மு.மகேந்திர பாபு

 


கோடை விடுமுறைக்குப்பின்
திறந்தது பள்ளிக்கூடம்
மகிழ்ச்சியில் பெற்றோர்கள்.

உம்மனா மூஞ்சிகளாக இருந்த
வகுப்பறைகள் கலகலக்கத் தொடங்கின
மாணவர்கள் வரவினால் !

கவிதைப் பூங்கா - பாக்யா வார இதழுக்கு

பெருக்கெடுத்து ஓடும் வைகை
துள்ளிக் குதிக்கும் மீன்கள்
மகளின் ஓவியத்தில் .

சிறுவர் புத்தக தினம்
ஏக்கத்தில் புத்தகங்கள்
கணினி முன் சிறுவன்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
வாசிக்கும் பள்ளிச் சிறுமி
விவாகரத்தில் பெற்றோர்கள்.

ஓய்வெடுக்கிறது மின்விசிறி
எல்லார் வீடுகளிலும்.
மின்தடை.

பெரிதாய் இருக்கிறது
கோவிலில் சாமியை விட
உண்டியல்.

கடவுளை வணங்கச் செல்பவர்கள்
கடவுளாக மாறிவிடுகிறார்கள்
திருவோட்டில் காசிடும்போது !

ஆண்டு முழுவதும் எதிரே இருந்தும்
வாழ்க்கையில் முன்னேறவில்லை யாசகன்
கோபுர தரிசனம் கோடிப்புண்ணியம்.

தொட்டுத் தொட்டு
சிரித்துச் சிரித்துப் பேசுகிறான்
ஆன்ட்ராய்டு போனில் மனிதன்
உறவுகளிடமிருந்து விலகி !

காட்டாற்று வெள்ளமென
கவலை கொண்டது
புற்றிலிருந்து வெளியே வந்த எறும்பு
முதல் மழைத்துளி பட்டவுடன் !

கவிச்சூரியன் மின்னிதழ் - 36

சிட்டுக்குருவிகள் எங்கும் பறக்கின்றன
சிட்டுக்குருவிகள் தினத்தில் மட்டும்
நாளிதழ்களிலும் , முகநூலிலும் !

ஒலிக்கிறது திரையிசைப்பாடல்
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு ?
இப்போது தட்டுப்பாடு மட்டுமே !

கை நிறையப் பணம்
ஏங்குகிறது மனம்
ஒரு சொட்டுத் தண்ணீருக்காக !

நீண்டு கிடக்கும் நதிகள்
மாண்டு கிடக்கின்றன
நீரின் ஓட்டமின்றி !

அணுகவும்
தண்ணீர் தேவைக்கு மனிதா !
இனி வேற்று கிரகங்களை.

மனிதனின்  சோகம் ்
தீர்த்த திரையரங்குகள்.
இப்போது சோகத்தில் !

மக்களை மாற்றிய திரையரங்குகள்
மாறிவருகின்றன
வணிக அங்காடிகளாய் !

துளிப்பாக்கள்.

@  செருப்பைக் கழட்டிவிட்டு
      உள்ளே நடந்தார் அப்பா.
      கோவிலானது வயல்.

@   பாகப்பிரிவினையின்றிக்
      கூட்டுக்குடும்பமாகத்தான்
      வாழ்கின்றன மரங்களில் பறவைகள்.

@   நெருப்போடு புகைகிறது
      கையில் சிகரெட்டும்
       புகைப்பவர் வாழ்க்கையும் .

@    விளையாத காடு
       வராத பறவைகள்.
       வருத்தத்தில் சோளக்காட்டுப் பொம்மை.

@    குறை மாதம்தான் பிப்ரவரி
       நிறைமாதமாகியிருந்தது
       காதலர் தினத்தால் .

கோடை காலம்தான்
குளிர்காலமாக மாறியது
நீ ஊருக்குள் வந்து சென்ற பின்பு.

புல்தரையில் நடக்கிறாய்
தலை நிமிர்ந்து பார்க்கின்றன புற்கள்.
தன்னை வருடியது யாரென்று !

விதைக்குள் அடைபட்டிருக்கும்
மரத்தைப் போல்தான்
என் கவிதைக்குள் அடைபட்டிருக்கிறாய் நீ !

மரமும் மனமும்

@  ஒவ்வொரு பூக்களாகச் சென்று
      வகுப்பெடுக்கிறது வண்ணத்துப் பூச்சி
     தேனைக் கட்டணமாகப்பெற்று !

@   மகிழ்ச்சியில் மரம்
     புதிதாய்ப் பிறந்திருக்கின்றன
     கூட்டில் பறவைக் குஞ்சுகள்.

@   பயணம் பற்றிப் பேசி மகிழ்கின்றன
     மாலையில் கூடடைந்த பறவைகள்.
     சத்தமாகத் தங்கள் மொழியினில் !

@   வெட்டாதீர்கள் எங்களை !
     வருத்தத்தை வெளிப்படுத்தின மரங்கள்.
     இலைகளை உதிர்த்து !

@    புத்தனின் எதிர்ப்பை மீறி
      வெட்டப்பட்டுக் கிடந்தது
      போதி மரம்.

மு.மகேந்திர பாபு

துளிப்பாக்கள்

@  முயற்சியே முதல் வெற்றி
மண்முட்டி முளைத்து வருகிறது
வயலில் விதை.

@  கோவில் திருவிழா
கொண்டாட்டத்தில் மக்கள்.
வருத்தத்தில் ஆடுகள்.

@  வறண்டு போன நதியினைத்
தின்று கொண்டிருக்கிறது
மதிய வெயில்.

@  வீட்டைச் சுற்றிலும் மரங்கள்
அழகிய நீரோடை
மகிழ்கிறாள் மகள் ஓவியம் வரைந்தபின்பு.

@  தூங்கும் மாணவன்
தாளைப்புரட்டிப் படிக்கிறது
மின் விசிறி.

மக்கள்தொகை விளம்பரம்
சிறப்பாக நடித்ததற்குப் பாரட்டு.
சோகத்தில் விளம்பர முதிர்கன்னி.

முதுமொழிக்கு முக்கியத்துவமாம்
கல்லூரியில் காதல்.
பருவத்தே பயிர்செய்.

ஆசிரியரின் அதட்டல் இல்லை.
வரிசையில் செல்கின்றன
வானத்தில் பறவைகள்.

கரும்பலகையில் எழுதி எழுதி
சாக்பீஸ் கரைந்தது.
மாணவர்களிடத்தில் நிறைந்தது கல்வி.

இறக்கை இருந்தும்
இடத்தைவிட்டுப் பறக்க முடியவில்லை.
மின்விசிறி.

வெட்டப்பட்டுக் கிடந்த மரங்களோடு
இறந்து போனது
பருவ மழை.

கவிதையாக்கம்

மு.மகேந்திர பாபு

மு.மகேந்திர பாபு


Post a Comment

0 Comments