கற்பித்ததலில் புதுமை படைக்கும் லட்சிய ஆசிரியர் சரவணன்.

 


கற்பித்ததலில் புதுமை படைக்கும்  லட்சிய ஆசிரியர் சரவணன்.

இந்த உலகில் புனிதமான இடங்கள் இரண்டு. ஒன்று தாயின் கருவறை.மற்றொன்று ஆசிரியரின் வகுப்பறை. வளமான சமுதாயத்தை உருவாக்கவிருக்கும் மாணவர்களைச் செம்மைப் படுத்தி , சிகரம் தொடவைப்பது ஆசிரியரின் வகுப்பறை.  தாயின் கருவறை உயிரையும் , ஆசிரியரின் வகுப்பறை உணர்வையும் தருகிறது. வகுப்பறையில் கற்றலும் , கற்பித்தலும் ஆடலும் , பாடலுமாய் ஆனந்தப்பட வைத்தால் அதைவிடப் பெருமையேது ஆசிரியர்க்கு ?! கற்பித்தலில் எத்தனையோ முறைகள் இருந்தாலும்  , உடலும் உள்ளமும் தூண்டப்பட்டு நூறுசதவீதம் மாணவர்களை மகிழச் செய்வது விளையாட்டு முறையில் கற்பித்தல் ஆகும்.

விளையாட்டு முறையில் கற்பித்தலை எல்லாப் பாடங்களிலும் புகுத்தி வெற்றி கண்டு வருகிறார் மதுரை , கீழச்சந்தைப் பேட்டை டாக்டர்.T.திருஞானம் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பணிபுரியும் திரு.சரவணன் அவர்கள். கவிஞர் , எழுத்தாளர் , பேச்சாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட அவரை , நமது ஸ்மார்ட் மதுரை இதழுக்காக நேர்காணல் கண்டோம்.

வகுப்பறையில் மாணவர்களிடையே பசுமையின் அவசியத்தைக் கூறி வருகிறேன். தலைவர்களின் பிறந்தநாள்களில் விழாக்கள் நடத்தி அவர்களின் தியாகங்களையும் , பெருமைகளையும் சொல்கிறேன். சுற்றுச்சூழல் தினம் , ஓசோன் தினம் போன்ற தினங்களைக் கொண்டாடி வருகிறோம். காந்தி நினைவு அருங்காட்சியகம் , திருமலை நாயக்கர் மகால் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று , புராதனச் சின்னங்களின் பெருமைகளை எடுத்துச் சொல்கிறேன் . எங்கள் பள்ளியில் உள்ள ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் அருகே உள்ள நூலகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அனைவரையும் அழைத்துச் சென்று வாசிப்பின் அவசியத்தை உணர்த்தி வருகிறேன்.

விளையாட்டு முறையில் கற்பித்தல்

பாடக்கருத்தை விளையாட்டு முறையில் கற்பிக்கும் போது மாணவர்கள் வகுப்பறையில் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். நான் , எனது வகுப்பறையை குழந்தைகள் விரும்புமாறு மகிழ்ச்சியோடு பாதுகாப்பு , அன்பு , நேசத்தோடு அவர்களின் முழுவளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்கும் தாயின் கருவறையாக்கி , தாயின் உணர்வை ஒவ்வொரு நாளும் பெறுகின்றேன்.

ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் மூன்றாம் பாடம் ' நாம் வாழும் பூமி ' . இதற்கு விளையாட்டு முறையில் கற்பித்தலை உருவாக்கினேன்.

விதிமுறைகள் :

1 )  கண்டங்கள் ஏழு. அவற்றின் பெயர்களைக் கூறும் போது மாணவர்கள் கண்களைக் கைகள் கொண்டு மூட வேண்டும்.

2 )  மலைகள் ஐந்து .இமயமலை , ஆண்டிஸ் , ஆல்ப்ஸ் , ராக்கி , கிளிமாஞ்சாரோ எனச் சொல்லும் போது கைகளை  நன்றாக உயர்த்தி , இருகைகளையும் சேர்த்து மலை போன்று காட்ட வேண்டும்.

3 )  பீடபூமிகள் - திபெத் , தக்காணம் , கொலராடே எனக் கூறும் போது கைகளை நகஞ்சுக்கு அருகில் கூம்பு போல் சேர்த்துக் காட்ட வேண்டும் . அதாவது மலையை உயர்த்திக் காட்டியது போல அப்படியே நெஞ்சுக்கு அருகில் காட்டவேண்டும் , மலையை விட உயரம் குறைந்தவை பீடபூமி என்பதற்காக.

4  )  சமவெளி - சிந்து , கங்கை  , லியானஸ் , லம்பார்டி எனும்போது மாணவர்கள் சமமாக இருகைகளையும் காற்றில் அலையவிட்டுக் காட்ட வேண்டும் .

5 )  பள்ளத்தாக்குகள் -  நைல் , கிராண்ட்கேன்யான் , சிந்து எனும்போது மாணவர்கள் கீழே அமர வேண்டும்.

6 ) கடல்கள் - பசிபிக் , அட்லாண்டிக்  , ஆர்டிக் என்று சொல்லும் போது மாணவர்கள் ஒரு கையால் காற்றில் அலையை ஏற்படுத்த வேண்டும்.

மாணவர்களை வட்டமாக நிற்கச் செய்யவும். ஆசியா என்றவுடன் தானாக கண்களை மூடுவான். கிளிமாஞ்சாரோ என்று சொல்லும் போது தானாக கைகளை உயர்த்தி மலையை நினைவு படுத்தி நிற்பான் . தக்காணம் என்றவுடன் கைகளை நெஞ்சுக்கு நேராகக் குவிப்பான். ஆர்டிக் என்றவுடன் ஒரு கையால் அலை எழுப்புவான் . சிந்து , கங்கை என்றவுடன் இருகைகளாலும் சமம் எனக் காட்டுவான் . தொடர்ந்து விளையாட மாணவர்களுக்குக் கண்டங்கள் , மலைகள் , பீடபூமிகள் , சமவெளிகள் , பள்ளத்தாக்குகள்  , கடல்கள் குறித்து நன்கு தெரிந்து விடும் .

ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தூயதமிழ்ச் சொற்களை அறிவதற்காக சிறியதொரு விளையாட்டினை உருவாக்கியுள்ளேன்.

மாணவர்களை வட்டமாக அமரச் செய்யவும் . அவர்களிடம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிறமொழிச் சொற்கள் எழுதிய அட்டை மற்றும் அவற்றிற்குரிய சரியான தமிழ்ச்சொற்கள் கொண்ட அட்டை இரண்டையும் கொடுக்கவும் .

அட்டையைக் கொடுத்த பின்னர் , தங்களிடம் உள்ள அட்டையில் எழுதியுள்ள வார்த்தைகளை அனைவரும் கேட்கும்படி சத்தமாக வாசிக்கச் சொல்லவும்.  பின்பு பிறமொழிச்  சொற்களுக்குரிய அட்டை வைத்துள்ள மாணவர்களை எழுந்து நிற்கச் செய்யவும். அதில் யாரேனும் தூய தமிழ் வார்த்தைச் சொற்கள் உள்ள மாணவர்கள் எழுந்து நின்றால் , அவர்களிடம் காரணம் கேட்டு அதனை விளக்கவும் . அதன்பின்பு இணையான தமிழ்ச்.சொற்களைக் கண்டு பிடிக்கச் செய்யவும்.

இப்போது மாணவர்களை வட்டமாக அமரச் செய்யவும். ஏதேனும் மூன்று வாக்கியங்களை தொடர்ந்து பேசச் செய்யவும். பிறமொழிச் சொற்களைக் கூறினால் அதற்கு இணையான தமிழ்ச்சொல் சொல்லும் மாணவன் சொல்லும் செயலை ( நடனம் , வசனம் , நடிப்பு , பாடல் ) பிற மொழிச்சொல் கூறிய மாணவன் செய்ய வேண்டும்.

இதைப்போல ஐந்தாம் வகுப்பில் உள்ள அனைத்துப் பாடங்களுக்கும் விளையாட்டு முறையில் கற்பிப்பதற்கு உருவாக்கியுள்ளேன். விளையாட்டுக்கள்  வகுப்பறையை மகிழ்ச்சியாகவும் , பாடக் கருத்துகள் எளிமையாகவும் குழந்தைகள் மனதைச் சென்றடையவும் துணைபுரியும்.

குழந்தைகளுடன் நானும் வளர்கின்றேன் , மகிழ்கின்றேன் . நாளைய தினத்தை எப்படி ஆக்கபூர்வமாகக் கொண்டு செல்வது என்பதற்கு அதுவே வினையூக்கியாக இருக்கிறது.  தினமும் ஒரு தாயின் உணர்வோடு உறங்கச் செல்கிறேன் என்கிறார் நெகிழ்ச்சியோடு ! வகுப்பறையை கலகலப்பாக மாற்றுவது ஆசிரியர்களின் கையில்தான் இருக்கிறது. ஆசிரியர் சரவணனைப் போல எல்லா ஆசிரியர்களும் வகுப்பறையில் விளையாட்டு முறைக் கற்பித்தலை நடைமுறைப்படுத்தினால் எதிர்கால சந்ததி ஏற்றம் பெறும். மாற்றம் பெறும் . வாழ்த்துகள் சரவணன் சார்.

கட்டுரை

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் ,
இளமனூர் , மதுரை.

Post a Comment

0 Comments