பள்ளிக் காலம் - சிறுவர் பாடல்
தமிழ்நாடு இபேப்பர்.காமில் 15 - 02 - 2024 அன்று பிரசுரமானது.
துள்ளித் திரியும் பள்ளிக் காலம்
சொல்லி மகிழ்வோம் எல்லா நாளும் !
நட்பை இணைக்கும் அன்புப் பாலம் !
முதுமை வரையில் மனதை ஆளும் !
வண்ணம் நிறைந்த வகுப்பில் தான்
எண்ணம் எங்கும் கல்வித் தேன் !
கதையும் பாட்டும் சிரிக்க வைக்கும் !
கவலை நீங்கிப் பறக்க வைக்கும் !
எண்ணும் எழுத்தும் எழுதிடப் புரியும் !
கண்ணும் கருத்துமாய் மனதினில் விரியும் !
பென்சிலும் பேனாவும் ஏட்டினை நிறைக்கும் !
பெற்றோர் கவலையைக் காலம் குறைக்கும் !
சின்னச் சின்ன விளையாட்டில் மனம்
சேர்ந்தே நட்புடன் மகிழ்ந்திடும் தினம்!
கூடி வாழும் அன்பைப் பெற்றோம் !
குழந்தைப் பருவத்தில் நல்லதைக் கற்றோம் !
நாள்கள் பலப்பல விரைந் தோடும்
பள்ளிக் காலத்தை மனமும் தேடும் !
மீண்டும் மீண்டும் அசை போட
பள்ளிக் கால நினைவுகள் வேண்டும் !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர்,
இளமனூர் , மதுரை.
செல் - 97861 41410
0 Comments