் ஏந்திக் கொண்டன.

நன்றிக் கடனாய்த் துளிகளை.


44 ) சாதனைகள் தொடருது விண்ணில்

வேதனையில் சாகிறான்

விவசாயி மண்ணில்.


45 ) மீனைக் கொத்திய மீன்கொத்தி

தேடி அலைகிறது

அமர்ந்துண்ண கிளையை.


46 ) ஆளில்லா வீட்டில் 

திரிந்த கொசுவிற்கு ஆனந்தம்.

புதியவர் வருகை.


47 ) வருத்தத்தில் வலசைப் பறவைகள்.

வற்றிக் கிடக்கின்றன

நீர் நிலைகள்.


48 ) சொட்டத் தொடங்குகிறது மழை.

வீட்டுக்குள் ஓடும் குழந்தை

அம்மாவின் அதட்டல்.


49 ) கதவிடுக்கில் சிக்கிய பல்லி.

வால் துண்டாகித் துள்ளியது.

வலியில் மனது.


50 ) காலாண்டு விடுமுறை

வயலில் களையெடுத்த நினைவுகள்.

இன்று கட்டடக்கலை.


51 ) கல்லூரிக் கல்வி 

படிக்க வைத்த காடு.

காட்டில் கல்லூரி.


52 ) பகல் இரவு பாகுபாடில்லை.

பறந்து பறந்து பணிசெய்கின்றன

மருத்துவமனைக் கொசுக்கள்.


53 ) வெட்டப்பட்ட மரம் வெதும்பியது.

வளமையின்றி வரும் சந்ததி

மரணிக்கும் என்று.


54 ) கையில் அரிவாளோடு

கோடையை வரவேற்கிறான்

இளநீர் வியாபாரி.


55 ) நேற்றைய மகிழ்ச்சி இன்றில்லை.

வீடிழந்த சோகத்தில் பறவைகள்

வெட்டப்பட்டன மரங்கள்.


56 ) எங்கே கண்மாய் ?

தேடிய பறவைகள் அமர்ந்தன

அடுக்குமாடி வீட்டில்.


57 ) மழை வந்ததும் மின்சாரம் போனது.

ஒவ்வொரு வினைக்கும் உண்டு

உடனே எதிர்வினை.


58 ) ஆண்டுக்கு ஆண்டு 

அதிக விளைச்சல் காடுகளில்.

வீட்டு மனைகள்.


59 ) சாலையில் செல்வது

புகைக்கூடமோ ?

நகரப் பேருந்து .


60 ) வாகனப் பயணம்

வருத்தத்தில் காளைகள்.

வரவேற்கிறது கேரளா.


61 ) தூக்கித் திரியாதே !

சுமையை இறக்கிவிடு.

வானில் கருமேகம்.


62 ) சண்டை சமாதானமில்லை 

கத்தியின்றி இரத்தமாய்

மாலைச் செவ்வானம்.


63 ) மழைக்கால இரவு

வீட்டைச் சுற்றி இசைமழை

தவளைகள்.


64 ) படுத்தே கிடக்கிறது

பிரியாத இரும்பு ஏணி.

இரயில் தண்டவாளம்.


65 ) தாவும் குரங்குகள்.

வீடாகிப்போன காடுகளில்

வீட்டுக்கு வீடு.


66 ) நெடுந்தொலைவு பறந்த பறவை

இறகைச் சிலிப்பியது.

உதிர்ந்தது வானம்.


67 ) பிடிபட்டது மான்

விடுவித்தது சிங்கம்.

வயிற்றில் தாய்மை.


68 ) உடம்பு முழுமையும் சுரண்டல்.

ரேகையாக மாறியது

பூவான தேங்காய்.


69 ) முதிர்ந்த கனி விழுந்தது.

மீண்டும் எழுந்தது.

மண்முட்டும் செடி.


70 ) முத்தமிட்டு வேண்டுகிறது

துளையிட அனுமதிக்க

மரத்திடம் மரங்கொத்தி.


71 ) தலை சாய்ந்தன நெற்கதிர்கள்.

தலை நிமிர்ந்தான் விவசாயி.

வயல் முழுதும் பணம்.


72 ) ஆடிப்பட்டம் தேடி விதை.

விதைத்தான் விவசாயி.

மகிழ்வாய்த் தின்றன எறும்புகள்.


73 ) வருட முடிவு.

உடல் முழுமையும் வற்றியது.

தினசரி நாட்காட்டி.


74 ) நலம் குறைந்தான் மனிதன்.

வளம் குறைந்தது மண்

நாட்டு மாடுகள் இழப்பு.


75 ) விளையாத காடு

வராத பறவைகள்.

வருத்தத்தில் சோளக்காட்டுப் பொம்மை.


76 ) மரங்கள் நிறைந்த வனம்

ஒலிக்கும் கீதம்.

பறவைகளின் அழைப்பொலி.


77 ) பள்ளி விடுமுறை நாள்கள்.

ஏக்கத்தில் காக்கைகள்

வெறுமையில் உணவுக்கூடம்.


78 ) நதிநீர்ப் பங்கீடு

இருமாநில இடர்.

அமைதியாய் ஓடுகிறது நதி.


79 ) விட்டுவிட்டுப் பொழியும் மழை.

மழைநீரைச் சேமிக்கின்றன

கிராமத்துச் சாலைகள்.


80 ) பயணத்தில் பன்னீர் தெளிக்கிறது.

மழை நின்றபின்

வீசும் காற்று.


81 ) கிராமங்களில் உயிருடன்

விளை நிலங்கள்.

கிடைமாடுகள்.


82 ) கோடை விடுமுறைக்குப்பின்

திறந்தது பள்ளிக்கூடம்.

மகிழ்ச்சியில் பெற்றோர்கள்.


83 ) மாணவர் வருகை

கலகலப்பாகின 

வகுப்பறைகள்.


84 ) சிறுவர் புத்தக தினம்

ஏக்கத்தில் புத்தகங்கள்.

கணினி முன் சிறுவன்.


85 ) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

வாசிக்கும் சிறுமி.

விவாகரத்தில் பெற்றோர்.


86 ) ஓய்வெடுக்கிறது மின்விசிறி

எல்லார் வீடுகளிலும்.

தொடர் மின்தடை.


87 ) பெரிதாய் இருக்கிறது கோவிலில்

சாமியை விட

உண்டியல்.


88 ) கடவுளை வணங்கச் செல்பவர்கள்

வணக்கத்திற்குரியவர்களாகினர்.

யாசகருக்கு உதவி.


89 ) எதிரே இருந்தும்

சோம்பேறிக்கு இனிக்கவில்லை வாழ்க்கை 

கோபுர தரிசனம் கோடிப்புண்ணியம்.


90 ) முதல்துளி விழுந்தது.

காட்டாற்று வெள்ளமெனக்

கலங்கியது கட்டெறும்பு.


91 ) மக்களை மாற்றிய திரையரங்குகள்

தன்னிலை மாறின

வணிக அங்காடிகள்.


92 ) நெருப்போடு புகைகிறது

புகைப்பவர் வாழ்க்கை.

கையில் சிகரெட்.


93 ) குறை மாதம்தான் பிப்ரவரி.

நிறைமாதம் ஆக்கியது

காதலர் தினம்.


94 ) கோடை காலம்தான்

குளிர்கலமாக  மாறியது.

அவள் வருகை.


95 ) வருடியது யார் ?

நிமிர்ந்து பார்க்கும் புற்கள்.

நடக்கும் பெண்.


96 ) விதைக்குள் மரம்

கவிதைக்குள் நீ

புத்துணர்வில் மனம்.


97 ) கோவில் திருவிழா.

கொண்டாட்டத்தில் மக்கள்.

வருத்தத்தில் ஆடுகள்.


98 ) தூங்கும் மாணவன்

தாளைப் புரட்டிப் படிக்கிறது

மின்விசிறி.


99 ) மக்கள் தொகை விளம்பரம்

சிறப்பான நடிப்பிற்குப் பாராட்டு

சோகத்தில் முதிர்கன்னி.


100 ) முதுமொழிக்கு முக்கியத்துவம்.

கல்லூரியில் காதல்

பருவத்தே பயிர்செய்.


101 ) கரும்பலகையில் எழுதி எழுதி

சுண்ணாம்புக்கட்டி கரைந்தது.

மாணவரிடத்தில் நிறைந்தது கல்வி.


102 ) இறக்கை இருந்தும்

பறக்க முடியவில்லை.

மின்விசிறி.


103 ) பின்னணி இசையில்லை.

முன்னணியில் இருக்கிறது

அம்மாவின் தாலாட்டு.


104 ) நிர்ணயிக்கப்பட்டது இலக்கு.

எளிதில் கிடைத்தது வெற்றி.

மதுபான வருமானம்.


105 ) சாலைப்பெண்ணின் தலை

உச்சி வகிடு

வெள்ளைக்கோடு.


106 ) சுமை தூக்கிச்செல்லும் 

வண்ணத்துப் பூச்சிகள்.

பள்ளிக் குழந்தைகள்.


107 ) விடிந்தும் எரியும் தெருவிளக்கு.

அணைக்கவில்லை யாரும்.

அணைத்தது மின்தடை.


108 ) மூச்சு வாங்கியபடி

சுற்றிக் கொண்டிருக்கிறது

குழந்தையுடன் ஓலைக்காத்தாடி.


109 ) வீதிக்கு வீதி மதுக்கடை

மயங்கிக் கிடக்கும் குடிமகன்.

வளர்ச்சியில் நாடு.


110 ) பார்த்து நாள்கள் பலவாயின.

நலம் விசாரிக்கும் நண்பர்.

பக்கத்து வீட்டுக்காரர்.


111 ) மகள் வரைந்த கோடுகள்

உயிர்த்தெழத் தொடங்கின.

கண்கவரும் ஓவியம்.


112 ) கோடையில் வற்றிய

குளத்து நீர்

மாதக்கடைசியில் பணப்பை .


113 ) புகை பிடிப்பது கேடுதரும்.

படத்திற்கு முன் பொதுநலம்.

படம் முழுவதும் புகைநாற்றம்.


114 ) இருக்கும் போது சிரிப்பில்லை.

இறந்த பின் சிரிக்கிறார்.

கண்ணீர் அஞ்சலியில் அப்பா.


115 ) திடமாய் நிற்கிறது

நூறாண்டுப் பாலம்.

திகிலில் ஆறாண்டுப் பாலம்.


116 ) பெருமழையால் பள்ளிகள் மூடல்.

பள்ளி வாசல் திறப்பு.

மலர்ந்தது மதம் கடந்த நேயம்.


117 ) வணங்கப் படவேண்டியவன்

வாசலில் நிற்கிறான் பாவமாக.

குறைதீர் கூட்டத்தில் விவசாயி.


118 ) வயலில் அம்மா.

ஊசலாடுகிறது மனம்

மரக்கிளைத் தொட்டிலில் குழந்தை.


119 ) முன்பு பாட்டிகள்.

இப்போது அனைவரும்

பொறாமையில் புறணி.


120 ) தூங்கிக் கொண்டிருந்தவனை

விழிக்கச் செய்தது

விழியற்ற நண்பரின் பாட்டு.


121 ) விளக்குகள் அணைந்தன.

போர்வைக்குள் வெளிச்சம்.

திறன்பேசியில் தேடல்.


122 ) மகளின் கோட்டோவியங்கள்

பூந்தோட்டமானது

புத்தம் புதிய வீடு.


123 ) விடியல் சூரியனைக் கண்டதில்லை.

அதிகாலை ஆர்ப்பாட்டம்.

திரையரங்கில் புதியபடம்.


124 ) பள்ளி முடியும் நீண்டமணி.

மகிழ்வுடன் வருகிறான்

ஐஸ் விற்பவன்.



125 ) புத்தகத் திருவிழா 

மகிழ்ச்சியில் புத்தகங்கள்.

பக்கம் புரட்டுகிறது மழலை.


126 ) மலரும் நினைவுகளாய்

மலர்ந்தன புகைப்படங்கள்.

இன்று மரணமாய்.


127 ) மாமா , சித்தப்பா உறவுகளில்லை.

தனிமையில் தவிக்கும் குழந்தை.

நாமிருவர் நமக்கொருவர்.


128 ) நகைக்கடை , துணிக்கடையில்

பேரம் இல்லை.

பேசுகிறான் காலணிக்கலைஞனிடம்.


129 ) மணிக்கொருமுறை மின்நிறுத்தம்.

இருமடங்கு எகிறியது.

மின்கட்டணம்.


130 ) இறந்த பின்பும் மறையவில்லை.

சாதிய வழக்கம்.

மயானத்திலும் தனித்தனி.


131 ) மதுவும் , மாமிசமும்

தற்கால ஒத்திவைப்பு.

சாமிக்கு மாலை.


132 ) இருக்கையில் தேவதைகள்.

கர்வத்துடன் பயணிக்கிறது

மகளிர் கல்லூரிப் பேருந்து.


133 ) உன் கை பட்டது.

இளநீராக மாறியது

தினம் குடிக்கும் குடிநீர்.


134 ) திருவிழாக் காலம்

அலைமோதும் கூட்டம்.

பூமகள் வருகை.


135 ) அறுசுவை உணவு 

மீதம் வைக்கிறான் சிறுவன்

காத்திருக்கின்றன நாய்கள்.


136 ) குழந்தைகள் நல மருத்துவமனை.

மகிழ்வோடு குழந்தைகள்

காத்திருப்பில் சறுக்குமரம்.


137 ) விட்டுவிட்டுப் பெய்யும் மழை

விடாமல்  விளையாடும் மகள்.

பயத்தில் அப்பா.


138 ) ஆண்டுகள் பல கடந்தன.

மீண்டும் சந்தித்தேன் தோழனை

உதவியது முகநூல்.


139 ) இல்லங்கள் நெருக்கமாய்.

உள்ளங்கள் தூரமாய்.

மாநகர வாழ்க்கை.


140 ) எழுதிவிட்டுப் போனாள்

நொடிக் கவிதை ஒன்றை

முத்தமாக நெற்றியில்.


141 ) உன்னோடான பொழுதுகள்

பூக்கச் செய்கின்றன

கவிதைகளை எனக்குள்.


142 ) மழை இல்லாப் பொழுது

வானவில் வருகை

எதிரில் நீ.


143 ) உழைத்து உண்ண விருப்பமில்லை. 

தூங்கி எழவே சோம்பல்.

ஆட்சியாளர்களின் இலவச அறிவிப்புகள்.


144 ) நெடுந்தொலைவு பயணம்

விரக்தியில் மீனின்றி மீனவன்.

தள்ளாடும் படகோடு வாழ்க்கை 


145 ) வேலியே வேலியே மேய்ந்தது.

காவல் நிலையத்தில் 

காவலர்க்குத் தொல்லை.


146 ) பெரிதாக இருக்கிறது.

கோவிலில் சாமியை விட

உண்டியல் . 



147 ) தொட்டுச் சிரித்துப்பேசுகிறான் 

திறன் பேசியில் மனிதன்.

உறவுகளிடமிருந்து விலகி.


148 ) கோடையில் சுற்றுலா.

மகிழ்ச்சியில் பூங்கா.

பள்ளிக் குழந்தைகள் வருகை.


149 ) குழந்தையின் அழுகுரல்.

அவதாரம் எடுக்கிறாள்

ஆசுகவியாக அம்மா.


150 ) சாதிகள் இருக்குதடி பாப்பா.

வீதிக்கு வீதி சாதியத்

திருமணத் தகவல் மையங்கள்.


 151 ) பிஞ்சுகளின் தின்பண்டம்

விதைக்கப்படும் நஞ்சு

பஞ்சு மிட்டாய்.


152 ) கவனிப்பார் இன்றி

காவல் தெய்வங்கள்.

வீட்டில் முதியோர்கள்.


153 ) நெடு்ஞ்சாலையில் வாகன விபத்து

அவரவர் வேலையில் ஈடுபாடு

இறந்தது மனிதம்.


154 ) வீழ்ந்தது உழவியல்

வளர்ந்தது உளவியல்

அறிவியல் முன்னேற்றம்.


155 ) ஆடம்பர வாழ்க்கை 

கடனில் மூழ்கியவன்

கடலில் மிதந்தான்.


156 ) ஆலயத்தில் அன்னதானம்

நீங்கியது பக்தர்களின் பசி.

மகிழ்ச்சியில் கடவுள்.


157 ) திங்கள் தோறும் குறைதீர்கூட்டம்.

மனுக்களுடன் குவிந்தனர் மக்கள்.

குறையவில்லை குறை.


158 ) ஊழலுக்கு எதிரான உறுதிமொழி.

சொல்வதில் நாட்டமில்லை அதிகாரிக்கு

வாசலில் காத்திருக்கிறது கையூட்டு.


159 ) மக்கள் தொகைப் பெருக்கம்.

மாநகராட்சி எல்லை விரிந்தது

சுருங்கியது மனிதநேயம்.


160 ) முகக்குளத்தில்

நீந்துகின்றன

இருகயற்கண்கள்.


161 ) காலம் மாறி விட்டது.

கதைத்தாத்தாக்கள் இல்லை.

திறன்பேசியில் சிறுவன்.


162 ) மனிதனுக்கு நலம் வேண்டி

மாலையுடன் நிறுத்தப் பட்டது

பலி ஆடு.


163 ) மிக விரைவாய்ச் செல்கிறது பேருந்து 

ஒட்டுநர் அருகில் கல்லூரி மாணவிகள்.


164 ) மீண்டும் வா மழையே !

நனையக் காத்திருக்கிறாள்

மொட்டை மாடியில் மகள்.


165 ) சாலையில் வாகன விபத்து

ஓடி வருகிறது கூட்டம்

புகைப்படம் எடுக்க.


166 ) வீட்டில் தொலைத்து 

வீதியில் தேடும் கூட்டம்

மண்பானைச் சமையல்.


167 ) மரத்தை அழித்தான்

வயலை அழித்தான்

வேண்டுமாம் நோயற்ற வாழ்வு


168 ) மழையால் உயிர்த்தெழுந்தன.

மண்ணில் செடியும்

விவசாயியின் மனமும்.


169 ) குனிந்து செல்லும் குடிசை வீடு.

நிமிரச் செய்தது

விருந்தோம்பல்.


170 ) சாதிய மாநாடு

பாதுகாப்புடன் செல்கிறது

காவல்துறை வாகனம்.


171 ) அமைச்சர் பதவி 

அடிமனதில் பயம்.

எந்த மத்தியச் சிறையோ ?


172 ) பண்படுத்தி விளைவித்தேன்.

பெற்றுக் கொண்டான் பணத்தைக் 

கடன்காரன்.


173 ) அடையாளம் கண்டேன்

அவன்தான் விவசாயி.

ஆடையின்றி இருந்தான்.


174 )  பாட்டாளியின் அருமை 

உணர்ந்தான் அரசியல்வாதி.

வந்தது தேர்தல்.


175 ) தொடரும் சண்டைகள்.

பழிவாங்கும் செயல்கள்.

தொலைக்காட்சித் தொடர்கள்.


176 ) பரபரப்பில் வீடு

அவரவர் வேலையில் ஈடுபாடு

வந்துவிட்டது மின்சாரம்.


177 ) திடீர் தெய்வ வழிபாடு

உன்னைத்தான் மதிப்பெண்ணாய் நம்பியிருக்கிறேன்.

தேர்வு மாணவன்.


178 ) முடியை முடிந்தவள்

முடியை அவிழ்த்தாள்

வயலில் நாற்று நடுகை.


179 ) கடையை அடைக்கவில்லை.

கலவரத்தில் முடிந்தது

அமைதி ஊர்வலம்.


180 ) பெருமழையில் தத்தளிப்பு

நன்றி சொல்லும் மக்கள்

தெய்வமாய் மீட்புப்படை.


181 ) திங்கள் தோறும் குறைதீர்கூட்டம்.

மனுக்களோடு குவிந்தனர் மக்கள்

குறையவில்லை குறை.


182 ) சுமை சுமந்து 

சோகம் சுமந்து 

சுகம் காக்கிறாள் தாய்.


183 ) புதிது புதிதாய் 

மலர்ந்தன சபதங்கள்.

பிறந்தது புத்தாண்டு.


184 ) காலை மாலை 

மலர்களைச் சுமக்கின்றன

மழலையர் பள்ளிப் பேருந்துகள்


185 ) அவ்வப்போது தலைதூக்குகிறது

அசுரத்தனமாக நாட்டுப்பற்று

கிரிக்கெட் விளையாட்டு.


186 ) தேங்காய் உடைத்தல்

சிறப்பு பூஜையில் இல்லை.

திறமையில் வெற்றி.


187 ) விபத்தில் சிக்கியவரின்

அழுகை ஒலி 

அலறி வருகிறது ஆம்புலன்ஸ்.


 188 ) கரும்பலகையில் எழுத்து விதைகள்.

மாணவர் மனதில் வளர்ந்தன

கல்விச் செடிகள்.


189 ) அரசுத் திட்டத்திற்கு

ஒதுக்கீடு செய்யப்பட்டது பணம்

மகிழ்ச்சியில் அரசியல்வாதி.


190 ) வரலாறு காணாத விலை

கூட்டம் குறையவில்லை

நகைக்கடை.


191 ) தள்ளாடி நடக்கும் தாய்.

ஆறுதலாக அழைத்துவரும் மகள்.

கையில் முதியோர் உதவித்தொகை.


192 ) மக்கள் பெருக்கம்

வாகனப் பெருக்கம்.

அதே சாலை.


193 ) வருத்தத்தோடு நிற்கின்றன

வகுப்பறைக் கட்டடங்கள்.

மே மாத விடுமுறை.


194 ) தலைமுறை கடந்த நினைவுகள்

தாத்தாவின் பெயர் சொல்கின்றன.

கம்பீரமாய் நிற்கும் மரங்கள்.


195 ) கூடிவாழும் உள்ளங்கள்

கூடிக்கொண்டே இருக்கின்றன

முதியோர் இல்லங்கள்.


196 ) ஓடி விளையாடிய கண்மாய்

உருக்குலைந்து கிடக்கிறது

ஓம்சக்தி நகர்.


197 ) பள்ளிக்கு வந்தன காக்கைகள்

மதிய உணவிற்காக

மாணவர்களைத் தேடி.


198 ) மண்ணைக் காக்கும்

மதிப்புமிகு தலைவன்

மதிப்பிழந்த உழவன்.


199 ) பள்ளிப் பாடங்கள் இல்லை

பாரம்பரியம் படிக்கும் குழந்தைகள்

மகிழ்ச்சியில் கோடை விடுமுறை.


200 ) கலப்பு மணங்கள் கைகொடுத்தன

பூ வியாபாரிக்கு

கண்களைக் கவரும் கதம்பமாலை.


201 ) பணம் பெறாதவனின் கேள்வி

தடுமாறும் அரசியல்வாதி

தேர்தல் வாக்குறுதி.


202 )  மகிழ்ச்சியில் வேலைக்காரன்

சிந்திய வியர்வை உலரவில்லை

கிடைத்தது கையில் கூலி.


203 ) ஐந்தாண்டுக் கொள்ளைக்குப்

பிள்ளையார் சுழி 

ஓட்டுக்குப் பணம்.


204 ) கொள்கைக் கூட்டணி பிரிந்தது

கொள்ளைக் கூட்டணி இணைந்தது

குற்றுயிராய் ஜனநாயகம்.


205 ) விஞ்ஞானத்தில் மலைக்கும் சாதனை

மலைவாசியின் ஊருக்கு இல்லை

இன்றும் மண்சாலை.


206 ) அடைபடாத கடன்

அடைத்துவிட்டது 

காதணி ஓட்டை.


207 ) சுற்றுலாப் பயணிகள் வருகை

சோகத்தில் ஊட்டி

நெகிழிப் பயன்பாடு.


208 ) ஒவ்வொரு நாளும் யுகம்

தினம் தினம் பயம்.

முடிவிற்குக் காத்திருக்கும் வேட்பாளர்.


209 ) கணினி யுகம்

களிமண்ணில் விளையாட்டு

மண்ணை மறக்காத மகள் .


210 ) ஏழையின் வீட்டில்

நிறைந்து கிடக்கிறது தங்கம்.

மகளைக் கொஞ்சும் தாய்.


211 ) பேச்சுப் போட்டிக்கு ஒத்திகை

பூக்கள் தூவி வாழ்த்தியது

கண்மாய்க்கரை வேப்பமரம்.


212 ) மிதிவண்டி தன்மேல் பயணிக்க

ஏங்குகிறது 

கிராமத்துச் சாலை.


213 ) வந்தவர்க்கெல்லாம் விருந்தோம்பல் அன்று.

வந்து அவர் தருகிறார் இன்று.

ஓய்வெடுக்கின்றன அடுப்புகள்.


214 ) அடிவாங்கி அடிவாங்கியே

ஆட்டம் போட வைத்தது

இசைக்கலைஞனின் தவில்.


215 ) யாரும் அடிக்கவில்லை.

அழும் பெண்கள்

மெகா தொடர்கள்.


216 ) குடிசை எங்கும் ஓட்டை

தொடர்ந்து பெய்யும் மழை

பாத்திரத்தில் மழைநீர் சேமிப்பு.


217 ) செய்யும் தொழிலே தெய்வம்

வணங்கிச் சென்றனர்.

திருடர்கள்.


218 ) அகிம்சை வேண்டி தியானம்

இருக்கையாய் இருந்தது

விலங்கின் தோல்.


219 ) முன்னோர்களைத் துன்புறுத்தாதே !

கொண்டாட்டத்தில் சிறுவர்கள்

சிக்கித் தவிக்கிறது குரங்கு.


220 ) குறையில்லா இறைவன் ஓவியம்

சாலையோரம் வரைந்தான் மாற்றுத்திறனாளி

இறைவன் படைப்பில் குறை.


221 ) உயிரற்றவை ஐந்தறிவு ஆறறிவு

அனைத்தும் சமமான குளியல்

பொதுக்கண்மாய்.


223 ) அதிக லாபத்தில் தொழில்

கூட்டங் கூட்டமாய் மாணவர்கள்

பதின்மப் பள்ளிகள்.


224 ) துள்ளும் காளைகளுக்கும்

காளையர்களுக்கும் விளையாட்டு

சல்லிக்கட்டு.


225 ) பிரம்மாண்டமாய் நினைவு அஞ்சலி

ஆயிரம் பேருக்கு அன்னதானம்

பசியால் இறந்த அப்பா.


226 ) தண்ணீர் தராத பக்கத்து மாநிலம்

மொழிவெறியால் வாகனத்திற்குத் தீவைப்பு

பாருக்குள்ளே நல்ல நாடு.


227 ) மின்தடையிலும் ஜொலிக்கிறது

அரசின் முதுவெலும்பு

மதுபானக் கடை.


228 ) எழுச்சியுடன் பங்கேற்றார்கள்

புதிய தலைமுறை மாணவர்கள்

சாதிய மாநாடு.


229 ) மின்வெட்டுத் தீர்வு

தொலைக்காட்சி விவாதம்

மின்வெட்டு.


230 ) அடிக்கடி பார்க்க முடிகிறது

சட்டமன்ற உறுப்பினரை.

விரைவில் தேர்தல்.


231 ) வானொலியில் வயலும் வாழ்வும்

வருத்தத்தில் விவசாயி.

கையகப் படுத்தப்பட்டது நிலம்.


232 ) அடிக்கடி நடக்கிறது கலவரம்

தெருப்பெயரை மாற்றுங்கள்

காந்தியடிகள் தெரு.


233 ) எதிர்காலம் தெரியவில்லை

எதிர்காலம் சொல்கிறது

கூண்டுக்கிளி.


234 ) தரைதொட்டு வணங்கி

உயிர்ப் பிச்சைக் கேட்கிறது மரம்

புயல் மழைக்காற்று.


235 ) மது அருந்தி வாகனம் ஓட்டாதீர் !

அறிவிப்புப் பலகை

அருகில் மதுபானக்கடை.


236 ) கொண்டாட்டத்தில் குழந்தைகள்

குழப்பத்தில் பெற்றோர்கள்

மழைக்கால பள்ளி விடுமுறை.



237 ) இரவுச் சாலை

நகரும் நட்சத்திரங்கள்

வாகனத்தின் சிவப்பு விளக்குகள்.


238 ) பட்டுப்போன மரம்

கொத்திச் சென்றது மரங்கொத்தி

வாழ்கிறது கிளி.


239 ) அருகில் அருள்தரும் அழகர்

திறன்பேசியில் பதிவு 

நவீன பக்தன்.


240 ) அன்பளிப்பாய்ப் புத்தகங்கள்

புரட்டாத பக்கங்கள்

புத்தகத்திற்குச் செய்யும் துரோகம்


241 ) மழைக்காலம்

விரிந்தது வெண்குடை

காளான்.


242 ) விளக்கொளியில் மின்னும் கோலிக்குண்டுகள்

பூனையின் கண்கள்.


243 ) நெரிசல் இன்றி

சாமி பார்த்தான்

நேரலையில் வீட்டில்.


மு.மகேந்திர பாபு , மதுரை.

செல் - 97861 41410


Post a Comment

0 Comments