ரெண்டு வீட்டு விருந்தாளி

 

என்ன மாமா , எப்படி இருக்கீக என்றான் பாலு செல்லப்பனிடம்.


ஒங்கள மாதிரி மாப்பிளக இருக்கும் போது எனக்கென்னயா கவல ? நான் நல்லாத்தேன் இருக்கேன் என்றார்  கோவில் மரத்தடியில் உக்காந்தவாறு.


சரி மாமா ... ஏதாவது ஒன்ன அவுத்து விடுங்க ...


ஏன்யா ... இப்பதான் ஒன்ன நல்லவன்னேன். அதுக்குள்ள இப்டி சொல்றிய ? நான் கட்டியிருக்கிறது வேட்டியும், தலப்பாவும்தான். இதில எத நீ அவுத்து விடச் சொல்ற ? அதும் பொது எடத்தில ?!


இந்த  கிசும்புதான் ஒங்கள விட்டுப் போகாது.எதாவது கதயோ , சொலவடையோ சொல்லுங்கங்கறதுக்காகச் சொன்னேன் மாமா.


ஓ ... அப்டியா மாப்ள , அப்ப அவுத்து வுட்ருவோம்.

ரெண்டு வீட்டு விருந்தாளி 

கெண்ட வீங்கிச் செத்தானாம்.


அப்டினா ?


நேத்து நம்ம செல்வராசு அவன் சித்தப்பன் , பெரியப்பன பாக்க விளாத்தொளம் போயிருக்கான். பையில உளுந்து , கடல , பனங்கெழங்குனு கொண்டு போயிருக்கான். சொல்லாமக் கொள்ளாம திடுதிப்புனு வந்தவனப்  பாத்து அவன் சித்தப்பனுக்கு சந்தோசம். என்னடா நம்ம வூட்டுக்கு மட்டுமா இல்ல பெரியப்பன் வூட்டுக்கும் போகப்போறியானு கேட்க , அங்கயும் போகனும்ங்கான் இவன்.


சித்தப்பங்காரன் நம்ம அண்ணன் வூட்லெ சாப்பிடட்டும் சொல்லி ஒன்னுஞ் சொல்லாம இருக்கான்.

 

பெரியப்பன் வூட்டுக்குப் போறான்.அங்க நேரா இங்க வாரியா ? இல்ல சித்தப்பன் வூட்டுக்குப் போயிட்டு வாரியா எனக்கேக்க ,


இவன் சித்தப்பன் வூட்டுக்குப் போயிட்டு வாரேனு சொல்ல ,  அங்க சாப்பிட்ருப்பானு அவனும் கண்டுக்கிடாம வுட்டுட்டான்.


சாப்பாடு போடுங்கனு சொல்ல இவனுக்கு கூச்சமா இருக்கு.அப்புறம் என்ன பட்னியா வூடு வந்து சேந்திருக்கான்.


அடப் பாவமே ! இது பெருங்கொடுமையால்ல இருக்கு.


என்ன பண்ணச் சொல்ற ? சரி மாப்ள காட்டுக்குப் போகணும் வர்ரேன்.


சரி மாமா. நான் வூட்டுக்குப் போறேன்.


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments