ஐம்புலன் ஆட்சிகொள்

 



ஐம்புலன் ஆட்சிகொள்


  வான் புகழ் வள்ளுவத்தை வாழ்க்கை நெறியாக்கி , அதன் மூலம் மக்களின் மனங்களைச் சரியாக்கி , சத்தமின்றி நித்தமும் இலக்கியத் தொண்டினைச் செய்துவரும் பெருமைமிகு மன்றம் நமது திருவள்ளுவர் மன்றம்.


        மதுரை என்றாலே எண்பெருங்குன்றம். மதுரை என்றாலே மக்கள் மனங்களில் நம் திருவள்ளுவர் மன்றம். குன்றமும் மன்றமும் இருகண்கள் நமக்கு.


              சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் , நல்லவர்கள் ஒன்று கூடி வள்ளுவர் மன்றத்தின் மூலம் தமிழ் வளர்க்கும் பணி சாலச்சிறந்தது. திருக்குறள் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமை உடையது நமது மதுரை மண். மிதிக்கும் மண்ணை மதிக்கும் மண்ணாக்கித் தலையில் சுமந்தவன் சோமசுந்தரக் கடவுளான நமது ஈசன். அவர் பெயரில் அமைந்த குடியிருப்பு. இங்கு மன்றம் நடப்பது வெகு சிறப்பு.


     மூன்றடியால் உலகை அளந்தான் பெருமாள். இரண்டடியால் உள்ளம் அளந்தான் வள்ளுவப் பேராசான். ஓரடியால் உள்ளம் அளந்தாள் அறிவிற் சிறந்த ஔவைப் பாட்டி. அவளின் தடத்தில் , புதிய இடத்தில் வைத்துப் போற்றப்படுகிறது பாட்டுத் திறத்தால் இவ்வையத்தைப் பாலித்திட வந்த மகாகவி பாரதியின் புதிய ஆத்திசூடி.


     ஐம்புலன் ஆட்சிகொள்.   இந்த உலகம் ஐம்பூதங்களால் இயங்குகிறது. வானம் , காற்று , நெருப்பு , நீர் , நிலம்.


ஐம்பொறிகள் நம்மை நலமுடன் இயக்குகின்றன. மெய் , வாய் , கண் , மூக்கு , செவி .


     ஐம்பொறிகளின் வழியே கிடைக்கும் ஐம்புலன்களால் இவ்வுலகை நாம் ஆட்சி செய்ய வேண்டும் என்கிறான் மாகவிஞன் பாரதி. 


       பாரதியின் முன்னோடியான வான்புகழ் வள்ளுவன் தந்த  உலகப்பொதுமறையாம் வள்ளுவத்தில் ஐம்புலன்களைப் பற்றி அருமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


   தமிழன் அன்றே அதிகாரம் படைத்தவன் என்பதை வள்ளுவரின் 133 அதிகாரங்கள் வாயிலாக நாம் அறியலாம்.


    உலக மக்களுக்குத் தேவையான உன்னதக் கருத்துக்களைச் சொல்வதால் வான்புகழ் வள்ளுவமானது ' உலகப் பொதுமறை ' என அழைக்கப்படுகிறது. ஐம்புலன்களைப் பற்றிய நமது வள்ளுவப் பேராசானின் குறட்பாக்களைக் காண்போம்.


கண் - பார்த்தல்.


     பரந்து விரிந்த இப்பூமிப்பந்தைப் பார்த்து , மகிழ்ந்து , இரசிக்க உதவுவன கண்கள். கண்கள் என்பவை வெறும் கண்களல்ல. கல்வியைக் கற்க உதவும் கருவி. எல்லோருக்கும் கண்கள் இருக்கின்றன. கண் உடையவர்கள் யார் என்பதற்கு வள்ளுவப் பேராசான் அற்புதமான விளக்கம் தருகிறார். 


கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையவர் கல்லா தவர் 

                                     ( குறள் 393 )


    கற்றோர் என்பவர் கண்ணுடையவர். கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்ணுடையவர் என்கிறார் வள்ளுவர். 


செவி - கேட்டல்


    கேட்டலைச் செவிச்செல்வம் என்கிறார் வள்ளுவர். செவியால் கேட்டறியும் செல்வம்  , செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும். அதுவே எல்லாச் செல்வங்களிலும் தலையானது.


செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை. 

                               குறள் - 411


  செவி , வாய் என்ற இருபொறிகளையும் இணைத்து ஒரு குறளில் கூறுகிறார் இப்படி , 


செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்.

                           ( குறள் - 420 ) 


   செவிச்சுவை அறியாது வாய்ச்சுவை மட்டுமே அறிந்தவர்கள் இருந்தாலென்ன ? இல்லாமல் இருந்தாலென்ன எனக்கேட்டு , கேள்விச் செல்வத்தின் பெருமையை விளக்குகிறார்.


மூக்கு - நுகர்தல்


புறம்குன்றிக் கண்டனைய ரேனும் அகம்குன்றி

மூக்கிற் கரியர் உடைத்து.

                         ( குறள் - 277 ) 


    கூடா ஒழுக்கம் என்னும் அதிகாரத்தில் இக்குறள் இடம்பெற்றுள்ளது. குன்றிமணி செம்மையாகக் காணப்படுவதாகத் தோன்றினாலும் , அதன் மூக்குக் கருத்துத்தான் இருக்கிறது. அதுபோல் தோற்றத்தில் சிலர் செம்மையாகத் தோன்றினாலும் உள்ளத்தில் இருண்டு இருப்பவர் இவ்வுலகில் உண்டு என்கிறது குறள். 


மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து 

நோக்கக் குழையும் விருந்து. 

                             ( குறள் - 90 ) 


முகர்ந்து பார்த்தாலே அனிச்சப்பூ வாடிவிடும். விருந்தினர் நாம் பார்க்கும் பார்வையில் வாடிவிடுவர்.


மெய் - தீண்டல்


மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.


                    ( குறள் - 65 )

  நமது குழந்தைகளின் மெய்தீண்டல் உடலுக்கு இன்பம். அவரது குரல் கேட்டல் செவிக்கு இன்பம் என்று மெய் , செவி என்ற இரு பொறிகளையும் இக்குறளில் கூறுகிறார்.


நாக்கு 


யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு.

                          ( குறள் - 127 ) 


யாராக இருந்தாலும் நாக்கினைக் காக்க வேண்டும். பிறர் புண்படும்படி பேசுதல் கூடாது. 


வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 

தீமை இலாத சொலல்.


            ( குறள் - 294 ) 


பிறர்க்குத் தீங்கு தராத சொற்களைப் பேசுதலே உண்மை பேசுதல் ஆகும்.


  இப்படி ஐம்புலன்களின் வழியாக நாம் ஆட்சி கொள்வதற்கு வள்ளுவப் பேராசான் பல குறட்பாக்களின் மூலம் குரல் எழுப்பி உள்ளார். வள்ளுவனின் வாயமுதை நமது மன்றத்தில் உரைக்கும் பெரும் வாய்ப்பைத் தந்த அனைத்து வல்லவர்களுக்கும் வாழ்த்தும் அன்பும் நன்றியும்.


அன்புடன் , 

பொறியாளர் ஜ.சுரேஷ்.




Post a Comment

0 Comments