வலி - மு.மகேந்திர பாபு

 

வலி
-----

காலை எழுந்தவுடன்
தேநீரோடு
நாளிதழ் செய்திகளைப் பருகுகிறாய்.

குளித்து வந்தவுடன்
சுடச்சுட காலைச் சிற்றுண்டி
உண்கிறாய்.

விடுமுறை நாளில்
பூங்காவிற்கு அழைத்துச்செல்லுங்கள்   என்ற
குழந்தைகளின் ஆசையை
நிராகரித்துவிட்டு,
நண்பர்களோடு சுற்றிவந்து
நண்பகல் பொழுதினைப் போக்குகிறாய்.

சிலநேரம் தொலைக்காட்சியிலும் ,
பலநேரம்  முகநூலிலும் மூழ்கி
நேரத்தைச் செலவு செய்கிறாய்.

மாலைப் பொழுதினில்
மீண்டும் ஓடிவிடுகிறது
மனதோடு உன் உடலும்
திரையரங்கம் நோக்கி.

இரவினில் வருகிறாய்.
சூடாகச் சாப்பிட்டுப்
பழகிப் போன உனக்கு
இரவு உணவும் சூடாகவே தருகிறேன்.

விளக்குகளை அணைத்தபின்
விருப்பமாய்
அணைக்கத் தொடங்குகிறாய் என்னை.

சிறு பூச்சியென
உடலெங்கும் ஊர்ந்து
பெரு மிருகமாய்
என்னுள் இயங்கத் தொடங்குகிறாய்.

வலிக்கத் தொடங்குகிறது
உடம்போடு மனதும் !

மு.மகேந்திர பாபு

Post a Comment

0 Comments