விதை - கதை - மு.மகேந்திர பாபு

 

விதை
--------

லீவுன்னாலே பசங்களுக்குக் கொண்டாட்டம், பெத்தவங்களுக்குத் திண்டாட்டம் என்றவாறே , தன் மகன் அமுதனைக் கூப்பிட்டார் குமரன்.

பதில் வரவில்லை. "விளையாடப் போயிருப்பான் " என்றாள் அமுதனின் அம்மா தமிழரசி.
" என்னடி விளையாட்டு வேண்டிக் கெடக்கு ?  காலையில சாப்பிட்ட உடனே விளையாடப் போறான். மதியம் சாப்பிட வர்ரான். பிறகும் எங்காவது போயிடுறான். சாயந்திர நேரமாவது வீட்ல இருக்கலாம்ல  ? மழை நேரம் அதுவுமா ?" என்றவாறே தன் குரலை உயர்த்தினார் குமரன்.

" அமுதன் ... அமுதன் ..."  குரல் உயர்த்தி அழைத்தும் பதில் வராததால் , கோவம் மூக்கின் மேல் அமர்ந்து கொண்டது குமரனுக்கு.

வீட்டுக்குச் சற்றுப் பின்புறமுள்ள தோட்டத்தில் அமுதனும் அவன் நண்பன் இனியனும் சின்ன குச்சி வைத்து குழி தோண்டிக் கொண்டிருந்தனர்.
இருவரின் கைகளிலும் , உடம்பிலும் , உடையிலும் ஈரமண் அப்பியிருந்தது. அதைப் பார்த்ததும் குமரனின் கோவம் இன்னும் கூடியது.

"  என்னடா பண்ற ? எத்தன தடவ கூப்பிடறது ? மண்ண ஏன்டா நோண்டிக்கிட்டிருக்கிங்க ?" எனக் கேள்விகளால் துளைத்தெடுத்தார்.

கூப்பிட்டா வரமாட்டியா ? என்றபடியே ஓங்கி ஒரு அடி அடித்தார் அமுதனை.எதிர்பாராத அடியினால் மிரண்டு போனான் அமுதன்.ஒரு கையில குச்சி , அந்த கையில என்னடா வச்சிருக்க ? என மூடியிருந்த கையைப் பார்த்துக் கேட்டார்.

" அப்பா , எங்க ஆறாம் வகுப்பு சாருங்க , வீட்ல ... தோட்டத்தில இருக்கிற காலியிடத்தில மரம் நடச் சொன்னாங்கப்பா .அதான் நானும் என் நண்பன் இனியனும் குழி தோண்டி விதை போடப் போறோம்பா என்றபடியே மூடியிருந்த கையைத் திறக்க , அந்தப் பிஞ்சுக் கையினுள் இரண்டு விதைகள் இருந்தன.

"சாரிடா .,. கோவத்தில தெரியாம அடிச்சுட்டேன் " எனச் சொல்லி இருவரையும் ஆரத்தழுவ , அவர் கண்களிலிருந்து கண்ணீர் அமுதனின் கையில் இருந்த விதைகளின் மேல் விழுந்தது.

மு.மகேந்திர பாபு ,

Post a Comment

0 Comments