கவிஞர் தன்சியாவின் கவிதைகள் - கவிதைப் பக்கம் / Greentamil - Kavithaippakkam - kavi Thansiya kavithaikal

 

                           கவிதைப்பக்கம்

கவிஞர்.ம.தன்சியா , 

முதுகலைத் தமிழாசிரியை , பொள்ளாச்சி.

**************   **************   ***********


இது என்ன தொல்லை ?


உட்கார முடியவில்லை

மூலமும் இல்லை

முடமும் இல்லை

இது என்ன தொல்லை.....

விடாது துரத்தும்

தொ(ல்)லைப் பேசியுடன் "அப்பா"


சிரிக்க முடியவில்லை

வருத்தமும் இல்லை

வறுமையும் இல்லை

வீட்டில் எரிவாயு தீரவும் இல்லை 

இது என்ன தொல்லை!

விடாது அழும்

சீரியலுடன் "அம்மா".


படிக்க முடியவில்லை

பவர்கட் ஆகவும் இல்லை

பாடத்தில் குழப்பமும் இல்லை

இது என்ன தொல்லை!

  சிரிக்காத அம்மாவுடனும்

உடன் அமராத

அப்பாவுடனும் பிள்ளைகள்

*****************    ************  **********


*வேலை வேண்டும்* 


சத்தியமாய்ச் சொல்கிறேன்

எனக்கொரு வேலை வேண்டும்!

சாத்தியமில்லை என்றாலும்

 எனக்கொரு வேலை வேண்டும்!


 தெருவோரக் குட்டிச் சுவர் சுதந்திரமடைய

எனக்கொரு வேலை வேண்டும்!

 

என் வீட்டுத் திண்ணையின்

வட்ட மேசை மாநாட்டை ஒத்திவைக்க

எனக்கொரு வேலை வேண்டும்!


 சாலையோரம் சரசரக்கும்

மாலைப் பூக்களின்

விழிகளில் மயங்காமலிருக்க

எனக்கொரு வேலை வேண்டும்!


 கூடிப் பறக்கும்

ஜோடிப் புறாக்களை

பொறாமையில் விரட்டாதிருக்க

எனக்கொரு வேலை வேண்டும்!


 ஐயா,

என் நைனாவின் கடைசி

நயாப்பைசாவும்

சிகரெட் புகை

ஆகாமல் இருக்கவாவது

எனக்கொரு வேலை வேண்டும்!

                                        இவண் 

வருத்தப்படா வாலிபர் சங்கத் தலைவர் .....

****************   ***********   *************


*வழுவமைதி 

பழம் பழுக்கும்

மணம் முகர்ந்து

குரலெழுப்பும் குயில்கள்...

 மாந்தோப்பின் தென்றலில் சிலிர்சிலிர்க்கும்

கிளிகள்...

கூட்டுக் குடும்பமாய்

யானைகள்

துள்ளி ஓடும் மான்கள்

இயற்கை மடியில் பூமி புத்துயிர்ப்புடன்...

குறையொன்றுமில்லை

 அன்று,

நீராவி என்றதும் நினைவிற்கு வருபவர் 'ஜேம்ஸ்வாட்'

 இன்றோ...

நினைவலையில்

ஓர் அமைச்சர்

நல்லமைச்சின் இலக்கணம் ஆராய்ந்தால்

எஞ்சுவது,

'வழுவமைதி'

வழுவமைதிக்கு 

இடம் உண்டு இலக்கணத்தில்

குறையொன்றுமில்லை.

அன்று

பாஞ்சாலியின் சேலை...

துச்சாதனன் கையில்

 காக்க கண்ணன் வந்தான்

இன்றோ!

துச்சாதனன் அவதாரம்

கொரோனா போல் பல்கிப் பெருக..

காக்க காவலர் வருகிறார்..

நீதிநாள் மட்டும் 

சீனபெருஞ்சுவராய் 

நீண்டு கொண்டே...

  'நீதி வழுவமைதி' வழுவமைதிக்கு இடம் உண்டு இலக்கணத்தில்.. 

குறை ஒன்றும் இல்லை..

 அன்று, 

பாற்கடலில் அமுது கடைகையில்

 கலப்படமாய் நஞ்சு தேவரைக் காக்க    

ஈசன் வந்தார் .

இன்று , 

பால் முதல் பருப்பு வரை கலப்படம் 

ஈசனாய் சோதனை ஆய்வாளன் 

ஈசன் மறைத்த கங்கையாய் 

ஆய்வாளனுக்கு கையூட்டு 

'லஞ்ச வழுவமைதி' வழுவமைதிக்கு 

இடம் உண்டு இலக்கணத்தில்

 குறையொன்றுமில்லை.

 அன்று

 உண்மைக்காக நாடிலிருந்து,  வீடிழந்து 

தன் நங்கை இழந்து ,

தவப்புதல்வன் இழந்து 

துடித்தான் அரிச்சந்திரன்....

 இன்று 

வாங்கிய கடன் கட்டாதவனாய் 

உலகம் சுற்றும் வாலிபனாய்

வல்லரசு நாட்டில்  பலர்உண்டு

வழுவமைதிக்கு இடம் உண்டு

 இலக்கணத்தில் 

  குறையொன்றுமில்லை

***************    *************  ***********



Post a Comment

0 Comments