பால்யகாலமும் , தோசையும

 

பால்யகாலமும் , தோசையும


தோசை இன்று தினசரி உணவு.
எனக்கோ அன்று திருவிழா உணவு.

அப்பா மாவாட்ட ,
அம்மா மாவு தள்ளிவிட
ஊர் நடுவில் இருக்கும்
பொது ஆட்டுஉரல் ' கடக் முடக் ' என
ஊர்க்கதை கேட்டு ஆட்டும்.

அதிகாலை நாலு மணிக்கெல்லாம்
அடுப்பு மூட்டி விடுவாள் அம்மா.
அடியறுத்த கத்தரிக்காயால்
எண்ணெய் தடவி , தோசைச் சட்டியில்
சுரீர் என ஊத்தும்போது முழிப்பு வந்துவிடும்.

சுட்ட தோசையை
பனை நார்ப்பெட்டியில் அடுக்க
விரைத்துக் கொண்டும் ,
முறைத்துக் கொண்டும்
வளர்ந்து கொண்டிருக்கும் அனுமார் வால் போல.!

நாள் முழுவதும் தோசைதான் சாப்பாடு.
டவுசர் பைக்குள் மடித்து வைக்கப்படும் தோசை
தோழனுக்கானது.
உங்க வீட்லெ என்ன பலகாரம் திருவிழாவுக்கு ?
ஹையா ... எங்க வீட்லெ தோசையே ... !
என மகிழ்ந்த அந்த பால்யத்தில்
பலகாரமே தோசைதான்.

தோசை மீதான ஆசை
குறைந்துகொண்டே வருகிறது
தினசரி உணவாகிப் போனதால் .
பால்ய நினைவுகள் மட்டும்
நெருக்கமாய் இருக்கிறது தோசையோடு !

மு.மகேந்திர பாபு ,

Post a Comment

0 Comments