வளர்பிறை
--------------
ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஏதேனும் ஒரு படைப்பாற்றல் புதைந்துள்ளது.தக்க நேரத்தில் அதைக் கண்டுபிடித்து ஊக்கப் படுத்துவதே ஆசிரியரின் சிறந்த பணியாகும்.
மேல்நிலைக் கல்வியை முடித்து , ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் நண்பர்களோடு சேர்ந்தேன்.தூத்துக்குடி மாவட்டம் , கோவில் பட்டிக்கருகிலுள்ள வானரமுட்டி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ( DIET ) சேர்ந்தேன்.( 1997 - 1999 ) ,
வாழ்வின் மகிழ்வான தருணம் அந்த இரண்டு ஆண்டுகள் எனலாம்.படைப்புக் களமாக அமைந்தது அந்தக் காலம்.பாடல் , வில்லிசை , நாடகம் , கையெழுத்து இதழ் என நண்பர்களோடு உலவாடிய தருணம்.
அங்கு இரண்டாமாண்டு மாணவராகப் பயின்று கொண்டிருந்த இனிய நண்பர் கவிஞர் வைகறை வைகறை அவர்களின் அன்பு கிடைத்தது.மென்மையான மனதிற்கும் , குரலுக்கும் சொந்தக்காரர்.
ஒரு நாள் மாலை , நண்பர்களாக இணைந்து ஒரு கையெழுத்து இதழ் நடத்தினால் என்ன ? என யோசித்தோம். தலைப்பு தயார் செய்தோம்.நண்பர்கள் சில தலைப்புகள் கூற , நான் " வளர்பிறை " என்ற தலைப் கூறினேன்.எல்லார்க்கும் பிடித்துப் போக , அதுவே இதழ் பெயரானது.
படைப்பார்வமுள்ள நண்பர்களும் , நண்பிகளும் கதை, கவிதை , ஓவியம் , நகைச்சுவை , வார்த்தைப் புதிர் எனத் தர இதழ் சிறப்பாகத் தயாரிக்கப் பட்டது.
நண்பர் வைகறை , நான் மற்றும் சில நண்பர்கள் ஆசிரியர் குழுவாக இருந்து நடத்தினோம். இரண்டாண்டுகள் பயின்று வந்த பின்னரும் தொடர்ந்து வந்த மாணவர்களால் இதழ் நடந்தது கண்டு மகிழ்ந்தேன்.
சில ஆண்டுகள் கழித்து எங்கள் விரிவுரையாளர் திரு.கண்ணையா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.நலம் விசாரிப்புகளுக்குப் பின்பு , தம்பி எனக்கு நல்லாசிரியர் விருது கிடைத்தது என்றார். மிக்க மகிழ்ச்சி சார் என்றேன். அதற்கு நீங்களும் ஒரு காரணம் என்றார். நான் விழிக்க , நீங்கள் நடத்திய வளர்பிறை இதழுக்கு வழிகாட்டி ஆசிரியர் என்ற ஒரு பொறுப்பில் இருந்தேன் எனக் குறிப்பிட்டிருந்தேன்.அதனாலும் விருது கிடைத்தது என்றார்.மகிழ்ந்தேன்.
2009 ல் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று , விடுதிக் காப்பார் ஆனேன்.மாணவர்களின் திறமைகளை ஊக்கப் படுத்த மீண்டும் " வளர்பிறை " இதழை ஆரம்பித்தேன்.மாணவர்களே இதழ் நடத்தும் பொறுப்பினை ஏற்றுச் சிறப்பாகச் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் எங்கள் பள்ளிக்கும் , விடுதிக்கும் இலக்கிய மன்ற விழாவிற்கு வருகை தரும் எங்கள் பேராசான்.அய்யா கு.ஞான சம்பந்தன் அவர்கள் மூலமாக ஆண்டு விழாவில் வெளியிட்டோம். மாணவர்கள் படிப்பவர்கள் மட்டுமல்ல.படைப்பாளர்கள் என்பதையும் நிரூபித்தோம்.அய்யாவின் பாராட்டு இன்னும் ஊக்கமூட்டியது.
மு.மகேந்திர பாபு.
0 Comments