கிராமத்து வாழ்க்கை - பாடல் ( மு.மகேந்திர பாபு )

 


கிராமத்து வாழ்க்கை - பாடல்   ( மு.மகேந்திர பாபு )

கும்பா நிறைய கம்மங்கூழுதான் - அதக்
குடிச்சுப்புட்டா வாழலாமே ரொம்ப நாளுதான்
நோயின்றி இருப்பவன் கிராமத்து ஆளுதான் - உடம்பு
நோயில மாட்டிக்கிட்டா வாழ்க்கை பாழுதான்

மணிக்கணக்கா வேல செய்யும் உடம்புதான் - மனம்
தளராம இருக்குதையா தினமும்தான்
அடைமழையும் கோடை வெயிலும் ஒன்னுதான் - எதையும்
தாங்கி நிக்கும் மனசு கிராமத்து மண்ணுதான்

காலைமுதல் மாலைவரை உழைப்புதான் - ஆனாலும்
இல்லையே எங்க உடம்பில் இப்ப களைப்புதான்
காடு வயல் அலையுறோமே நாங்கதான் - எங்கள
கண்டுக்காம இருப்பதெல்லாம் நீங்கதான்

கம்மங்கருது விளைஞ்சு நிக்குது வானம் பாத்துதான் - அதை
வாட்டி எடுத்து கசக்கும் போது கமகமக்குது மாலைக் காத்துதான்
கேப்பக்கருது வளைஞ்சு கிடக்குது பூமிபாத்துதான் - வாழ்க்கை
நம்பியிருக்கு சாப்பாட்டுக்கு ரெண்டையும் சேத்துதான்.

ஓட்டுவீடு குடிசைவீடு எங்க வீடுதான்  - கிராமம்
ஒத்துமைக்கு எங்களோட ஈடுபாடுதான்
சுத்தமான காத்து வருது ஊருக்குள்ள - நாளும்
சுகமாதான் வாழுறோம்னு கூறுபுள்ள

சிட்டுக்குருவி கூட்டம் போல சின்னப் புள்ளக  - தினம்
சிறகடிச்சு பறக்குதையா பால்ய விளையாட்டுல
பாரம்பரியம் தாங்கி நிற்பது கிராமம் மட்டுந்தான்  - அதை
பாதுகாத்தா மகிழ்ச்சி நிக்கும் விண்ணைத் தொட்டுத்தான்

பாடலாக்கம்

மு.மகேந்திர பாபு , ஆசிரியர் ,
கருப்பாயூரணி , மதுரை - 20.

Post a Comment

0 Comments