சீமைக் கருவேல மரம் - இசைப் பாடல் - மு.மகேந்திர பாபு

 

சீமைக் கருவேல மரம்

சீமையிலிருந்து வந்த மரம்
மண்ணைச் சீர் கெடுக்க வந்த மரம்
காடு வயலை அழிச்சு இப்போ
கண்மாயிலும் கால் பதிச்ச மரம்.

வேலியாகத்தான் வந்தது இங்கே
நிலத்தடி நீரும் போனதெங்கே ?
வளமை மிகுந்த மண்ணைத்தானே
வறுமையாகத்தான் மாற்றியதே !

வானமும் பொழிய மறுக்குதே
நம்மை வறுமையும் இப்போ நெறுக்குதே !
வேலியும் நீரைச் சுருக்குதே !
வேதனையைத் தினமும் பெருக்குதே !

மண்ணின் ஆழம் வரைக்கும் செல்லுதையா !
மனுச வாழ்வை இப்போ கொல்லுதையா !
பறவைகளும் கூடு கட்டலையே !
விலங்குகளும் வந்து நிக்கலயே !

வேருடன் புடுங்கி எறிய வேண்டும்
அதன் தீமையும் மக்கட்குத் தெரிய வேண்டும்
காணும் இடமெங்கும் அழிக்க வேண்டும்
நல்ல காற்று மரங்கள் தழைக்க வேண்டும்.

காற்றின் ஈரப்பதத்தையும் உறிஞ்சுதையா !
வெப்பமும் எங்கும் நிறைஞ்சதையா !
நல்ல கால நிலையும் குறைஞ்சதையா !
நல்ல காடு வயலும் மறைஞ்சதையா !

சீமைக் கருவேல மரங்களை ஒழித்திடவே
மக்களும் ஒன்றாய்க் கூடிடணும்
மண்ணும் மக்களும் செழித்திடவே
கும்மிப் பாட்டைத் தினமும் பாடிடணும் !

பாடல்
மு.மகேந்திர பாபு ,
பேசி - 97861 41410.

Post a Comment

0 Comments