என் போதிமரம்

 

என் போதிமரம்

'மாற்றவும் ஏற்றவும் ஆசிரியர்களால் முடியும்
நாளைய உலகு மாணவர்களால் விடியும் '

இந்த உலகின் புனிதமான இடங்கள் இரண்டு. ஒன்று தாயின் கருவறை , மற்றொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறை ஒருவனுக்கு உயிரையும் , உடலையும் கொடுக்கிறது. ஆசிரியரின் வகுப்பறை உணர்வையும் , உயர்வையும் கொடுக்கிறது. இரண்டுமே சிறந்ததுதான். பிறந்துவிட்ட இந்த வாழ்க்கையில் சிறந்து நிற்கச் செய்வது ஆசிரியரின் வகுப்பறை என்றால் அது மிகையில்லை.

எதிர்கால உலகம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் இருக்கிறது என்பார்கள். வகுப்பறை சரியான முறையில் வழிகாட்டி , வழி நடத்திச் சென்றால் நிச்சயம் மாணவர்கள் சோதனைகளை வென்று சாதனைகளைப் புரிவார்கள். நல்ல ஆசிரியர்கள்தான் அனைத்து ஆசிரியர்களும். மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தும் போது , எதிர்காலத்தின் அவர்கள் உயரம் தொட்டு , செகரம் தொடுவார்கள். அப்படி என்னைச் சிகரம் தொடச் செய்தவர்தான் எனது தமிழாசிரியர் கவிஞர். அ.கணேசன் அவர்கள்.

புத்தரை உருவாக்கியது போதிமரம்தான். போதிமரம் இல்லையெனில் புத்தர் இல்லை. ஆசிரியர் இல்லையெனில் மாணவர் இல்லை. எனது பள்ளிப்பருவ நிகழ்வுகள் இன்றும் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து , பொதிந்து கிடைக்கின்றன.இன்று நான் பல மேடைகளில் ஏறி கவிதை பாடுவதற்கும் , பசுமை பற்றிய உரைநிகழ்த்துவமற்கும் எனக்கு பிள்ளையார் சுழி போட்ட பெருமகனார் கவிஞர். அ. கணேசன் அவர்கள்.

ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போதே என்னுள் எழுந்த சிறுசிறு கற்பனைகளை கவிதைகளாக ஏட்டில் எழுதத் தொடங்கினேன். அவைகள் கவிதைகள்தானா ? என்றெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. ஆயினும் எழுதுவதை நிறுத்தவில்லை. அப்படியே நாட்கள் கடந்தன. பத்தாம் வகுப்பு முடித்து , பதினொன்றாம் வகுப்பும் தி.வெ.அ.ந.நா. மே.நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். எடுத்தது அறிவியல் பிரிவு. ஆனால் மனசோ எப்போது தமிழ் பாடவேளை வரும் வரும் என காத்துக் கொண்டிருக்கும். தமிழ் பாடவேளை இரண்டு வகுப்புகள் சேர்ந்து ஒன்றாக நடைபெறும்.

ஐயா. கவிஞர் . அ. கணேசன் அவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்ததும் மனதிற்குள் உற்சாகம் நுழைந்துவிடும். அவர் பேசும் போது விழுகின்ற வார்தைகளைக் கேட்பதற்கே மிகவும் மகிழ்வாக இருக்கும். சந்தம் சிந்தும். அடுத்தடுத்து என்ன வார்த்தைகள் சொல்வார் என எனக்குள் நான் அசைபோடுவேன். கதைகளும் , கவிதைகளும் கணக்கின்றி அருவி போல வரும். எங்களுக்கு ஆனந்தம் தரும். ஆனால் வகுப்பு தொடங்கியது போலதான் இருக்கும். அதற்குள் பாடவேளை முடிந்துவிடும். மணியடிக்க பணி முடிந்தது என அடுத்த வகுப்பு தொடங்கிவிடும். இப்படியாக தமிழ்பாடவேளை எப்போது வரும் என காத்திருக்கத் தொடங்கியது என் மனசு.

எழுதி எழுதி ஏட்டை நிர்ப்பிய கவிதைகளை ஐயாவிடம் கொடுத்தால் ஆலோசனை கிடைக்குமே என்ற எண்ணத்தில் , ஒருநாள் பள்ளி முடிந்ததும் , வீட்டிற்கு மிதிவண்டியில் செல்லும் போது , ஐயாவின் வீட்டிற்குச் சென்று கவிதை ஏட்டினைக் கொடுத்துச் செல்வது என தீர்மானித்தேன். ஐயாவின் வீடு பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எதிர்புறம் இருந்தது. ஐயா வீட்டிற்கு வந்து விட்டார் என்பதை வீட்டின் முன் நின்ற வாகனம்.சொல்லாமல் சொல்லியது.

என்ன சொல்வாரோ , ஏது சொல்வாரோ என மனது அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு நம்பிக்கை என்னை உள் இழுத்துச் சென்றது.
ஐயா வணக்கம் என்றேன். வாடா தம்பி என அன்போடு வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். தனது துணைவியாரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். என்னைக் கண்டதும் அம்மா அவர்கள் தேனீர் போடச் சென்றார்கள். என்னடா ? என்ன விசயம் என்றார் ? ஐயா ... என்று சொல்லிக் கொண்டே என் பைக்குள் இருந்து ஒரு ஏட்டை எடுத்து நீட்டினேன். இதில் கொஞ்சம் எழுதி வைத்திருக்கிறேன் ஐயா, எனக்கு தோணியதை. நீங்கள் படித்து விட்டுக் கருத்துச் சொல்ல வேண்டும் என்றேன். அப்படியா ? மகிழ்ச்சி எனச் சொல்லி ஒரு சில பக்கங்களைப் படித்து விட்டு , ' ஆகா ! அருமை. முழுதும் படித்துவிட்டு நாளை சொல்கிறேன் என்றார். சூடான , சுவையான் தேனீரை அம்மா அவர்கள் வழங்க , குடித்துவிட்டு என் வீடு வந்தேன்.

அன்றைய இரவுப் பொழுது.எனக்குள் பல்வேறு  எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. விடிந்தது. பள்ளிக்குச் சென்றேன். நான் வழக்கம் போல் எதிர்பார்க்கும் தமிழ்பாட வேளையும் வந்தது. ஐயா என்ன சொல்வாரோ என மனசு எதிர்பார்க்கத் தொடங்கியது. அனைவரின்  முன்பும் என்னையும் , என் கவிதைகளையும் பாராட்டிப் பேசினார். அந்த வார்தைகளும் , அன்றைய வகுப்பறைச் சூழலும் இன்றும் என் மனக்கண்ணில் நிழலாடுகிறது.

படிக்கிற வயசுல படிக்கிறத விட்டுப்புட்டு கவித எழுதறானாம் ! உன் வேலயப்பார்டா ! என அவர் அன்று சொல்லியிருந்தால் ஒரு படைப்பாளி அன்று இறந்திருப்பான். அவரது ஊக்குவிக்கும் வார்த்தைகள்தான் இன்று என்னை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கிறது.

ஒரு படைப்பாளியின் பேனா , இன்னொரு படைப்பாளியைப் பற்றி நன்கறியும். எனது ஐயா அவர்கள் சிறந்த பேச்சாளர் மட்டுமன்றி , சிறந்த படைப்பாளர். அன்றைய காலகட்டத்திலேயே அவர் மாணவர்களுக்காக ஒரு கட்டுரை நூலும் , புத்துலகம் சமைப்போம் வாரீர் ' என மரபுக் கவிதை நூலும் வெளியிட்டு புகழின் உச்சத்தில் இருந்தவர். இன்றைய கவிப்பேரரசு வைரமுத்துவை தனது சொந்த ஊரான புதியம்புத்தூருக்கு அழைத்து வந்து நூலினை வெளியிடச் செய்தவர். கவியரசு கண்ணதாசன் மீது தீராக் காதல் கொண்டவர் . தனது எம்பில் பட்டத்திற்காக ' கண்ணதாசன் பாடல்களில் கையறுநிலை ' என்ற நூலினை ஆய்வேடாக சமர்ப்பித்தவர். அது மட்டுமல்ல , அந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு கண்ணதாசனின் புதல்வி . விசாலி கண்ணதாசனை வரவழைத்து தமிழ்கூறும் நல்லுலகிற்கு பெருமை சேர்த்தவர். பல்வேறு வானொலிகளில் இன்றும் உரை நிகழ்த்தி வருபவர். இப்படி பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் எனது தமிழாசிரியர் கவிஞர். அ. கணேசன் அவர்கள். அன்று அவர் என்னுள் விதைத்த கவிதையெனும் விதை இன்று என்னுள் விருட்சமாக வேர்விட்டு , மரமாக நிற்கிறது.

பேச்சுப்போட்டியும் பரிசும் :

பள்ளியில் அவ்வப்போது இலக்கியம் சார்ந்த விழாக்களும் , பல்வேறு போட்டிகளும் நடைபெறும். அப்படி போட்டி நடைபெறுவதற்கான சுற்றறிக்கையை ஆசிரியர் வகுப்பறையில் வாசிக்கும் போதே பலரும் தலைகுனிந்து கொள்வோம். எங்கே நமது பெயரைச் சொல்லி விடுவார்களோ என்று. அப்போது பதினொன்றாம் வகுப்பு நான். பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து ஒரு போட்டியினை அறிவித்திருந்தார்கள். அப்போட்டிகளில் நான் கலந்து கொள்ளவில்லை. அப்போது எனது தமிழையா.
' நீபேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு பேசுகிறாய். இல்லாவிட்டால் நான் உன்னிடம் பேசமாட்டேன் ' எனச் சொல்லிவிட்டார். வேறு வழியில்லாமல் நானும் அப்போட்டியில் கலந்து பேசி இரண்டாம் பரிசாக ஆங்கில அகராதி ஒன்றைப் பெற்றேன்.

இன்று நான் பல பள்ளிகளில் , கல்லூரிகளில் , அரிமா சங்கம் , ரோட்டரி சங்கம் என் பேசுவதற்குக் காரணம் அன்று எனது தமிழையா விதைத்த அந்த நம்பிக்கையான விதைதான் காரணம். அதை நான் எப்போதும் பெருமையுடன் சொல்வேன்.

அறிமுகப்படுத்திய சாதனையாளர்கள்.

அன்றைய நிகழ்விற்கு கோவில்பட்டியிலிருந்து சுங்கத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த பல குரல் மன்னன் கேசவன் என்பவரை ஐயா அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைத்து வந்திருந்தார். விழா முடிந்ததும் என்னை அறிமுகம் செய்து வைத்தார். இன்றும் அந்த பாடகர் திரு. கேசவன் அவர்களுடனான நட்பு எனக்குத் தொடர்கிறது. எனது திருமண விழாவிற்கு வருகை தந்து அவரது இசைக்கச்சேரியை வழங்கிச் சிறப்பித்தார்.

அதைப்போலவே , சிவகாசியிலிருந்து முத்து மணி என்ற சிறந்த ஆசிரியரை , பேச்சாளரை எங்கள் பள்ளி விழாவிற்கு அழைத்து வந்திருந்தார். அவரது பேச்சில் உருகிய நான் , அவருக்கு கடிதம் எழுதினேன். அவரும் எனக்கு கடிதம் எழுதி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மாணவனாக இருந்து அவர் உரையைக் கேட்ட நான் , ஆசிரியராக உயர்ந்து , இன்று நான் பணி செய்யக்கூடிய இளமனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியின் இலக்கிய மன்ற விழாவிற்கு திரு. முத்துமணி அவர்களை அழைத்து பேசச்செய்து மகிழ்ந்தேன். இதற்குக் காரணம் நான் மாணவப் பருவத்தில் இருந்தபோது எங்கள் பள்ளிக்கு அழைத்து சிறப்புச் செய்த எனது தமிழையா.திரு.அ.கணேசன் அவர்கள்தான்.

இந்தியனே எழுந்து நில் :

பள்ளிப் பருவத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டால் என்ன ? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.பள்ளிப் படிப்பை முடித்தபின் கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டி எனும் கிராமத்திலிருந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் (DIET) பயிற்சி.ஆசிரியராகச் சேர்ந்தேன். எனது எண்ணத்தை எங்கள் தமிழையாவிடம் சொன்னபோது மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டு , நாகலாபுரம் ppm என்ற அச்சகத்திற்கு அழைத்துச் சென்று என்னை அறிமுகம் செய்து வைத்தார். நேரம் மதியமானது. நீ பசி தாங்க மாட்டே ! இந்தா சாப்பிடு எனச்சொல்லி , தனக்காக வைத்திருந்த மதிய உணவை எனக்குக் கொடுத்தார். நான் எவ்வளவோ மறுத்தும் என்னையே சாப்பிடச் செய்தார். அன்று அவர் காட்டிய அந்தப் பரிவுதான் பின்னாளில் நான் விடுதிக் காப்பாளராக பதவி உயர்வில் சென்ற போது , விடுதியைத் தேடி யார் வந்தாலும் அவர்களுக்கு உணவு கொடுங்கள் என கட்டளையிடச் செய்தது.

இப்படி பல நினைவுகளை அசைபோடலாம். எனது திருமணத்திற்கு வந்து வாழ்த்தியது , மதுரையில் எனது வீட்டிற்கு வந்து எனது குடும்பத்தினரை வாழ்த்திச் சென்றது என அனைத்தையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

இன்று நான் பல வானொலிகளிலும் , தொலைக்காட்சியிலும் , மேடைகளிலும் பேசுவதற்கு அடித்தளமிட்டவர் எனது தமிழாசான் கவிஞர்.அ.கணேசன் என்பதை பெருமையோடு பதிவு செய்கிறேன்.

மாணவரின் வளர்ச்சியில்தான் ஆசிரியரின் வளர்ச்சி இருக்கிறது. அந்த வகையில் எனது வளர்ச்சிக்குக் காரணம் எனது பெற்றோர் என்பது எத்தனை உண்மையோ , அதே அளவு எனது தமிழாசியருக்கும் உண்டு. அதனால்தான் தினமலர் நாளிதழின் ' என் போதிமரம் ' பகுதியில் ஐயாவை நினைவு கொண்டு சிறு நன்றியினைப் பதிவு செய்தேன்.
எனது உடலும் உயிரும் இயங்கும் வரை எனது தமிழாசிரியரின் பெயரை எனது நா உச்சரித்துக் கொண்டே இருக்கும்.

இன்று நானும் ஒரு தமிழாசிரியன். என்றாலும் என் ஆசிரியரின் முன்பு என்றும் நான் மாணவனே !
இந்த போதி மரத்தில் என்றும் இளைப்பாறும் பறவையாய் நான்.

மகிழ்வுடன் ,

மு.மகேந்திர பாபு MA, Mphil , B.ed , D.ted  ஆசிரியர்.
அரசு ஆதிந.மே.நி.பள்ளி , இளமனூர் , மதுரை.
பேசி - 97861 41410.

Post a Comment

0 Comments