சாதனைத் தலைமை ஆசிரியை தாமரைச் செல்வி - மு.மகேந்திர பாபு

 


சாதனைத் தலைமை ஆசிரியை தாமரைச் செல்வி .

'பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா !
பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா ! '

'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் ;
எட்டு  மறிவினில் ஆணுக்கிங்கே  பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி !

என்று தன் பாடல் மூலம் புரட்சி செய்தான் பாட்டுக்கொரு புலவன் பாரதி.

'மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல
மாதவஞ் செய்திட வேண்டுமம்மா !'  - என்றார் கவிமணி.

பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதுமில்லை. பெண்களைக் கொண்டாடும் வீடும் , நாடும் வெற்றி நடை போடும் என்பது உறுதி.

கல்வியில்லாப் பெண்கள் களர்நிலம்
அங்கு புல் விளைந்திடலாம்
நல்ல புதல்வர்கள் விளைவதில்லை - என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.

இன்று கல்வியில்லாப் பெண்கள் யாருமில்லை என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். இன்று பெண்கள் களர் நிலமல்ல. அவர்கள் விளைநிலம். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பமே உயர்நிலை பெறும்.

இன்றைய சூழலில் பெண்கள் தொடாத துறைகளே இல்லை என்று நாம் சொல்லலாம். அனைத்துத் துறைகளிலும் பல சோதனைகளைக் கடந்து , சாதனைப் பெண்களாக வரலாற்றில் தடம் பதித்து வருகின்றனர் . ' பெண்கள் நாட்டின் கண்கள் ' என்ற வாசகம் இன்று உண்மையாகி வருகிறது. கண்கள் இல்லையேல் காட்சி ஏது ? பல்துறை வித்தகர்களாகச் சாதித்து வருகிறார்கள் பெண்கள். அதிலும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் , ஆசிரியப் பணியில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருபவர்கள் இன்று பெண்கள்தான். ஒரு காலத்தில் கல்வி மறுக்கப்பட்டு வந்த பெண்கள்தான் இன்று கல்வியறிவினை நம் சமூகத்திற்கு வழங்கி வருகிறார்கள். அதிலும் பல்வேறு சாதனைகளைப் படைத்து சத்தமின்றி வெற்றிவாகை சூடி வருகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு ஆசிரியை ,தலைமைப் பண்புகளால் சிறந்து தமிழக அரசின் நல்லாசிரியர் விருதால் பாராட்டப்பட்ட ஒரு ஆசிரியைதான் இம்மாதம் நம் 'ஸ்மார்ட் மதுரை ' வாசகர்களோடு எண்ணங்களைப் பகிர்கிறார்.

மதுரை - சிவகங்கைச் சாலையில் வரிச்சியூரிலிருந்து வலதுபுறம் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குன்றத்தூர் என்ற குன்னத்தூர். குன்றம் இருக்கும் ஊராதலால் இது குன்றத்து ஊர்.இன்று குன்னத்தூர். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணப் பள்ளி அந்தக் குன்றில் உள்ளது. அதனருகே சிவனுக்கான குடைவரைக் கோவில் ஒன்றும் உள்ளது. அதனைக் கடந்து சென்றால் ஊரின் முகப்பில் இருந்து நம்மை முகமலர்ச்சியோடு வரவேற்கிறது மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியான குன்னத்தூர்.

அடுத்த ஆண்டில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட உள்ளது இப்பள்ளி. 1917 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியாகத் தன் பயணத்தைத் தொடங்கிய இப்பள்ளி , நடுநிலைப் பள்ளியாக இன்று உயர்ந்துள்ளது. சுற்றுச் சுவரைத் தாண்டி தன் கிளைக்கரங்களை நீட்டி வரவேற்கின்றன மரங்கள். கல்வியும் , சூழலும் இருகண்களென காத்துவருகிறார்  அப்பள்ளியின் தலைமையாசிரியை . யாரிந்தச்  சாதனையாளர் ? அவர்தான் திருமதி. தாமரைச்செல்வி அவர்கள் . 27 - 11 - 2006 முதல் இப்பள்ளியில் தலைமையாசிரியைப் பணி புரிந்து பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர். அவர்களோடு உரையாடிய போது  பேச்சில் தன்னம்பிக்கையும் , உற்சாகமும்  இன்னும் சாதனைகள் பல நிகழ்த்த வேண்டும் என்ற ஆர்வமும் அதிகமிருந்தது.

நான் பணியேற்ற போது ஒன்றிரண்டு மரங்களே பள்ளி வளாகத்தில் இருந்தது. நமது சுற்றுப்புறம் நலமாக , தூய்மையாக இருக்க வேண்டுமென்றால் அதற்கான ஒரே தீர்வு மரங்கள் என்று எண்ணினேன். மதுரை இராஜா பொறியியல் கல்லூரி மாணவர்களின் உதவியோடு முதலில் பத்து மரக்கன்றுகளை எங்கள் பள்ளி வளாகத்தில் நட்டு வைத்தோம். அதன்பின்பு ஒன்றிரண்டு மரங்களாக நட்டுவைத்து , இன்று மூலிகைச் செடிகள் , மரங்களென சுமார் 250 க்கும் அதிகமான மரங்கள் எங்கள் பள்ளி வளாகத்தைப் பசுமையாக்கி வருகின்றன. எங்கள் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தில் 60 மாணவ , மாணவிகள் இடம் பெற்று மிகச்சிறப்பாக தன்னார்வத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். இனிவரும் இளம் சந்ததியினர் நலமாகவும் , வளமாகவும் வாழ இயற்கை நன்றாக இருந்தால்தான் முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்களிடத்திலே விதைத்து வருகிறேன்.

இதற்கு உறுதுணையாக என்னோடு பணிபுரியும் 10 முத்தான ஆசிரியர்களும் பக்கபலமாக இருந்து , கற்பித்தல் பணியினைத் திறம்பட செய்து வருகிறார்கள்.  ஊராட்சி மன்றத் தலைவர், ஊர் பொது மக்கள் என அனைவரின் ஊக்கமும் , உதவியும் எங்கள் பள்ளிக்குத் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

கல்வியில் மட்டுமல்லாது கலை இலக்கியம் , விளையாட்டிலும் எங்கள் பள்ளி மாணவ , மாணவியர்கள் பல்வேறு வெற்றகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.  சுற்றுச் சூழல் சார்பாக நடைபெற்ற ஓவியம் , கட்டுரை , பேச்சுப் போட்டிகளில் எங்கள் மாணவர்கள் வெற்றி பெற்று மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பரிசு பெற்று வந்தனர். மதுரை மாவட்டத்தில் மிகச் சிறந்த சுற்றுச் சூழல் பள்ளியாக எங்கள் பள்ளி உள்ளது.  புவி வெப்பமடைதல் பற்றிய எங்களின் செயல்பாட்டிற்கு மதுரை மாவட்ட அளவில் இரண்டாவது பரிசு கிடைத்தது. விளையாட்டுப் போட்டிகளில் வட்டார மற்றும் மாவட்ட அளவிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

தலைமையாசிரியையாக இங்கு  பொறுப்பேற்ற உடன் சில பணிகளைச் செய்ய தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடினேன். சுற்றுச் சுவரின்றி இருந்த எங்கள் பள்ளிக்கு ' மதுரை சிட்டி லேடீஸ் சர்க்கிள் - 60 ' என்ற தொண்டு நிறுவனம் ஏழரை இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டித் தந்தனர். நான்கரை இலட்ச ரூபாய் மதிப்பில் ஒரு புதிய வகுப்பறைக் கட்டிடம் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் மூலமாகக் கட்டப் பட்டுள்ளது.

பள்ளியின் நுழைவு வாயிலை எங்கள் ஊராட்சியின் முன்னாள் தலைவர் திரு. பாண்டி , இந்நாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.திருப்பதி , ஊராட்சி எழுத்தர் பால்பாண்டி மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து ஏற்படுத்தித் தந்தனர்.  ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திரு. பாண்டி அவர்கள் பெயர்ப்பலகை அமைத்துத் தந்ததோடு தொடர்ந்து எங்களுக்கு உதவி செய்து வருகிறார்.

பாரத மாநில வங்கி ( SBI )  மூலமாக இருபது மின்விசிறிகள் , சுத்திகரிக்கப்பட்ட குடீநீர் கருவி போன்றவற்றை எனது முயற்சியின் மூலமாக எங்கள் பள்ளிக்குப் பெற்றுத் தந்துள்ளேன். தனியார் பள்ளிகளைவிட எங்கள் பள்ளி சிறப்பாக உள்ளது.

எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் , மேலூர் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியராக இருந்த திரு.இளங்கோவன் மற்றும் அவரது சகோதரர் முனைவர் திரு. சதாசிவம் , திரு.சண்முகவேல் ஒன்றிணைந்து ஒன்றரை இலட்ச ரூபாய் மதிப்பில் கலையரங்கம் ஒன்றைக் கட்டித் தந்துள்ளனர். இதில்தான் எங்கள் பள்ளியின் அனைத்து விழாக்களும் சிறப்பாக அரங்கேறி வருகின்றன .செஸ் எனும் தொண்டு நிறுவனம் எங்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வருகிறது.

ஆசியர்களுக்கு இருக்க வேண்டிய கலகலப்பான பேச்சுத் திறமையும் , நகைச்சுவை உணர்வும் இவரது பேச்சில் சரளமாக வந்து கொண்டிருந்தது. சிட்டம்பட்டி நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிந்த போது , ஆசிரியர்களுக்கிடையே நடைபெற்ற கற்பித்தல் போட்டியில் சமூக அறிவியல் பாடம் நடத்தி ' சிகரம் தொட்ட ஆசிரியர் ' என்ற விருதினை 2007 அன்று  இவர் பெற்றிருக்கின்றார்.

இத்தனை சிறப்பு மிக்க ஆசிரியை திருமதி.தாமரைச் செல்வி அவர்களின் பணிக்கு சிறந்த அங்கீகாரமாக தமிழக அரசானது ' நல்லாசிரியர் ' விருதினை 2008 - 2009 ஆம் கல்வி ஆண்டில் வழங்கி பெருமைப் படுத்தியுள்ளது. ஆர்வத்துடனும் , ஈடுபாட்டுடனும் தன் பணியினைச் செய்து வரும் தாமரைச் செல்வி போன்ற ஆசிரியைகள் இன்றைய சூழலில் இளம் தலைமுறைக்கு உதவும் ஏணிகளாக இருந்து வருகின்றார்கள். 'ஆசிரியப் பணி அறப்பணி , அதற்கு உன்னை அர்ப்பணி ' என்ற கூற்றினை தன் செயல்பாடுகளால் உண்மையாக்கி வருகிறார் இவர்.

மாணவர்களின்  கற்றலை கணிப்பொறி மூலமாகத் தூண்டி , அதில் இன்னும் நிறைய சாதிக்க வைக்க வேண்டுமென விரும்பி , தன் முயற்சியால் ஊர்ப்பொது மக்கள் மூலமாக முதன்முதலாய் ஒரு கணினியைப் பெற்று , கிராமப்புற மாணவர்களின் கணினிக் கல்வியினை நிறைவேற்றியுள்ளார். இன்று பல கணினிகள் பள்ளியில் இருந்தாலும் , முதல் கணினியினை மக்கள் மூலமாகப் பெற்றுத் தந்ததை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டார்.

இன்னும் பல நல்ல செயல்களைச் செய்ய சக ஆசிரியர்களோடு  திட்டமிட்டு வருகிறேன். எங்கள் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலர் பள்ளிக் கல்வியை முடித்து , பட்டதாரிகளாகவும் ,பொறியாளர்களாகவும் உள்ளனர். கிராமப்புற மாணவர்களாலும் அனைத்துத் துறைகளிலும் சாதிக்க முடியும் என்பதை நிருபித்து வருகின்றனர் என்றார்.

இந்த உலகின் புனிதமான இரண்டு  இடங்களாக தாயின் கருவறையையும் , ஆசிரியர்களின் வகுப்பறையையும் சொல்வார்கள். தாய்மை உணர்வோடு , வகுப்பறையைப் புனிதமாக்கி வரும் தாமரைச் செல்வி போன்ற தலைமைப் பண்புகள் நிறைந்த ஆசிரியைப் பெருமக்களை இந்த மகளிர் தின மாதத்தில் மகிழ்ச்சியோடும் , பெருமையோடும் கரவொலி எழுப்பி வாழ்த்துகிறது நமது ' ஸ்மார்ட் மதுரை ' மாத இதழ்.

பெண்களைப் போற்றுவோம் !

மகளிர் தினத்தில் மட்டுமல்ல ... தினமும் !

கட்டுரை.

மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , இளமனூர் .
பேசி - 97861 41410.

Post a Comment

0 Comments