தியாகம் - மு.மகேந்திர பாபு

 

தியாகம்

வீட்டை விட்டு
வீதிக்கு வந்தும்
ஒருவாய்ச் சோறு
ஊட்டுவதற்குள்
பெரும்பாடாகிறது மகளுக்கு.

தொலைக் காட்சியிலும் ,
அலைபேசியிலும் ,
மடிக்கணினியிலும்
பாடல்களைப் போட்டும் ,
விளையாட்டுக்களைக்
காண்பித்தும்கூட
அடம் பிடித்தலை
அகற்றுவதாக இல்லை மகள் .

பூச்சாண்டிகளுக்கோ ,
பூதங்களுக்கோ ,
பேய்களுக்கோ ,
பிசாசுகளுக்கோ
சிறிதும் பயப்படுவதில்லை மகள்.

உணவு ஊட்டுவதும் ,
உறங்க வைப்பதும்
உலகிலேயே மிகப்பெரும்
வேலைகளாகத் தெரிகிறது
எனக்கு.

அப்பாவான பின்புதான்
அம்மாவின் தியாகமும் ,
அப்பாவின் அருமையும்
மெல்லத் தெரியத் தொடங்குகிறது
மகளினால்.!

மு.மகேந்திர பாபு ,

Post a Comment

0 Comments