கவியரங்கம் - கவிதை - இன்றைய தலைமுறையினர்க்குச் சொல்ல வேண்டியது கல்வி - மு.மகேந்திர பாபு

 


கவியரங்கம் - கவிதை


உலகம் முழுமையும் உலவும் தமிழே !


உயிரில் உணர்வில் கலந்த தமிழே !


உன்னை வணங்கி கவியுரை தொடுக்கிறேன் !


உன்னில் இருந்தே வார்த்தை எடுக்கிறேன்,


புத்தாண்டு பூக்க , 

கவி தை மகள் நம்மையெல்லாம்

ஒன்று சேர்க்க , 

முத்தமிழ்ச் சொல்லெடுத்து 

முகமலர்ந்து முன்னே இருப்பவர்களுக்கும்,

கண்ணெனக் கவியரங்கத்

தலைமை ஏற்றவருக்கும் , 

வாய்ப்புத் தந்த வள்ளல் பெருமக்களுக்கும்

என் தமிழ் வணக்கம்.


செல்வத்தின் பெயர்கொண்ட நான்

கல்வியைப் பற்றிக் கவிபாட வந்தேன்.


திருவள்ளுவர் தினத்தில்

நம்மைத்

திரும்பிப் பார்க்கச் செய்யும்

ஆறு தலைப்புகள்.


இந்தச் செவ்வாய் - இதை நீ செய்வாய்

என எனக்குப் பணித்தது.

மன்றம் தந்த தலைப்போ இனித்தது.


இளைய தலைமுறைக்குச்

சொல்ல வேண்டியதும்

அவர்கள் மனதை

அள்ள வேண்டியதும்

நமது பொறுப்பு. 

இதில் ஏது மறுப்பு ?


பிணி தீர்க்கும் மருத்துவமா ?

உடல் சோர்வு போக்கும் 

உணவா ?

உச்சத்தைத் தொடும் ஒழுக்கமா ?

உலகம் உய்ய வழிவகுக்கும்

வேளாண்மையா ?

அறத்தைக் கற்பிக்கும் கல்வியா ?

மரபின் வழிவந்த பண்பாடா ?

என அன்போடு தந்தனர் அறுவகைத் தலைப்புகள்.


ஆறும் சிறப்புதான் என

பார்த்த உடன்

யாரும் சொல்வார்கள்.

ஆயினும் , 

ஐந்தாம் இடத்தில் உள்ள 

கல்வியே இன்றைய 

தலைமுறைக்குத் தேவை என

ஐயமின்றி என்றைக்கும் சொல்வார்கள்.


தமிழரின் கல்வி 

தனித்துவம் மிக்கது.

தரணி போற்றும்

மகத்துவம் பெற்றது.


ஒரு பிறப்பில் கற்ற கல்வி

ஏழு பிறப்பிற்கும் வரும்.

ஈடில்லா இன்பம் தரும்.


நுனிப்புல் மேய்வதல்ல 

தமிழரின் கல்வி . 

கற்பவற்றைக் கசடு இன்றிக் கற்று

ஆசிரியர்களின் அறவுரையையும் 

அறிவுரையும் பெற்று 

வாழ்வியலோடு இணைப்பதுதான் தமிழரின் கல்வி.


உலகைப் பார்க்க இரண்டு கண்கள்.

மற்றவர் உள்ளம் அறிய

இரண்டு கண்கள்.

அவை எண்ணும் எழுத்தும்.

இளைய தலைமுறையே

இதிலே கவனத்தைச் செலுத்தும்.


கண்களின் வழி 

காணலாம் காட்சி.

அந்தக் கண்களுக்கு மாட்சி

கல்வி என்பதே தமிழரின் சாட்சி.

கற்றோரின் கண்

உலகைச் சுற்றி நம்மைச் செதுக்கும் இசைப்பண்.


தோண்டத் தோண்டச்

சுரப்பது மணற்கேணி.

இளைய தலைமுறையை

உயர்த்துவது கல்வி எனும் ஏணி.

அறம் சார்ந்த கல்வி

இளைய தலைமுறையின்

கரம் உயர்த்தும்.


கற்றவனுக்கு எல்லா ஊரும்

தனது ஊராகும்.

எங்கு சென்றாலும்

கல்வியால் கிடைப்பது

நல்ல பெயராகும்.


எத்தனை செல்வங்கள்

இருந்தாலும் அவை 

அழியும்.

என்றேனும் நம்மை விட்டுப் பிரியாத செல்வம் ஒன்றே ஒன்று அது கல்வி.

அதை இத்தினத்தில் 

நினைப்பது நன்று.


இளைய தலைமுறைக்குச்

சொல்ல வேண்டும்

கல்வியின் பெருமையை.

மற்ற ஐந்தையும்

தானாகக் கொண்டுவரும் .

வாழ்க்கையைத் தேனாகக் கொண்டு செல்லும்.

கல்வி ஒன்றே உள்ளத்தையும்

உலகையும் வெல்லும்.


பொருள் புரியாத மனனத்திற்கு விடை கொடுப்போம்.

தமிழரின் கல்வியை

குறளில் இருந்து எடுப்போம்.

திருவள்ளுவர் தினத்தில்

கவியரங்கமாய்த் தொடுப்போம்.

நினைத்ததை வென்று முடிப்போம் !

வாருங்கள் இளைய தலைமுறையோடு சேர்ந்து

நாமும் படிப்போம் !


மு.மகேந்திர பாபு ,

15 - 01 - 2024

Post a Comment

1 Comments