நகராட்சியின் சுவர் பேசுகிறது

 


நகராட்சியின் சுவர் பேசுகிறது...{ஒலிபரப்பு -நெல்லை வானொலி} .
@ நான்தான் நகராட்சியின் காவலன்.
மக்களுக்கு அதிக அளவில்
பயன் படுபவன் .
@ என் முதுகில்
''விளம்பரம் செய்யாதீர்கள் ''
என எழுதி என்னை
விளம்பரம் செய்தார்கள் .
@ கொஞ்ச நாட்கள் சென்றன .
புதிதாய் வந்த திரைப் படத்திற்கு ,
'' விளம்பரம் செய்யாதே ''
என எழுதிய இடத்தில்
சுவரொட்டியினை ஒட்டினார்கள் .
@ எனது முதுகின்
ஓரிடம் கைது செய்யப் பட்டிருப்பதை
உணர்ந்தேன் .
@ மறுநாள் ....
என் பக்கம் வந்த மாடு ஓன்று ,
படத்தின் நாயகனையும் ,
நாயகியையும் தன் வயிற்றுக்குள்
எடுத்துக் கொண்டது .
@ என்வண்ணம்
சுவரொட்டியோடு ஒட்டிக்கொள்ள
அவ்விடம் தேமலாய்ப் போனது
என்னுடலில் .
@ நாட்கள் நகர்தலில்
அரசியல் தலைவரின் வருகையால் ,
மீண்டும் வண்ணமாக்கப்பட்டு ,
விளம்பரம் சுமந்து நின்றேன் .
@ இரவு நேரங்களில் ,..
பொது மக்கள்
ஆள் யாரும் பார்க்கவில்லை
என்ற நினைப்பில் சிறுநீரால்
குளிப்பாட்டுகிறார்கள்
பாவம் ..... என்னோடு
அரசியல் தலைவரையும் .
@ சில நாட்கள் என்னை
ஆண்கள் ஆசையாய்ப் பார்ப்பார்கள் .
அப்போதெல்லாம்
ஆபாச சுவரொட்டிகள் என்மேல் .
@ அடிக்கடி என் நிறம் மாறும்
தேர்தல் காலங்களில் ....
கட்சிக் கொடிகளைக்
கவலையோடு சுமந்திருப்பேன்
மக்களைப்போல ...!
# மு.மகேந்திர பாபு. (நன்றி - அ.இ.வானொலி -நெல்லை )

Post a Comment

0 Comments