BABU - new haiku

 மகள் வரைந்த கோடுகள்


(ஹைக்கூ கவிதைகள்)


மு.மகேந்திர பாபு

செருப்பைக் கழட்டிவிட்டு

இறங்கி நடந்தார் அப்பா.

திருத்தலமானது வயல்.


பாகப்பிரிவினை இல்லை 

தொடரும் கூட்டுக்குடும்பம்.

ஒரே மரத்தில் பறவைகள்.


மொட்டை மாடியிலும்

முளைத்தது பச்சை முடி

மாடித் தோட்டம்.


பெருக்கெடுத்தோடும் வைகை.

துள்ளிக் குதிக்கும் மீன்கள்.

மகளின் ஓவியம்.


எங்கும் பறக்கின்றன சிட்டுக்கள்

தினத்தில் மட்டும்.

நாளிதழ்களிலும் முகநூலிலும்.


 கை நிறையப் பணமிருந்தும்.

தாகத்தோடு ஏங்கும் மனம்.

தட்டுப்பாட்டில் குடிநீர்.


நீண்டுக்கிடக்கும் நதிகள்

மாண்டு கிடக்கும்
நீரின் ஓட்டம்.


தண்ணீர்த் தேவைக்கு அணுகவும்
அழைப்புக் குரல் கேட்கிறது
வேற்றுக் கிரகத்திலிருந்து.


ஒவ்வொரு பூக்களாகச் சென்று

வகுப்பெடுக்கிறது வண்ணத்துப்பூச்சி

இனிப்பே கட்டணம்.


மகிழ்ச்சியில் மரம்.

புதிதாய்ப் பிறந்திருக்கின்றன

கூட்டில் பறவைக்குஞ்சுகள்.


சித்திரைத் திருவிழா.

கோடை வெயிலில் பக்தர்கள்.

குளிர்ச்சியில் இளநீர் வியாபாரி


வெட்டாதீர்கள் எங்களை

வருத்தத்தை வெளிப்படுத்தும் மரங்கள்.

உதிர்ந்தன இலைகள்.


புத்தன் தடுத்தும்

வெட்டப்பட்டு வீழ்ந்தது

போதிமரம்.


முயற்சியே முதல் வெற்றி.

மண்முட்டி முளைக்கிறது

வயலில் விதை.


வறண்டு கிடந்த நதி.

தின்று செரிக்கிறது 

மதிய வெயிலை.


ஆசிரியரின் வழிநடத்தலில்லை.

வரிசையாகப் பறக்கின்றன

வான்வெளியில் பறவைகள்.


வெட்டப்பட்டன மரங்கள்.

செத்து விழுந்தது

பருவ மழை.


யாரும் பின்தொடரவில்லை
பாதை போட்டுச் செல்கிறது

பயணத்தில் நத்தை.


விசா இல்லாமலேயே

உலகைச் சுற்றுகின்றன

வலசைப் பறவைகள்.


அந்தரத்தில் கருப்பு நிலா

கல்லெறிந்ததும் கொட்டுகிறது 

தேன் மழை.


குருவியின் தாகம்.

கலைந்தது தெளிந்த வானம்.

குளத்து நீர்.


மண்ணைத் தொட்ட பின்னரே

நனைந்தோடியது

முதல் மழை.


இறந்துபோன பின்னரும் 

எழுந்து நிற்கின்றன

நாற்காலிகளாக மரங்கள்.


கோடை வெயில்.

குருவிகளின் நீச்சல் குளமானது
வாளித் தண்ணீர்.


பயணம் பேசி மகிழ்கின்றன

கூடடைந்த பறவைகள்.

கீச்கீச் மொழியில்.


வீரர்களைப் பந்தாடிய காளை

கட்டுத்தரையில் கட்டுப்படுத்தியது 

சிறிய கயிறு.


நெல் வயலில் நிறைந்தன

நிரந்தரக் களைகள்

அடுக்குமாடி வீடுகள்.


குனிந்து நிமிர்ந்து நட்டும்

ஏனோ நிமிரவேயில்லை

விவசாயி வாழ்க்கை.


மழை பெய்த பின்

பார்த்து மகிழ்ந்தது
வானவில்.


இடி, மின்னல்

முன்னறிவிப்போடு வந்துசேர்ந்தது

பெருமழை.


காலாண்டு விடுமுறை

வயலில் களையெடுத்த நினைவுகள்

இன்று கட்டடக்கலை.


முகம் சுழித்தது கடல்.

அசுத்தம் தூக்கிச் சுமந்தது

கழிவுகளோடு ஆறு.


மலர்ந்தது நேயம்

பறக்க இயலா குயிலிற்கு 

இரையூட்டும் மைனா.


மார்கழி பிறப்பு

விதவிதமாய்ப் பூக்கிறது

வாசலில் கோலம்.


இயற்கை மழை

செயற்கைக் குளம்

குளித்து மகிழ்ந்தனர் சாலையில்.


இரவின் நிசப்தம்

சுற்றியபடியே கலைத்தது

கடிகார விநாடி முள்.


மழை வரவை வேண்டியவன்

வேண்டாம் மழை என்கிறான்.

மிதக்கிறது நாற்று.


நெல் வயலில் பறவைகள்

விரட்ட மனமில்லை.

எத்தனை நாள் பசியோ?


முதுமையில் தனிமை

சோகத்தைச் சுகமாக்கியது

புதிதாய் கூடுகட்டிய குருவி..


செடி முழுவதும் பூக்கள்.

தடுமாறும் வண்ணத்துப்பூச்சி.

எதில் தனக்காக தேன்?


மழை நின்றதும்

இலைகள் ஏந்திக்கொண்டன.

நன்றிக்கடனாய்த் துளிகளை.


தொடர் சாதனைகள் விண்ணில்

வேதனையில் விவசாயி சாகிறான்
மண்ணில்.


மீனைக் கொத்திய மீன்கொத்தி

தேடியலைகிறது

அமர்ந்துண்ண கிளையை.


ஆளில்லா வீட்டில் 

தனித்திருந்த கொசுவிற்கு ஆனந்தம்.

புதுகுடித்தனம் வருகை.


வருத்தத்தில் வலசைப் பறவைகள்.

வெடிப்புண்டு கிடக்கின்றன

நீர்நிலைகள்.


கொட்டத் தொடங்கியது மழை.

வீட்டுக்குள்ளோடும் குழந்தை

அம்மாவின் அதட்டல்.


கதவிடுக்கில் சிக்கிய பல்லி

வால் துண்டாகித் துள்ளியது

சோதிடர் வீட்டில்.


நகரத்தில் தொடர் மழை

மாடிக்கு வழிகேட்டது

மழைநீர்.


பகல் இரவு பாகுபாடில்லாமல்

பொழுதெல்லாம் பணி செய்கின்றன

மருத்துவமனையில் கொசுக்கள்.


வெட்டப்பட்ட மரம்
மனம் வெதும்பியது

சந்ததி அழியுமேயென்று.


கையில் அரிவாளை ஏந்தியபடி

கோடையை வரவேற்கிறான்

இளநீர் வியாபாரி.


நேற்றின் மகிழ்ச்சி
இன்றில்லாமல் போனது

வீடிழந்த பறவைகள்.


கண்மாயைக் காணவில்லை

தேடிய பறவைகள் அமர்ந்தன

அடுக்குமாடி வீட்டில்.


மழை வந்தது
மின்சாரம் போனது

நியூட்டனின் மூன்றாம் விதி.


ஆண்டுக்கு ஆண்டு 

அதிக விளைச்சல் கண்டது காடு

பெருகும் வீட்டுமனைகள்.


சாலையில் செல்வது

புகைக்கூடமோ

நகரப் பேருந்து .


தூக்கித் திரியாதே

சுமையை இறக்கிவிடு.

வானில் கருமேகம்.


சண்டையுமில்லை சமாதானமுமில்லை 

கத்தியின்றிச் சிவந்தது

அந்திவானம்.


மழைக்கால இரவு

வீட்டைச் சுற்றி சேர்ந்திசைத்தன
தவளைகள்.


படுத்தே கிடக்கிறது

பிரியாத இரும்பு ஏணி

இரயில் தண்டவாளம்.


மரத்துக்கு மரம் தாவும் குரங்குகள்
வீட்டுக்கு வீடு தாவின

வீடாகிப்போனது காடு.


நெடுந்தொலைவு பறந்த பறவை

இறகைச் சிலுப்பியதுமே.

உதிரும் ஒற்றை வானம்.


பிடிபட்ட மானை

விடுவித்தது சிங்கம்

வயிற்றில் கரு.


விழுந்தது முதிர்ந்த கனி 

எழுந்தது மீண்டும்

மண்முட்டும் செடி.


முத்தமிட்டு வேண்டுகிறது
மரத்திடம் மரங்கொத்தி

துளையிட அனுமதி கேட்டு.


தலை சாய்ந்தன நெற்கதிர்கள்.

தலை நிமிர்ந்தான் விவசாயி.

நல்ல அறுவடை.


ஆடிப்பட்டம் தேடி விதை

விதைத்தான் விவசாயி

மகிழ்வாய்த் தின்றன எறும்புகள்.


நலம் குறைந்தான் மனிதன்.

வளம் இழந்தது மண்

நாட்டு மாடுகள் அழிப்பு.


பொய்த்தது வெள்ளாமை

வரவில்லை பறவைகள்

ஏக்கத்தில் சோளக்காட்டுப் பொம்மை.


மரங்களடர்ந்த வனம்

ஒலிக்கும் கீதம்.

பறவைகளின் அழைப்பொலி.


பள்ளி விடுமுறை

பசியோடு காத்திருந்தன
காக்கைகள்.


நதிநீர்ப் பங்கீடு

இரு மாநிலங்களுக்கிடையே சிக்கல்

அமைதியாய் ஓடுகிறது நதி.


விட்டுவிட்டுப் பொழியும் மழை

மழைநீரைச் சேமிக்கின்றன

கிராமத்துச் சாலைகள்.


மழை நின்ற பின்

பயணத்தில் பன்னீர் தெளிக்கிறது

வீசும் காற்று.


கிராமங்களில் 

உயிருடன் விளைநிலங்கள்

கிடைமாடுகள்.


கோடை விடுமுறை

எப்போது முடியுமென

ஆவலாய் எதிர்பார்க்கும் பெற்றோர்.


பள்ளி திறப்பு
மாணவர் வருகை

கலகலப்பாகும் வகுப்பறை.


சிறுவர் புத்தக தினம்

ஏக்கத்தோடு புத்தகங்கள்

கணினிமுன் சிறுவன்.


கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

வாசிக்கும் சிறுமி

விவாகரத்தில் பெற்றோர்.


ஓய்வெடுக்கிறது மின்விசிறி
வீடுகள்தோறும்

தொடர் மின்தடை.


கடவுள் சிலையை
முன்நின்று மறைக்கிறது
பெரிய உண்டியல்..


கடவுளை வணங்க வந்தவரை

வாசலிலேயே வணங்கினர்
யாசகர்கள்.


முதல் மழைத்துளி விழுந்ததுமே

காட்டாற்று வெள்ளமெனக் கலங்கியது

கட்டெறும்பு.


மக்களை மாற்றிய திரையரங்குகள்

தன்னிலை மாறிப்போயின

வணிக அங்காடிகளாக.


குறை மாத பிப்ரவரியை

நிறை மாதமாக்கியது

காதலர் தினம்.


கோடை காலம்

சட்டென குளிர்காலமானது

அவளின் வருகை.


வருடிப்போவது யாரென

நிமிர்ந்து பார்க்கும் புற்கள்.

கடந்துபோனது குழந்தை.


விதைக்குள் மரம்

கவிதைக்குள்
முளைத்தெழும் நீ.


கோவில் திருவிழா

கொண்டாட்டத்தில் மக்கள்

அச்சத்தில் ஆடுகள்.


தூங்கும் மாணவன்

தாளைப் புரட்டிப் படிக்கிறது

மின்விசிறி.


மக்கள் தொகை விளம்பரம்

சிறப்பான நடிப்பிற்குப் பாராட்டு

சோகத்தில் முதிர்கன்னி.


கரும்பலகையில் எழுதியெழுதிக்

கரைந்தது சுண்ணாம்புக்கட்டி
நிறைந்தது மாணவக் கல்வி.


பின்னணி இசையின்றி

எப்போதும் முன்னணியில்

அம்மாவின் தாலாட்டு.


நெடுஞ்சாலையின்
தலையில் உச்சி வகிடு

வெள்ளைக்கோடு.


சுமை தூக்கிச்செல்லும் 

வண்ணத்துப்பூச்சிகள்

பள்ளிக் குழந்தைகள்.


விடிந்தும் எரியும் தெருவிளக்கு

யாரும் அணைக்கவில்லை

அணைத்தது மின்தடை.


மூச்சு வாங்கியபடி

சுற்றிக் கொண்டிருக்கிறது

குழந்தையுடன் ஓலைக் காத்தாடி.


வீதிக்கு வீதி மதுக்கடை

மயங்கிக் கிடக்கும் குடிமகன்

வளர்ச்சியில் நாடு.

 

பார்த்துப் பல நாட்களாயின

நலம் விசாரிக்கிறார்

பக்கத்து வீட்டுக்காரர்.


மகள் வரைந்த கோடுகள்

உயிர்த்தெழத் தொடங்கின

கண் கவரும் ஓவியம்.


கோடையில் வற்றிய

குளத்து நீர்

மாதக்கடைசியில் கையிருப்பு.


புகை பிடிப்பது கேடு தரும்

படத்தில் பொதுநலம் அறிவிப்பு

படம் முழுவதும் புகை நாற்றம்.


இருக்கும்போது சிரிக்கவில்லை

இறந்த பின்னர் சிரிக்கிறார்

கண்ணீர் அஞ்சலியில் அப்பா.


திடமாய் நிற்கிறது

நூற்றாண்டுப் பாலம்.

திகிலில் ஆறாண்டுப் பாலம்.


வணங்கப் படவேண்டியவன்

வாசலில் நிற்கிறான் மனுவோடு

குறைதீர் கூட்டத்தில் விவசாயி.


வயலில் அம்மா

கனக்கிறது நெஞ்சு

மரக்கிளைத் தொட்டிலில் குழந்தை.


தூங்கிக் கொண்டிருந்தவனை

விழித்தெழச் செய்தது

பார்வைத்திறனற்றவரின் பாட்டு.


அணைந்தன விளக்குகள்
போர்வைக்குள் வெளிச்சம்

செல்பேசியில் தேடல்.


மகளின் கோட்டோவியங்கள்

பூந்தோட்டமாக்கியது

புத்தம் புதிய வீடு.


விடியல் சூரியனைக் கண்டதில்லை

அதிகாலை ஆர்ப்பாட்டம்

திரையரங்கில் புதிய படம்.


பள்ளி முடியும் நீண்ட மணி.

வேகமாக வருகிறார்

ஐஸ் விற்பவர்.


புத்தகத் திருவிழா 

மகிழ்ச்சியில் புத்தகங்கள்

பக்கம் புரட்டுகிறது மழலை.


மலரும் நினைவுகளாய்

மலர்ந்தன புகைப்படங்கள்

பழுப்பு நிற வாசம்.


மாமா, சித்தப்பா உறவுகளில்லை

தனிமையில் தவிக்கும் குழந்தை

‘நாமிருவர் நமக்கொருவர்.’


நகை, துணிக்கடையில் பிக்ஸ்டு பிரைஸ்

கூசாமல் பேரம் பேசுகிறான்
காலணி தைப்பவரிடம்.


மணிக்கொருமுறை மின்நிறுத்தம்

இருமடங்கு எகிறியது

மின்கட்டணம்.


இறந்த பின்பும் மறையவில்லை

சாதிய ஏற்றத்தாழ்வு

தனி இடுகாடு.


மதுவும், மாமிசமும்

தற்காலமாக ஒத்திவைப்பு

சாமிக்கு மாலை.


இருக்கையில் தேவதைகள்

கர்வத்துடன் பயணிக்கிறது

மகளிர் கல்லூரிப் பேருந்து.


திருவிழாக் காலம்

அலைமோதும் கூட்டம்

பூமகள் வருகை.


அறுசுவை உணவு 

மீதம் வைக்கிறான் சிறுவன்

காத்திருக்கின்றன நாய்கள்.


குழந்தைகள் நல மருத்துவமனை

மகிழ்வோடு குழந்தைகள்

காத்திருப்பில் சறுக்கு மரம்.


விட்டுவிட்டுப் பெய்யும் மழை

விடாமல் விளையாடும் மகள்.

பயத்தில் அப்பா.


ஆண்டுகள் பல கடந்தன

மீண்டும் சந்தித்தேன் தோழனை
முகநூல் வழியாக.


இல்லங்கள் நெருக்கமாய்

உள்ளங்கள் தூரமாய்

மாநகர வாழ்க்கை.


எழுதிவிட்டுப் போனாள்

நொடிக் கவிதை ஒன்றை

முத்தமாக நெற்றியில்.


உன்னுடனான பொழுதுகள்

பூக்கச் செய்கின்றன

எனக்குள் கவிதைகளை.


மழை இல்லாப் பொழுது

வானவில் வருகை

எதிரில் நீ.


நெடுந்தொலைவுப் பயணம்

விரக்தியில் மீனின்றி மீனவன்

தள்ளாடும் படகோடு வாழ்க்கை.


வேலியே வேலியை மேய்ந்தது

காவல் நிலையத்தில் 

காவலர்க்குத் தொல்லை.


சிரித்துச் சிரித்துப் பேசுகிறான் 

செல்பேசியில் மனிதன்

குடும்பத்திடமிருந்து விலகிவிலகி…


கோடையில் சுற்றுலா

மகிழ்ச்சியில் பூங்கா

பள்ளிக் குழந்தைகள் வருகை.


குழந்தையின் அழுகுரல்

புதுஅவதாரம் எடுக்கிறாள்

ஆசுகவியாக அம்மா.


சாதிகள் இருக்குதடி பாப்பா

வீதிக்கு வீதி
சாதி திருமண மையங்கள்.


பிஞ்சுகளின் தின்பண்டம்

விதைக்கப்படும் நஞ்சு

பஞ்சுமிட்டாய்.


கவனிப்பாரின்றி

காவல் தெய்வங்கள்

வீட்டில் முதியோர்கள்.


நெடுஞ்சாலையில் வாகன விபத்து

வேடிக்கை பார்த்துப் போயினர்

இறந்தது மனிதம்.


வீழ்ந்தது உழவியல்

வளர்ந்தது உளவியல்

அறிவியல் முன்னேற்றம்.


ஆடம்பர வாழ்க்கை 

கடனில் மூழ்கியவன்

கடலில் மிதந்தான்.


ஆலயத்தில் அன்னதானம்

பசி நீங்கியது பக்தர்களுக்கு

மனம் மகிழ்ந்தார் கடவுள்.


திங்கள் தோறும் குறைதீர் கூட்டம்

மனுக்களுடன் குவிந்தனர் மக்கள்

குறையவில்லை குறை.


ஊழலுக்கெதிரான உறுதிமொழி

சொல்வதில் நாட்டமில்லை அதிகாரிக்கு

வாசலில் காத்திருக்கிறது கையூட்டு.


காலம் மாறிவிட்டது

கதைத் தாத்தாக்கள் இல்லை

செல்பேசியில் சிறுவன்.


மனிதனுக்கு நலம் வேண்டி

மாலையுடன் நிறுத்தப்பட்டது

பலி ஆடு.


மீண்டும் வா மழையே!

நனையக் காத்திருக்கிறாள்

மொட்டைமாடியில் மகள்.


வாகன விபத்து

ஓடிவருகிறது கூட்டம்

புகைப்படம் எடுக்க.


வீட்டில் தொலைத்து 

வீதியில் தேடும் கூட்டம்

மண்பானைச் சமையல்.


மரத்தை அழித்தான்

வயலை அழித்தான்

தொலைந்தது நோயற்ற வாழ்வு.


மழையால் உயிர்த்தெழுந்தன

மண்ணில் செடியும்

விவசாயியின் மனமும்.


குனிந்துசெல்லும் குடிசை வீடு

நிமிரச் செய்தது

அன்பின் விருந்தோம்பல்.


சாதி மாநாடு

பாதுகாப்புடன் செல்கிறது

காவல்துறை வாகனம்.


அமைச்சர் பதவி 

அடிமனதில் பயம்

எந்த மத்தியச் சிறையோ?


பாடுபட்டு விளைவித்தேன்

மொத்தமாய் பறித்துக்கொண்டான்

கடன்காரன்.


சொல்லாமலேயே
அடையாளம் கண்டேன் 

கந்தலாடையில் விவசாயி.


பாட்டாளியின் அருமை 

உணர்ந்தான் அரசியல்வாதி

வந்தது தேர்தல்.


தொடரும் சண்டைகள்

பழிவாங்கும் செயல்கள்

தொலைக்காட்சித் தொடர்கள்.


பரபரப்பில் வீடு

அவரவர் வேலையில் ஈடுபாடு

வந்துவிட்டது மின்சாரம்.


திடீர் தெய்வ பக்தி

கோயிலுக்குப் போகும் மாணவன்
வருகிறது தேர்வு.


முடியை முடிந்தவள்

முடியை அவிழ்த்தாள்

வயலில் நாற்று நடுகை.


கடையை அடைக்கவில்லை

கலவரத்தில் முடிந்தது

அமைதி ஊர்வலம்.


பெருமழையில் தத்தளிப்பு

நன்றி சொல்லும் மக்கள்

தெய்வமாய் மீட்புப்படை.


சதமடித்த வெயில்

வெறிச்சோடிய சாலை

மரத்தடியில் மக்கள் கூட்டம்.


சுமை சுமந்து 

சோகம் சுமந்து 

கருவைக் காக்கிறாள் தாய்.


புதிது புதிதாய் 

பலப் பல சபதங்கள்.

பிறந்தது புத்தாண்டு.


காலை மாலையென

மலர்களைச் சுமக்கின்றன

மழலையர் பள்ளிப் பேருந்துகள்.


அவ்வப்போது தலை தூக்குகிறது

அசுரத்தனமாக நாட்டுப்பற்று

கிரிக்கெட் போட்டி.


தேங்காய் உடைத்தல்

சிறப்புப் பூஜையில் இல்லை

திறமையில் வெற்றி.


விபத்தில் சிக்கியவரின்

கூக்குரல் கேட்டு

அலறி வருகிறது ஆம்புலன்ஸ்.


எழுத்து விதைகள்

மாணவர் மனதில் வளர்கின்றன

கல்விச் செடிகள்.


அரசுத் திட்டத்திற்கு

ஒதுக்கீடு செய்யப்பட்டது பணம்

மகிழ்ச்சியில் அரசியல்வாதி.


வரலாறு காணாத விலை

கூட்டம் குறையவேயில்லை

நகைக்கடை.


தள்ளாடி நடக்கும் தாய்

ஆறுதலாக அழைத்துவரும் மகள்

கையில் முதியோர் உதவித்தொகை.


மக்கள் பெருக்கம்

வாகனப் பெருக்கம்.

அதே சாலை.


வருத்தத்தோடு நிற்கின்றன

வகுப்பறைக் கட்டடங்கள்.

மே மாத விடுமுறை.


தலைமுறை கடந்த நினைவுகள்

தாத்தாவின் பெயரைச் சொல்கின்றன

கம்பீரமாய் நிற்கும் மரங்கள்.


கூடி வாழும் உள்ளங்கள்

கூடிக்கொண்டே இருக்கின்றன

முதியோர் இல்லங்கள்.


ஓடி விளையாடிய கண்மாய்

உருக்குலைந்து கிடக்கிறது

ஓம்சக்தி நகர்.


பள்ளிக்கு வந்தன காக்கைகள்

மதிய உணவிற்காக

மாணவர்களைத் தேடி.


மண்ணைப் பொன்னாக்கும்

மதிப்புமிகு தலைவன்

மதிப்பிழந்த உழவன்.


பள்ளிப் பாடங்கள் இல்லை

பாரம்பரியம் படிக்கும் குழந்தைகள்

மகிழ்ச்சியில் கோடை விடுமுறை.


பூ வியாபாரிக்குக்

கலப்புமணமே கைகொடுத்தது

கண்ணைக் கவரும் கதம்ப மாலை.


பணம் பெறாதவனின் கேள்வி

தடுமாறும் அரசியல்வாதி

தேர்தல் வாக்குறுதி.


மகிழ்ச்சியில் வேலைக்காரன்

சிந்திய வியர்வை உலரவில்லை

கிடைத்தது கையில் கூலி.


ஐந்தாண்டுக் கொள்ளைக்குப்

பிள்ளையார் சுழி 

ஓட்டுக்குப் பணம்.


கொள்கைக் கூட்டணி பிரிந்தது

கொள்ளைக் கூட்டணி இணைந்தது

குற்றுயிராய் ஜனநாயகம்.


விஞ்ஞானத்தில் சாதனை வளர்ச்சி

மலைவாசியின் ஊருக்கில்லை சாலை

இன்னமும் மண் பாதை.


அடைபடாத கடன்

அடைத்துவிட்டது 

காதணி ஓட்டை.


சுற்றுலாப் பயணிகள் வருகை

சோகத்தில் ஊட்டி

நெகிழிப் பயன்பாடு.


ஒவ்வொரு நாளும் யுகம்

தினம் தினம் பயம்

முடிவிற்குக் காத்திருக்கும் வேட்பாளர்.


கணினி யுகம்

களிமண்ணில் விளையாட்டு

மண்ணை மறக்காத மகள்.


ஏழையின் வீட்டில்

நிறைந்து கிடக்கிறது தங்கம்.

மகளைக் கொஞ்சும் தாய்.


பேச்சுப்போட்டிக்கு ஒத்திகை

பூக்களைத் தூவி வாழ்த்தியது

கண்மாய்க்கரை வேப்ப மரம்.


தன்மேல் மிதிவண்டி பயணிக்க

ஏங்கித் தவிக்கிறது

கிராமத்துச் சாலை.

Post a Comment

0 Comments