மழைத் துளி
மண்தொடுதே மழைத்துளி வாசத்தோடு
மனம்தொடுதே மழைத்துளி பாசத்தோடு
தட்டான் கூட்டம் தாழப் பறந்ததே !
ஆட்டுக் கூட்டம் நெருங்கி நடந்ததே -
மழையைச் சொல்ல
!
கருப்பு வண்ணம் அடித்தது போல் மேகமானதே !
நெருப்பு கங்கு நீண்டது போல் மின்னல் வெட்டுதே !
கடகடவென பாத்திரம் உருள்வதைப் போல் இடிஇடிக்குதே !
மழைக்காத்து வந்து உடல் தழுவ கிளுகிளுங்குதே !
காத்திருந்த வயல்வெளி தான் உடல் குளிர்ந்ததே !
கண்மாய் ஆறு நிறைந்திடத்தான் மனம் நிறைந்ததே !
காய்ந்து கிடந்த கரிசக்காட்டில் பச்சை தெரியுதே !
பாமரனின் உள்ளத்திலே மகிழ்ச்சி விரியுதே !
ஏர் கலப்பை தூக்கி நடக்குதையா எங்க கூட்டம்
ஊர் முழுக்க வாண்டுகளின் ஆட்டம் பாட்டம்
விதை முளைத்து வருகையிலே முகம் மலருதே !
பச்சப்புள்ள போல நித்தம் செடி வளருதே !
செடிசெடியாய் கொடிகொடியாய் காய்ச்சுத் தொங்குதே !
சிரித்த முகத்தில் மகிழ்ச்சிதானே தினமும் பொங்குதே !
மாதந்தோறும் மழையினாலே கம்மாயிலே நீர் தங்குதே !
மழைநீரை நாமும் சேகரிக்க வளமை நிக்குதே !
மழையைபப் போல வள்ளல் இங்கே யாருமில்லையே !
மழையினாலே மகிழாத எந்த ஊருமில்லையே !
வாழ்வோடு கலந்ததையா வானத்து மழைத்துளி
வாழ்வாங்கு வாழ்ந்திட மழைதானே உயிர்த்துளி !
மு.மகேந்திர பாபு .
0 Comments