மதுர - புதிய பாடல்

 


மதுர - புதிய பாடல் 

மதுரன்னா மல்லி.-,எங்க
மனங்கிளம்பும் துள்ளி
நட்புக்களை அள்ளி
ஆடுவோம்டா கில்லி

மல்லிகைப் பூவப் போல நம்ம மதுரக்காரன் மனசு
அழகர் மலையைப்போல பசுமையான வயசு
வைகை ஆத்தைப் போல நீண்டிருக்கு நம்ம பாசம்
வாழ்க்கை எல்லை  வரை வந்திடுமே எங்க நேசம்

தேரோடும் வீதியெல்லாம் நாங்கதானே சுத்தி வந்தோம்.
ஊரோடு வர்ற கூட்டம் சாமியத்தான் வேண்டுதையா
சீரோடு வாழ்ந்திடத்தான் சித்திரையில் கூடுறோமே
சாமி வேசங்கட்டி சந்தோசமா ஆடுறோமே !

பச்சப் பட்டுடுத்தி அழகர் இறங்குனாத்தான்
பசுமை செழித்து எங்கும் வளமை நிறைந்திடுமே
மீனாட்சி  பார்வையெல்லாம் மதுர மண்ணில் பட
தேனாட்சி நடக்குதிங்க  நாளெல்லாம் திருவிழாதான்

மலைகள் வளர்ந்திருக்கு கலைகள் செழித்திருக்கு
மன்னரின் கோட்டை போல மனதில் வலுவிருக்கு
சினிமா ஜெயிப்பதெல்லாம் மதுர மண்ணவச்சு
அரசியல் ஆழம் கூட எங்களின் அன்ப வச்சு

உடம்பு குளிர்ந்திடுமே ஜிகர்தண்டா குடிச்சாத்தான்
உள்ளம் மலர்ந்திடுமே மதுரய நெனச்சாத்தான்
மானமுள்ள தமிழனாகத் தமிழை வளர்த்தோம்
வீரமுள்ள தமிழனாக வெற்றியும் பெற்றோம் !

ஜல்லிக்கட்டு காளை போல துள்ளிக்கிட்டு நாங்க போவோம்
தூங்கா நகரம் தான்டா தொட்டிடுவோம் சிகரம் தான்டா
பளபளக்கும் மகால் தூணுபோல ஜொலிஜொலிக்குது நம்ம வீரம்
ஒயிலாட்டம் கரகாட்டம் நம் மனம் மயக்க கொண்டாட்டம்

மல்லிகைப் பூ இட்டலிய வாயில் போட்டுக்கிட்டா ருசிதான்டா
கொத்துப் பரோட்டாவ கெத்தா தின்னா தீரும் பசிதாண்டா
மன்னனும் நீதி மறந்தா மடிக்கும் நகர்தான்டா
மனிதம் வளர்க்கும் எங்க மதுர நகர்தான்டா

பொன்னு விளையுற பூமி மண்ணுதான் எங்க சாமி
மகாத்மா காந்தியத்தான் மனம் திறக்கச் செய்த பூமி
மனிதம் வளர்க்கும் ஊரு மதத்தை மறந்தது பாரு
வீரம் விளைஞ்ச மண்ணு வெற்றிக்கொடி நிலைநாட்டு கண்ணு

பாடலாக்கம்

மு.மகேந்திர பாபு

Post a Comment

0 Comments