நாத்து

 

நாத்து

--------



வளந்து விட்டது

நெல் நாத்து.

அத வளச்சுப் போகுது

தென்றல் காத்து.


வானம் வந்து

வயலில் இட்டது முத்தம்.

வாய்க்காலிலே சலசலக்குது

தண்ணிச் சத்தம்.


ஆதாளை , கொழிஞ்சிச் செடி

வயலுக்கு இயற்கை உரம்.

தலைசாய்ந்து நெற்கதிர்கள் 

விழும்போது உயரும் வாழ்க்கைத் தரம்.


வடகிழக்கு மூலையில வயலில்

மொத நாத்து நடுவோம்.

குலவச் சத்தம் மங்களமா ஒலிக்க

மகிழ்ச்சியத்தான் தொடுவோம்.


ஆணும் பெண்ணும் 

சமமய்யா வயலிலே !

சூரியன்தான் எந்திரிச்சா

இறங்கிடுவோம் செயலிலே !


இடக்கையின் நாத்துமுடியை

வலக்கை வயலில் பதிக்க ,

சேறான வயலுக்குள்

துருதுருவென கால் மிதிக்க,


ஏதோ ஒரு பாட்டத்தான்

வாய் முணுமுணுக்கும்.

மத்தியான வெயிலிலே

உடம்புதான் மினுமினுக்கும்.


நாத்தாங்காலு 

நாத்துக்குப் பொறந்த வீடு  .

வயலுக்குப் போகும்போது 

புகுந்த வீடு .


வயலிலே மட்டுந்தான்

போடுவோம் மண்டி.

மருவாதிகெட்டுப் போகமாட்டோம்

மத்தவன அண்டி.


தலயத்தான்  சுத்தியிருக்குது

தலப்பா கட்டு.

வேல முடிஞ்சு வெளிய வந்தா

சாயந்திரம் துட்டு.


வேர் முறிக்காம

நாத்துப் புடுங்குவதும் வித்த.

வேல  பாத்த உடம்புக்கு

வெறுந் தரையே மெத்த.


மாதம் மும்மாரி

வேணுமய்யா மழ .

மளமளன்னு ஒசந்திடுமே

சம்சாரி வாழ்க்க நெல.


இருக்கிற எடத்திலதான்

மரம் நடுவோம்.

இயற்கைய இயற்கையாவே 

இருக்க விடுவோம் .


மு.மகேந்திர பாபு .


படம் - நண்பர் அரவிந்த் அமிர்தராஜ் .்

Post a Comment

0 Comments