தொரட்டிக் குச்சி - மு.மகேந்திர பாபு

 

தொரட்டிக் குச்சி

தாத்தாவின்
உயரத்தைப் போன்று
மூன்று மடங்கு உயரமிருக்கும்
தொரட்டிக்குச்சி வீட்டின் முன்
வேலி மரத்தோடு ஒன்றியிருக்கும்.

தொரட்டிக் குச்சியோடு
தாத்தா நடக்கும் போது,
வெள்ளைக்காரத் துரையாக
நினைத்துக் கொண்டு
நடை போடுவார்.

சிறுவர்களுக்கு கொடிக்காய்ப்புளி பறிக்கவும்,
ஆட்டுக்குச் செல்லும்போது
வேலி நெத்து திருகிப் போடவும்,
படப்புகளில் சிக்கிக்கொண்ட
கிட்டிக் குச்சியினைத்
தட்டி விடவும் ,
மின்கம்பத்தில் சிக்கிக்கொண்ட
சட்டைத் துணிகளை எடுக்கவும்
மஞ்சனத்திப் பழம் தட்டிவிடவும் ...

இன்னும் பிற வேலைகளுக்காகவும்
எப்போதும் ஓய்வின்றி உழைத்த
தொரட்டிக் குச்சி கேட்பாரற்று
மூலையில் கிடக்கிறது
தாத்தாவின் மரணத்திற்குப் பின்பு!

மு.மகேந்திர பாபு ,

Post a Comment

0 Comments