பசுமை + தூய்மை = கருப்புக்கால் தொடக்கப் பள்ளி
இயற்கையோடு இணைந்த கல்வி மாணவர்களை மகிழ்ச்சிப் படுத்துகிறது. ஒரு பூந்தோட்டத்திற்குள் மாணவர்கள் நுழையும் போது எவ்வளவு ஆட்டமும் பாட்டமுமாய் மகிழ்ச்சியோடு உள்நுழைகிறார்களோ , அதைப்போன்ற ஒரு பேரின்பத்தைத் தருகிறது பசுமையோடும் , தூய்மையோடும் இருக்கக்கூடிய மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியான கருப்புக்கால் தொடக்கப் பள்ளி.
மதுரை - சிவகங்கைச் சாலையில் வரிச்சியூரின் இடது புறத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கருப்புக்கால் கிராமம். 1958 ல் தொடங்கப்பட்ட இப்பள்ளியானது , அரைநூற்றாண்டைக் கடந்தும் கம்பீரமான தோற்றத்துடன் காட்சி தருகிறது. முன்பு கட்டடங்கள் மட்டுமே ! இப்போது பள்ளி முன்பும் , வளாகத்திலும் மரங்களும் , பூச்செடிகளுமென அழகழகாய்ப் பூத்து , காய்த்து காண்போரின் கண்களுக்குப் பசுமை விருந்தளித்துக் கொண்டிருக்கிறது.
இடத்தின் பரப்பளவு குறைவாக இருந்தாலும் , இடம் முழுமையும் நிறைந்திருக்கின்றன மரங்களும் , செடிகளும். அரைநூற்றாண்டைக் கடந்த பள்ளியில் சமீபத்தில்தான் மலர்ந்திருக்கின்றன இந்தப் பசுமைச் சாதனைகள். பசுமையில் மட்டுமல்ல , தூய்மையிலும் சாதனை படைத்து வருகிறது இப்பள்ளி.
சத்தமின்றி பசுமைப்புரட்சியினை நிகழ்த்திவரும் கருப்புக்கால் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியை திருமதி . எஸ்.சித்ரா அவர்களிடம் பசுமை பற்றியும் , தூய்மை பற்றியும் நாம் கேட்ட போது , மடை திறந்த வெள்ளமாய் , மகிழ்ச்சியாய் உரையாடினார்கள்.
எங்கள் பள்ளியில் 70 மாணவ , மாணவியர்கள் பயில்கிறார்கள்.என்னோடு இரண்டு உதவி ஆசிரியைகள் பணிபுரிகிறார்கள். அனைவரும் இணைந்து பள்ளியின் சுற்றுப்புற சுகாதாரத்தைப் பேணிக்காப்பதில் முழுமுயற்சியுடன் ஈடுபட்டு வருகின்றோம். மரம் வளர்ப்பதின் முக்கியத்துவத்தை உணர்ந்து , மாணவர்கள் தங்கள் பிறந்த நாளின் போது பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்து வருகிறார்கள்.தற்போது எங்கள் பள்ளி வளாகத்தை வேம்பு . மா , புங்கை , பப்பாளி , முருங்க என முப்பது மரங்களும் , பத்து வாழை மரங்களும் , செம்பருத்தி , மல்லி , நத்நியாவட்டை . ரோஜா என முப்பது பூச்செடிகளும் , துளசி , பச்சிலை , தூதுவளை , முள்முருங்கை போன்ற மூலிகைத் தாவரங்களும் அலங்கரிக்கின்றன.
பசுமையில் மட்டுமல்ல , தூய்மையிலும் எங்கள் பள்ளி முன்னிலையில் உள்ளது. 09 - 02 - 14 அன்று எங்கள் பள்ளி யுனிசெப் ( UNICEF ) மூலம் Wash in school நிகழ்விற்காக சிறப்புப் பார்வை மேற்கொள்ளப்பட்டது. எங்கள் பள்ளி மாணவர்கள் 12 முறைகளுடன் கைகழுவிய விதம் யுனிசெப் குழுவினரை மகிழ்விக்கச் செய்ததுடன் , ' சிறந்த பள்ளி ' என்ற பாராட்டையும் பெற்றுத் தந்தது.
நான் நேர்காணல் செய்து கொண்டிருக்கும் போதே , ஒரு மாணவர் கைகழுவும் முறைகளைச் செய்து காட்டினார்.கைகழுவதில் இத்தனை முறைகளா என வியந்தேன்.
மனிதவள மேம்பாட்டுத் துறையினரால் எங்கள் பள்ளி 08 - 07 - 15 அன்று பார்வையிடப்பட்டது. மதிய உணவு சாப்பிடும் விதத்தையும் , கழிப்பறைச் சுகாதாரத்தையும் , சுற்றுப்புறச் சுகாதாரத்தையும் பாராட்டிய அக்குழுவினர் simple and neat என பாராட்டிச் சென்றனர்.
கைகழுவும் பழக்கத்தினை பள்ளியில் மட்டுமல்ல , வீட்டிலும் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றனர் மாணவர்கள். மாணவர்களுக்கு தன்சுத்தம். வகுப்பறைச் சுத்தம் , சுற்றுப்புறச் சுத்தம் , படிப்பின் முக்கியத்துவம் , ஒழுக்கத்தின் மேன்மை ஆகியவை பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி.சித்ரா அவர்களால் தினந்தோறும் இறைவணக்கக் கூட்டத்தில் கூறப்பட்டு வருகிறது.
எங்கள் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தை 2001 ஆம் ஆண்டு தொழிலதிபர் திரு. P.இராஜசேகரன் அவர்கள் கட்டிக் கொடுத்துள்ளார். பள்ளி மாணவர்களுக்குத் தொடர்ந்து பல உதவிகளைச் செய்து வருகிறார். மாதங்கி மகளிர் மன்றம் , பாலாஜி கேஸ் நிறுவனம் மூலம் குடிநீர் சுத்திகரிப்பு கருவி பெறப்பட்டு மாணவர்களுக்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கி வருகிறோம்.
எங்கள் பள்ளி மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாது , பாடல் , பேச்சு , நடனம் , நாடகம் போன்ற கலைகளை விழாக்களில் நிகழ்த்திவருகிறார்கள். எனனுடன் பணியாற்றும் சக ஆசிரியைகளான திருமதி முருகானந்த லட்சுமி மற்றும் திருமதி.இலதாஅவர்களும் மனமுவந்து ஒத்துழைப்புத் தந்து வருகிறார்கள். ஊர்மக்களின் ஆதரவும் தொடர்ந்து எங்களுக்கு கிடைத்து வருகிறது என்றார் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி சித்ரா அவர்கள்.
தனியார் பள்ளிகளை விடவும் அரசுப் பள்ளிகள் சிறப்பாக இயங்குகின்றன என்பதற்கு கருப்புக்கால் பள்ளி ஒரு முன்னுதாரணம். சாதாரண ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களையும் அனைத்துத் துறைகளிலும் மேம்படச் செய்துவரும் இது போன்ற பள்ளிகளுக்கு நம் வாழ்த்துக்களை தெரிவிப்போம். பசுமையையும் , தூய்மையையும் இரு கண்களென கடைப்பிடிக்கும் கருப்புக்கால் பள்ளியைப்போல ஒவ்வொரு பள்ளியும் விரைவில் மாறட்டும். அந்த மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்.
கட்டுரை மற்றும் புகைப்படங்கள்
மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் ,
அரசு மேனிலைப்பள்ளி இளமனூர், மதுரை.
0 Comments