இயற்கை - மு.மகேந்திர பாபு , ஆசிரியர்.

 


இயற்கை

இயற்கைதான்
பெரிய பள்ளிக்கூடம்.
தினம் தினம் படிக்கிறோம்
அதில் பாடம்.

ஓங்கி உயர்ந்த மரங்கள்.
மனிதா !
உன் செயலால் நீயும் வளர்
என்பதைக் காட்டிடும்.

கரிய மலைகள்.
மன உறுதியைச்
சொல்லாமல் சொல்லும்
இயற்கையின் தைரியக் குழந்தைகள்.

அருவியின் ஒலி.
இசையமைப்பாளர் இல்லாமலே
இசைத்திடும் வினோதம்.

அலைகடல்.
உனது பயணங்களுக்கு
முடிவில்லை என்பதைச் சொல்லும்.
அடக்கம் வேண்டும் என்பதைக்
கரை கடக்காது தன்னடக்கத்தோடு
சொல்கின்றன அலைகள்.

இயற்கையன்னையின் இருகண்களாய்
பகலில் சூரியனும் ,
இரவிலெ சந்திரனும்.

மழைத்துளிகள்.
இயற்கையன்னை தெளித்திடும்
பன்னீர்த் துளிகள்.
நிலமகளின் நிலையறிந்து,
உடலைக் குளுமைப் படுத்துவதும்,
பயிர்க்குழந்தைகளை வளர்த்து
குதூகலப் படுத்துவதும் மழைத்துளிகள்தான்.

மனித உடம்பின் நரம்பு மண்டலமாய்
பூமித்தாயின் உடம்பில் ஆறுகள்.
தனித்திருந்த சகோதரர்கள்
ஒன்றுகூடி பலத்தைக் காட்டுவதைப் போல,
ஆறுகள் ஒன்று கூடி கடலில் கலத்தல்.

ஆசிரியர்களிடமும் ,
ஆன்றோர்களிடமும்
தலைபணிந்து நட என்பதைச்
சொல்லும் நாணல்கள்.

இயற்கை
கட்டணம் பெறாத ஆசான்.
மனிதனின் சுயநலம்தான்
இயற்கையைச் சுரண்ட வைக்கிறது.

பாடம் கற்றுக் கொடுத்த ஆசானிடம் பகைமை வேண்டாம்.
இயற்கையை நேசிப்போம் !
இயன்றதை யாசிப்போம் !

மு.மகேந்திர பாபு , ஆசிரியர்.

Post a Comment

0 Comments